அன்புள்ள ஜெயமோகன்,
நலமா? கொற்றவை மறுவாசிப்பு செய்து கொண்டு இருக்கிறேன். முதல் முறை மனதிற்கு சிக்காத பல விஷயங்களுக்கு இப்போது தெளிவு கிடைத்துள்ளது. இருப்பினும் ஒரு விஷயம் தொடர்ந்து பிடி கிடைக்காமல் நழுவிச் சென்று கொண்டே இருக்கிறது. அது நாவலின் மூன்றாம் பகுதியில் கண்ணகியும், ஐந்தாம் பகுதியில் சேரன் செங்குட்டுவனும் பழங்குடி வழிபாட்டில் வழியெங்கும் காணும் மனித பலிக் காட்சிகள். மனிதர்கள் தங்களைத் தாங்களே பலி கொடுக்கின்றனர். இப்படி ஒரு வழிபாட்டு முறை பல்வேறு பழங்குடிச் சமூகங்களிலும் நாவலில் தொடர்ந்து வருகிறது. நாவலின் ஓரிடத்தில் சேர மன்னனிடம் பிட்டன் “இந்த வருடம் நோய் நெருங்காது, காடு தழைக்கும்” எனக் கூறுவதை இதற்கான விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
எனினும் இக்கடிதம் எழுதக் காரணம் இன்று படித்த புதுமைப்பித்தனின் “கபாடபுரம்” சிறுகதைதான். அதிலும் மனிதபலி குறித்த குறிப்பு வருகிறது. அதற்கு சித்த புருஷர் “யமனை எட்டி நிற்கும்படி சொல்வதற்கு எங்களுக்கு சக்தி கிடைத்ததெல்லாம் இதனால்தான்..” எனக் கூறியதில் சட்டென்று வேறொரு கோணம் திறந்து கொண்டது.
இந்த மனித பலி என்பது ஓர் எளிய பழங்குடி மனம் தன் குடியைக் காக்கும் பொருட்டு இப்பிரம்மாண்டமான இயற்கைக்கு அளிக்கும் காணிக்கை மட்டும்தானா? அல்லது அதைத் தாண்டியும் ஓர் பண்பாட்டு முக்கியத்துவம் இதற்கு இருந்ததா?
அன்புடன்,
பாலாஜி
கோவை
அன்புள்ள பாலாஜி,
ஆர்வமூட்டும் வினா. இளங்கோவின் சிலப்பதிகாரம்தான் நரபலி, தன் தலையைத் தானே கொய்யும் சுயபலி பற்றிய விரிவான சித்தரிப்பை முதல்முதலாக அளிக்கிறது. இட்டெண்ணித் தலை கொடுக்கும் எயினர் என்கிறது சிலப்பதிகாரம். நவகண்டம் என்ற சுயபலியைப்பற்றிய செய்திகள் நம் மரபில் உள்ளன. தன் கழுத்தில் தானே கத்தியுடன் நிற்கும் சிற்பங்கள் நிறையவே கிடைத்துள்ளன. அவை நவகண்டம் செய்துகொண்டவர்களுக்கான நடுகற்கள்.
இந்த வழக்கத்துக்கான தேவை என்ன என்ற வினா முக்கியமானது. ஒரு சமூக வழக்கம் வெறும் மூடநம்பிக்கையாக, மனக்கோளாறாக உருவாகி நீடிக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். அது உருவாக, நீடிக்க ஒரு சமூகத்தேவை இருந்திருக்கும். அந்தத் தேவை இல்லாமலான பின்னரும் அது ஒரு சடங்காக அல்லது நம்பிக்கையாக நீடிக்கையிலேயே அது சமூகத்தீங்காக ஆகிறது.
நாம் இன்று வாழ்வதை முதலாளித்துவ-ஜனநாயக சமூகம் என்று சொல்லலாம். நேற்றைய சமூகத்தை நிலவுடைமை- மன்னராட்சி சமூகம் எனலாம். அதற்கும் முந்தைய சமூகத்தை பழங்குடி-இனக்குழு அதிகாரச் சமூகம் எனலாம். இவ்வாறு வகுத்துக்கொள்வதை ஒரு முற்றான பகுப்பாக நான் நினைக்கவில்லை, ஒரு புரிதலுக்கான வழி மட்டுமே.
