மழைக்கோதை

கோயில்களைப்பற்றி ஒரு பரவலான நம்பிக்கை உண்டு, நாம் அங்குபோக நினைத்தால் மட்டும் போதாது அவை நாம் அங்கு வரவேண்டுமென்றும் நினைக்கவேண்டும். இல்லையேல் பயணம் சாத்தியப்படாது. அதையே நதிகளுக்கும் சொல்லலாம் போல. இம்முறை கோதை எங்களைப்பார்க்கப்பிரியப்படவில்லை. நான் சென்னையில் திரைப்பட விஷயமாகத் தங்கியிருந்தேன். அரங்கசாமி தொலைபேசியில் அழைத்துச் சொன்னார், கோதாவரியில் படகுப்பயணம் சாத்தியமாகாது என்று. கோதையில் உச்சகட்ட வெள்ளம், சிவப்புக்கொடி ஏற்றிவிட்டார்கள். வெள்ளம் வடிந்தாலும்கூட நாலைந்துநாட்களுக்கு சேறு நிறைந்துகிடக்கும்.

பயணத்தை ஒத்திப்போடலாம், அல்லது ரத்துசெய்யலாம். ஆனால் சிக்கல் என்னவென்றால் எங்களுடன் கோதையில் பயணம் செய்வதற்காகவே நண்பர் முத்துகிருஷ்ணன் ஜெர்மனியில் இருந்து வந்திருந்தார். அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டதனால் அவருக்காகவேனும் ஒரு பயணம் நடத்தியே ஆகவேண்டுமென்ற நிலை. அவசரமாக மாற்றுப்பயணம் திட்டமிடப்பட்டது. ஷிமோகாவில் ரவி என்ற நண்பர் ஓர் சர்க்கரைஆலை நடத்துகிறார். அவருடன் தொடர்புகொண்டு ஷிமோகா அருகே உள்ள ஆகும்பே என்ற ஊரில் தங்கி சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்தார்கள்.

திட்டத்தின் தவறு என்னவென்றால் பெங்களூரில் இருந்து ஆகும்பே செல்ல இரண்டுமணிநேரம் போதும் என்று கணக்கிட்டதுதான். நானும் நண்பர்களும் சென்னையில் இருந்து பெங்களூருக்கு அதிகாலை நான்குமணிக்கு வந்திறங்கினோம். சேலம் ஈரோட்டில் இருந்தும் பெங்களூருக்கு நண்பர்கள் வந்தார்கள். மொத்தம் பதினெட்டுபேர். ஒரு வேன் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஏழு மணிக்கு அதில் கிளம்பி ஆகும்பே சென்று சேர அந்தியாகிவிட்டது. எட்டுமணிநேரம் பயணத்திலேயே போய்விட்டது. அதேபோல திரும்பும்போதும் முழு நாளும் பயணத்திலேயே கழிந்தது. ஒருநாள் சுற்றிப்பார்ப்பதற்காக இருநாட்கள் பயணம். அது ஓர் இழப்பே.

ஆனால் பயணம் உற்சாகமாக இருந்தது.இப்போதெல்லாம் நண்பர்கள் சிலமாதங்களுக்கு ஒருமுறை சந்திக்கக்கூடியவர்களாக ஆகியிருக்கிறார்கள். ஆகவே எல்லாருக்கும் தனிப்பட்ட உறவுகள் இருந்தன. பேச்சும் சிரிப்புமாக பயணம். நான் கொஞ்சம் பல்வலியுடன் இருந்தேன். இரவு ரயிலில் தூங்கவும் இல்லை. ஆகவே அரைத்தூக்கத்தில் ஆடிக்கொண்டிருந்தேன். கிருஷ்ணன் பொதுவாக பிறரை விமர்சிப்பவர். அவரை விமர்சிக்கக் கிடைத்த வாய்ப்பை அனைவரும் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.

