புண்படுதல்

ஆசிரியருக்கு,

நாம் ஆகும்பே அருவி வழியில் உரையாடியது தான், ஆனால் அது முற்றுப் பெறவில்லை. அங்கே கொண்ட அட்டையாக அது இன்னும் ஓட்டிக்கொண்டே இருக்கிறது , நீங்கள் வீடு திரும்பும் முன் இக்கேள்வி காத்திருக்கும் , ஆம் பாதையோர ஈரத்தில் அட்டைபோல.

நாம் உண்மையையோ அல்லது உண்மை என நம்புவதையோ அப்படியே போது வெளியில் சொல்ல முடிவதில்லை, சில சமயம் நன்றாகத் தெரிந்த நண்பர்களிடம் கூட . இதனால் புண்பட்டுவிடுவார்களோ என்ற நிரந்தர அச்சத்துடனேயே ஒரு உரையாடலை நடத்த வேண்டி உள்ளது அதனால் இறுக்கமாகவே உணர்கிறோம். நம்மிடமும் வாரத்திற்கு ஒருமுறை யாரேனும் ‘ஹர்ட் ஆயிட்டீங்களா’ என வினவிக்கொண்டே இருக்கிறார்கள் . நீங்களும் இத்தளத்தில் வெளியாகியுள்ள பதில் கடிதங்களில் வாரத்திற்கு ஒருமுறை யாருக்கேனும் வருத்தம் தெரிவிக்கிறீர்கள், மாதம் ஒருவரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள். எண்ணிப்பார்த்தால் இரண்டிலும் ஒரு சதம் அடித்திருப்பீர்கள் (இன்னும் ஆட்டமிழக்கவும் இல்லை ! ) .

ஒரு முறை ஈரோடு பற்றிய எனது எதிர்மறை கருத்துக்குக் கூட எனது ஈரோட்டு நண்பர் கடுமையாகப் புண்பட்டு எனது அனைத்து நண்பர்களிடமும் புகார் சொன்னார் . மதம் பற்றிப் பேசினால், சாதி பற்றிப் பேசினால் , ஈழம் பற்றிப் பேசினால், கேரளம் பற்றி, கர்நாடகம் பற்றி, முற்போக்கு பற்றி, ஏன் செவ்வாய் கிரகம் பற்றிப் பேசினால் கூட எதற்கும் புண்படுகிறார்கள், எதிர்மறை விமர்சனம் பற்றிக் கேட்கவே வேண்டாம் நம்முடன் உண்டான உறவையே முறித்துக்கொள்வர். அறிவு ஜீவிகளிடம் இடக்கரடக்கல்கள், தலைவர்கள் மற்றும் ஊடகங்களிடம் அரசியல் சரிகள் என நாம் ஒரு உப்புச்சப்பற்ற சமூகத்தில் மந்தமாக உழன்று கொண்டிருக்கிறோம்.

இன்னொருவர் புண்படாதபடி பேசுதல் ஒரு உயர்ந்த பண்பாடே. ஆனால் உண்மையையோ அல்லது நாம் நம்புவதையோ பேசாமல் இருத்தல் அறிந்து கொள்ளுதலில் இருந்து நம்மைத் தேக்கம் கொள்ளச் செய்துவிடும் . இந்த ஜாக்கிரதை உணர்வுடன் பூசப்பட்ட மொழியில் மட்டுப்படுத்திச் சொன்னால் ஒன்று அது வெண்ணை எடுக்கப்பட்ட நீராக சுரத்தற்று இருக்கிறது அல்லது சாரத்தின் ஒரு துளியே கடத்தப்படுகிறது, எனவே தக்க பதில் சாத்தியமாவதில்லை .

மனமும் புண்படாமல், அறிதலில் தேக்கமும் ஏற்படாமல் ஒரு தரமான உரையாடலையோ விவாதத்தையோ எவ்வாறு சாத்தியப்படுத்துவது ?

கிருஷ்ணன் .


அன்புள்ள கிருஷ்ணன்,

உங்களுடையது மிகச்சிக்கலான ஒரு கேள்வி, ஏனென்றால் அதற்கு நேர்மையாகப் பதில் சொன்னால் பலர் புண்பட வாய்ப்புள்ளது. அவர்களிடமெல்லாம் பாதம் பணிந்து முன்னரே மன்னிப்பு கோரியபின் இதை எழுதுகிறேன்.

நீங்கள் சொல்வது சரி. நான் என்னால் புண்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கிறேன். பிரசுரமாகும் கடிதங்கள் மிகக் குறைவு. தனிப்பட்ட மடல்கள் அனேகம். இந்தப்புண்படுதலுக்கான காரணங்கள் என நான் நினைப்பது இரண்டு. ஒன்று, நகைச்சுவை உணர்ச்சிஇன்மை. இரண்டு விவாதப்பயிற்சி இன்மை.

*
தமிழ்மக்கள் நகைச்சுவையைப் பெரும்பாலும் நேரடி அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்கிறார்கள். வசையாக, விமர்சனமாக, அல்லது தகவலாக

தமிழகத்தில் என் அனுபவங்கள் எனக்குக் கற்பித்தவை ஏராளம். 1987 ல் குற்றாலம் பதிவுகள் பட்டறையில்தான் நான் முதல்முறையாக தமிழிலக்கியச் சூழலுக்குள் காலடி எடுத்துவைத்து நுழைந்தேன். அதற்கு முன்னால் நான் கதைகள் எழுதியிருந்தாலும் சுந்தர ராமசாமி தவிர பிறர் அறிமுகம் இல்லை. காசர்கோட்டில் இருந்து வந்து பஸ்ஸிறங்கி பட்டறைக்குள் நுழைந்ததுதான் என் இலக்கிய நுழைவு.அந்த நுழைவே வில்லங்கமாக இருந்தது. எதிரே விரைந்து வந்த ஒருவரிடம் சிரித்தபடி ‘கவிதைவாசிப்பு ஆரம்பிச்சாச்சா? இப்டி ஓடிவர்ரீங்க?’ என்றேன். அவர் முகம் சிறுத்து ‘நீங்க மலையாளியா?’ என்றார். ‘ஏன்’ என்றேன். ‘மலையாளநாயிங்கதான் முன்பின் தெரியாதவங்களை வைவானுக’ என்றார். நான் ‘சாரி சார். வையலை..சும்மா ஜாலிக்காக கேட்டேன்’ என்றேன். அவர் மேலும் திட்டிவிட்டு சென்றார்

