அன்பு ஜெயமோகனுக்கு,
வணக்கம். தங்களின் ஆத்மாவை நிரூபிக்க அரியவழி படித்துவிட்டுச் சிரித்தபடியே, இந்த மெயிலை அனுப்புகிறேன். இதைவிடவும் தெளிவாக ஆத்மாவை உணர்த்திவிட முடியாது தான்!
சென்றமுறை இந்தியா வந்தபோதே, உங்களிடம் கேட்க நினைத்து விட்டுப்போன சந்தேகம் ஒன்று உள்ளது..நேரம் இருக்கையில் பதில் சொன்னால், மகிழ்வேன்:
வணிக எழுத்து என்பது உண்மையில் அவசியமற்ற ஒன்று தானா? தாங்கள் எப்போதும் தீவிரமான இலக்கிய எழுத்தைப் பற்றி மட்டுமே சிலாகித்து எழுதிவருகிறீர்கள். அப்படியென்றால் நூற்றுக்கணக்கில்(ப்ளாக் வந்தபின் ஆயிரக்கணக்கில்!) உலா வரும் வணிக எழுத்தாளர்களின் படைப்புகள், இந்த சமூகத்திற்கு எவ்விதப்பயனும் அளிக்காதவை என்று நம்புகிறீர்களா? அல்லது வணிக எழுத்தையும் ‘கவனத்தில் கொள்ளக்கூடிய’ படைப்பாக கருத, ஏதேனும் அளவுகோல் உள்ளதா?
அன்புடன்
செங்கோவி
அன்புள்ள செங்கோவி
நலம்தானே?
காந்தி பற்றிய உங்கள் சமீபத்திய கட்டுரையை வாசித்தேன். நல்ல கட்டுரை.
நான் வணிக எழுத்து தேவையற்றது என்று நினைப்பவன் அல்ல. சொல்லப்போனால் வணிக எழுத்தின் இடத்தை அங்கீகரித்த முதல் தமிழ் இலக்கியவாதி நான்தான்
நான் எழுத வந்த எண்பதுகளில் இலக்கியம் இருநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட சிற்றிதழ்களின் வட்டத்துக்குள் மட்டுமே வாழ்ந்தது. அங்கே கேளிக்கை எழுத்தின் மீது தீவிரமான எதிர்ப்பும் வெறுப்பும் இருந்தது. அது ஐம்பதுகளில் க.நா.சுவால் உருவாக்கப்பட்டது. சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், பிரமிள் ஆகியோரால் பேணி வளர்க்கப்பட்டது.
அன்றெல்லாம் எந்த ஒரு கேளிக்கை எழுத்தாளரையும் எவ்வகையிலும் பொருட்படுத்தக் கூடாது என்ற உறுதி சிற்றிதழ்ச்சூழலில் நிலவியது. கல்கி முதல் சுஜாதா வரை எவரைப்பற்றியும் ஓரிருவரி நக்கல்களுக்கு அப்பால் எதையும் சொல்ல மாட்டார்கள். எந்த விவாதத்திலும் அவர்களின் பெயர்களைச் சொல்வதென்பது மிகவும் அருவருப்பூட்டும் ஒன்றாகவே கருதப்பட்டது.
அதற்கான காரணமும் உள்ளது. அன்று இலக்கியத்துக்கு எந்த அடிப்படை மரியாதையும் இருக்கவில்லை. எழுத்துக்கள் வாசிக்கப்படுவதில்லை, நூல்கள் விற்பதில்லை. அச்சேறுவதே கடினம்.கல்லூரிகளும் பல்கலைகளும் வணிக எழுத்துக்களையே இலக்கியமாகக் கருதின. அவற்றுக்கே பரிசுகளும் அங்கீகாரங்களும் வந்தன. ஆய்வுகள் நடந்தன. அவை லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டன. அவற்றை எழுதியவர்கள் பண்பாட்டின் அடையாளச்சின்னங்களாகக் கொண்டாடப்பட்டார்கள்.
அச்சூழலில் இலக்கியத்தை மிகுந்த ஆவேசத்துடன் முன்வைத்தாகவேண்டிய நிலை இருந்தது. வணிக எழுத்து X இலக்கியம் என்ற இருமையைத் திட்டவட்டமாகக் கட்டமைக்கவேண்டியிருந்தது. அதன் பொருட்டு இலக்கியம் என்பதைத் தெளிவாக வரையறுக்கவேண்டிய கட்டாயம் உருவானது. இலக்கியத்தை சில விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்தார்கள்.
சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதுபோல ஆத்மசுத்தி, சுதந்திரம், அழகுணர்ச்சி ஆகியவற்றால் ஆனது இலக்கியம். அவ்விழுமியங்களைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தவேண்டியிருந்தது அன்று. அதற்காக அந்த விழுமியங்களைக் கொள்ளாத வணிக எழுத்துக்களை முழுமுற்றாக நிராகரிக்கவேண்டியிருந்தது. வணிக எழுத்து ஆத்மார்த்தமானதல்ல, வாசகனுடைய ரசனைக்காக எழுதப்படுவது. அது சுதந்திரமானதல்ல, சமூகப்பொதுவான கருத்தியலை அது மீறமுடியாது. அதற்கு அழகுணர்வு முக்கியமல்ல,சுவாரசியம் மட்டுமே அதன் இலக்கு.
