எனது கல்லூரி

என்னை என்னவாக ஆக்குவது என்று என் அப்பா முடிவுசெய்யவில்லை. அதற்காக அந்த சுதந்திரத்தை அவர் எனக்குத் தரவும் இல்லை. குலுக்கலில் போட்டார், அவரது நண்பர்கள் நடுவே. கோயில் திண்ணையில் அவர்கள் விவாதித்தார்கள். தங்கப்பன்நாயர் நான் ஒரு மிகச்சிறந்த ஆடிட்டர் ஆகமுடியும் என்று கணித்தார். இன்று தெரிகிறது, தங்கப்பன்நாயர் தன் வாழ்நாள்முழுக்க எடுத்த எந்த லாட்டரியிலும் பணம் விழவில்லை என்று

நான் மார்த்தாண்டம் கிறித்தவக் கல்லூரியில் [ இன்று அது நேசமணி நினைவு கிறித்தவக் கல்லூரி] புகுமுக வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருந்தேன். நல்ல மதிப்பெண்ணை எப்படிப் பெற்றேன் என்பது எனக்கே தெரியாத பெரும் புதிர். நான் கல்லூரியில் இருந்த நாளைவிட திரையரங்கில் வாழ்ந்த நாட்கள் அதிகம். இப்போதுகூட என் வீட்டில் படம் பார்க்கும்போது இடைவேளை தெரியும்போது ’காலஞ்சென்ற’ மார்த்தாண்டம் தேவி திரையரங்கின் புகழ்பெற்ற “ச்சுக்குப்ப்ப்பாலைய்ய்ஸ்!” என்ற கூச்சலை நான் எழுப்புவதுண்டு.

அருமனை,திருவரம்பு பகுதிகளில் அப்போதெல்லாம் சினிமா பார்க்கவேண்டுமென்றால் எட்டு கிலோமீட்டர் தூரம் நடக்கவேண்டும். மார்த்தாண்டத்தில் கல்லூரி அருகிலேயே ’தேவி’ கோயில் கொண்டிருந்தாள். அங்கே காலைக்காட்சிக்கு எப்போதுமே கறுப்புவெள்ளை தெலுங்கு டப்பிங் படங்கள். மூன்றுநாளுக்கு ஒருபடம் என்று கணக்கு. நான் மனவாடுகளின் ரசனையில் என்னைப் பரிபூரணமாக ஈடுபடுத்திக்கொண்டேன். நின்றநிலையில் அந்தர் பல்டியடிக்கும் நாயகிகள். தரையில் படுத்து எடுக்கும் காமிரா ஆங்கிள்கள். காந்தாராவ்,ராமராவ்,நாகேஸ்வரராவ் என்ற முப்பெரும் ராவ்களின் படங்களை பார்த்துத்தள்ளி இன்று சினிமாவுக்கு வந்தபின்னர்கூட கொஞ்சம் டப்பிங் ஸிங்க் ஆகாவிட்டால்தான் எனக்குப் படம் யதார்த்தமாக இருப்பதாகப் படுகிறது.

ஆடிட்டர் கனவுடன் வணிகவியல் இளங்கலை படிக்கப்பட நான் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமி கல்லூரிக்குக் கொண்டுசென்று சேர்க்கப்பட்டேன். அந்த வருடத்துக்கு முந்தையவருடம் வரை அங்கே ஆசிரியர் சங்கத்துக்கும் நிர்வாகத்துக்கும் பெரிய சண்டை நடந்து கல்லூரியே அவ்வப்போதுதான் நடந்துவந்தது. நான் சேர்ந்த வருடம் என் துரதிருஷ்டவசமாகக் கல்லூரி ஒழுங்காக நடக்க ஆரம்பித்தது.