வழியில் துங்கபத்ராவில் இருந்து கிளம்பும் ஒரு பிரம்மாண்டமான கால்வாய். அதனருகே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி குளித்தோம். தண்ணீரைக் கண்டதுமே சட்டையை கழற்றி விடுவது அரங்கசாமியின் வழக்கம். தண்ணீர் கொஞ்சம் பயமுறுத்தியது. பொதுவாக கால்வாய்களில் இழுப்பு அதிகம். ஓரங்களில் பிடிப்பு இல்லாமல் செய்திருப்பார்கள். ஆகவே நீச்சல்தெரிந்திருந்தாலும் அபாயம்தான். தயங்கி யோசித்து இறங்கினோம். மெல்ல மெல்ல நீர் பழகியது. ஒரு கட்டத்தில் கரையில் இருந்து உள்ளே பாய்ந்து நீச்சலடித்து திளைத்தோம். பழகப்பழக அந்த எல்லையை நீட்டிக்கொண்டே சென்றதைக் குளித்து முடித்து கிளம்பும்போது நினைத்துக்கொண்டேன். வண்டியில் ஏறிக்கொண்டபோது கால்வாய் மிகச்சிறியதாக ஆகிவிட்டிருந்தது.

ஆகும்பே செல்லும்வழியில் ஷிமோகாவில் துங்காவும் பத்ராவும் இணையும் கூடுதுறையான கூடலசங்கமம் சென்றோம். இந்தியாவில் எல்லா கூடுதுறைகளும் நீத்தார் கடன்கள் செய்வதற்கு உகந்தவை. அங்கே சில குடும்பங்கள் வந்து கடன்கள் செய்துகொண்டிருந்தனர். அங்கேயே சமைத்தனர் சிலர். அரிசிமாவின் கொழுக்கட்டை போல எதையோ செய்தார்கள். உள்ளே பூரணமாக காய்கறி. நீராவியில் அவித்த கொழுக்கட்டை நல்ல உணவாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அரங்கசாமி கேட்டுக்கொண்டபோதும் அவர்கள் கொடுக்க மறந்துவிட்டார்கள். படிகளில் இருந்து பேசிக்கொண்டே சப்பாத்தி சாப்பிட்டோம்.

கூடுதுறையில் ஒரு சிவன் கோயில் இருந்தது. கல்யாணி சாளுக்கியர் காலகட்டத்துக் கோயில். இந்தியப்பயணத்துக்குப்பின் இப்போதெல்லாம் நண்பர்கள் ஒரு கோயிலைப்பார்த்ததுமே அது எந்தக்காலத்தைச் சேர்ந்தது, எந்த வகையான கட்டிடக்கலை என்பதைச் சொல்லிவிடுகிறார்கள். உருட்டிய கரிய பளபளப்பான தூண்கள் கொண்ட முகமண்டபங்கள்தான் கல்யாணிசாளுக்கியர்களின் காலகட்டத்தின் சிறப்பம்சம். அது ஆரம்பகால கட்டிடம். சற்று பிந்தைய காலகட்டத்தில் மண்டபங்களின் கூரை பிரம்மாண்டமான குடை போல ஆகி, தூண்களில் சிற்பவேலைகள் வந்திருக்கும். சிறிய கருவறைக்குள் விளக்கொளியில் சிவலிங்கம் மலர்சூடி அமர்ந்திருந்தது. கூடலசங்கதேவா என்ற கன்னடவசனக்கவிதையின் அழைப்பு நினைவுக்கு வந்தது.

மாலை ஆகும்பே சென்று சேர்ந்தோம். அங்கிருப்பது ஒரேஒரு விடுதி. அங்கே நாங்கள் அறைபோட்டோம். ஆகும்பே வழியாகத்தான் இந்தியப்பயணத்தில் சென்றிருந்தோம், ஆனால் அங்கே தங்கவில்லை. ’அய்யோ போன இடத்துக்கே வந்திருக்கோமே, இந்தியா அவ்வளவு சின்னதா ஆயிட்டுதா?’ என கே.பி.வினோத் வியாகூலப்பட்டார். ஆகும்பே ஒரு கிராமம். அதைச்சுற்றி அடர்ந்த மழைக்காடு. இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக அதிக மழை பெய்யும் இடம் இதுதான். இந்த இருநூறு மைல் சுற்றளவுக்குள் இருந்து மூன்று பெரிய நதிகளும் ஏழு சிறிய நதிகளும் உற்பத்தியாகின்றன