கவிதை அரங்கில் படுதீவிரமான விவாதம். என்னருகே வந்து அமர்ந்த ஒருவர் தன்னை கவிஞர் அப்பாஸ் என அறிமுகம் செய்தபின் ’அந்த கவிஞரை நீங்க எதுக்காக அவமானப்படுத்தினீங்க? ரொம்ப ஃபீல் பண்றார்’ என்றார். நான் பீதியுடன் ‘யாரை?’ என்றேன். ‘அவரை’ என்று சுட்டிக்காட்டினார். ‘அவரை கவிதை தெரியாத முட்டாள்னு சொன்னீங்களாமே’ . நான் பரிதாபமாக ‘வேடிக்கையாச் சொன்னேன். எங்கூர்ல சாதாரணமா அப்டிச் சொல்லிக்குவோம்…நான் சாரிகூட சொல்லிட்டேன்’ என்றேன். ‘வாங்க ஒருவாட்டி மன்னிப்பு கேட்டிருங்க’ என்றார். நேரில் சென்று மன்னிப்பு கோரினேன். அவர் மேலும் திட்டினார். நகைச்சுவைக்காக மன்னிப்பு கோருவது அங்கே ஆரம்பித்தது. இதோ இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது.

அந்தசந்திப்பில்தான் அபாரமான நகைச்சுவை உணர்ச்சி கொண்ட யுவன் சந்திரசேகரையும், எம்.டி.முத்துக்குமாரசாமியையும் சந்தித்தேன் என்பதையும் மறுக்கமுடியாது. ‘பிரம்மராஜன் கவிதையப்போயி கட்டொடைக்கிறியே, அது ஏற்கனவே ஒடைஞ்சு போயிக் கெடக்கு. என் கவிதைய கட்டொடைடா’ என்று கண்ணீர்விட்ட விக்ரமாதித்தன் அண்ணாச்சியைக் கட்டிப்பிடித்து ‘ஒடைச்சுப்போடலாம் அண்ணாச்சி ஒடைச்சுப்போடலாம்’ என்று எம்.டி.முத்துக்குமாரசாமி ஆறுதல் சொன்ன காட்சி கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.

ஆனால் தமிழ் எழுத்தாளர்களுடன் என் அனுபவங்கள் விசித்திரமானவை. ஒருவர் நம்மைக் கிண்டல்செய்கிறார் என்பது நம் மீதுள்ள உரிமை அல்லது நட்பினால்தானே ஒழிய வன்மத்தால் அல்ல என்பதை உணர்ந்த எழுத்தாளர்கள் மிகமிகக் குறைவு. சொல்லப்போனால் நாஞ்சில்நாடன் போல ஒன்றிரண்டுபேர் மட்டும்தான். நான் வேடிக்கையாகச் சொன்ன ஒவ்வொரு வரிக்கும் பலமுறை பலரிடம் மன்னிப்பு கோரியிருக்கிறேன். சிலசமயம் ’அப்படி என்ன சொல்லிவிட்டேன்’ என ஆத்திரம் எகிறும். பிறகு அவர்கள் தரப்பில் உள்ள உணர்வைப் புரிந்துகொள்வேன். அவர்களின் பண்பாட்டுப்புலம் வேறாக இருக்கலாம்.

எம்ஜிஆர்,சிவாஜி கட்டுரை விவகாரத்தில் நான் அதிர்ச்சி ஏதும் அடையவில்லை. ஆனால் நகைச்சுவை என்பது தமிழ்நாட்டில் எப்படி புரிந்துகொள்ளப்படுகிறதென அப்போது கண்கூடாகவே கண்டேன். அதை ஒரு வசை என்று எடுத்துக்கொண்டவர்கள்தான் அனேகமாக அனைவரும். ’இருந்தாலும் நீங்க அப்டி சொல்லியிருக்கக் கூடாது’ என்று என்றுதான் இன்றும் சொல்கிறார்கள். அதன்பின் நான் எழுதிய ஒவ்வொரு நகைச்சுவைக்கும் புண்பட்ட கடிதங்கள் வந்துள்ளன.

நகைச்சுவைக் கட்டுரைகளை அப்படியே எடுத்துக்கொள்வது மிக அதிகம். ஆகவேதான் கட்டுரைகளுக்கு மேலே நகைச்சுவை என கொட்டை எழுத்தில் போடுகிறேன். இருந்தும் நேர் அர்த்தம் எடுத்துக்கொண்டு கடிதங்கள் வருகின்றன. குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபாவிடமும் சிவானந்த லஹரி மகாராஜிடமும் கூட்டிச்செல்லக்கோரி வாரம் ஒரு கடிதம் வந்துகொண்டிருக்கிறது இப்போதும். இந்தக் கட்டுரைக்கே தமிழுணர்வு புண்பட்டு எப்படியும் இருபதுமுப்பது கடிதங்களை எதிர்பார்க்கிறேன்.