அப்பாவின் பின்னால் எண்ணை வழியும் முகமும் குரல்வளையுமாக நான் புதிய பாண்ட் போட்டு பிளாஸ்டிக் செருப்பு அணிந்து கையில் ஃபைலுடன் உள்ளே நுழைந்தேன். முந்தைய வருடம் புகுமுக வகுப்பில் வேட்டிகட்டியபடித்தான் கல்லூரிக்குப் போனேன். உள்ளே பட்டாபட்டி. 1979இல் மார்த்தாண்டம் கல்லூரியில் பாண்ட் அணிந்தவர்களைத்தான் விசித்திரமாகப் பார்ப்போம். அங்கே முக்கால்வாசி மாணவர்கள் சொந்தமாக வாழைவிவசாயம் செய்யக்கூடிய கட்டுமஸ்தர்கள்.

நாகர்கோயில் எனக்கெல்லாம் அன்று பெரிய நகரம். பைக்கில் கல்லூரிக்கு வரும் பையன்களைக் கண்டு எனக்கு சிறுநீர் முட்டியது. சீனியர்கள் கமல் ரஜினிகளாக நடமாடினார்கள். ஆட்டுக்காது காலர் உடைய இறுக்கமான சிவப்புச்சட்டையும் இரண்டு பாவாடைகள் போலத் துவண்டு காற்றில் படபடக்கும் வெள்ளை பாண்டும் பிளாட்பாரம்போன்ற செருப்பும்தான் நாகரீகம். காதுமூடிய கூந்தல். தலைகீழ் ப வடிவ மீசை. ‘யன்னடி மீணாட்ஷீய்’ என்ற பாட்டில் இப்போது அந்தத் தோற்றத்தில் கமல் ரஜினியைப் பார்க்கமுடிகிறது.

ஒரேஒரு மூன்றுமாடிக் கட்டிடம்தான் கல்லூரி. ஆஸ்பத்திரிக்கான பிளானை கல்லூரியாகக் கட்டிவிட்டார்கள் போலிருக்கும். தாழ்வான மாமரக்க்கூட்டங்கள் நடுவே மஞ்சள் டிஸ்டெம்பரில் ஒளிந்து நிற்கும் கட்டிடத்தின் மாடியில் பிரின்ஸிப்பால் அறை. ஆர்தர் டேவிஸ் அன்றைய முதல்வர். இன்றுவரை நானறிந்தவர்களில் மிகச்சிறப்பாக உடையணிந்தவர் அவர்தான்.

பெரும்பாலும் வெளிர்நீல சட்டை. கத்திமுனைபோல மடிப்புள்ள பாண்ட். பொன்விளிம்பு கண்ணாடி. எப்போதும் டை. அதில் பொன்னாலான கிளிப். பொன்மூடி பேனா. அவரது ஷூக்களில் சுற்றுமுள்ள மரங்கள் பிரதிபலிக்கும். ஒரு பிரிமியர் பத்மினி காரை அவரே ஓட்டிக்கொண்டு வருவார்.ஜெல் போட்டு சீவிய தலைமுடி. கச்சிதமாக முறுக்கிய மீசை. பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுவார். எந்நிலையிலும் எவரையும் அதட்டுவதில்லை. கனிவான ஆனால் கண்டிப்பான குரல். இன்று நான் நினைவுகூரும்போது என்னை மீண்டும் மீண்டும் முடிவில்லாமல் மன்னித்தவர்கள் என் அப்பாவும் அவரும்தான் என்று படுகிறது.

நான் இளங்கலை மாணவனாகச் சோபிக்கவில்லை. எனக்குக் கணக்கியல் நடத்திய சுப்ரமணியநாடார் சார் ‘டேய் நீ ஒரே ஒரு கணக்க சரியா போட்டா அண்ணைக்கு நான் ராஜினாமா செய்துட்டு போறேண்டே’ என்றார். அவர் முழுப்பணிக்காலமும் பதவியில் இருந்தார். ஆனால் எனக்கு வணிகச்சட்டங்களில் அபாரமான ஆர்வமிருந்தது. அவற்றில் ஓரளவு மதிப்பெண் வாங்கினேன்