தொடர்மழைக்காகவே உருவாக்கப்பட்ட கட்டிடங்கள். ஆனால் ஊரில் வறுமை என்று ஏதும் கண்ணுக்குப்படவில்லை. வசதியான பெரிய வீடுகள்.எங்கும் பச்சை நிறைந்திருந்தது. எங்களுக்கு உணவு அருகே உள்ள விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒற்றைஆள் உணவகத்தை தன் மனைவியுடன் நடத்திவந்த பெரியவரிடம் அவர் துளு பிராமணரா என்று கேட்டேன். இல்லை. நாங்கள் ஜி.எஸ்.பி என்றார். கௌட சாரஸ்வத பிராமணர் என்பதன் சுருக்கம். அவர்கள் கோவாவைச் சேர்ந்தவர்கள். கௌடம் என்றால் என்றால் கோவா. கௌடநாடு என்பதன் மரூதான் கோவா.

அங்கே போர்ச்சுக்கல்காரர்கள் நடத்திய மதச்சுத்திகரிப்பு [ Inquisition ] இந்தியவரலாற்றின் கரிய புள்ளிகளில் ஒன்று. பல்லாயிரம் இந்துக்கள் வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பல லட்சம்பேர் தப்பி ஓடி இந்தியாவின் பிற பகுதிகளில் குடியேறினர். கௌடசாரஸ்வதர்கள் கர்நாடகத்திலும் கேரளத்திலும் குடியேறினார்கள். அதிகமும் தென் கர்நாடகத்தின் உடுப்பி பகுதியில். உடுப்பி ஓட்டல்கள் அவர்களால் நடத்தப்படுபவையே. மணிப்பால் மருத்துவக்கல்லூரி அவர்களுடையது. இன்று இந்தியாவில் அவர்கள் வணிகத்திலும் கல்வியிலும் மிகப்பெரிய சக்தி. பட், பை,ஷெனாய் போல பல பின்னொட்டுகள் அவர்களுக்கு உண்டு.

பெரியவர் மிக உற்சாகமானவர். உரத்த குரல். ஒரு கெத்தேல் சாகிப் என்று நண்பர்கள் சொன்னார்கள். கொஞ்சம் கழித்து அவரையே கெத்தேல்சாகிப் என அழைக்க ஆரம்பித்தனர். சிரித்துக்கொண்டே சூடாக உணவு பரிமாறினார். போதும் என்று சொன்னவர்களை அதட்டி சாப்பாடு போட்டார். ஒன்று பிடிக்கவில்லை என்று சொன்னவர்களுக்கு இன்னொன்று கொண்டுவந்து கொடுத்தார். பயணத்தின் மிக உற்சாகமான அம்சம் அந்த ஓட்டல்தான் என்று பட்டது.

இரவு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். நான் ஓரிரு பேய்க்கதைகள் சொன்னேன். அன்னிய ஊரின் அறையில் விளக்கை அணைத்துவிட்டு பேய்க்கதை சொல்லும்போது கற்பனை விரிய ஆரம்பிக்கிறது, இருட்டை அது நிறைத்துவிடுகிறது. மறுநாள் காலை எழுந்ததும் ஒரு காலைநடை. ஆகும்பே பேருந்துமையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டரிலேயே அடர்காடு வந்துவிடுகிறது. மழைதூறிக்கொண்டே இருந்தது. மழையிலேயே நடந்தோம்.