*

இந்த நகைச்சுவை உணர்ச்சியின்மை ஏன் என்று யோசித்தால் எனக்கு மூன்று காரணங்கள் தென்படுகின்றன. ஒன்று, தமிழ்நாட்டில் பரவலாக இருக்கும் ஒருவகை தாழ்வுணர்ச்சி. இன்னொன்று, நம்மிடமிருக்கும் வசைமரபு. மூன்று, நம்முடைய பொதுஅறிவுக்குறைவு

தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் உள்ளூர விளக்கமுடியாத ஓர் தாழ்வுணர்ச்சியால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். இதில் சாதிமத பேதம் ஏதும் இல்லை. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து மிகையான ஒரு பெருமிதத்தைக் கற்பிதம்செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் பற்றி, தமிழ்ப்பண்பாடுபற்றி, தங்கள் சொந்தச் சாதி பற்றி எல்லாம் ஊதிப்பெருக்கிய பெருமிதங்களைக் கட்டமைத்தபடியே செல்கிறார்கள். அவற்றை விவாதிக்கவோ, வரலாறுசார்ந்து பரிசீலிக்கவோ அவர்கள் தயாராக இருப்பதில்லை.

சராசரித் தமிழர்களிடம் தமிழ்பற்றியோ தமிழ்ப்பண்பாடு அல்லது வரலாறு பற்றியோ பேசினால் அவர்களிடம் அவற்றைப்பற்றிய ஒரு எளிய வரலாற்றுச்சித்திரம் கூட இருப்பதாகக் காணமுடியாது. ஆனால் மிகையான பெருமிதம்சார்ந்த பலவற்றைச் சொல்வார்கள். இமையத்தில் வில்கொடி பறந்ததில் ஆரம்பித்து தமிழில் மட்டும்தான் ழ என்ற எழுத்து உண்டு என்பது வரை. சங்க இலக்கியம் பற்றி நான்குவரி சொல்லக்கூடியவர்கள் அபூர்வம். ஆனால் சங்க இலக்கியம்தான் உலகிலேயே தொன்மையான, உலகிலேயே உயர்ந்த இலக்கியம் என்று அனேகமாக அனைவருமே சொல்வார்கள்.

சென்ற ஒருநூற்றாண்டில் நம்மிடம் எது உண்டு, எது இல்லை என்று நாம் பரிசீலித்ததே இல்லை. அப்படி எவராவது பரிசீலிக்கமுற்பட்டால் அவர்கள் தமிழ் விரோதிகள், இன எதிரிகளாக ஆக்கப்பட்டுவிடுவார்கள். தமிழ்ப்பண்பாடும் மொழியும் பெருமிதம் கொள்ளவேண்டிய எவ்வளவோ விஷயங்கள் உண்டு, அவை குறித்து தமிழர்களுக்கு ஏதும் தெரியாது. ஆகவே அவற்றை உலகின் முன் நிறுத்தும் ஆற்றலும் தமிழர்களுக்கு இல்லை. அதற்குப்பதிலாக மொண்ணையான ஒரு தற்பெருமை மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கடியில் தாழ்வுமனப்பான்மை நொதித்து நாறிக்கொண்டிருக்கிறது.

இந்தத் தாழ்வுணர்ச்சியின் அடுத்தகட்டமே உலகமே தங்களுக்கு எதிரிகளாக உள்ளது என்ற பிரமை. இங்குள்ள அரசியல்வாதிகளால் திட்டமிட்டு இது பரப்பப்படுகிறது. தமிழர்களுக்கு சிங்களன், சீனன்,மலேசியன்,மலையாளி,கன்னடன்,தெலுங்கன், அமெரிக்கன், நார்வேக்காரன், சிந்தி, குஜராத்தி, மார்வாடி,பிழைப்புதேடிவந்த பிகாரி எல்லாருமே எதிரிகள். இந்த தமிழ்ப்பகைவர்களிடம் இருந்து தப்பிப்பதைப்பற்றி மட்டுமே தமிழன் சதா சிந்திக்கவேண்டும். இந்த மனநிலை காரணமாக தன் குறைபாடுகளையோ, பிரச்சினைகளையோ, பிழைகளையோ நம்மால் உணரமுடிவதில்லை. தன்னுடைய எல்லா சிக்கல்களுக்கும் காரணம் பிறரே என எளிமையாக நம்மைநாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.

பொதுவான இந்தத் தாழ்வுமனநிலைதான் நகைச்சுவைக்கு எதிராக உள்ளது. கிண்டலைக்கூடத் தாக்குதலாக எண்ணச்செய்கிறது. எதைச் சொல்லிக்கேட்டாலும் புண்படச்செய்கிறது. தங்களைப்பற்றி எங்கே எவர் பாராட்டியிருந்தாலும் அதைத் தேடிப்பிடித்துத் தலைமேல் வைத்துக்கொண்டாடுவது தமிழ் மரபு. ஆகவே சிறிய விமர்சனங்கள் அல்லது கேலி கூட கடப்பாரைத்தாக்குதலாக தெரிகிறது. தன்னைப்பற்றிய கிண்டலை ரசிக்க ஒரு பெருமிதமும் பெருந்தன்மையும் தேவை. நான் உண்மையில் பெரியவன், இந்த எளிய கேலிகள் என் பெருமைக்கு உண்மையில் நிறைசேர்ப்பவை என்ற எண்ணம் தேவை. அது நம்மிடம் மிகமிகக் குறைவு.

நம்மிடம் எங்கும் நிறைந்திருக்கும் வசைபாடும் மரபும் நகைச்சுவைக்கு எதிரானது. பொதுவாக பார்த்தால் தமிழகத்தில் யாரையாவது யாரோ வசைபாடிக்கொண்டே இருக்கிறார்கள். அப்பட்டமான நேரடியான வசை. முதலாளி வேலைக்காரனை, ஆசிரியர் மாணவனை, பெற்றோர் பிள்ளைகளை, வண்டி ஓட்டுநர் சாலையில் போகிறவனை வசைபாடுகிறார். ‘நான் கன்னாபின்னான்னு திட்டுவேனே சரியா?’ என்று கேட்டபின்னர்தான் ஆட்களை வேலைக்கே வைத்துக்கொள்கிறார்கள்.

