டாக்டர் வீரமணி B.SC,M.B.B.S,FCGP அவர்களால் எழுதப்பட்டு, அறிவுலகம் 6,3 ஆவது அவின்யூ அசோக்நகர் சென்னை 600083 லிருந்து டிசம்பர் 2004ல் வெளியிடப்பட்ட ‘சித்தர்கள் போற்றிய சிறுநீர் சிகிச்சை’ என்ற நூலை என் நட்புக்குரிய வாசகர்களுக்கு திட்டவட்டமாகப் பரிந்துரைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். காரணம் நான் இன்னும் அம்முறையை பரிசீலனைசெய்து பார்க்கவில்லை. வாசகர்கள் முயன்று விளைவுகளை அறிவித்தால் நல்லதென்பதே நோக்கம்.
நிற்க, இந்நூலை முதலில் அறிந்துகொள்வோம். ”டாக்டர் வீரமணி B.SC,M.B.B.S,FCGP அவர்கள் ஆங்கில முறை மருத்துவநிபுணர். சாதி மத இன மொழி பாகுபாடு அற்றவர், ஈதல் இசைபட வாழ்ந்திடும் தகைமையாளர் தன்னலமற்ற பொதுநலச் சேவகர். இசைப்பிரியர் இரண்டே ரூபாயில் ஏழை எளியோருக்கு ஊசி போட்டு மருந்தும் கொடுத்திடும் மனிதநேயர்….”என பின்னட்டையில் குறிப்பிடப்படுகிறார் நூலாசிரியர்.
தன் சிறுசிறுநீரை குடிப்பதனால் அனைத்து நோய்களும் நீங்கப்பெற்று நூறாண்டு வாழலாம் என்று ஆணித்தரமாகக் கூறும் நூல் இது. சிறுநீர் அதன் பெயர் சொல்வதைபோல அத்தனை சிறிய விஷயமன்று என்பதனாலும், பெருநீர் என்றால் பொருள் மயக்கம் ஏற்படுவதனாலும், ‘தன்னீர்’ என்று அழகிய தமிழில் இந்நூலில் குறிப்பிடப்படுகிறது. இதனை சித்தர்கள் சிவாம்பு மருத்துவ முறை என்றார்கள். ‘ஒருகாசும் செலவில்லாதது,வேறு எவர் உதவியும் தேவைப்படாதது, கலப்படமற்றது’ என இம்மருந்தை ஆசிரியர் சொல்வதை அட்டையிலேயே காணலாம்.
தன்னீர் [அச்சுப்பிழையாக இதை எண்ணி நன்னீர் என்றும் தண்ணீர் என்றும் திருத்தியமைக்க முற்படாத மெய்ப்பு நோக்குநரை மனமுவந்து பாராட்டி] மருத்துவத்தை இந்நூலில் நாம் வாசிக்கும்போது பல அரிய தகவல்களைக் காண்கிறோம். பதிப்பாசிரியர் தமிழ்மறையான் இம்மருந்தின்மூலம் எயிட்ஸ் என்னும் பால்வினை நோய்,கேன்ஸர் என்னும் புற்றுநோய், டிபி என்னும் எலும்புருக்கி நோய், ஆஸ்துமா என்னும் மூச்சிளைப்பு நோய் முதலியவற்றை முற்றாக நீக்கி முழுக்குணம் பெறலாம் என்று சொல்கிறார். ஆனால் சிவபெருமானே பார்வதிக்கு இந்த மருத்துவத்தை அந்தரங்கமாக விவரித்ததாக ‘சிவாம்பு கல்பம்’ என்ற சித்தநூலில் சொல்லியிருப்பதாக டாக்டர் கூறியதை தான் நம்பவில்லை,தெய்வங்கள் ஒருபோதும் அப்படிச் சொல்லும் வழக்கம் இல்லை என பதிப்பாசிரியர் தமிழ்மறையான் கருதுகிறார்.
மேலும் ‘மாணவ மூத்திரம்’ என்ற நூலிலே டாக்டர் பிரக்ஜிபாய் தேசாய் என்பவர் தன் சிறுநீரை தானே உண்டு எண்பதுவயதிலும் இளைஞராக செயல்பட்டார் என்றும் அவரது குடும்பமே தன்னீர் [தம்நீர்?] அருந்து ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததாகவும் பதிப்புரை சொல்கிறது. தேவையான மூத்திரம் மாணவர்களிடமிருந்து பெறப்பட்டதா, எங்ஙனம் என்பது நூலில் தெளிவுற இல்லை. பள்ளிகளில் இதற்கான அமைப்பு இருந்திருக்கலாமென நான் ஊகிக்கிறேன்.