மெல்லியமழை ஒரு குறிப்பிட்ட ஒளியை உருவாக்குகிறது. வானம் மூடியிருந்தாலும் மழைச்சரடுகளின் கண்ணாடிக்குழாய்களுக்குள் அகஒளி ஒன்று உருவாவதனால் நிலம் மிகையில்லாத ஓர் ஒளி பரவி மிளிர்கிறது. காடு சூழந்த வெட்டவெளியில் பச்சைப்புல்வெளி அலையலையாக விரிந்துகிடந்தது. வெயிலில் பார்த்தால் கண்கூசியிருக்கும். மழையில் இதமான பசும்பட்டு. கைக்குழந்தையின் கால்களால் மட்டுமே அந்தப்பச்சைவெல்வெட்டை தீண்டவேண்டும் என்று தோன்றச்செய்யும் மென்மை. மழை சற்றே நின்றபோது எல்லா புல்நுனிகளிலும் மழைத்துளிகள் ஒளிவிட புல்வெளி ஜொலித்தது.

காட்டுப்பாதையில் இரண்டு கிலோமீட்டர் வரை சென்றோம். ஒரு இளைஞர் வந்து மேற்கொண்டு செல்ல வனத்துறை அனுமதி தேவை என்றார். ஆகும்பே சமீபகாலமாக நக்சலைட் போராளிகளின் சங்கேதமாக இருப்பதனால் கடுமையாக காவல் காக்கப்படுகிறதாம். வனத்துறையில் அந்தப்பகுதியில் கறாராகவே இருக்கிறது. அப்பகுதியில் அதிக நடமாட்டம் இல்லை என்பதை மழைத்துளி தங்கி நின்ற சிலந்தி வலைகள் முகத்தில் படிந்ததில் இருந்தே அறிந்திருந்தோம்.

காலையுணவுக்குப் பின்னர் அருகே இருந்த ஜோகிகுண்டிஅருவியைக் காணச்சென்றோம். ஆகும்பேயின் அடர்ந்த மழைக்காடுவழியாக செல்லும் சிறிய பாதையில் நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்துசெல்லவேண்டும். ஆகும்பே இந்தியாவில் பாம்புகள் அதிகமாக உள்ள இடம். இங்கே ராஜநாகம் அதிகம். ராஜநாகம் பாம்புகளை மட்டுமே உணவாகக் கொள்வது, ஆகவே பாம்புகளும் அதிகமிருந்தாகவேண்டும். அந்த பிரக்ஞை கால்களில் இருந்துகொண்டே இருந்தது. மழை ஓயாப்பகுதி ஆகையால் அட்டைகள் உண்டு. அட்டைக்காக கால்களில் உப்பு தூவிக்கொண்டே சென்றோம். தேவதேவன் உப்பு தூவ மறுத்துவிட்டார். ’கடித்துவிட்டுப் போகட்டும். ஓர் அட்டைக்கு ஒரு கடி ஆறுமாத உணவு என்றார்கள். சாப்பிடட்டும்’ என்று சொல்லிவிட்டார். அதைக் கடைசிவரை பொருட்படுத்தவும் இல்லை.

அருவி உண்மையில் பிரம்மாண்டமானது. பொங்கி வந்து மலைச்சரிவில் விழுந்து இரண்டு கிலோமீட்டர் ஆழத்துக்குச் செல்கிறது. ஆனால் அதை நாம் கீழே சென்று பார்க்க முடியாது. அது வேறு ஒரு அடர்காட்டுக்குள் விழுகிறது. அருவியை மேலே நின்று மட்டுமே பார்க்க முடியும். துல்லியமான காட்டாறு அது. குளிர்ந்த நீர் மரங்கள் பாறைகள் வழியாக சுழித்து ஓடியது. தெளிந்த நீர் வெறும் ஒளியால் மட்டுமே ஆனது என்று தோன்றும். அதில் இறங்கி அமர்ந்து குளித்தோம். சில நிமிடங்களிலேயே குளிர் விலகிவிட்டது. கரையேறவே தோன்றவில்லை.

