நகைச்சுவையும் தமிழ்சினிமாவும்

என்னுடைய மனதுக்குகந்த நகைச்சுவைக் காட்சிகளில் அனேகமாக எல்லாமே மலையாள சினிமா அல்லது ஆங்கில சினிமா சம்பந்தமானவை. மிகமிகக்குறைவாகவே நான் தமிழ் நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்கிறேன். பலசமயம் திரையரங்கில் சிரிப்பேன், ஆனால் நினைத்துப்பார்த்தால் அய்யே இதற்கா என்றிருக்கும். தமிழ் நகைச்சுவைக்கும் எனக்கும் இடையே நீண்டதூரம் உள்ளது.

ஏன் உங்களுக்குத் தமிழ் நகைச்சுவை பிடிக்கவில்லை என்று கேட்பார்கள். சிலசமயம், சரி நீங்கள் ரசிக்கும் வகையான நகைச்சுவையை நீங்கள் எழுதும் சினிமாக்களில் சேர்க்கலாமே என்பார்கள். அது எளிதல்ல. சினிமா என்பது அதை எடுப்பவர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது ஓர் வணிகம். ஆகவே அங்கே நுகர்பவரே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார். தமிழ்மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை மட்டுமே தமிழ்சினிமா கொடுக்கமுடியும்.

என்னுடைய அவதானிப்பில் பொதுவாகத் தமிழ்நாட்டில் நகைச்சுவை உணர்ச்சி மிகமிகக் குறைவு. என் சொந்தப் புரிதலைவைத்து இந்தியாவிலேயே தமிழ்மக்கள்தான் நகைச்சுவையற்றவர்கள் என நான் மதிப்பிட்டிருக்கிறேன்.இது ஒரு பொது அவதானிப்பாகவே என் மனதில் இருந்தது. ஆனால் சினிமாவுக்குச் சென்றபின் அது உறுதிப்பட்டது. சினிமா, அதிலும் வணிக சினிமா, முழுக்கமுழுக்கப் பின்னூட்டங்களின் அடிப்படையில் தன்னை வடிவமைத்துக்கொண்டது. தன் நூறாண்டுக்காலப் பின்னூட்ட அவதானிப்பில் இருந்து பிற எந்தத் துறைகளைக் காட்டிலும் தமிழ் சினிமா தமிழ் உளவியலையும் சமூகமனநிலையையும் துல்லியமாகப் புரிந்துகொண்டிருக்கிறது.

சினிமா விவாதங்களில் அனுபவசாலிகள் சர்வசாதாரணமாக என் கணிப்புகளைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவற்றை இப்படித் தொகுத்துக் கொள்ளமுடியும்.

1. நுட்பமான,பூடகமான நகைச்சுவை தமிழகத்தில் புரிந்துகொள்ளப்படமாட்டாது. திரை விவாதத்தில் அப்படி எதையாவது சொன்னதுமே ‘அதெல்லாம் மலையாளத்துக்குச் சரி சார், இங்கே ஒண்ணுமே புரியாம அப்டியே ஒக்காந்திட்டிருப்பாங்க’ என்று நிராகரித்துவிடுவார்கள். தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நகைச்சுவை அப்பட்டமாக சொல்லப்படவேண்டும்.

அதாவது சாம்பாரில் செத்த எலி மிதப்பதைக் காட்சியாகக் காட்டியபின்புகூட ஒரு கதாபாத்திரம். ‘என்னது,சாம்பாரிலே எலியா?’ என்று கத்தியாகவேண்டும். ஒரு சின்ன விஷயம் பூடகமாக சொல்லப்பட்டால் அதை உடனே அடுத்த கதாபாத்திரம் அப்பட்டமாக விவரிக்கவேண்டும் . ‘வெள்ளைச்சட்டை போட்டுட்டுப் போனேன்.மானேஜர் இன்னிக்கு என்னை பல்டாக்டர்னு நினைச்சு வாயைத்திறந்து காட்டுறார்’ என்றால் அடுத்த வசனம் ‘அதாவது மானேஜருக்கு அறிவில்லைன்னு சொல்றே” என்று.

2. யதார்த்தத்தில் ஓடும் நகைச்சுவை இங்கே புரிந்துகொள்ளப்பட மாட்டாது. காரணம் அன்றாட வாழ்க்கையில் உள்ள நகைச்சுவையை இங்கே சாதாரணமாக எவரும் கவனிப்பதோ சிரிப்பதோ இல்லை. நகைச்சுவை என்பது இங்கே நெடுங்காலமாக நகைச்சுவைக்காகவே உள்ள கோமாளிகள், கட்டியங்காரர்கள் மற்றும் பிரவசனக்காரர்களால் மட்டுமே நிகழ்த்தப்படும் ஒன்றாக உள்ளது. தெருக்கூத்து, பாவைக்கூத்துமுதல் சினிமா வரை அதுவே வழக்கம்.