நூலுக்கு அனுபவம் சார்ந்து அணிந்துரை எழுதியிருக்கும் கெ.நடராஜன் MD அவர்கள் பெரியார் நெறிவழுவா பகுத்தறிவாளர் என்றும் மனிதநேயர் என்றும் நூலின்கண் குறிப்பிடப்படுகிறார்.
‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள’
என்ற ‘திரிக்குறள்’ பாடலை இம்மருத்துவத்துக்கான முக்கியமான ஆதாரமாகக் காணலாமென்பது அவர்தம் தரப்பாகும். இதில் உண்டு என்ற சொல் காதல்-காம மயக்க நிலையில் பெண்ணின் சிறுநீரை உண்ணுதலையே குறிக்கும் என்பது அவர் துணிபு. இதன் மூலம் புணர்ச்சிநீள்கிறது,வீரியம் கூடுகிறது என்பது அவர்தம் அனுபவ உண்மை. கண்டு என்பது சிறுநீர் கழிப்பதைக் காணுதலும் கேட்பதென்பது அவ்வொலியை செவிகூர்தலும் உயிர்த்தல் என்பது அதை முர்ந்து நோக்குதலும் உற்று என்பது அதை உடலெங்கும் பூசிக்கொள்ளுதலும் ஆகும்.
திரிக்குறளில் இன்னும் பல பாடல்களில் இம்மருத்துவத்திற்கான விளக்கம் உள்ளது.
தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
உணலினும் உண்டது அறல் இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது
இக்குறள்களில் தம்மில் இருந்து வரும் நீரை உண்பதையும் உண்ட நீர் சிறுநீராக வெளிவரும்போது [அறல்] அருந்துதலையுமே குறிப்பிடுகிறது என்பது கெ.நடராஜனார் அவர்களின் கருத்தும் தமிழ் மறையான் அவர்களின் ஆமோதிப்பும் ஆகுமென்பதை பதிப்புரையும் சுட்டி நிற்கின்றது. உணவை விட ‘உண்டது அறலே’ மேலும் இனிது என தெய்வப்புலவர் சொல்வதை நான் ஆழ்ந்து நோக்குகிறேன்.
மேலும் குறள்களைக் காணலாம்.
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இறையான் கண் நோய்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போக்கி உணின்
உலகம் இழிவாக கருதிய நீரை அறிந்து உண்பவனிடம் நோய் நிற்காது என முதல் குறல் சுட்டுதலை அறிவுடையோர் உணர்வர் என்பது தமிழ்மறையன் நோக்கு. இழிதல் என்பதே நீர் வழிவதைச் சொல்கிறதென ஏன் கருதலாகாது? அதேபோல அருந்தியது அற்றது என்ற சொல்லாட்சி அருந்திய நீர் தன்நீராக வெளிப்படுதலையன்றி வேறெதைக் குறிக்கிறது? முதல் குறளில் தன்னீர் அருந்துதல் கண்நோய்க்கு சிறந்தது என்ற குறிப்பும் உள்ளது என்பது என் பொருட்கோடல்.
ஆனால் திருவள்ளுவர் அருந்தினாரா என்ற வினாவை தமிழ்மறையனார் அவர்கள் எதிர்கொண்டமை என் நெஞ்சை மருக வைக்கிறதெனபதையும் ஈண்டு நுவலல் தகும். இந்த அளவு சொன்னவர் அருந்தாமலிருப்பாரா? தமிழ்மறையனாரோ செந்நாப்போதார் நாவை அதற்கு பயன்படுத்தினாரென்பதை வலியுறுத்திச் சொல்லல் அவர்தம் நாப்பெருமைக்கு இழுக்கெனக் கருதுவதனால் ” திருவள்ளுவர் அருந்தினாரா என்ற கேள்வி எழுப்பாதீர். கள்ளின் கொடுமையைக் கூறுபவர் கள் குடித்தவராகத்தான் இருக்கவேண்டும், சூதின் விளைவைச் சொல்லியவர் சூதாடியவராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை” என அளிக்கும் விளக்கம் பொருத்தமானதாக இல்லை
டாக்டர் கெ.நடராஜனார் அவர்கள் சிறுவயதிலேயே காசநோய்க்கு ஆளாகி மருந்துக்கள் பயனளிக்காமல் இறப்பின் எல்லைவரை சென்று தன்னீர் அருந்தி நோய் நீங்கப்பெற்றமையை விவரித்து , அவ்வண்ணம் நெடுநாள் வாழ்ந்து தன் முதியவயதில் இரு தொகுதிகளாக தன் தன்வரலாற்றை எழுதி வெளியிட்டதுடன் காசநோய விடுதிக்குச் சென்று நோயாளிகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை [மட்டும்] அளித்ததாகவும் சொல்கிறார்
மேலும் இந்நூலுக்கு மதிப்புரை வழங்கியிருக்கும் டாக்டர் D.மங்கள கௌரி HPSM அவர்கள் இம்மருந்தை பெரிதும் விதந்தோதுகின்றார். சித்த நூல்களில் சிவாம்பு என்றும் அமரி என்றும் சிவநீர் என்றும் சொல்லபப்டும் சர்வரோக நிவாரணி இதுவே என்றும் இவ்வாறு குறிப்பிடுவது தன்னீரையே என்றும் அவரது குருநாதரான டாக்டர் R.துரைராஜ் அவர்கள் சொல்லியதாகச் சொல்லும் D.மங்கள கௌரி HPSM அவர்கள் இம்மருந்துக்கு பெண்ணிய நோக்கிலும் விளக்கம் அளிக்கிறார். பெண்கள் தங்கள் நோய்களை வெளியே சொல்ல வெட்கம் கொள்ளுதல் இயல்பே. அவர்களுக்கு இம்மருந்து ஒரு வரப்பிரசாதம்,இரண்டாம் நபர் அறியாமல் இம்மருந்தை அருந்தி நோய் நீங்கப்பெறலாம். என்கிறார் D.மங்கள கௌரி HPSM .