எனக்கு சட்டப்பாடங்களை நடத்தியவர் பின்னாளில் கல்லூரி முதல்வராக ஆன மனோகரன். ஆர்தர் டேவிசுக்கு நேர் எதிர். தலை சீவமாட்டார். உடை தான்தோன்றித்தனமாக இருக்கும். ஆனால் வேறுவகை கம்பீரம் கொண்ட மனிதர் அபாரமான புலமையினால் அடைந்தகம்பீரம் அது .முதுகலைவரை சட்டம் பயின்றவர். மிகச்சிறந்த வழக்கறிஞராக ஆகியிருக்கலாம். கற்பித்தல்மீது கொண்ட ஆர்வத்தால் பேராசிரியராக ஆனார். வசதியான குடும்பப்பின்னணிகொண்டவர். அவரது மகன் மோகன்தாஸ் என் வகுப்புத்தோழன். இப்போது திருவனந்தபுரத்தில் இருக்கிறான் என்று கேள்வி.

மனோகரனின் வகுப்புகள் துடிப்பானவை. ‘டேய் இண்ணைக்கு ஆராவது பேப்பர் படிச்சியளாலே? சினிமா நடிகை சரிதா கேஸ் பத்திப் போட்டிருக்கான் பாத்தியளாலே…’ என்று ஆரம்பிப்பார். சரிதாவை அவர் நடிகையாவதற்கு முன்னரே திருமணம் செய்துகொண்ட ஒருவர் அவர் தன்னுடன் வாழவேண்டும் என்று நீதிமன்றம் செல்ல அவ்வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைப்பற்றிச் சொல்வார். எந்த ஒப்பந்தமும் ஒருவரின் அடிப்படை உரிமையை மீறுவதாக அமையக்கூடாது என்று சொன்ன அந்தத் தீர்ப்பு ஆழ்ந்த வாழ்க்கைநோக்கும் மானுடநேயமும் ஒளிவிடுவது. அதிலிருந்து மெல்ல சமூக ஒப்பந்தங்களை விவரிப்பார். அதன் பின் வணிக ஒப்பந்தங்களுக்குள் நுழைவார். சட்டத்தை விதிகளாக அல்லாமல் மானுடவாழ்க்கையாகக் காட்ட அவரால் முடிந்தது.

நேர்மாறான முறையில் ஆர்தர் டேவிஸ் ஆங்கில வகுப்பு நடத்துவார். கச்சிதமான சொற்களில் கவிதையை ஒரு கணித சூத்திரமாக மாற்றிக்காட்டிவிடுவார். அந்த இளம்வயதில் அவரது பெருமிதமான ஆங்கில உச்சரிப்பில் மயங்கிக் கேட்டுக்கொண்டிருப்போம். சொற்களை அவர் எப்படி சொல்கிறார் என்று மட்டும் கவனிப்போம்.

அப்போதுதான் மங்கள ஆண்டனி சுரேந்திரா வந்தார். ஏற்கனவே ஸ்காட் கிறித்தவக் கல்லூரியின் பரபரப்பான மாணவர்தலைவராக இருந்தவர் அவர். உயரமான அழகான மனிதர். பையன்களுக்கு அவர்மேல் அப்படி ஒரு மோகம் இருந்தது. எங்கள் கல்லூரியில் முதன்முறையாக ஜீன்ஸ் அணிந்து வந்தவர் அவர்தான்.

பொருளியல் வகுப்பை உற்சாகமான ஒரு கலை நிகழ்ச்சியாக ஆக்க அவரால் முடிந்தது. கை கால் எல்லாவற்றாலும் பாடம் நடத்துவார். வகுப்பில் முன்னும் பின்னும் பாய்வார். கரும்பலகையில் எழுதி அப்படியே கோடிழுத்து மறுமுனை நோக்கிப் பீறிட்டுச் செல்வார். நான் வகுப்பில் எம்.ஏ.எஸ் பல போஸ்களில் என்று ஒரு கார்ட்டூன் வரைந்தேன். அதை ஒரு பஞ்சமாபாவி அவரிடமே கொடுத்துவிட்டான். ‘நல்ல கற்பனை’ என்று சிரித்தார் சுரேந்திரா

