வந்தாயிற்று…

மொத்தத்தில்
சொல்லிக்கொள்கிற மாதிரி ஒன்றும் இல்லை

வீடுகளுக்குள்
பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள்
அவர்கள் பெற்றோர்களாகும் வரை

பள்ளிக்கூடங்களில் சொல்லிக்கொடுக்கிறார்கள்
கற்றவர்கள் திருப்பிச் சொல்லிக்கொடுக்கிறார்கள்
திருப்பிச் சொல்லிக்கொடுக்க.

அலுவலகங்களில்
அவ்வலுவலகங்களை நடத்துவதற்கான
வேலைகள் நடக்கின்றன
அரசாங்கங்கள்
அரசாங்கத்தை நடத்துவதற்காக செயல்படுகின்றன.

காகிதங்கள் எழுதப்படுகின்றன
அதன்பின் படிக்கப்படுகின்றன
படிக்கப்பட்ட விஷயங்கள் மீண்டும் எழுதப்பட்டு
படிக்கப்படுகின்றன.

பொருட்களை மதிப்பிட்டு
காகிதத்தில் அச்சிட்டு
அக்காகிதங்களைக் கொண்டு
பொருட்களை வாங்குகிறார்கள்.
பொருட்கள் தீர்ந்தபிறகு
அக்காகிதங்களால்
பிறகாகிதங்களை மதிப்பிடுகிறார்கள்.

நிறையபேர் இருக்கிறார்கள்
நல்ல நெரிசல்
தங்களையே படமாக பரப்பிவைத்து
தாங்களே பார்த்துக்கொள்கிறார்கள்
தங்கள் குரல்களையே
ஆசை தீராமல் கேட்டுக்கொள்கிறார்கள்.

அவ்வப்போது திகைத்து நின்று
இதெல்லாம் என்ன என்கிறார்கள்
பயந்துபோய் திரும்பப் புகுந்துவிடுகிறார்கள்.

சரிதான்,
வருவதற்கு முன் ஒருவரும் இதையெல்லாம் சொல்லவில்லை
வந்துவிட்ட பின் என்ன செய்ய?
இருந்துவிட்டுப் போகவேண்டியதுதான்.

முந்தைய கட்டுரைபக்திமரபு-கடிதங்கள்
அடுத்த கட்டுரைமது:சில கலைச்சொற்கள்