நம் அரசியல் மேடைகளில் முழுக்க வசைதான். நம்முடைய இலக்கியமேடைகளில்கூட வசைகள்தான் ஒலிக்கின்றன. நம்முடைய பெரிய சிந்தனையாளர்கள்கூட மேடைமேடையாகப்போய் வசைமாரி பொழிந்தவர்கள்தான். ஏதாவது ஒரு கொள்கைத்தரப்பை பாவலா செய்யவேண்டியதுதான். அதன் பின் யாரைவேண்டுமானாலும் மாறி மாறி வசைபாடிக்கொண்டே இருக்கலாம், எல்லாமே சிந்தனைச்செயல்பாடாகக் கருதப்படும். ஈ.வே.ரா முதல் அ.மார்க்ஸ் வரை வசைபாடிகளால் மட்டுமே ஆனது நம் பண்பாட்டுச்சூழல்.ஆக எந்த நகைச்சுவையையும் அந்த வசைமரபுடன் நம் மனம் இணைத்துக்கொள்கிறது. வசைபாடப்பட்டோம் என உணரச்செய்கிறது.

நம்முடைய பொது அறிவுக்குறைவும் நம்மை மொண்ணையாக ஆக்குகிறது. நகைச்சுவை என்பது கொஞ்சமாகச் சொல்லி மிச்சத்தை ஊகிக்க வைப்பது. ஊகிக்கத்தெரிந்தால்தானே நகைச்சுவையை ரசிக்கமுடியும்? உலகமெங்கும் சிறந்த நகைச்சுவை தகவலறிவில் இருந்து பிறக்கிறது. தகவல்களை திரித்தும் விசித்திரமாக இணைத்தும்தான் நகைச்சுவையை உருவாக்க முடியும். தமிழர்களுக்கு பள்ளிக்கல்வியில் இருந்து கிடைத்த பிழைப்பு சார்ந்த தகவல்கள், சினிமாத்தகவல்கள் அன்றி பொதுவான பண்பாட்டுதகவலறிவு மிகக் குறைவு. திகைப்பூட்டுமளவு குறைவு. ஆகவே நுண்ணிய பகடிகள் புரிவதேயில்லை. விவேக்-சந்தானம் பாணி கூச்சல்களே பிடிகிடைக்கின்றன.

சுந்தர ராமசாமியுடன் அவரது கடை வாசலில் வந்து இறங்கினோம். நாங்கள் நான்குபேர். கடை வாசலில் மாலைமுரசுக் கட்டுகள். அதன்மேல் படுத்து ஒருவன் தூங்கிக்கொண்டிருந்தான். ’அந்த மோசிகீரனை எழுப்பு’ என்றார் ராமசாமி. நான் சிரித்தேன். கூட இருந்த இன்னொரு நண்பர் கொஞ்ச நேரம் கழித்து சுந்தரராமசாமி என்ன சொன்னார், நான் ஏன் சிரித்தேன் என்று கேட்டார். முரசுகட்டிலில் தூங்கிய மோசிகீரனைப் பற்றிச் சொன்னேன். ’அப்டியா’ என்றார் யதார்த்தமாக.

*

நமக்கு இன்று விவாதிக்கத் தெரியாது.மிகவிரிவான ஒரு விவாதமரபு இங்கிருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. அரங்கேற்றமேடையில் நூல்கள் நாட்கணக்காக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. பௌத்த, சமண,சைவ, வைணவ மரபுகளில் நிகழ்ந்த மாபெரும் விவாதங்களின் தடயங்கள் மணிமேகலை முதலே நூல்களாகப் பதிவாகியிருக்கின்றன. ஆனால் நாம் அந்தத் தொடர்ச்சியை இழந்து பல நூற்றாண்டுகளாகின்றன. நம்முடைய கல்விமுறை நமக்கு விவாதிக்கக் கற்றுத்தரவில்லை. தகவல்களைக் கற்றுத் திருப்பிச்சொல்வதே நம் கல்வியாக இருக்கிறது.

ஆகவே புறவயமான தர்க்கமுறை நமக்குப் பழக்கமில்லை. அதன் விதிகளும் நடைமுறைகளும் நாமறியாதது. நம் சிந்தனைக்கு ஒரு நல்ல மாற்றுக்கருத்து வருவதென்பது நமக்களிக்கப்படும் அங்கீகாரம். நம் தரப்பை மேம்படுத்திக்கொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பு. அது நமக்கு உவகையை அளிக்கவேண்டும். கிளர்ச்சியூட்டவேண்டும். அந்த மாற்றுத்தரப்பாளரை நமது மறுபக்கமாகத்தான் நோக்கவேண்டும். அவனும் நானே என எண்ணவேண்டும்.

அந்த மனநிலை பழக்கமில்லாத நிலையில் நம் கருத்துக்களுடன் நாம் கொண்டுள்ள உறவு உணர்ச்சிகரமானதாக இருக்கிறது. அது மறுக்கப்படும்போது நாம் அகங்காரக்கொந்தளிப்படைகிறோம். அதன்பின் நிகழ்வது வெறும் அகங்கார மோதல் மட்டுமே. விளைவு மனவருத்தங்கள். தனிப்பட்ட புண்படல்கள். இது டீக்கடை விவாதம் முதல் தொழிற்சங்கவிவாதம் வரை எங்கும் காணக்கிடைப்பதே. ஒருவர் சொல்லும் ஒரு பொதுவான தகவலை ஆதாரபூர்வமாக மறுத்தால்கூட மனம்புண்படுகிறார்கள். நாட்கணக்கில் திட்டித்தீர்க்கிறார்கள்.

