ஒழிமுறி, ஒரு சாதாரண திரை ரசிகனை அரங்குக்குக் கொண்டுவருவதற்கு உரிய பெயரல்ல. அதனால் பலரும் தொடக்கத்தில் படம்பார்க்க வரவுமில்லை. ஆனால் படம் கண்ட எவரும் நல்ல படமல்ல என்ற எண்ணத்துடன் அரங்கை விட்டுச் செல்வதில்லை. இரண்டாம் படத்தையும் நல்லபடமாக ஆக்கி மதுபால் தன்னை நிரூபித்திருக்கிறார்
ராஜீவ் அஞ்சலின் காஷ்மீரம் என்ற படத்தின் இணை இயக்குநராகத் திரையுலகில் நுழைந்தவர் மதுபால். எழுத்தாளரும் கூட. ஆனால் அப்படத்தில் வில்லனாக அவரை நடிக்கவைத்தார் ராஜீவ் அஞ்சல். அதற்குப்பின் மதுபால் மலையாளத்தின் முக்கியமான வில்லன் நடிகராக ஆனார்.
வர்கீஸ் கொலையைப்பற்றி ராமச்சந்திரன் நாயர் உண்மைகளைச் சொன்ன காலகட்டத்தில் மதுபால் எடுத்தபடம் தலைப்பாவு. பாபுஜனார்த்தனன் அதற்கு திரைக்கதை எழுதியிருந்தார். இயக்குநர் மோகன் அதை தயாரித்தார். பிருத்விராஜ் வர்கீஸாகவும் , லால் ராமச்சந்திரன் நாயராகவும் அப்படத்தில் நடித்தார்கள். லால் அதற்கு மிகச்சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். மதுபால் மிகச்சிறந்த தொடக்க இயக்குநருக்கான விருதை
அதன்பின் நான்குவருடம் கழித்து இந்த இரண்டாம்படம். இம்முறை தமிழ்நாடு-கேரள எல்லைப்பகுதியில் மாநிலப் பிரிவினைக்கு முன் இருந்த ஒரு சூழலில் தொடங்கி சமகாலம் வரை வரக்கூடிய ஒரு கதையை எடுத்திருக்கிறார். பிரபல தமிழ்-மலையாள எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நினைவுக்குறிப்புகளை ஒட்டி உருவான கதை
ஒழிமுறி என்றால் விவாகரத்து. முதுமை அடைந்த மீனாட்சியம்மா தன் கணவர் தாணுப்பிள்ளையில் இருந்து ஒழிமுறி கோரி நீதிமன்றத்துக்கு வருமிடத்தில் கதை தொடங்குகிறது. இவர்களின் நினைவுகள் வழியாக மாறி மாறி அரைநூற்றாண்டின் கதை சொல்லப்படுகிறது
அந்தக்காலகட்டத்தின் வாழ்க்கையையும் உரையாடல்களையும் அப்படியே கொண்டுவர இயக்குநரால் முடிந்திருக்கிறது. பெண்கள் குடும்பத்தில் மிகப்பெரும் ஆற்றலுடன் வாழ்ந்த காலகட்டம். அதன் சின்னம் காளிப்பிள்ளை [ஸ்வேதாமேனன்] அந்த பெண்கள் ஐம்பது வருடங்களில் வந்த மாற்றம் வழியாக எப்படி வெறும் சமையற்காரிகளாக ஆனார்கள் என்று சொல்கிறது மதுபாலிண் படம். அதை ஓர் உணர்வனுபவமாக ஆக்குவதில் மதுபால் வெற்றிபெற்றிருக்கிறார்
கதைமாந்தர்களை உள்வாங்கி நடிக்கும் நடிகர்களை பயன்படுத்திக்கொள்ள இயக்குநரால் முடிந்திருக்கிறது என்பதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி. தாணுபிள்ளையாக லால் தன்னுடைய குணச்சித்திரத்தை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். சாக்லேட் நடிகர் என்று சொல்லப்பட்ட ஆஸிப் அலி கூட தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தும் தருணங்களை அடையமுடிந்திருந்தது. எப்போதும் ஒரு களங்கமற்ற தன்மை தெரியும் முகம் கதாபாத்திரமான சரத் சந்திரனுடையது. அதை ஆசிப் அழகாகக் காட்டியிருக்கிறார்.வழக்கறிஞராக பாவனாவும் நன்றாக நடித்திருக்கிறார். மல்லிகாவின் நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும். பல காலகட்டங்கள் வழியாக மீனாட்சி மாறிவருவதை அழகாகக் காட்டியிருக்கிறார்.
மிகச்சிக்கலான ஒரு கரு ஒழிமுறியுடையது. நம்மால் உணர முடியாத ஒரு காலமும் இடமும். அதை நமக்கு அனுபவமாக ஆக்க மதுபாலால் முடிந்திருக்கிறது