ஆகவேஒரு விஷயம் நகைச்சுவை என்றால் அது நகைச்சுவை என்று முதலிலேயே ஐயம் திரிபற எடுத்துச் சொலப்பட்டாக வேண்டும். அந்த நகைச்சுவையை அதற்கான நடிகர்கள் அல்லது பேச்சாளர்கள் மட்டுமே சொல்லவேண்டும். அவர்கள் அதற்கான உடல்மொழியுடன், அதற்கான உச்சரிப்புடன் அதைச் சொல்லவேண்டும். அவர்கள் நாகேஷ்,சந்திரபாபு, உசிலைமணி போல வழக்கத்துக்கு மாறான உடல்கொண்டிருப்பார்கள். அல்லது விவேக், சந்தானம் போல சாதாரண உடலை சேஷ்டைகள் போல விசித்திரமாக ஆக்கிக்கொள்வார்கள்

வடிவேலுவையோ சாலமன் பாப்பையாவையோ பார்த்ததுமே நம்மவர் சிரிப்பார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் அது ‘காமெடி’ எனப்படும்.அதை இன்னொருவர் சொன்னால் சிரிக்காமல் திகைத்துப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இப்போதெல்லாம் பின்னணியில் சிரிப்பொலியையே போட்டுக்காட்டுகிறார்கள்.

இக்காரணத்தால் நகைச்சுவை என மேற்கோள் இடப்படாத பகுதிகளில் அன்றாட வாழ்க்கையின் ஒரு வேடிக்கையான தருணம், ஒரு முரண்பாடு, ஒரு குழப்பம் கண்ணுக்குப்பட்டால் அதில் உள்ள நகைச்சுவை ரசிக்கப்படுவதில்லை. அது முழுக்கமுழுக்க ‘சீரியஸாக’வே பார்க்கப்படும்.

அந்த ‘காமெடி டிராக்’ எல்லைக்குள், அதன் இலக்கணத்துக்குள் நல்ல பல சித்திரங்களை அளிக்க தமிழில் முடிந்திருக்கிறது. தமிழ் வாழ்க்கையின் சில தருணங்கள் வெளிவந்துள்ளன. நான் நகைச்சுவை எழுத்தாளர் ஏ.வீரப்பன் அவர்கள் கவுண்டமணி-செந்திலுக்காக எழுதிய சில ‘டிராக்கு’களையே அவ்வகையில் சிறந்தவையாக நினைக்கிறேன்.

ஆனால் பெரும்பாலானவை ஒரே மாதிரியான டிராக்குகள். பழையபடங்களில் வேலைக்காரன், . இன்று நண்பன் டிராக். வீட்டோடு இருக்கும் தண்டச்சோறு டிராக் எப்போதுமே உள்ள ஒன்று.

என் நண்பர் ஒருவர் மலையாளத் திரைப்படங்களில் தமிழ்த்திரைப்படங்களைப்போல நகைச்சுவை இல்லையே ஏன் என்று என்னிடம் கேட்டார். நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர் மேலும் பேசப்பேசத்தான் புரிந்துகொண்டேன். நண்பர் ‘காமெடி டிராக்’ மட்டுமே நகைச்சுவை என நினைக்கிறார் என.பெரும்பாலான மலையாள நகைச்சுவை நடிகர்கள் நகைச்சுவைக்கான கோமாளிநடிகர்கள் அல்ல. அவர்கள் கதையின் ஒருபகுதியாக கதாபாத்திரங்களையே நடிக்கிறார்கள். வெவ்வேறு படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களைக் காட்டுகிறார்கள்.அந்தக்கதாபாத்திரத்தின் இயல்பில்தான் நகைச்சுவை இருக்கும். ஆனால் நண்பர் அவற்றை நகைச்சுவையாக நினைக்கவில்லை.

3. தமிழர்கள் பெரும்பாலும் ஒரே நகைச்சுவையைத் திரும்பத் திரும்ப ரசிக்கவே விரும்புவார்கள். புதிய நகைச்சுவைகளை விரும்புவதில்லை. அதாவது எது நகைச்சுவை என அவர்களுக்குத் தலைமுறைகளாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதுவே நகைச்சுவை. அதற்கு மட்டுமே சிரிப்பார்கள். உதாரணமாக என்.எஸ்.கிருஷ்ணனை தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவை நட்சத்திரமாகக் கொள்ளலாம். அவரது நகைச்சுவை என்பது நம்முடைய கூத்துமரபில் பலநூறாண்டுகளாக இருந்து வரும் கட்டியங்காரன் நகைச்சுவையேதான். அவரது நகைச்சுவைத் துணுக்குகள் கூட பழைமையானவை.அதற்குப்பின அவருக்குப் பல வாரிசுகள்.

கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை அப்படியே பொம்மலாட்டத்தில் உள்ள உச்சிக்குடும்பன்- உளுவத்தலையன் நகைச்சுவை. வடிவேலு அத்தனை படத்திலும் செய்யும் நகைச்சுவையை நம்மூர்க் கரகாட்டங்களில் வந்து வீராப்புப் பேசி தவுல்காரராலும் பலராலும் அடிபடும் பபூன், பரட்டத்தலையன் போன்ற கதாபாத்திரங்களில் காணலாம். உடல்மொழி ,வசனங்கள் எல்லாமே அப்படியே அங்கிருந்து வந்தவை. ‘டேய் நாங்க இமயமலைக்கே வெள்ளை அடிச்சவுங்க’ ‘அண்ணனுக்கு எப்ப பொங்கவச்சு தரப்போறே?’ ‘சோடி போட்டுக்கலாமா?’ போன்ற வடிவேலு வசனங்களை நான் என் எட்டு வயதில் இருந்து கரகாட்டத்தில் கேட்டுவருகிறேன்.

என்.எஸ்.கிருஷ்ணன் முதல் சந்தானம் வரை நம்முடைய எந்த நகைச்சுவை நடிகரும் விதவிதமாக நடித்ததில்லை. வெவ்வேறு கதாபாத்திரங்களை முன்வைத்ததில்லை. அவர்கள் நடிக்கக்கூடிய கதாபாத்திரம் என ஒன்று உருவாகிவிட்டால் அதை மட்டுமே செய்யமுடியும். விவேக் ‘என்னாங்கடா டேய்’ என்றும் சந்தானம் ‘ஆமா இவுரு பெரீய…’ என்றும்தான் பேசமுடியும். வேறுவகையில் அவர்கள் நடிக்க முடியாது. நடித்தால் மக்கள் சிரிக்க மாட்டார்கள்.

நம் நகைச்சுவை நடிகர்களில் பலர் உண்மையில் மிகத்திறமையான நடிகர்கள். ஆனால் அவர்களுக்காக ஏதாவது புதிய கதாபாத்திரத்தை நாம் சொன்னால் உடனே அனுபவம் மிக்கவர்கள் ‘அதெல்லாம் தமிழுக்கு சரியா வராது சார். மக்கள் அவர இப்டி மட்டும்தான் பார்க்க விரும்பறாங்க’ என்பார்கள். அது உண்மை. நாகேஷ் என்றால் துடுக்கு, கவுண்டமணி என்றால் முரட்டு அப்பாவித்தனம், விவேக் என்றால் இடக்குமடக்கான பேச்சு, வடிவேலு என்றால் வீராப்பு -இதுதான் நம் புரிதல். அவர்கள் செய்யும் நகைச்சுவை ஒன்றே ஒன்றுதான். திரும்பத்திரும்ப அதை நாம் வருடக்கணக்காக நூற்றுக்கணக்கான படங்களில் ரசிக்கிறோம்.

இணையத்திலோ நம் அன்றாடப்பேச்சிலோகூட நாம் நக்கலுக்கும் கிண்டலுக்கும் புதிய சொல்லாட்சிகளை உருவாக்குவதில்லை. திரும்பத்திரும்ப ’அவ்வ்வ்’ என்போம். ‘ஆணியே புடுங்கவேணாம்’ என்போம். சலிக்காமல் ஒரே வசனத்தை வருடக்கணக்காக ‘வேடிக்கையாக’ சொல்லிக்கொண்டிருப்போம். வடிவேலுசொன்ன வசனங்களுக்கு அப்பால் ஒரு சொந்த வேடிக்கைவரியைச் சொல்லும் ஆசாமியை தேடித்தான் பிடிக்கவேண்டியிருக்கிறது. நகைச்சுவையும் நக்கலுமாக வாழவேண்டிய வயதில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் கூட இப்படித்தான் இருக்கிறார்கள்.

4. இங்கே வசைக்கும் விமர்சனத்துக்கும் நகைச்சுவைக்கும் இடையேயான வேறுபாடு மிகப்பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஒரு கேலியை விமர்சனமாகவோ வசையாகவோ மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். ஆகவே சினிமாவில் நகைச்சுவை என்பது நகைச்சுவைக்கான பேசுபொருட்கள் என ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டவை சார்ந்தே இருக்கவேண்டும்.