தமிழில் இணையம் வந்தபுதிதில் விவாதமேடைகள் உருவாயின. திண்ணை, தமிழ்.காம், ஃபாரம் ஹப் போன்ற அமைப்புகள் விவாதிக்க இடமளித்தன. அந்த விவாதங்கள் முழுக்க எந்த ஒழுங்கும் இல்லாத வசைக்கொந்தளிப்புகள்தான் நிறைந்தன. ஒரு சாதாரணக் கருத்துகூட தர்க்கபூர்வமாக மறுக்கப்படாது. அதை தனக்கு எதிராக விடப்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டு மனம்புண்பட்டு வசைபாட ஆரம்பிப்பார்கள். எந்த ஒரு கருத்தும் விவாதத்துக்குரியதாக எண்ணப்படவில்லை. ’நான் நம்புவது விவாதத்துக்கு அப்பாற்பட்டது எவர் விவாதித்தாலும் நான் புண்படுவேன்’ என்ற மனநிலை நிலவியது

உதாரணமாக, ஓரு விவாத அரங்கில் சுஜாதா ஒரு வணிக எழுத்தாளர் என நான் நினைக்கிறேன் என்று சொன்னேன். ஒருவருடம் யார் யாரோ வந்து வசைமாரி பொழிந்தார்கள். இன்னொரு முறை நா.பார்த்தசாரதியைப்பற்றி அப்படிச் சொன்னதற்கும் வசைமழை. அவை இலக்கிய உலகில் ஏற்கப்பட்டுவிட்ட கருத்துக்கள், இணையத்தில் வாசிக்கவந்தவர்களுக்குத்தான் அவை புதிய கருத்துக்கள். தாங்கள் நம்பும் ஒன்று மறுக்கப்படும்போது அதை புரிந்துகொள்வதற்குப்பதிலாக அதைச் சொல்பவனை வாயைமூடச்செய்யவே முயன்றார்கள்.

ஒருவர் கூட நீ ஏன் அப்படிச் சொல்கிறாய், உன் அளவுகோல்கள் என்ன என்று கேட்கவில்லை. உன் அளவுகோல்களை இன்னின்ன காரணத்தால் நான் மறுக்கிறேன், என் நோக்கில் சுஜாதாவும் நா.பாவும் பேரிலக்கிவாதிகளே என்று வாதிடவில்லை. ’நீ எப்படி அப்படிச் சொல்லலாம், அவர் எவ்வளவு பெரிய ஆள், எவ்வளவுபேர் அவரைப்பற்றி பாராட்டியிருக்கிறார்கள், கருத்துச்சொல்ல நீ யார்?’ இந்த பாணியில்தான் வினாக்கள் எழுந்தன. இன்றுவரை இந்த பாணியே தொடர்கிறது.

என் இணையதளத்தில் சுஜாதா, கல்கி, பாரதி, ஈவேரா என எவரைப்பற்றி விமர்சனம் எழுந்தாலும் இந்த பாணியில்தான் கடும் சினக்கேள்விகள் வருகின்றன. மு.வரதராசனார் பற்றிய கருத்துகூட பலர் மனதை புண்படுத்துகிறது. இத்தனைக்கும் நான் எந்தக்கருத்தையும் சமநிலை இல்லாமல் ஒற்றைத் தன்மையுடன் சொல்வதில்லை. அவர்களின் எல்லா சாதனைகளையும் அங்கீகரித்தபின் என் விமர்சனங்களை முன்வைக்கிறேன். அவை நெடுங்காலமாக இலக்கியத்தளத்தில் செயல்படும் ஒரு விமர்சகனின் மதிப்பீடுகள் என்றும், அவை தீர்ப்புகள் அல்ல கருத்துக்களே என்றும் சொல்லியபிறகே பேசுகிறேன். ஆனால் எதிர்வினைகள் எப்போதும் ஒரே வகையானவை. அதி உக்கிரமான கோபத்துடன் கூடிய தனிப்பட்ட வசைகள்.

சமீபத்தில் பாரதி பற்றிய விவாதத்தில் ‘கருத்துச்சொல்ல உனக்கு என்ன தகுதி?’ என்ற வகை கடிதம் ஒன்று வந்தது. ‘எனக்கும் பாரதிக்கும் இடையே இருப்பதாக நீ எண்ணும் தூரத்தைவிட உனக்கும் எனக்குமான தூரம் பல மடங்கு அதிகம். என்னை மறுக்க உனக்கு என்ன தகுதி?’ என்று ஒரு பதிலைப் போட்டுவிட்டு மின்னஞ்சல் முகவரியை ஃபில்டரில் போட்டுவிட்டேன். நம்மில் பலரும் இதையெல்லாம் நினைத்துக்கூட பார்ப்பதில்லை.

ஒரு மாற்றுக்கருத்தால் நாம் ஏன் புண்படுகிறோம், நாம் நம்பும் ஒன்றை இன்னொருவர் நிராகரித்தால் ஏன் கொந்தளிப்படைகிறோம்? அது எந்தவகையான மனப்பலவீனம்? அதை மட்டும் நினைத்தாலே போதும் நாம் இருக்கும் அறிவார்ந்த தளம் என்ன நம் ஆன்மீக நிலை என்ன என்று புரியும்.

விவாதங்களில் கருத்துக்களுக்காகப் புண்படுவதென்பது அறிவுநிலையின் மிகத்தாழ்ந்த படி. அந்நிலையில் நிற்பவர்களிடம் ஒரு போதும் நேர்ப்பேச்சில் விவாதத்துக்குச் செல்லக்கூடாது. அவர்களிடம் விவாதிப்பதில் பொருளே இல்லை. நான் மிகப்பெரும்பாலும் பேசாமலிருந்துவிடுவேன். என் நெடுநாள் அலுவலகத்தோழர்கள் பலர் நான் எதையாவது மறுத்துப்பேசி கேட்டிருக்கமாட்டார்கள். ‘சார் எல்லாத்தையும் கேட்டுக்குவார், கருத்தே சொல்ல மாட்டார்’ என்பதே என்னைப்பற்றிய பொதுபிம்பம்.

ஆம், கிருஷ்ணன் புண்படுபவர்களை முழுக்க தவிர்த்துவிடுவதே நல்லது.மேற்கொண்டு அவர்களை புண்படுத்துவதில் அர்த்தமில்லை.

*

இச்சூழலில் பொது அறிவுத்தளத்தில் ஒரு நகைச்சுவையை அல்லது விமர்சனத்தை எப்படி முன்வைப்பது?

