முகமூடிகளும் கவசங்களும் இல்லாமல் தீவிரமான விஷயங்களைச் சொல்ல மதுபாலுக்கு இருக்கும் திறமைக்குச் சான்று ஒழிமுறி. மலையாள மொழியின் மிகச்சிறந்த பெண்ணியவாதப் படங்களில் ஒன்று. வெல்வதற்காக மட்டும் பிறந்து தோல்வியடைபவர்களும் தோல்வியைத் தியாகம் மூலம் வெற்றியாக ஆக்கிக்கொள்பவர்களும் இந்தப் படத்தில் ஒப்பிட்டுப்பார்க்கப்படுகிறார்கள். மாவட்டப்பிரிவினையால் மலையாள அடையாளமிழந்து குமரிமாவட்டமாக ஆன கேரளத்தில் ஒரு பகுதியின் கதை. அதன் கலாச்சாரத் தனித்தன்மை , சமகால நிலைமை, உணர்வுகள் வழியாகச் செல்கிறது படம்.
உயிரோட்டமுள்ள திரைக்கதையே ஒழிமுறியின் சுவர்பலம். இடுப்பில் சாவிக்கொத்துடன் அதிகாரத்தை சுமந்தலைந்த காலகட்டத்தில் இருந்து பணிவும் அடிமைத்தனமும் கொண்டவளாக மலையாளிப்பெண் ’வளர்ந்து’ வந்த இந்த ஐம்பதாண்டுக்கால வரலாற்றைச் சொல்கிறார் மதுபால். பணிவிடைசெய்யும் அதிகாரத்தை மட்டும் மீண்டும் கைப்பற்றிக்கொள்கிறாள் ஒழிமுறி காட்டும் மலையாளிப்பெண். அந்த இடத்தில் நமது பெண்ணிய அரசியலை முற்றிலும் புதிய கோணத்தில் விவாதிக்கவும் விளக்கவும் எழுத்தாளராலும் இயக்குநராலும் முடிந்திருக்கிறது
தன் குரல் வல்லமையால் சிரிக்கவைக்கவும் அச்சுறுத்தவும் மட்டுமே செய்துகொண்டிருந்த நடிகர் லாலை முழுமையாகவே உடைத்து மீண்டும் எழுதுகிறது ஒழிமுறி. தாணுபிள்ளையாகவும் சிவன்பிள்ளையாகவும் தன் நடிப்பு வாழ்க்கையில் மிகச்சிறந்த கதாபாத்திரத்தை லால் இந்தப்படத்தில் அடைந்திருக்கிறார். நகைச்சுவை மூலம் அசிங்கமாக ஆகிவிட்ட திருவனந்தபுரம் மொழியின் அழகும் நுட்பமும் இந்தப்படத்தில் வெளிப்படுகிறது
விவாகரத்து கோரி நீதிமன்றம் வரும் வயோதிக தம்பதிகளில் இருந்து தங்கள் உறவுகளின் வேரைத் தேடுபவர்கள், அன்பின் உண்மையான அர்த்தத்தைக் கண்டடைபவர்கள் என்று பல தளங்களுக்கு விரிகிறது ஒழிமுறி. குரூரமனம் படைத்த கணவனாகிய தாணுபிள்ளையை விவாகரத்து செய்யவேண்டியது மீனாட்சியம்மாவின் கட்டாயம். முன்கோபியாகிய தந்தையைப் பிரிய விரும்புகிறான் மகன் சரத். ஆனால் வெறுப்பால் அல்ல, அன்பினால்தான் மனிதர்கள் குரூரம் கொள்கிறார்கள் என்று மெல்ல அனுபவங்கள் வழியாக மகனும் நினைவுகள் வழியாக மனைவியும் கண்டடைகிறார்கள். மனிதர்களின் தவறுகளில் இருந்தல்ல, ஒப்புநோக்க சரிகள் எவை என்ற கேள்வியில் இருந்துதான் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளமுடியும் என்ற பாடம் அது
தீவிரமான எழுச்சி உள்ள ஜெயமோகனின் திரைக்கதையைத் தன் அனுபவத்திறமையால் எளிமையாகச் சித்தரிக்கிறார் மதுபால்.உரையாடல்களிலும் உள்ளது அந்த உக்கிரம். பிறரை வெல்லவேண்டும் என்ற வேகமே உறவுகளைக் கைவிலங்குகளாக ஆக்குகிறது என்கிறது கதை. வாழ்க்கையிலும் சிந்தனையிலும் எப்படி பாரம்பரியம் மீண்டும் நிகழ்கிறது என்று காட்டுகிறது
ஆணில் இருந்து பெண்ணுக்கும் பெண்ணில் இருந்து ஆணுக்கும் அதிகாரம் கைமாற்றம் செய்யப்படும்போது ஒன்று உள்ளே எரியும் அன்பும் மற்றொன்று உள்ளே உருகும் தியாகமும் ஆக மாறுகிறது. தன் தந்தையைத் துறந்த தாய் மீதான கடும் வெறுப்புடன் வாழ்கிறார் தாணுபிள்ள. ஆணை வென்ற பெண்ணை மீண்டும் வெல்வதே அவர் மனைவிமீது காட்டிய வன்முறைக்கு ஆதாரம். மகனையும் கணவனையும் வெறுக்காமல் இருக்கும்பொருட்டு மருமகளிடமும், அம்மாவை வெறுக்காமலிருக்க கணவனிடமும், அப்பாவை நேசிக்கும்பொருட்டு அம்மாவுடனும் போராடும் கதாபாத்திரங்களின் முரண்பாடுகள் வழியாக தலைமுறை தலைமுறையாக ஊடுருவி ஓடிச்செல்ல பாசத்தால் மட்டுமே முடியும் என்று காட்டுகிறது ஒழிமுறி.