நாம் இன்றும் நம்பி கடைப்பிடிக்கும் பல பழக்கவழக்கங்கள் முந்தைய நிலவுடைமைச் சமூகத்தைச் சார்ந்தவை. அன்று அர்த்தமும் பொருத்தமும் கொண்டவையாக இருந்தவை. இன்று அர்த்தமற்ற ஆசாரங்களாகவும் சடங்குகளாகவும் மாறிவிட்டவை. சில வழக்கங்கள் அதற்கும் முந்தைய பழங்குடிக் காலகட்டத்தில் உருவாகி நிலவுடைமைக் காலகட்டத்தில் நீடித்து நம்மை வந்தடைந்தவை.
இவ்வாறு வெவ்வேறு காலகட்டங்கள் வழியாகச் செல்லும்போது ஒரு வாழ்க்கைக்கூறு உருமாறியபடியே செல்கிறது. பழங்குடிக் காலகட்டத்தில் ஒரு இன்றியமையாத தேவையாக இருந்த செயல்பாடு நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் குறியீட்டு ரீதியான ஓரு செயல்பாடாக ஆகிவிட்டிருக்கலாம். அடுத்த காலகட்டத்தில் அது வெறும் ஓர் அழகியல் செயல்பாடாக உருமாற்றம் கொண்டிருக்கலாம்.
உதாரணமாக மறைந்த வீரர்களை அவர்களின் நினைவுநாளில் வழிபடுவது பழங்குடிக்காலகட்டத்தில் அவர்களின் நினைவை நிலைநிறுத்தவும் அவர்கள் முன்வைத்த வீரம் தியாகம் போன்ற விழுமியங்களை சமூகத்தில் நிலைநாட்டவும் உதவியிருக்கிறது. ஆகவே அவர்களைப்போல வேடமிட்டு ஒருவர் வந்து நிற்க பிறர் அவர்களை உணவும் கள்ளும் பலியாகக் கொடுத்து வணங்கும் வழக்கம் உருவாகியது. இன்றும் மேற்குமலைப் பளியர்கள் அதைச் செய்கிறார்கள்.
அந்தச் சடங்கு பின்னர் தெய்யம் என்ற வழிபாட்டுமுறையாக ஆகியது. தெய்யங்களுக்கு ‘தரை’ எனப்படும் பீடக்கோயில்கள் உருவாகி வந்தன. வீரம் அல்லது போர்வெறி என்ற விழுமியத்தை வழிபடும் குறியீட்டுச்சடங்காக அது மாறியது. வடகேரளத்தில் தெய்யம் ஒரு தனி வழிபாட்டு முறையாக இந்துமதத்துக்குள் நீடித்தது.
நவீன ஜனநாயக யுகத்தில் தெய்யம் ஒரு கலையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. கலையாகக் கற்றுக்கொடுக்கப்பட்டு ஆடப்படுகிறது. அதன் அழகியல் மட்டுமே கருத்தில்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான தெய்யங்கள் உக்கிரமான கொலைத்தோற்றம் கொண்டவை. அந்த வெறி ஒரு கலைநிகழ்வாக மாற்றப்பட்டுவிட்டது இன்று.
அப்படிப்பார்த்தால் நரபலி, நவகண்டம் போன்றவை எப்படி உருவாகியிருக்கும்? எப்படி நீடித்திருக்கும்? கொற்றவை முதல் வீரபத்ரன் வரையிலான போர்த்தெய்வங்கள் எதற்காக உருவாகி வந்திருக்கும்? பல்லாயிரம் பலித்தெய்வங்கள் எதற்காகப் பிறந்து நீடித்திருக்கும்?
புறநாநூற்றைப் பார்க்கையில் தெரியும் உண்மை ஒன்றுண்டு. இங்கே இடைவிடாத கடும் போர் நடந்துகொண்டே இருந்தது. இங்கிருந்தவை எல்லாமே போர்ச்சமூகங்கள்தான். வளம் மிக்க மண்ணில் எல்லாம் உலகம் முழுக்க இத்தகைய போர்வாழ்வே நிகழ்ந்திருந்தது. போர் அன்னியர்களுடன் மட்டுமல்ல சமூகத்துக்குள்ளும் இடைவிடாது நடந்தது. ஆகவே போர் ஒரு அன்றாட நிகழ்வாக, வாழ்க்கைமுறையாகவே இருந்தது.