ஆகும்பேயின் தனித்தன்மை, அது மலைமேல் இல்லை என்பது. அது தக்காணபீடபூமியின் விளிம்பு. அதற்கு அப்பால் நிலம் மேற்குக்கடல்பரப்பை நோக்கி செங்குத்தாக இறங்குகிறது. ஆகவே பொதுவாக குளிர் குறைவு. மழையில் நனைவதோ ஓடையில் குளிப்பதோ இனிய அனுபவமாக இருந்தமைக்கு அதுவே காரணம். பொதுவாக அத்தகைய காட்டு அனுபவத்துக்கு நாம் மலைமேல்தான் செல்லவேண்டியிருக்கிறது. எந்த மலையுச்சியிலும் ஒரு காட்டு ஓடையில் அவ்வளவு நேரம் குளிக்கமுடியாது. ஆகும்பேயில் இருந்த நேரம் முழுக்க ஈரத்திலேயே இருந்தோம், சலிக்கவேயில்லை.


மதியம் சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம் ஓய்வெடுத்தோம். சற்று அப்பால் இருந்த மலைவிளிம்புக்குச் சென்றோம். அங்கே ஒரு பார்வைமேடை உருவாக்கியிருந்தார்கள். கீழே விரிந்துகிடந்த பச்சைக்காட்டுவெளியைப் பார்க்கலாம். ஆனால் முற்றிலும் மேகம் மூடியிருந்தது. கன்னங்கரியமேகம். அது கனிந்து மழையாகக் கொட்டுவதையே பார்க்க முடிந்தது. அங்கிருந்து அறைக்குக் கிளம்பிவந்து டீ குடித்தோம். இருட்டிவிட்டது. மழை சரடுமுறியாமல் பெய்துகொண்டிருந்தது. இருட்டு சூழ்ந்திருந்தது

‘மழையிலே ஒரு வாக்கிங் போகலாம், குளிரவே இல்லை’ என்றார் அரங்கசாமி. அவரே சட்டையைக் கழற்றிவிட்டுத் துண்டுடன் கிளம்பினார். தேவதேவன்,சாம்ராஜ்,சுதாகர்,கெ.பி.வினோத், விஜயகிருஷ்ணன்,அசோக்குமார் ஆகியோர் மட்டும் அறையில் தங்கினார்கள். நான், அரங்கா,ஜெர்மனி முத்துக்கிருஷ்ணன், கோவை சிவா, ஈரோடு கிருஷ்ணன், ஷிமோகா ரவி, கடலூர் சீனு,ராஜகோபாலன், சேலம் பிரசாத், மணிகண்டன், சிவாத்மா, சென்னை சுரேஷ் ஆகியோர் கொட்டும் மழையில் நனைந்துகொண்டு தார்ச்சாலை வழியாகச்சென்றோம்.நாலைந்துபேர் அரைநிர்வாணிகள். இருட்டுக்குள் மழை பெரிய அருவி போல பெய்தது. இருபக்கமும் அடர்ந்த காட்டுக்குள் மழையின் பேரோசை. மழையில்கூட மின்மினிகள் இலைகளுக்கு அடியில் ஒண்டிக்கொண்டு வைரங்கள் போல ஒளிவிட்டன.

ஒருமணிநேரம் மழையில் சென்றும்கூட எவருக்கும் குளிரவில்லை. ஆனால் கொஞ்சம் உள்ளே செல்லச் செல்ல பயம் வந்துவிட்டது. ராஜநாகமும் யானையும் நிறைந்த காடு. திரும்பிவிடுவோம் என்றார்கள். இன்னும் கொஞ்சம் போகலாம் என்றேன். மேலும் அரைமணி நேரம் சென்றபின் திரும்பி வந்தோம். இந்தப் பயணத்தின் உச்சகட்ட அனுபவமே அந்த மழைநடைதான் என்று நண்பர்கள் சொன்னார்கள். ‘கோதாவரி போகலையேங்கிற ஏக்கம் தீந்துட்டுது சார்’ என்றார் கிருஷ்ணன் ‘இங்க கோதாவரி செங்குத்தா வந்தது, அவ்வளவுதான்’

இரவு பன்னிரண்டு வரை அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். தத்துவம் இலக்கியம் என்று மாறி மாறிச்சென்ற உரையாடல். வெளியே மழை கட்டிடத்தை ஓங்கி அறைந்துகொண்டிருந்தது. மறுநாள் நான் விழித்தெழுந்தபோது மழை வெளுத்து மெல்லிய ஒளித்துருவல்களாக பெய்துகொண்டிருந்தது. தேவதேவன் விடியற்காலையில் எழுந்து காலைநடை செல்ல விரும்பினார். வெளியே மழைமேகம் மூடிக்கிடந்தது. கூடவே செல்ல நான் விரும்பவில்லை. என் மழைக்கோட்டை மட்டும் கொடுத்துவிட்டுப் படுத்துக்கொண்டேன். தேவதேவனுடன் சுதாகர் மட்டும் சென்றார்.

