ஒழிமுறி-விமர்சனங்கள்

ஒழிமுறி- எழுத்தாளனின் படம்

2008 ல் சிறந்த புது இயக்குநருக்கான மாநில அரசு விருது பெற்ற மதுபாலின் இரண்டாவது படமான ஒழிமுறியில் தேசிய -மாநில விருதுகள் வென்ற லால், ஸ்வேதாமேனன் மல்லிகா ஆகியோர் முக்கியமான கதைமாந்தர்களை நடிக்கிறார்கள் என்ற தனித்தன்மை உண்டு. அங்காடித்தெரு நான்கடவுள் போன்ற படங்களில் எழுதிய ஜெயமோகன் கதை திரைக்கதை வசனம் எழுதிய படம் என்ற சிறப்பும் உண்டு. பாஷாபோஷிணி வார இதழில் வந்த ஜெயமோகனின் நினைவுக்குறிப்புகளின் தொகுப்பான உறவிடங்கள் என்ற நூலில் உள்ள எந்நிரிக்கிலும் என்ற கட்டுரை இந்த சினிமாவுக்கு அடிப்படை

பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் பகுதியாக இருந்த தக்கலை பிராந்தியத்தில் கதை நடக்கிறது. தமிழ்நாட்டில் இணைந்தாலும் மனநிலையாலும் ராஜபக்தியாலும் திருவிதாங்கூரின் மக்களாக நீடிக்கும் சில பழையபாணி மக்களின் வாழ்க்கை, பண்பாடு, மொழி ஆகியவற்றின் கலவைதான் ஒழிமுறி. பெண்கள் முழு சொத்துரிமையுடன் இருந்த மருமக்கள் வழி சொத்துமுறையும் அதன்பின் அவர்களின் முக்கியத்துவம் இல்லாமலான மக்கள்வழி சொத்துரிமையும் எல்லாம் கதைமாந்தர்களின் நினைவுகள் வழியாகக் காட்சிவடிவம் கொள்கின்றன. தக்கலை பகுதியின் நாயர் நாடார் சாதியின் உறவும் நெருக்கமும் கதையில் சொல்லப்படுகிறது. ஒரு நிலப்பகுதியின், பண்பாட்டின் ஆவணம் என்று இந்த படத்தைச் சொல்லலாம்

எழுபத்தி ஒரு வயதான தெங்கும்புரவீட்டில் தாணுபிள்ள [லால்] ஐம்பத்தைந்து வயதான மீனாட்சிப்பிள்ளை [மல்லிகா ] இருவரும் அளித்த விவாகரத்து வழக்கும் அதன் மூலம் தெரியவரும் அவர்களின் வாழ்க்கைப் பின்னணியும் தான் கதை

ஒழிமுறி ஓர் எழுத்தாளனின் கதை என்றே சொல்லலாம். திரைக்கதை அமைத்த ஜெயமோகனின் எழுத்தின் வல்லமை ஒரு நிலப்பகுதியையும் காலகட்டத்தையும் பண்பாட்டு முறைகளையும் எல்லாம் அனுபவமாக்குகிறது. நாயர் சாதியின் ‘மேன்மை’களை சுட்டிக்காட்டி கதைநாயகர் வசன மழை பொழியும் படங்களின் நடுவே பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி வாழ்ந்த பழைய திருவிதாங்கூரின் நாயர் குலங்களின் ஆர்ப்பாட்டம் டம்பம் ராஜபக்தி ஆகியவற்றை நுட்பமாகக் கிண்டல்செய்து செல்கிறது படம். பெண் என்றால் அடிமையான மனைவி அல்ல சுதந்திரமுள்ள மனுஷி என்ற முடிவில் சென்று நிற்கிறது ஒழிமுறி. மிகைநாடகக் காட்சிகளுக்கான இடமாக மட்டுமே மலையாளத்தில் வெளிப்பட்டுள்ள நீதிமன்றக் காட்சிகள் முதன்முறையாக யதார்த்தமாக சினிமாவில் காட்டப்பட்டுள்ளன

இயக்கத்தில் போதிய அனுபவமில்லாமல் இருந்ததனாலாக இருக்கலாம், மதுபால் ஜெயமோகனின் சிறந்த திரைக்கதைக்கு உகந்த ஆதரவை அளிக்க முடியாமல் போய்விட்டது என்று சொல்லலாம். மிகச்சிறந்த கலைத்திறனையோ அல்லது நுட்பத்தையோ இயக்குநராக அவர் உருவாக்கிய இடங்கள் குறைவு. சுட்டிக்காட்டவேண்டிய சில குறைபாடுகளும் உண்டு. என்றாலும் சிறந்த திரைக்கதையை வணிகச்சமரசங்கள் ஏதும் இல்லாமல் நேர்மையுடன் படைக்க முயன்றது மிகமிகப் பாராட்டுக்குரியது.