ஏற்கனவே இதைப்பற்றி பலமுறை எழுதிவிட்டேன். தமிழ்ச்சூழலில் நகைச்சுவையையும் விமர்சனத்தையும் புண்படுத்தாமல் பேசுவதும், எழுதுவதும் மிக எளிது. அவற்றுக்கு நம் சூழல் ஒரு விஷய எல்லையை உருவாக்கி அளித்திருக்கிறது.இன்னின்ன விஷயங்களைப்பற்றி, இன்னின்ன முறைகளில் எழுதுங்கள் என்று. ஆனந்தவிகடனைப் பார்த்தாலே தெரியும். அந்த அனுமதிக்கப்பட்ட களத்துக்குள் கம்புசுற்றவேண்டியதுதான். வரதட்சிணைக் கொடுமையை விளாசலாம். சமூக அநீதிகளை சாடலாம். பொத்தாம்பொதுவாக நகைச்சுவை எழுதலாம். கேளிக்கை எழுத்தும் ,கேளிக்கை சினிமாவும் மிகக் கவனமாக அந்த எல்லையை உருவாக்கிக் கொண்டிருக்கும். அதற்குப் பின்னூட்டங்கள் அவற்றுக்கு வழிகாட்டுகின்றன.

ஆனால் இந்த எல்லை மிகக்குறுகியது. ஆகவே திரும்பத்திரும்ப ஒரே விஷயம்தான். ஆனந்தவிகடன் நாற்பதாண்டுக்காலம் வீட்டோடு மாப்பிள்ளைகளை கிண்டல்செய்து நகைச்சுவை எழுதியிருக்கிறது. வேலைக்காரிகள், நர்ஸுகள்,டைப்பிஸ்டுகளை முப்பதாண்டுக்காலம் பல்லாயிரம் முறை ஒரே விதத்தில் கிண்டல்செய்திருக்கிறது. இன்று அவர்கள் புண்பட ஆரம்பித்துவிட்டதனால் திரும்பத்திரும்ப புறமுதுகிட்டு ஓடும் அரசர் பற்றிய ’ஜோக்கு’கள். நாம் சலிக்காமல் சிரித்துக்கொண்டே இருக்கிறோம்.

அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு எழுதுபவன் எழுத்தாளனே அல்ல. அவன் வணிகக் கேளிக்கையாளன். அவர்கள் எழுதட்டும், மக்கள் வாசிக்கட்டும். அது வேறு உலகம். அதை மட்டுமே வாசிப்பேன், புண்படாது பாதுகாப்பாக ரசிப்பேன் என்பவர்கள் அங்கேயே புழங்கட்டும். இலக்கியம் உண்மைகளின் களம். சுதந்திரத்தின் வெளி. இங்கே அந்த எல்லைகளும் விதிகளும் செல்லுபடியாகாது. ‘கடுகு’ நகைச்சுவையை வாசித்து கிச்சுகிச்சு அடைந்து சிரிப்பவன் ப.சிங்காரத்தை வாசிக்க வந்தால் புண்படத்தான் செய்வான். ஆனால் இது இலக்கியம், இப்படித்தான் இருக்கும். உனக்கு புண்படுகிறதென்றால் வராதே, திரும்ப கடுகிடமும் பாக்கியம் ராமசாமியிடமும் ஓடு என்பதே அவனுக்கான பதில்.

இலக்கிய வாசகன் என்பவன் தன் அகத்தை, ஆழ்மனதை இலக்கியம் முன்வைப்பவன். தன் புற அடையாளங்களை அழித்துக்கொண்டு இலக்கியப்படைப்பை அறிபவன். தன்னை சாதியுடன், மதத்துடன், மொழியுடன், இனத்துடன்,செய்யும்வேலையுடன்,படிப்புடன்,ஊருடன் எல்லாம் அடையாளப்படுத்திக்கொண்டு வாசிப்பவன் இலக்கியம் வாசிக்கவேண்டிய தேவையே இல்லை. அவனுக்கு இலக்கியம் ஒன்றுமே கொடுக்கப்போவதில்லை. மாறாக அவனுடைய சுய அடையாளங்களை சீண்டி அவனை நிம்மதி இழக்கச்செய்யும் அது.

தன் வாழ்வனுபவங்களைக்கொண்டு, தன்னுள் தன் பண்பாடு தேக்கிய படிமங்களைக்கொண்டு இலக்கியத்தை வாசிக்கையில் மட்டுமே இலக்கியம் அவனுன் உரையாடுகிறது. மற்றவர்களுக்கு அது நாய்பெற்ற தேங்காய்தான். உருட்டிப்பார்க்கிறார்கள். புண்படுபவர்கள் அவர்களே. அவர்கள் வழிதவறி வந்து விழிக்கிறார்கள்.பணிவுடன் அவர்களுக்கு திரும்பிச்செல்லும் வழியைக் காட்டுவதே நல்லது.உண்மையான நுண்ணுணர்வும் தேடலும் கொண்ட மிகச்சிலர் மட்டும் இலக்கியம் வாசித்தால் போதும்.

என் எழுத்தால் முஸ்லீம்கள் புண்பட்டிருக்கிறார்கள். கிறித்தவர்கள் புண்பட்டிருக்கிறார்கள். சைவர்களும் வைணவர்களும் புண்படுகிறார்கள். பிராமணர்களும் பிராமணரல்லாதவர்களும் புண்பட்டபடியே இருக்கிறார்கள். கணிப்பொறி வல்லுநர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள், பஸ்கண்டக்டர்கள், சிறுகடை உரிமையாளர்கள், விவசாயிகள் எல்லாம் புண்பட்டிருக்கிறார்கள். வேடிக்கையாகச் சொல்லவில்லை. ஒரு கதையில் எதிர்மறை இயல்புகொண்ட கதாபாத்திரம் டாக்டர் என்றால் உடனே டாக்டர்கள் புண்பட்டு கடிதம் அனுப்புகிறார்கள். ஒரு முறை சோளக்கதிர் சுட்டு விற்பவர் ஒரு பசுவை அடித்து துரத்தினார் என்று எழுதினேன் என்பதற்காக ஒரு சோளக்கதிர் விற்பவர் புண்பட்டு கடிதம் எழுதியிருந்தார்- ஒருநாளும் ஒரு சோளக்கதிர் விற்பவர் அப்படிச் செய்யமாட்டார் என்று அவர் வாதிட்டிருந்தார்.