ஒரு நல்ல ஆசிரியருக்கு பாடத்துக்கு அப்பால் என்னென்ன தெரியும் என்பதுதான் பாடத்தை சிறப்பாகச் சொல்லிக்கொடுக்க வைக்கிறது என்பதைக் காட்டியவர்கள் மனோகரனும் சுரேந்திராவும். மனோகரன் நானி பால்கிவாலாவைப்பற்றிப் பேசுவார். சுரேந்திரா பிலுமோடியையும் மதுலிமயியையும் பற்றிச் சொல்வார்

முப்பதாண்டுக்காலம் கழித்துக் கல்லூரிக்குச் செல்கிறேன். கலைக்கல்லூரிகள் எல்லாமே ஒருவகையில் களையிழந்து போய்விட்டன. இன்று முதல்தர மாணவர்கள் மருத்துவமும் பொறியியலும் கற்கச்சென்றுவிடுகிறார்கள். ஆகவே கல்லூரிச்சூழலே மாறிவிட்டிருந்தது.நானறிந்த எவருமே அங்கே இல்லை. மங்கள ஆண்டனி சுரேந்திரா ஓய்வுபெற்றுவிட்டார். ஆர்தர் டேவிஸ் மறைந்துவிட்டார்.

நான் பெரும்பாலும் கல்லூரிக்கு வெளியேதான் வாழ்ந்தேன். முழுநேரமும் நூலகமே கதி என்றிருப்பேன். நாகர்கோயில் கல்லூரியின் நூலகங்கள் அக்காலத்தில் புகழ்பெற்றவை. மார்த்தாண்டம் கிறித்தவக்கல்லூரி நூலக நூல்பட்டியலை அச்சிட்டுக் கையில் கொடுப்பார்கள். அந்தப்பட்டியலையே நான் ஆசையாக வாசித்திருக்கிறேன். தமிழ் அறிவுலகத்தின் ஒரு வரைபடம் அதில் இருந்தது. அனேகமாக தினம் ஒரு நூல் வாசிப்பேன். குறிப்புகள் எடுத்துக்கொள்வேன். நூலகத்தில் வாழ்ந்த நான் கல்லூரியில் அதிகம் அறியப்படாதவனாகவே இருந்தேன்.

சினிமா ஒரு பெரிய போதை அப்போதும். ஒருதலைராகம் அப்போதுதான் வந்தது. அதை பையன்கள் அனேகமாக தினமும் பார்த்தார்கள். நான் இருபதுமுறை பார்த்திருப்பேன். அலைகள் ஓய்வதில்லை படப்பிடிப்பு நாகர்கோயில் குளங்களில் நடந்தது. புதுமுகம் ராதாவைப் பார்க்கப் பொங்கும் பேரார்வத்துடன் புத்தகத்துடன் சென்று குழுமினோம். இப்போது ராதாவின் மகள் துளசி நாயர் நான் எழுதிய காதாபாத்திரத்தை நடிக்கிறார்- மணிரத்தினத்தின் கடலில்.

நான் ஓர் எழுத்தாளனாக ஆன நாட்கள் அவை. என் கதைகள் வார இதழ்களில் வர ஆரம்பித்தன. அக்காலக் குமுதம் உதவியாசிரியர் பாரிவள்ளல் என்னை முதல்முதலாக எழுத்தாளனாக அங்கீகரித்து ஒரு கடிதம் அனுப்பி ஊக்கப்படுத்தினார். பல பெயர்களில் எழுதிக் கிடைக்கும் காசில் பரோட்டா தின்று சினிமா பார்ப்பேன். பின்னர் மலையாள தீவிர இலக்கியத்தின் வாசகனானேன். ஆங்கிலத்தில் வாசிக்க ஆரம்பித்தேன்.

மூன்றாம் வருடம் படிக்கும்போது என் வாழ்க்கை தலைகீழாகியது. என் உயிர்நண்பன் ராதாகிருஷ்ணன் தற்கொலைசெய்துகொண்டான். நான் ஆன்மீகமாக அலைக்கழிப்புக்குள்ளானேன். எழுத்தும் வாசிப்பும் நின்றது. ஒருநாள் படிப்பை முடிக்காமலேயே வீட்டையும் ஊரையும் விட்டுக் கிளம்பிச்சென்றேன்.

