காந்தியும் நேதாஜியும்,கடிதங்கள்

என்னுடைய சில ஒரிய நண்பர்களுடன் உங்கள் கட்டுரையைப்பற்றி விவாதித்தேன். முன்னால் லோக்சபா ஸ்பீக்கர் ரபிராய் உங்கள் வாதத்தின் நிலைபாடை பாராட்டினார். டாக்டர் ராம் மனோகர் லோகியா ம்ட்டுமே நேதாஜி விவகாரத்தில் காந்தியை ஆதரித்த ஒரே சோஷலிஸ்டு தலைவர் என்று ரபிராய் சொன்னார். அதற்கு லோகியா சொன்ன காரணங்கள் இரண்டு

1. காந்தி இல்லாமல் காங்கிரஸ் இல்லை

2. காந்தியின் அகிம்சை மீது லோகியாவுக்கு இருந்த நம்பிக்கை

ஓர் ஒரிய இதழாளர் உங்கள் கட்டுரையை மொழியாக்கம்செய்து ஒரிய இதழில் வெளியிடும்படி கேடார்.செய்யலாமா?

சங்கரநாராயணன்

அன்புள்ள சங்கர நாராயணன்,

தாராளமாகச் செய்யலாம். இந்த இணைய இதழில் உள்ள எந்தக் கட்டுரையையும் பிற இதழ்களில் எடுத்து வெளியிட எவருக்கும் அனுமதி உண்டு. நூலாக வெளியிடுவதோ சுருக்கி வெளியிடுவதோ கூடாது

நன்றி
ஜெ 

அன்புள்ள ஜெ

காந்தி நேதாஜி விவாதத்தை உங்களுக்குரிய பாணியில் விவாதித்திருந்தீர்கள். நேதாஜியின் படையில் நிறைய முஸ்லீம்கள் இருந்தார்கள். அவர் மட்டும் இந்தியாவில் இருந்திருந்தால் முஸ்லீம்- இந்து பிரிவினை வந்திருக்காது. இது என் கருத்து

பிரபாகர், மதுரை

அன்புள்ள பிரபாகர்

இதெல்லாமே வெறும் கற்பனைகள். ஜெய்ஹிந்த் என்ற கோஷம் நேதாஜி உருவாக்கியது. அதை முஸ்லீம்கள் சொல்வார்களா? அவர் வந்தேமாதம் பாடலை பாடி படைநடத்தியவர்.முஸ்லீம்கள் வெறுத்த பாடல் அது.

நேதாஜி சமரசத்தின் பாதையை நாடுபவராக இருக்கவில்லை. இந்தியா போன்ற முரண்பாடுகள் மிக்க நாட்டுக்கு அவர் உகந்த தலைவர் அல்ல

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதிநிதித்துவம் செய்தது வங்காளத்து தேசியவாதத்தை. அது வங்காளத்தில் உருவான ஒரு நவீன தேசியவாதம். இந்திய தேசியத்தின் முதல் புள்ளியான விவேகானந்தர் வங்காளத்தில்தான் பிறந்தார். அந்த வங்க தேசியத்தில் பங்கிம்சந்திரரும் அரவிந்தரும் சுரேந்திரநாத் பானர்ஜியும் ஈஸ்வர சந்திர வித்யாசாகரும் இருந்தார்கள். அந்த மரபிலே வந்தவர் நேதாஜி.

காந்தி அப்படி ஒரு உணர்ச்சிகரமான மரபில் வந்தவர் அல்ல. காந்தி பனியா மரபில் வந்தவர். அவர்களுக்கு தேசியவாதமே இல்லை. அவர்கள் வியாபாரிகள். அந்த மரபுதான் இந்தியாவில் இருந்த தேசிய எழுச்சியை அழித்தது என்று நான் நினைக்கிறேன்

சுகுமார் செல்வம் [தமிழாக்கம்]

சுகுமார்,

காந்தி பிரதிநிதித்துவம் செய்யும் தேசியத்துக்கும் ஆழமான வேர் உண்டு. அது வைணவ புஷ்டி  மார்க்கத்தைச் சேர்ந்தது. அந்த மரபோ சமணம் சார்ந்தது. மூவாயிரம் வருடங்களுக்கு முன் இந்த மாபெரும் தேசத்தின் முரண்பாடுகளை கூட்டி இணக்கி அகிம்சைமூலமே இதை ஒன்றாக நிறுத்தி இதன் மாபெரும் பண்பாட்டை உருவாக்கியது சமணம்

வங்க தேசியம் என்பது சாக்தத்தின் வன்முறை பின்னணி கொண்டது. ஐரோப்பாவின் ஊடுருவலால் உருவானது. அதைவிட காந்தியின் தேசியமே இந்தியத்தன்மை கொண்டது, மேலானது
ஜெ

 

 • ஹிட்லரும் காந்தியும்
 • கடிதங்கள்
 • காந்தியின் துரோகம்
 • சாருவுக்கு ஒரு கடிதம்
 • வெறுப்புடன் உரையாடுதல்
 • காந்தியின் பிழைகள்
 • காந்தி:கடிதங்கள் பதில்கள்
 • சமணம் ஒரு கடிதம்
 • காந்தியும் அம்பேத்காரும்
 • வரலாறு,ஒரு கடிதம்
 • முந்தைய கட்டுரைவ‌ல்லின‌ம்
  அடுத்த கட்டுரைதமிழினி கட்டுரை