லாலும் ஸ்வேதாமேனனும் வலுவான கதாபாத்திரங்களை மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆசிப் அலி ,பாவனா இருவரும் விரும்பும் விதமாக நடிக்கிறார்கள். மீனாட்சியாக சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த மல்லிகா பாராட்டுக்குரியவர். வேறுபட்ட பண்பாட்டுச்சூழலுடன் நன்றாக இசைந்துபோகும் அசலான இசையை அமைத்திருக்கிறார் பிஜிபால். கதைச்சித்தரிப்பு சுமுகமாக ஓடுவது அவரது இசையின் ஓட்டத்தினாலும் கூடத்தான். குமரிமாவட்டத்தின் அழகை அழகப்பனின் காமிரா அவ்வளவு ஆச்சரியத்தை அளிக்கவில்லை
ஸ்வேதாமேனன் மல்லிகா இருவரின் முதுமையை சில இடங்களில் சரியாகக் காட்டவில்லை. சில இடங்களில் ஒப்பனை சரியாக அமைபவில்லை. பழைய நினைவுகளுக்கு பாலாவும் சரத்தும் செல்லும் இடங்களை ஒரேபோல அமைத்திருப்பது இயக்குநரின் சறுக்கல். அவர்கள் கடற்கரையிலும் சைக்கிள் சவாரியிலும் எல்லாம் அலைந்து திரிந்தபடி பேசுவது ரசனையில் கல்லாக இடறுகிறது
வெற்று வேடிக்கைகளை நிறைத்து சிரிக்கவைக்கவும் வணிகமசாலாக்களைச் சேர்க்கவும் முனையாமல் உயர்ந்த ரசனைக்கு மட்டுமே உகந்ததாக இந்தப்படத்தை அமைக்க மதுபாலால் முடிந்திருக்கிறது. வாழ்க்கைகளின் கதையைப் படிப்படியாக விரித்து தலைமுறைகள் வழியாக நீளும் உறவுச்சங்கிலியை வடித்து அன்பு மட்டுமே காலத்தை வென்று செல்வது என்று உறுதிப்படுத்தும் இந்தப்படம் எந்நிலையிலும் மலையாளத் திரைவரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு சாதனை
[இண்டியா விஷன் ]
*
இந்த சினிமாவின் ஒரு வரியிலிருந்தே ஆரம்பிக்கலாம். ’பத்துமாதமானால் எந்தப் பெண்ணாலும் தாயாக முடியும். உள்ளம் கனிந்தவனே தந்தையாவான்’
மலையாளி நினைவில் நிறுத்த கொஞ்சம் நல்ல படங்கள் உண்டு. என்னென்ன என்று கேட்டால் எல்லாருமே சொல்லக்கூடியவை பத்மராஜன் படங்கள், பரதன் படங்கள். ஆனால் அவையெல்லாம் பழைய படங்கள். இந்தக்காலகட்டத்தில் ஏன் அப்படிப்பட்ட நல்ல படங்கள் வரவில்லை என்பதற்கான பதில் இந்த படம். மதுபாலின் ஒழிமுறி
உறவுகளுக்கு எந்த மதிப்பையும், அளிக்காத அசிங்கமான உரையாடல்களும் புளித்துப்போன நகைச்சுவையும் பாடல்களும் அள்ளி நிறைத்து நியூ ஜெனரேஷன் படம் என்று முத்திரை குத்தி வெளிவிடப்படும் சமகாலப் படங்களுக்கு எதிரான ஒரு கேள்விக்குறி இந்த படம் என்று உறுதியாகச் சொல்லலாம். காரணம் இந்தப்படத்தில் அப்பா இருக்கிறார் ,மகன் இருக்கிறார், அம்மா இருக்கிறார், மகள் இருக்கிறாள். அவ்வாறு வாழ்க்கையில் நாம் நேசிக்கும் பலர் இதில் இருக்கிறார்கள்.
ஆனால் அதை விட இந்த கதாபாத்திரங்கள் நடுவேயுள்ள உறவுகளின் மதிப்பு சற்றும் மங்கலாகாமல் வரைந்து காட்ட மதுபாலால் முடிந்திருக்கிறது. இதுதான் இந்த படத்தின் முக்கியமான சிறப்பம்சம்.
கதைசொல்லப்படும் காலம் பழையதானாலும் இன்று கேரளத்தில் ஹர்த்தால் போல சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிற விஷயம்தான் இதில் பேசப்படுகிறது. விவாகரத்து. அது உருவாக்கும் மன அழுத்தம், சமூகப் பின்புலம் ஆகியவற்றை தெளிவான நோக்கத்துடன் அணுக இந்தப்படத்தால் முடிதிருக்கிறது . படத்தின் முடிவில் திரைக்கதையாசிரியர் நினைப்பதை அனைவரும் நினைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணவைக்கிறது படம்
நல்ல சினிமாவை விரும்பக்கூடிய ரசிகர்கள் உடனே பார்க்கவேண்டிய படம். இதில் உள்ள காட்சியுலகமும் கருத்துலகமும் முற்றிலும் புதிய அனுபவங்கள்.