எட்டு வருடம் கழித்து 1990இல் என் முதல் நாவல் ரப்பர் அகிலன் நினைவுப்பரிசு பெற்று வெளிவந்தபோது பேராசிரியர் மனோகரனுக்கு ஒரு பிரதி அனுப்பிவைத்தேன். என் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர். நான் புறக்கணித்த கல்லூரி வகுப்புகள், என் அலைச்சல்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு எனக்குள் ஏதோ ஒரு ஆற்றல் இருப்பதாக நம்பினவர். ‘அவன் தேடுதாம்லே…அவனுக்க எடமென்னண்ணு தேடுதான். அப்டி தேடுதவன் அதைக் கண்டுபிடிப்பான்’ என்று அவர் வகுப்பில் சொன்னதை என் நண்பர்கள் சொன்னார்கள். அவரது நம்பிக்கை வீணாகிவிடவில்லை என்று காட்ட விரும்பினேன்.

மனோகரன் நெகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் ஆசீர்வாதம்செய்து ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ’நீ நிறைய தூரம் போவாய் என்று தெரியும். எது பிடிக்கிறதோ அதைச்செய். அதில் சமரசம் செய்துகொள்ளாதே’ என்று அவர் எழுதியிருந்தார்.

என்னை ஓர் எழுத்தாளனாக ஆக்கவேண்டும் என்று சின்ன வயதிலேயே கனவுகண்டவர் என் அம்மா. சொல்லிச்சொல்லி என்னை வளர்த்தவர். என் வாழ்க்கை வெற்றியாகாமல் போகுமோ என்ற ஐயத்திலேயே வாழ்ந்தவர் என் அப்பா. என் முதல் நூல் வெளியாகும்போது அவர்கள் இல்லை. மனோகரனின் வரிகள் வழியாக நான் என் பெற்றோரின் ஆசியைப் பெற்றுக்கொண்டேன்.

சிலநாட்களுக்கு முன் என் கல்லூரித்தோழர்கள் ஸ்ரீகுமாரும் சந்திரகுமாரும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஸ்ரீகுமாரை முப்பதாண்டுக்காலத்துக்குப்பின் சந்திக்கிறேன். ஸ்ரீகுமாரின் மகள் சென்னை பொறியியல் கல்லூரிக்குப் படிக்கச்செல்கிறாள். ‘டேய் நீ ஆளே மாறிவிட்டாய்…வேறு யாரோ போல இருக்கிறாய்’ என்றான் ஸ்ரீகுமார். அவனும் வேறு ஆளாகத்தான் இருந்தான்.

எல்லாருமே வேறு ஆளாகத்தான் ஆகிறார்கள். சிலர் விரும்பியபடி ஆகிறார்கள். சிலர் அவர்களறியாமலே யாரோ ஆகிவிடுகிறார்கள். நான் யாராக இருக்கிறேனோ அது நான் அடைந்தது. இந்த ஜெயமோகனை நோக்கித்தான் இத்தனை நாளாக நான் வளர்ந்து வந்துகொண்டிருந்தேன். வாசித்தும், எழுதியும், சிந்தித்தும், அலைந்து திரிந்தும்.

கல்லூரியில் தோற்று வாழ்க்கையில் வென்றவர்கள் என ஒரு மிகப்பெரிய பட்டியல் உண்டு. அதில் என் பெயரும் இருக்கும். கண்டிப்பாக அது முக்கியமான ஒரு பெயர்தான்.

[மேலும் படங்கள் ]

மேலும் படங்கள்

 

மறுபிரசுரம்/ Oct 24, 2012

முந்தைய கட்டுரைகடைநிலை பொருளாதாரம் – அறுந்த நூல்கள்
அடுத்த கட்டுரைகல்வி- மேலுமொரு கேள்வி