காலையில் இன்னொரு நடை. மேலே மேகம் விரிசல்விட்டிருந்ததனால் புல்வெளி முழுக்க வெளிச்சம் நிறைந்து கிடந்தது. இரவின் மழையில் புல்வெளி நடுவே சிறிய தடாகங்களாக நீர் தேங்கியிருந்தது. ஆகும்பேயில் எப்போதும் மழையில் பழகிய மாடுகள் மழைக்கு ஒதுங்குவதே இல்லை. மனிதர்களும்தான். கொட்டும் மழையில் பிள்ளைகள் வாலிபால், ஃபுட்பால் விளையாடுவதை வழிமுழுக்கக் கண்டோம். பறவைகள் கூட மழைக்குள் சிறகடித்து புல்வெளிகளில் மேய்ந்தன.

புல்வெளி வழியாகப் பேசிக்கொண்டே சென்றோம். கலைஉருவாகும் அகநிகழ்வு பற்றிய இந்தியஞானமரபின் கோட்பாடுகளில் தொடங்கி செவ்வியல், நவீனத்துவம் என பல திசைகளில் சென்றது பேச்சு. எழுத்துக்கும் மேடை உரைக்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு, அவை எல்லை வகுக்கப்பட்டவை, வடிவம் கொண்டவை. உரையாடல் சுதந்திரமானது. அதன் வழிகளை அதுவே கண்டுகொள்கிறது. மழைநீர் போல. ஓர் உரையாடல் முடிந்தபின்னர் அதை நாம் தொகுத்துக்கொள்ளும்போதுதான் என்ன பேசினோம் என்பதையே உணர ஆரம்பிக்கிறோம்

பதினொரு மணிக்கு ஆகும்பேயில் இருந்து கிளம்பினோம். ஆகும்பே இன்னும் நாலைந்துநாள் தங்கி விரிவாகப்பார்க்கவேண்டிய இடம். இந்தியாவின் முக்கியமான மழைக்காடு அங்கே உள்ளது. இதைத் தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கிறார்கள். இப்பகுதியை ராஜநாகத்தின் தலைநகரம் என பாம்பு ஆய்வாளர் விட்டேகர் குறிப்பிடுகிறார். இங்குள்ள மழைக்காடுகள், அருவிகள் பலவற்றை நாங்கள் பார்க்கவில்லை. முறையான திட்டத்துடன், உரிய அனுமதியுடன் இன்னொருமுறை வரவேண்டும்.

வண்டியை நிறுத்திவிட்டு கெத்தேல்சாகிபிடம் விடைபெற்றோம். சிரித்துக்கொண்டே எம்பி எம்பிக் கையாட்டினார். நேராக ஹசன். மாலையில் பேலூர் வந்தோம். நான் பேலூர் ஹளபீடுக்கு பலமுறை வந்திருக்கிறேன். அரங்கா வந்ததில்லை. எங்களுக்கு அதிக நேரமில்லை. அவ்வளவு தூரம் எதையும் பார்க்காமல்செல்லவேண்டாமே என்று பேலூரில் இறங்கி ஒரு கோயிலை மட்டும் பார்த்தோம்.

