கடிதங்கள்

தீராக்குழந்தை கவிதை மிக நன்றாக இருந்தது.

எத்தனையோ உயிரினங்களைக் கண்டதுண்டு, சில தன் உருவத்தால் பிரமிக்க வைக்கும், பயப்பட வைக்கும், தன் அழகில் லயிக்கவைக்கும், நம்மை நேசிக்கவைக்கும், ஆனால் இந்தத் தீராக்குழந்தை நம்மை புன்னகைக்க வைக்கும், ஒரு நீண்டகால நண்பனைக் கண்டதைப்போல, தன் குழந்தைப்பருவப் புகைப்படத்தைப் பார்த்ததைப்போல், கண்ணாடி முன் நின்று ஆடை அடையாளங்களைத் துறந்த நம் பிம்பத்தைக் காணுதல் போல வெகு நெருக்கமாய் உணர்வது இக்குழந்தைகளிடம் மட்டும்தான். எத்தனை நேரம் பார்த்தாலும் நான் சலிப்படைந்ததேயில்லை. அதன் கண்களைப் பார்க்கும்போது அடுத்து என்ன குறும்பை செய்வது என்று யோசிப்பதைப்போலவே எனக்கு தோன்றும். இரமணர் அவற்றை சமமாய் நடத்தினார். அவற்றுடன் அவருக்கு நெருங்கிய நட்பிருந்தது. அவற்றை உயர்திணையில் வைத்தே குறிப்பிட்டார். தன் இறுதி நாட்களில் அவரின் அறையின் சாளரங்களைக் கம்பிகளிட்டு அடைத்தபோது அவை தன்னைக் காணவருவது தடைப்படுமே என்று கடிந்துகொண்டார்.

புகைப்படத்தில் அந்தக்குழந்தையின் சிரிப்பு என்னை வெகுநேரம் பார்க்கவைத்தது. ஒரு கவிதைக்கு ஒரு கவிதையே புகைப்படம். அழகு.

அன்புடன்
த. துரைவேல்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

வணக்கம்.உங்களின் நமீபியப் பயணம் அறிந்து மிகவும் மகிழ்ச்சி.நிச்சயமாக வாசகர்களுக்குப் புதிய விருந்து காத்திருக்கிறது.

சான் புதர்மனிதர்களை(San Bushmen) சந்திப்பதற்கான திட்டம் உங்களிடம் உள்ளதா?விஞ்ஞானிகளின் கருத்துப்படி அவர்கள் மனிதகுலத்தின் ஆதிமொழி என்று கூறத்தக்க ‘கிளிக்’ (click)மொழிகளைப் பேசுகிறார்கள்.
http://www.youtube.com/watch?v=nP1qbqy5ISg&feature=relmfu

http://www.kalahari-trophy-hunting.com/bushmen.html

ந.சிவேந்திரன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஹீரோ மிக மிக மிக நெகிழ்ச்சியான கட்டுரை. எளிய கூழாங்கல்லுக்குப் பிறகு படித்துக் கொண்டு இருக்கும்போதே ஒரு மாதிரி கனக்கச் செய்து விட்டது. சிறு வயதில் கல்லை எடுத்து அதை அடித்தது மட்டும் தான் எனக்கு நாய்க்குமான தொடர்பு. ஆனால் நன்றி என்ற ஒரு நிலையை மட்டுமே கொண்டிருக்கும் என்ற நினைப்பைக் கெல்லி எறிந்த மாதிரி அமைந்த கட்டுரை.

என்னுடனிருந்த எட்டு வருடங்களில் தன் அழகிய கண்களால் அவன் வேறெவரைவிடவும் என்னுடன் பேசியிருக்கிறான் – உள்ளிருந்து வெளிவந்த தூய வரி இது.

இதுவரை வாழ்க்கையில் நாய் வளர்த்ததில்லை. இனிமேலும் சூழல் கருதி சந்தேகமே. ஆனால் ஒரு அரைமணிநேரத்தில் ஒரு நாயை நானே கண்டு எடுத்து அதற்கு சாப்பாடு கொடுத்து அதனுடன் விளையாடி , அதனைப் பறிகொடுத்த மாதிரி இருந்தது இதை வசிக்கையில். மனம் எழும்பி மனம் மேல் அமர்ந்த மாதிரி உணர்வு தந்த கட்டுரை.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது உங்களை உங்கள் வீட்டுக்கு நான் சந்திக்க வந்தபோது ஹீரோ இறந்து போனான். என்னைக் கூட்டிக்கொண்டு வெளிய வரும்போது செத்துப் போயிடிச்சு என்று ஒரு வார்த்தை சொன்னது. உங்க மொகத்த வெச்சு என்னால் ஹீரோ வின் இறப்பைப் புரிந்து கொள்ள முடியவில்லை அப்போது.

நாம் ரயிலில் செல்லும்போது திடீரென்று எழுந்து அவன் நினைப்பாக இருக்கு என்று சொன்னபோதும் அதன் இறப்பை குழந்தைகள் , அருணா மேடம் பற்றி தான் நீங்கள் கவலைப்படுவதாக நினைத்து கொண்டேன். சொல்லவேண்டும் என்ற முறைக்காகவாது ஆறுதலாக ஒரு வார்த்தை கூட நான் சொல்லவில்லை. ஏதோ ஏதோ சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்டு கொண்டு அபத்தமாக உங்களைத் தொந்தரவு செய்து கொண்டு வந்த மாதிரி இப்போது தோன்றுகிறது. என்னை மன்னிச்சிருங்க சார் .

தினேஷ் நல்லசிவம்


தீராக்குழந்தை


ஹீரோ


எளியகூழாங்கல்

முந்தைய கட்டுரையானை-ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஒழிமுறி விமர்சனங்கள்