வணிக இலக்கியம் வாசிப்பவர்கள் எழுத்தாளன் என்பவன் வாசகன் ரசனைக்காக வாசகனுக்குப்பிடித்தபடி எழுதவேண்டிய ஒரு கேளிக்கையாளன் என நினைக்கிறார்கள். அப்படியே பழகி விட்டிருக்கிறார்கள். அவர்கள் இலக்கியத்துக்குள் நுழையும்போது தன் அந்தரங்கத்தின் ஆணைக்கேற்ப சுதந்திரமாக எழுதும் எழுத்தாளனைக் கண்டு திகைப்பு அடைகிறார்கள். வாசகனுக்கு புரியாமல் அவன் எழுதினால் எரிச்சல் கொள்கிறார்கள். வாசகனால் ஏற்க முடியாததை எழுதினால் வசைபாடுகிறார்கள். வாசகனுக்கு ஒவ்வாததை அவன் எழுதினால் அவனை ’திருத்த’ முற்படுகிறார்கள். இந்த புண்படும் மனநிலைக்கு காரணம் அதுதான்.

எழுத்தாளன் என்பவன் அவனுக்கான அனுபவ மண்டலம் ஒன்று உடையவன், அதிலிருந்து பெற்ற அந்தரங்க ஞானம் ஒன்றை எழுதக்கூடியவன் என்று உணரும் வாசகன் அந்த அனுபவ மண்டலத்துக்குள் நுழையவே முயல்வான். அவ்வாறு நுழைகையில் அங்கே தனக்குப்பிடித்தமானவை மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்க மாட்டான். அந்த உலகின் எல்லா இயல்புகளுடனும் அதை ஏற்க முயல்வான். எழுத்தாளனை தனக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் ஒருவன் என எண்ணக்கூடியவன் அந்த ஆசிரியன் சொல்லக்கூடிய உண்மைகளை அறியவும் பரிசீலிக்கவும்தான் முற்படுவான். தனக்குப்பிடித்ததை எழுத்தாளன் சொல்லாவிட்டால் புண்படுவேன் என்று நினைக்கமாட்டான்.

எவரையுமே புண்படுத்தாமல் உண்மையான எதையுமே தமிழில் எழுதிவிட முடியாது. அப்படி எழுதவேண்டிய அவசியமும் இல்லை. இலக்கியம் என்பதே ஏதோ ஒருவகையில் வாசகனை உசுப்பவும் ,சீண்டவும் ,உடைக்கவும், குலைக்கவும் முனையக்கூடிய ஒன்றுதான். நவீன இலக்கியத்தின் அடிப்படை இயல்பே விமர்சனம்தான். சமூக விமர்சனம், தத்துவார்த்தமான விமர்சனம், ஆன்மீகமான விமர்சனம். அந்த விமர்சனம் வாசகனின் சுய அடையாளங்களை உடைக்கலாம். அவனுடைய கொள்கைகளை சிதறடிக்கலாம். அவனுடைய உணர்வுக்கட்டுமானங்களை கொந்தளிக்கச்செய்யலாம். அவனுடைய ஆன்மீகநிலைப்பாடுகளை சுழற்றியடிக்கலாம்.

நம்மை அறைந்து நம் ஆளுமையை உடைக்காத ஒன்று இலக்கியமே அல்ல. அந்த நிலைகுலைவு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதில்லை.விரக்தியை எரிச்சலை கோபத்தை உண்டுபண்ணக்கூடியதாகவும் இருக்கலாம். சிலசமயம் நம்மை புண்படுத்துவதேகூட அந்த இலக்கிய ஆக்கத்தின் நோக்கமாக இருக்கலாம்.

ஆகவே புண்படாத வாசிப்புக்காக ஆசைப்படுபவர்கள் இலக்கியத்தின்பக்கம் வராமலிருப்பதே அவர்களுக்கும் நல்லது, இலக்கியத்துக்கும் நல்லது. அவர்கள் வாசித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. கோடிக்கணக்கான மக்கள் இலக்கியச் சகவாசமே இல்லாமல் நன்றாக வேலைபார்த்து, சாப்பிட்டு, பிள்ளைகளை உற்பத்திசெய்து, தொலைக்காட்சி பார்த்து, பாலகுமாரன் சுஜாதா வாசித்து, சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்.ஆகவேதான் இலக்கியத்தை ஒருபோதும் பரப்பக்கூடாது என நான் நினைக்கிறேன். அதை வாசகன் அவனுடைய ஞானத்தேவைக்காக. தேடிவரவேண்டும்.

இலக்கிய ஆக்கங்களை எழுதும்போது எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் என்னை ஆளாக்கிக்கொள்ளக் கூடாது என்பதே எனக்கு நான் ஏற்படுத்திக்கொண்டுள்ள விதி. அந்த இலக்கிய ஆக்கம் எவரையேனும் புண்படுத்தும் என்றால் அதுவே அதன் பணி. அதன்மூலம் ஏதாவது எதிர்விளைவுகளுக்கு ஆளாகவேண்டும் என்றால் அதை எதிர்கொள்வதே என் விதி. தன் இலக்கியப்படைப்புக்காக உயிர்விட்டவர்கள் இருக்கிறார்கள். இலக்கியம் சமகால வாசகர்களுக்காக எழுதப்படுவதில்லை. சமகால அரசியல் சமூகச்சூழல்களை நோக்கி அதுபேசுவதுமில்லை. ஆகவே அது சமகால வாசகர்களின் மனநிலைகளை அல்லது எதிர்வினைகளை எழுத்தாளன் ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது என்பதே என்னுடைய எண்ணம்.