மழையில் நனைந்த பேலூர் கோயிலை அப்போதுதான் பார்க்கிறேன். அந்த கரிய மாக்கல் சிற்பங்கள் மெழுகுக்கருமை கொண்டு பளபளத்தன. கோயிலே ஒரு பெரிய கருமுத்துநகை போல ஆகிவிட்டிருந்தது. பேலூர் ஹளபீடு சிற்பங்களை சிற்பக்கலையைவிட நகைக்கலையுடன்தான் இணைத்துப்பார்க்கவேண்டும். நுணுக்கத்திலும் நுணுக்கங்கள். அண்ணாந்து பார்த்தால் மழை கண்ணுக்குள் பெய்தது. இருந்தாலும் சுற்றிவந்து கோயிலைப்பார்த்தோம். மழைக்காலத்தின் மிதமான வெளிச்சத்தில்தான் இந்தச் சிற்பங்களை உண்மையில் பார்க்கவேண்டுமோ என்று நினைத்துக்கொண்டேன்

இரவு பத்தரை மணிக்கு நண்பர்களை பெங்களூர் பேருந்துநிலையத்தில் இறக்கிவிட்டோம். நானும் தேவதேவனும் கோவைசிவாவும் சேலம்பிரசாத்தும் மணிகண்டன் வீட்டுக்குச்சென்றோம். மணிகண்டன் வீடு வைட்ஃபீல்டில் இருந்தது. இரவு பன்னிரண்டு மணிக்கு அங்கே சென்று கிருஷ்ணபிரபாவை எழுப்பினோம். அடை சுட்டுத்தந்தார்கள். சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிக்கு சிவாவின் காரில் கிளம்பினோம். நானும் தேவதேவனும் சேலத்தில் இறங்கிக்கொண்டோம். அங்கிருந்து மதுரைக்கு பஸ் பிடித்ததெல்லாம் கனவு போல இருக்கிறது. தூக்கத்தில் இருந்து விழிக்காமலேயே மதுரை.

மதுரையில் உச்சிவெயில் அறைந்தது. வியர்வையும் வெக்கையும் நெரிசலும் புழுதியும் கூச்சல்களும் சாக்கடைநாற்றமுமாக மதுரை எங்களைச் சூழ்ந்திருந்தது. ‘போனதெல்லாம் மறந்து போச்சு’ என்றார் தேவதேவன். மதுரை ஓட்டலில் சாப்பிட்டோம். தேவதேவன் தூத்துக்குடி பஸ் பிடிக்கச்சென்றார். நான் நாகர்கோயில் பஸ் பிடித்து மாலை நான்கரைக்கு வந்து சேர்ந்தேன். ஆரல்வாய்மொழி வரை தூங்கிக் கொண்டுதான் இருந்தேன். நடுவே விருதுநகரில் சாப்பாட்டுக்காக வண்டியை நிறுத்தியபோதுதான் வெக்கை தாளாமல் எழுந்துகொண்டேன்.

ஆனால் ஆரல்வாய்மொழி தாண்டியதைத் தூக்கத்திலும் உணர்ந்தேன். எழுந்து அமர்ந்தபோது மழைச்சாரல் முகத்தில் அறைந்தது. பச்சைப்பெருவயல்கள் மீது மழைத்தோகை வீசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். மலைமுகடுகள் மேகமுடி சூடிக் குளிர்ந்த நீலத்துடன் அமர்ந்திருந்தன. மழையில் குளிர்ந்த கட்டிடங்கள் ஆழ்ந்த நிறங்களுடன் நெருக்கி அமர்ந்திருக்க மழைநீரின் செஞ்சுழிப்பில் ஒளிபெற்ற தெருக்கள். மழை வழியாகவே வீடு திரும்பினேன். என் வீட்டு முற்றத்தில் நின்றபோது மழையில் ஊறிய டோரா வந்து கத்திக் கூச்சலிட்டு நடனமிட்டாள். மஞ்சள் பூக்கள் உதிர்ந்து மழைநீருடன் பரவிய முற்றம். மழையில் நனைந்தபடி அருண்மொழி வந்து கதவைத் திறந்தாள். அடுத்த பெருமழைக்காகப் பின்பக்கம் மலைமீது இடி அதிர்ந்தது.


படங்கள் சுரேஷ்பாபு


ஆகும்பே படங்கள் மணிகண்டன்


ஆகும்பே படங்கள் விஜயகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைமருதம் என்ற பள்ளி
அடுத்த கட்டுரைரப்பர் கடிதங்கள்