அந்நிலையில் ஒரு சமூகம் தன்னைப் போர்வெறி கொண்டதாக, தயக்கங்களே இல்லாததாக ஆக்கிக்கொள்வதே வெற்றிக்கான வழி. எதற்கும் துணிந்த மக்களைக் கொண்டதாக ஆகும்தோறும் அது தங்கிவாழ்கிறது, பிற சமூகங்களை வெல்கிறது. அந்தப் பண்பாட்டின் உச்சி நோக்கிச் செல்கிறது. அச்சமூகத்தின் முதன்மை விழுமியம் என்பது வீரமே. வீரத்தின் இன்னொரு முகமே தியாகம்.
இந்தக்காலகட்டத்தை இலக்கியத்தில் வீரயுகம் என்கிறார்கள். க.கைலாசபதி சங்க காலத்தையே வீரயுகம் என்று சொல்லலாம் என்கிறார். கலையும் இலக்கியமும் மதமும் எல்லாம் வீரம் என்ற விழுமியத்தை முதன்மையாக நிலைநாட்டின. வீரகதைப்பாடல்கள் உருவாயின. வீரவழிபாடு பிறந்தது. வீரர்கள் தெய்வங்களாயினர். தெய்வங்கள் மாவீரர்களாக உருவகிக்கப்பட்டார்கள்.
வீரம் என்பது முதன்மையாக தன் சொந்த அச்சம், சுயநலம் மீதான வெற்றியே. வீரம் என்பதை குறிக்கோளாகக் கொண்ட சமூகம் இடைவிடாது அச்சம், சுயநலம் இரண்டையும் தாண்டிச்செல்லவே முயன்றிருக்கும். அச்சத்துக்கு எதிராக வீரமும் சுயநலத்துக்கு எதிராக கொடையும் தியாகமும் முன்வைக்கப்பட்டன.
நம் மரபில் கோழைத்தனமும் சுயநலமும் எந்த அளவுக்கு பழித்துரைக்கப்பட்டுள்ளன என்று கண்டால் வியப்பே ஏற்படும். மொத்த சங்ககாலப் புறப்பாடல்களும் கோழைத்தனம் சுயநலம் இரண்டையும் நிராகரிப்பதற்காகவே எழுதப்பட்டுள்ளன என்று சொன்னால் அது மிகையல்ல.
ஆண்மை என்ற சொல் வீரம் என்ற சொல்லுக்கு சமானமானதாக தமிழில் கையாளப்படுவதைக் காணலாம். ஓர் ஆணுக்கு சாத்தியமான உச்சநிலை என்பது போரில் விழுப்புண் பட்டு மாய்வதே என்று அச்சமூகம் கருதியது. போர் ஒரு தூலமான நிகழ்வு. அப்போர்வெறியின் குறியீட்டு வடிவமே போர்த்தெய்வமான கொற்றவை.
போர்க்களத்திலும் போர்த்தெய்வத்தின் சன்னிதியிலும் தன் தலையை தானே அரிந்து வீழ்த்தும் ஒருவன் அந்த போர்ச்சமூகம் போற்றிய வீரம், தியாகம் என்ற விழுமியங்களை அக்கணத்தில் கண்முன் நிகழ்த்திக்காட்டுகிறான்.
நவகண்டம் செய்யும் வீரன் சமூக நலனுக்காக, குல நலனுக்காக, பொதுவான ஒரு விழுமியத்துக்காக உயிர்துறக்கிறான். தன் வாழ்க்கையும் உயிரும் ஒரு பொருட்டல்ல என்று செயல்மூலம் அறிவிக்கிறான். அது அச்சமூகம் முழுமைக்கும் ஒரு பெரும் செய்தியாக ஆகிறது. உயிரையும் வாழ்க்கையையும் ஒருபொருட்டாக எண்ணாத நிலையே உன்னதமானது என அது அச்சமூகத்தின் கூட்டு நனவிலியில் ஆணித்தரமாக நிலைநாட்டுகிறது.
இக்காரணத்தால்தான் நவகண்டம் தமிழ்ச்சமூகத்தில் ஈராயிரம் வருடத்துக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரைக்கும்கூட அது நடந்திருக்கிறது.