”நாம் என்ன செய்கிறோம் எதை உட்கொள்கிறோம் என்று யாருக்கும் தெரியாது.காசுசெலவோ கடைக்குச்சென்று வாங்கிவர பிறர் தயவோ தேவையில்லை. இரவோ பகலோ நாம் தனித்திருக்கையில் நாமே பிறர் உதவியின்றிசெய்துகொள்ளும் சிகிழ்ச்சை இது…” சிகிழ்ச்சையின் போது இப்பெண்டிரை கணவர்கள் முத்தமிடலாமா என்ற ஐயம் ஏற்பட்டது. தனித்திருக்கும் மனைவியரின் கணவர்கள் இதைப்பற்றி சற்றே கவனம் எடுத்துக்கொள்வது தகும் என்று மட்டும் சொல்லிச் செல்கிறேன்.
இம்மருந்தின் சிறப்பு என்னவென்றால் இதன் சுத்தசுயம்புநிலைதான் என்கிறார் D.மங்கள கௌரி HPSM. பிற மருந்துகளை தண்ணீர் சேர்த்து அல்லது வேறுசில பொருட்களுடன் கலந்தும் காய்ச்சியும் எல்லாம்தான் அருந்தவேண்டும். உள்ளே குடிக்கும் மருந்தை வெளியே பூசவோ திருப்பிச்செய்யவோ கூடாது. ஆனால் தன்னீர் மருந்தினை எப்படி வேண்டுமானாலும் உள்ளும் புறமும் பயன்படுத்தலாம் என்கிறார் அவர். சுவைக்காக சர்க்கரை சேர்த்துக் கொள்லலாமா என்றும், மேலும் சுவையுடன் அதிகமுறை அருந்தும்பொருட்ட்டோ விருந்தினருக்குப் பரிமாறும் பொருட்டோ எலுமிச்சம்பழச்சாறு முதலியவற்றைக் கலக்கலாமா என்றும் குளிர்காலத்தே சூடாக அருந்தலாமா என்றும் ஐயம் எழுகிறது.
இதன் பின்னர் விரிவாக சிறுநீர் என்று சொல்லப்படும் அமுதமருந்தின் சிறப்புகளை நூலாசிரியர் விளக்குகிறார். தொண்ணூறுக்கு மேல் வயதிலும் உற்சாகமாக இருந்த மொரார்ஜி தேசாய்தான் தனக்கு இந்த முறையின் முதல் முன்னுதாரண அறிமுகம் என்று சொல்லும் நூலாசிரியர் தன் 71 வயதில் இதய அறுவை சிகிழ்ச்சை செய்து கடும் மருத்துவச்செலவுடன் துயருற்றிருந்த நாட்களில் ஒரு நண்பரால் ஆற்றுப்படுத்தப்பட்டு சிறுநீரை 2001 மே மாதம் எட்டாம் தேதி முதன்முதலாக குடித்ததாகச் சொல்கிறார். நமது கார்ப்பரேஷன் நீர் போல குளோரின் துர்நாற்றமும் இல்லை, நமது அலோபதி மருந்துக்கள் போல கசப்பும்துவர்ப்பும் இல்லை என்று உணர்ந்தபின் தொடர்ந்து குடிக்க ஆரம்பித்து சிலநாட்களிலேயே நோய் நீங்கி நலம்பெற்றதாகக் குறிப்பிடுகிறார்
சிவபெருமான் பார்வதிக்கு தன்னீர் மருத்துவம் பற்றிச் சொல்லும் 107 சுலோகங்கள் அதர்வ வேதத்தில் உள்ளனவாம் என்று சொல்லும் நூலாசிரியர் போகர், அகத்தியர் ,திருமூலர், தேரையர், போன்ற சித்தர்கள் இதை அருந்தியே பலநூறாண்டுகாலம் வாழ்ந்தார்கள் என்கிறார். சித்தர்கள் அருந்தியிருக்கக் கூடும். ஆனால் பார்வதிக்கு சிறுநீர் உண்டா என்ற ஐயம் எழுந்து என்னைப் படுத்துகிறது.