இக்காரணத்தால் தான் தமிழில் திரையில் நகைச்சுவை என்பது மிகப்பெரும்பாலும் ‘காமெடி’ யாக இருக்கிறது. அங்கதமோ கிண்டலோ சாத்தியமில்லாமலிருக்கிறது. விதிவிலக்குகள் சிலவே. மைக்கேல்மதனகாமராஜனில் காமேஸ்வரன் சம்பந்தமான காட்சிகள், தசாவதாரத்தில் போலீஸ்கார நாயுடு சம்பந்தமான காட்சிகள் போல சில விதிவிலக்குகளே உள்ளன. அவையும் கமல் முயற்சி எடுத்துக்கொண்டமையால்தான் சினிமாவில் அனுமதிக்கப்பட்டன. கமலிடம் நாம் அந்தக் காட்சிகளைச் சொல்லியிருந்தால் தமிழிலே அதெல்லாம் சரியா வராது சார் என்று அவரே சொல்லியிருக்கவும் கூடும்

5. இங்கே நுட்பமான நகைச்சுவை ரசிக்கப்படுவதில்லை என்பதற்கு ஆதாரமாகப் பலவற்றைச் சொல்லமுடியும். அவை புரிவதே இல்லை. அவற்றைப்புரிந்துகொண்டு ரசிக்கத் தேவையான பின்னணி ஞானம் பெரும்பாலானவர்களிடம் இல்லை. ஒரு பிரபலமான தகவலைத் திரித்துச் சொல்வது நகைச்சுவையின் வழக்கம். ஆனால் அந்தத் தகவல் பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை என்றால் என்ன செய்யமுடியும்?

சினிமா, டாஸ்மாக் தவிர வேறெந்தத் தளத்திலும் இருந்து ஒரு தகவலை அல்லது அவதானிப்பை முன்வைத்து இங்கே ஒரு பகடியை எழுதிவிட முடியாது. ‘தாம்பரத்தைத் தாண்டாது சார்’ என்று சொல்லிவிடுவார்கள் சினிமா நிபுணர்கள்.

6.மொழியை நுட்பமாக வளைத்துச்செய்யப்படும் நகைச்சுவை [wit] உலகமெங்கும் பிரபலம். ஆனால் தமிழில் அதைச்செய்யமுடியாது. பொதுவாக தமிழர்கள் மிகக்குறைவான சொற்களைக் கொண்டு அன்றாடப்பேச்சை நிகழ்த்துபவர்கள். சந்தேகமிருந்தால் பக்கத்தில் உள்ளவர்களை கவனியுங்கள். ஒரு சந்தர்ப்பத்துக்கு அவர் எப்போதும் ஒரே சொற்றொடரைத்தான் பயன்படுத்துவார். உதாரணமாக நன்றாக இருக்கிறது என்பதற்கு ‘சான்ஸே இல்ல’ என்று சொல்வாரென்றால் வருடக்கணக்காக அதை மட்டுமே சொல்வார். வேறொரு வரியைச் சொல்லவே மாட்டார்

தான் பேசும் மொழியைத் தானே கவனித்து புதிய சொல்லாட்சிகளை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கும் மக்களுக்கு மட்டுமே மொழிசார்ந்த நகைச்சுவை பிடிகிடைக்கிறது. இங்கே அது காற்றோடு போய்விடும். ‘அந்த மாதிரி நகைச்சுவையை ஒருதடவைக்குமேலே சொன்னா கடியாயிடும். போறபோக்கிலே அது மின்னிட்டுப் போகணும். அதைத் தமிழிலே கவனிக்கவே மாட்டாங்க சார். ஒரு நகைச்சுவையை ரெண்டுமுறை சொல்லலேன்னா சினிமாவிலே எடுபடாது’ என்பார்கள்.

சினிமாவில் அப்படி எடுபடாது போகும் நகைச்சுவை பிறகு டிவிவில் அச்சினிமா திரும்பத்திரும்பக் காட்டப்படும்போது எடுபடுகிறது. மைக்கேல் மதனகாமராஜன் தமிழின் மிகச்சிறந்த பல மொழிப்பகடிகள் கொண்டது. அது ஒரு தோல்விப்படம். டிவியில்தான் வெற்றிபெற்றது என்பதைச் சுட்டிக்காட்டுவார்கள்.

ஆகவே வேறுவழியே இல்லை. டிராக்தான். ஒருகல் ஒருகண்ணாடி , கலகலப்புதான். அவை சிரிப்பு வாயு போல. சிரிப்பதற்கு அறிவே தேவை இல்லை. முகர்ந்தாலே கெக்கே பிக்கே சிரிப்பு. உத்தரவாதமான சிரிப்பு. சினிமாவுக்குத்தேவை அதுதானே?

முந்தைய கட்டுரைகோயில்நிலங்கள்
அடுத்த கட்டுரைநகைச்சுவை-கடிதங்கள்