அனுபவம் உடைய இயக்குநர் முயன்றிருந்தால் காட்சிகள் வழியாகப் பலவற்றை இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கலாம். சரத் -பாலா உறவின் வளர்ச்சி, பாலாவுக்கு இந்த ஒழிமுறி வழக்குமேல் உருவாகும் தனிப்பட்ட ஈடுபாடு, பாலா சரத் மீது கொள்ளும் பிரியம் ஆகியவற்றை இன்னும் நுட்பமான காட்சிகள் வழியாகச் சொல்லியிருக்கலாம்

2008ல் மிகச்சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற லாலின் திரைவாழ்க்கையில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம் இது. ஒருவேளை இந்தப்படத்துக்காக மீண்டும் அவர் விருது பெறக்கூடும். மல்லிகா ஸ்வேதா போன்றவர்களும் மதுபால் கொண்டுவந்த சிறிய நடிகர்களும் சிறந்த நடிப்பை அளித்திருக்கிறார்கள். ஆனால் மல்லிகா சில இடங்களில் அந்த கதாபாத்திரத்தின் தீவிரத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டது.வயது ஏறும்போது வேடத்தில் வந்த மாற்றம் நடிப்பில் இல்லை. ஆனால் திருவனந்தபுரம் பகுதிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய நடிகர்கள் இயல்பாக படத்தை அந்த இடத்தின் அடையாளத்துடன் நிறுத்தினார்கள்.

இந்தப்படத்தில் ஆசிப் அலியும் பாவனாவும் நன்றாக நடிக்கவில்லை என்றே சொல்லவேண்டும். சொல்லப்போனால் கதாபாத்திரங்களின் ஆழத்தை வெளிப்படுத்துவதற்கான பல வாய்ப்புகளை அவர்கள் நழுவ விட்டிருக்கிறார்கள் . ஆசிப் அலி இயக்குநரின் ஒரு தவறான தேர்வு .

பிஜிபாலின் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. அக்காலகட்டத்தையும் சூழலையும் நன்றாகவே வெளிப்படுத்துகிறது. திரைக்கதை எழுதிய ஜெயமோகன் எழுதிய முகப்புப்பாடல் ஒரு பிராந்தியத்தின் மொழியையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது. அழகப்பனின் ஒளிப்பதிவும் சாஜனின் எடிட்டிங்கும் படத்துடன் ஒத்துப்போகின்றன. ரஞ்சித் அம்பாடியின் ஒப்பனையும் எஸ்பி சதீஷின் உடைகளும் பரவாயில்லை. சில இடங்களில் அவை சினிமாட்டிக் ஆக தெரிகின்றன

திரையரங்குகளைத் திருவிழாக்கோலம் பூணச் செய்யும் கேளிப்பைப்படம் அல்ல இது. அத்தகைய ரசிகர்களை நோக்கி இந்தப்படம் எடுக்கப்படவில்லை. ஆகவே வெறும் கேளிக்கையை விரும்பி வரக்கூடியவர்கள் சிலருக்கு இந்தப்படம் பிடிக்காமல் போகக்கூடும். ஆனால் ஓர் எழுத்தாளனின் வலுவான இருப்பு, இரு மொழிகள் கலக்கும் ஒரு தனிப்பண்பாட்டின் அழகு, ஒரு நிலத்தின் உண்மையான பின்னணி, இறந்தகாலமும் நிகழ்காலமும் ஒன்றோடொன்று கலந்து உருவாகும் வாழ்க்கையின் பரப்பு, அதன் நினைவலைகள் ஆகியவற்றை அனுபவிக்க விருப்பமுள்ளவர்கள் ஒருபோதும் ஒழிமுறியைத் தவறவிட முடியாது


ஒழிமுறி-பார்த்தாகவேண்டிய படம்

தலப்பாவு என்ற நல்ல படத்தை மலையாளிகளுக்குத் தந்த மதுபால் என்ற புதிய இயக்குநர் மேல் கொண்ட நம்பிக்கையால் முதல்நாளே படம் காண்பதற்குச் சென்றேன். எதிர்பார்த்தலுக்கு எந்தக் குறைவும் அளிக்காத ஆழமான ஒரு படம். காலவெள்ளத்தை மீறி ஒழிமுறி நிற்கும் என்பது உறுதி.

இரு காலகட்டங்களை இணைத்து மாறிமாறிச் சொல்லிச் செல்லப்படும் கதையில் அன்பின் பல மடிப்புகளை ஒழிமுறி விளக்கிச்செல்கிறது. பெண்ணிய நோக்கை விரிவான வரலாற்று அறிவின் பின்னணியில் முன்வைக்கிறது இந்தப்படம். படத்தின் தொடக்கத்தில் தன் தந்தைக்கு எதிராக நிலைகொள்கிறான் மகன். கதையின் முடிவில் தந்தையை அடையாளம் கண்டுகொள்கிறான். தன்னைக் காரணமில்லாமல் தண்டித்தார் என்று எண்ணியிருக்கும் மகனுக்கு தந்தையின் அன்பும் தன் மீதான அக்கறையும் புரியவருகிறது.

பலசமயம் அம்மாவின் அன்பு அவ்வப்போது பிடிகிடைக்கிறது. ஆனால் அப்பாவின் அன்பு ஒரு மகனால் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதல்ல. அவனுடைய வாழ்க்கையின் அனுபவங்கள் வழியாகவே அது புரியவருகிறது. புரியவரும்போது அது அம்மாவின் அன்பை விட ஒரு படி மேலே நிற்கும் என்கிறது ஒழிமுறி

மிகச்சிறப்பாக கவனித்து எழுதப்பட்ட திரைக்கதை. ஒவ்வொரு உரையாடலிலும் வாழ்க்கை தெரிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் பாராட்டுக்குரியவர். நடிப்பில் ஒவ்வொருவரும் இன்னொருவரைத் தாண்டிசெல்கிறார்கள்.

முந்தைய கட்டுரைஒழிமுறி- இன்னும் விமர்சனங்கள்
அடுத்த கட்டுரைகூடங்குளம்-கடிதங்கள்