தொடர்ந்து சிறுநீர் மருத்துவம் மூலம் உலக அளவில் நிகழ்ந்த அற்புதங்கள், அதைப்பற்றி எழுதப்பட்டுள்ள நூல்களை விரிவாக ஆதாரமாக்கி இம்மருத்துவத்தின் மேன்மையை ஆசிரியர் விளக்கிச் சொல்கிறார். காலையில் வரும் முதல் சிறுநீரை மூன்றாக பகுக்கலாம். முதலில் வரும் மூன்றில் ஒருபங்கையும் கடைசியில் வரும் மூன்றில் ஒருபங்கையும் விட்டுவிட்டு நடுவே வரும் மூன்றில் ஒருபங்கை அருந்தவேண்டுமென்று சிவன் பார்வதிக்குச் சொல்லியிருக்கிறார்.
இதை குடிக்கலாம். சளி முதலியவற்றுக்கு சில சொட்டுகள் மூக்குவழி உறிஞ்சலாம். காது நோய்க்குக் காதில் விடலாம். கண்நோய்க்குச் சில சொட்டுகள் கண்ணிலும் விடலாம். சரும நோய்க்கு உடம்பெல்லாம் தேய்த்துக் குளிக்கலாம். தேய்த்தபின் கையில் சோப்பும் சுருட்டிய துண்டுமாக அப்படியே ஆற்றுக்குப் போவது நல்லதல்ல என சொல்ல வேண்டியதில்லை. உடலின் எந்தப்பகுதியில் எந்த நோய் வந்தாலும் அப்பகுதியில் இதை போடலாம். சிறுநீர்உறுப்புகளில் நோய்கள் வந்தால் இதை திரும்ப ஏற்ற முயலலாமா கூடாதா என தெளிவுறுத்தப்படவில்லை.
இத்தகைய அருமருந்தினை ஏன் அரசு ஊக்குவிக்கவில்லை என ஐயம் எழுகிறது. இதன் பல சிக்கல்களை நான் எதிர்நோக்காமலுமில்லை. உதாரணமாக சிறுநீர் பிடித்து அருந்தும் கோப்பையை கழிப்பிடத்திலேயே வைப்பதும் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்துவதும் பிழை. பிறர் அதில் அறியாமல் கழிப்பிடம் கழுவ அமிலம் எடுக்க நேர்ந்தால் பெரும் பிழையாகும். அதே கோப்பையை சமையலறைக்குக் கொண்டுவருவதும் அடாது. அதை துணிகளுடன் பீரோவில் வைக்கலாம். மேலும் எத்தனை கழுவினாலும் அதில் சற்றே பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புண்டு. நேரடியாகவே சிறுநீரை குடிப்பதற்காக குழாய்கள் உருவாக்கபடுவது இன்றியமையாதது.
வள்ளுவர் கூற்றுப்படி துணைவியின் சிறுநீரை கணவன் அருந்துவதைப்போல மனைவியும் கொழுநன் தொழுதெழுந்து நீரை அருந்துதலே கற்பென வகுத்தல் நலம். சான்றோர்தம் சிறுநீர் நற்பண்புகளை வளர்க்கும். தலைவர்களின் நீரை உயரிய வண்ணப்புட்டிகளில் அடைத்து விற்றால் அரசுக்கு பெரும் வருவாய் ஈட்ட முடியும். ஆயின் வணிக நோக்குடன் முதிய வயது தலைவர்களுக்கு மிதமிஞ்சி நீரைப்புகட்டி சிறுநீர் பெருக்கும் கொடுமைகள் உருவாகாது காத்தலும் வேண்டும்.
ஆவின் பால்வளத்துறைபோல சுமூத்ரா, நீர்தன், Self Water போன்ற பெயர்களுடன் தனிவாரியம் அமைக்கலாம். சிறுநீர் உற்பத்தியை பெருக்க வீரிய வகைகளை உருவாக்குவதும் தகுமே. அனைத்துக்கும் மேலாக நம்மிடையே உள்ள மக்கள் செல்வம் காரணமாகவே உலகுக்கே நாம் தன்னீர் ஏற்றுமதிசெய்யலாம். அனைவரும் நோயற்றிருக்கும் நிலையை இந்தியா உலகுக்கு அளிக்கும்! ஆம் ,இந்தியா உலகுக்கு அளிக்கும் !
[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2007 நவம்பர்]