இக்காரணத்தால் எண்பதுகளின் இறுதி வரை வணிக எழுத்து மீதான முழு நிராகரிப்பு சிற்றிதழ் இலக்கியச் சூழலில் நிலவியது. அது தேவையான ஒன்று. தமிழில் இலக்கியத்தொடர்ச்சி அதி தீவிரமாக இலக்கியத்தை நம்பி சிற்றிதழ்ச்சூழலில் செயல்பட்ட நம் முன்னோடிகளால் நிலைநாட்டப்பட்ட ஒன்று. எதிர்மறைச்சூழல்களில் இறுக்கமும் வேகமும் கொள்வது மானுட இயல்பு. மனைவி நகையை விற்று சிற்றிதழ் நடத்திய அம்முன்னோடிகளுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஆனால் தொண்ணூறுகளில் சட்டென்று வணிக எழுத்து அர்த்தமிழந்தது. தொலைக்காட்சியின் வருகை அதற்கான காரணம். நட்சத்திர வணிக எழுத்தாளர்கள்கூடப் பின்னுக்குச்சென்று காணாமலானார்கள். ஊடகப்பெருக்கம் காரணமாக இலக்கியத்துக்கு கவனம் கிடைத்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் லா.ச.ராவும் ,அசோகமித்திரனும், சுந்தர ராமசாமியும் வெளியே தெரிய ஆரம்பித்தார்கள்.
ஆனால் வணிகஎழுத்து இல்லாமலானபோது மெல்லமெல்ல சமூகத்தில் வாசிப்பு குறைந்தது. இன்று தமிழ்நாட்டில் இலக்கியவாசிப்பு,தரமான வாசிப்பு பலமடங்கு கூடியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக வாசிப்பு கீழிறங்கியிருக்கிறது. முன்பு வீடுவீடாக ஆணும் பெண்ணும் இதழ்களை வாசித்துக்கொண்டிருந்தார்கள். கிராம நூலகங்கள் செயலூக்கமுடன் இருந்தன.இன்று அப்படி ஓர் இயக்கமே இல்லை.
தொண்ணூறுகளில் இதை நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.இலக்கியம் கேளிக்கை அல்ல, அது ஞானப்பகிர்வு. ஆனால் ஒரு சமூகத்தில் ஓர் உயர்தரக் கேளிக்கையாகவும் வாசிப்பு இருந்துகொண்டிருக்கவேண்டும் என்று சொன்னேன். அதை ஒட்டி நீண்ட விவாதங்கள் நடந்திருக்கின்றன. வாசிப்பைக் கேளிக்கை என்று எப்படிச் சொல்லலாம் என்று சண்டை போட்டிருக்கிறார்கள்.
வாசிப்பு ஓர் இயக்கமாக நீடிக்க வணிக எழுத்து அவசியம்.வெறுமே மனமகிழ்ச்சிக்காகவும் பொதுவான அறிதலுக்காகவும் வாசிக்கப்படும் நூல்களுக்கு சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டில் பெரும் பங்கு உண்டு. வணிக எழுத்தை இலக்கியம் என்று சொல்வது எவ்வளவு பிழையோ அவ்வளவு பிழை அவற்றைத் தேவையற்ற அல்லது கீழ்த்தரமான செயல்பாடு என்பது. இதுவே என் நிலைப்பாடு.
இன்னொரு அம்சத்தையும் நான் சுட்டிக்காட்டினேன். இலக்கியத்தில் ஒழுக்கநோக்குக்கும்,எளிமையான இலட்சியவாதத்துக்கும், கற்பனாவாதக் கனவுகளுக்கும் இடமில்லை. ஆனால் அவை ஒரு சமூகத்துக்குத் தேவை. இளம் மனதில் அவை உருவாக்கும் விளைவுகள் மிகச் சாதகமானவை. ஆகவே சாண்டில்யனும் நா.பார்த்தசாரதியும் எல்லாம் வாசிப்பின் ஒரு கட்டத்தில் இன்றியமையாதவர்களே. அவர்கள் வழியாகவே நாம் தீவிர இலக்கியத்துக்குள் நுழையவேண்டும். அதுவே சரியான வழி.
அறுபதுகள் முதல் தமிழில் இலக்கிய நூல்களுக்குப் பட்டியல்போடும் வழக்கம் இருந்தது. க.நா.சு அதை ஆரம்பித்து வைத்தார். அந்தப்பட்டியல்கள் வழியாகவே இலக்கியத்தொடர்ச்சி நீடித்தது. மூன்று தலைமுறைக்காலம் கைப்பிரதியாகவே அப்பட்டியல்கள் உலவின. அதன்வழியாகவே நல்ல நூல்கள் வாசிக்கப்பட்டன. சுந்தர ராமசாமி எனக்கு அப்படி ஒரு பட்டியலை அளித்தார்
நான் தொண்ணூறுகளில் நல்ல வணிக எழுத்துக்கான பட்டியல் ஒன்றை உருவாக்கினேன். சுந்தர ராமசாமி அது வீண்வேலை என்று என்னைக் கண்டித்தார். ஆனால் அதற்கான அவசியம் உண்டு என நான் நினைத்தேன். அப்பட்டியல் என் ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’ நூலின் பின்னிணைப்பில் உள்ளது.
நான் ஊகித்த அந்த அவசியம் இன்று வந்து விட்டது. தொண்ணூறுகளுக்கு முன் இலக்கியங்கள் கிடைக்காத நிலை இருந்தது, பட்டியல்கள் மூலமே அவை நினைவுகூரப்பட்டன. இன்று இலக்கியங்கள் கிடைக்கின்றன. அன்று எங்கும் கிடைத்த வணிக எழுத்துக்கள் மறைந்துவிட்டன. என் பட்டியல் அவற்றை நினைவூட்டுகிறது.
ஜெ