புதுமைப்பித்தனின் அவ்வரி அற்புதமானது. ‘யமனை எட்டி நிற்கும்படி சொல்வதற்கு எங்களுக்கு சக்தி கிடைத்ததெல்லாம் இதனால்தான்’ ஆம், சுயபலி வழியாக மரணத்தைத் தாண்டிச்செல்ல அச்சமூகம் முயன்றிருக்கிறது. எக்கணமும் சுயபலிக்குத் தயாராக உள்ள ஒருவன் முன், ஒரு சமூகத்தின் முன் மரணம் தயங்கித்தான் நிற்கும். அதன் முகத்தை அவனால் அச்சமில்லாமல் ஏறிட்டுப்பார்க்கமுடியும்.
உண்மையில் மரணத்தை விட, வாழ்க்கையைவிட ஒரு விழுமியத்தை மேல் என்று நினைக்கக்கூடிய ஒரு நிலை அது என்றே நான் புரிந்துகொள்கிறேன். அதைத் தற்கொலை என்ற இன்றைய சொல்லால் குறிப்பிட மாட்டேன். மரணத்துக்கு அஞ்சும் சமூகங்கள் எந்த விழுமியத்தையும் உறுதியாக சார்ந்திருப்பதில்லை. அவற்றை சுயநலமே ஆளும். ஆகவே அறவீழ்ச்சிக்கு ஆளாகின்றன. மெல்ல தேங்கி அழிகின்றன.
இந்த சுயபலி மனநிலையின் உச்சம் என்பது சல்லேகனை அல்லது வடக்கிருத்தல்தான். தர்ப்பைமேல் அமர்ந்து வடக்குநோக்கி இருந்து உயிர்துறக்கும் சமணமுனிகள் மரணத்தை சர்வசாதாரணமாக ஆக்கிவிடுகிறார்கள். காலவடிவமாக வந்து மானுடத்தை என்றும் அச்சுறுத்தி அலைக்கழிக்கும் மரணம் அப்போது பொருளிழந்து நின்றுவிடுகிறது.
சங்ககாலத்தில் அஞ்சினான் புகலிடம் என்ற ஓர் அமைப்பு இருந்தது. சமண முனிகள் தங்கள் முக்குடை பதிக்கப்பட்ட கற்களை நாட்டி ஓர் எல்லையை உருவாக்குவார்கள். அதற்குள் எவரும் ஆயுதம் தூக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. அதற்குள் ஒருவன் வந்து அபயம் தேடினான் என்றால் அவன் எதிரிகள் அவனைக் கொல்ல முடியாது.
கொன்றால் சமணமுனிகள் அனைவரும் உண்ணாவிரதமிருந்து உயிர்விடுவார்கள். அந்தப்பழி கொலைகாரனை விடாது. அவன் தலைமுறைகளையே அது அழித்துவிடும். அதை மன்னர்கள் அஞ்சினார்கள். தமிழகத்தில் ஏராளமான அஞ்சினான் புகலிட எல்லைக்கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
எந்த சுயபலி போர்வெறி மனநிலையின் உச்சமாகக் கருதப்பட்டதோ அந்த சுயபலி போருக்கு எதிரான ஆயுதமாக ஆகிவிடுகிறது இங்கே. தமிழ்ப்பண்பாடு அடைந்த உச்சம் என்பது இதுவே. வன்முறையின் சிகரத்தில் இருந்து அகிம்சையின் சிகர நுனிக்கு வந்த நகர்வு. அதுவே அதன் ஆன்மீக சாதனை.
பழங்குடிக் காலகட்டத்தில் தங்களை அச்சமற்றவர்களாக ஆக்கிக்கொள்ளத் தேவையான சடங்கு சுயபலி. நிலவுடைமை மன்னராட்சிக் காலகட்டத்தில் ராணுவங்களுக்கு அச்சத்தைத் தாண்டிச்செல்லும் குறியீடாக அது மாறியது. மதத்துடன் பிணைந்ததாக உருப்பெற்றது.
ஆனால் குறியீட்டுவடிவில் இன்றும் அது தேவையாகிறது. தான் நம்பும் ஒன்றுக்காக உயிர்விடத் துணிவதை ஓர் அரசியல் போராட்டமாக ஆக்கிய காந்தி சமணமுனிகளின் வழியை நவீன காலகட்டத்துக்குக் கொண்டுவந்தார். அச்சத்தில் இருந்து பெறும் விடுதலையே அரசியல் விடுதலையின் முதல்படி என்று நமக்குக் காட்டினார்.
ஜெ
அம்மன் வழிபாடும் தற்கொலைப் போராளிகளும்
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jun 6, 2014