சமகால வாசகர்களை புண்படுத்தாத நல்ல இலக்கியமே இல்லை. புதுமைப்பித்தன் புண்படுத்தி வசைகளை வாங்கியிருக்கிறார். ஜெயகாந்தன் புண்படுத்துபவர் என்றே அறியப்பட்டார். சுந்தர ராமசாமியும் ஜி.நாகராஜனும் ப.சிங்காரமும் நாஞ்சில்நாடனும் புண்படுத்தியிருக்கிறார்கள். அது இலக்கியத்தின் வழி. சுற்றி இருக்கும் அசட்டுவாசகர்களின் உணர்வுகளுக்கு அஞ்சி அவர்கள் தங்கள் எழுத்தை எழுதாமலிருந்தார்கள் என்றால் இன்று அவர்களுக்கு என்ன மதிப்பு?

கருத்துவிவாதங்களைப் பொறுத்தவரை அப்படி அல்ல. அவை சமகால வாசகர்களை நோக்கியே பேசப்படுகின்றன. அவை வாசகர்களுடன் உரையாடுகின்றன. நான் என்னுடன் உரையாடும் தரப்புடன் மட்டுமே பேசுகிறேன். உதாரணமாக இஸ்லாமியர் தரப்புடன் எனக்கு உரையாடலே இல்லை, அது சாத்தியமும் இல்லை. ஒற்றைப்படையான தீவிர மத நம்பிக்கையை மட்டுமே அவர்கள் முன்வைப்பார்கள். அவர்களைப்பற்றி என்ன சொன்னாலும் புண்படுவார்கள். அவர்களில் ஒரு பத்துபேர் வேறுவகையில் இருந்தால்கூட அவர்களிடம் பேசலாம். அப்படி எவரையும் நான் கண்டதில்லை. ஆகவே அவர்களுடன் பேச எனக்கு ஏதுமில்லை.

ஏதோ ஒருவகையில் என்னைப் பொருட்படுத்துகிற, என்னிடம் சொல்லவும் நான் சொல்வதைக் கேட்கவும் நினைக்கிறவர்களிடம் மட்டுமே நான் பேசுகிறேன்.அந்த உரையாடலில் கூடுமானவரை உண்மையைப் பேசவே முயல்வேன். தெளிவாக நேரடியாக. என்னிடம் ஒளிக்கவோ, பூடகமாகச் சொல்லவோ ஏதுமில்லை. என்னுடைய தனிப்பட்ட நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் என்னுடன் பேசுபவர்கள் நம்பவேண்டும் என்று விரும்புவேன். அவர்கள் நம்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் பேசுவேன். அப்படி நம்பி என்னுடன் விவாதிப்பவர்களை மட்டுமே என் வாசகர்களாக நினைப்பேன்.மற்றவர்களை முற்றிலும் புறக்கணித்துவிடுவேன்.

விவாதங்களில் கருத்துக்களை கறாராக முன்வைப்பேன். எதிர்த்தரப்பைத் திட்டவட்டமாக மறுப்பேன். உணர்ச்சிகரமாக முன்வைக்கவேண்டிய விஷயங்களை அப்படித்தான் சொல்வேன். ஆனால் ஒருபோதும் ஒருவரை இடித்துரைக்க மாட்டேன். அவரது தனிப்பட்ட அகங்காரத்தைச் சீண்டும்படி கருத்துச் சொல்ல மாட்டேன். ஒரு தருணத்திலும் நேரடியாக எவரையும் கண்டிக்கக்கூடாதென்றே நினைத்திருக்கிறேன். அப்படி கண்டித்தால் அவரை என் நண்பராக, நெருக்கமானவராக நினைக்கிறேன், அவரிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்றே அர்த்தம். அவர்கள் புண்பட்டால் அவர்களிடம் என் நோக்கத்தை எடுத்துச் சொல்வேன். மன்னிப்பும் கோருவேன். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நல்ல விவாதச்சூழலுக்குள் அவரை கொண்டுவர முயல்வேன்.

பொதுவிவாதங்களில் எவரும் வந்து கலந்துகொள்ளலாம். எப்படி வணிகஎழுத்துக்கான வாசகர்கள் இலக்கியத்தை வாசிக்க நேர்கிறதோ அதைப்போல ஒரு பொதுவான கருத்துவெளியில் விவாதித்துப் பழக்கமில்லாதவர்களும் விவாதங்களில் உள்ளே வந்துவிடுகிறார்கள். தமிழ்ச்சூழலின் வழக்கப்படி மாற்றுக்கருத்தை கேட்டதுமே புண்பட்டுவிடுகிறார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் புண்பட்டதாக தெரிந்தால் நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்குவதில்லை. ஏனென்றால் எனக்கு எந்த ஒரு தனிமனிதரையும் புண்படுத்தும் நோக்கம் எப்போதும் இருந்ததில்லை. அப்படி நிகழ்ந்திருந்தால் அது என் தவறும் அல்ல.

ஆனால் அந்த மன்னிப்புக்கோரல் அப்படிப் புண்பட்டவர்களை முழுமையாகவே என் வாசகர் தரப்பில் இருந்து வெளியே நிறுத்துவதுதான். என் கருத்துக்களுக்காகப் புண்படும் ஒருவரை ஒருபோதும் நான் என் வாசகராக, நண்பராக ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு சந்தர்ப்பத்திலும் அவரை என்னருகே நெருங்கவிடுவதும் இல்லை. அவர் வாழும் உலகம் வேறு. அதில் எனக்கு இடமில்லை. என் உலகில் அவருக்கும்.

ஜெ


புண்படுத்தாத நகைச்சுவை என்பது

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 17, 2012 @ 0:00

முந்தைய கட்டுரைபெல்ஜியத்திலிருந்து…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 59