ஒரு எழுத்தாளரின் படைப்புகள் இலக்கியமா இல்லையா என்பதற்கு உங்கள் வரையறைகள் என்ன?
— சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ்.
இலக்கியத்தரம் என்பது ஓர் அக உருவகம். ஆகவே அதைத் திட்டவட்டமாக, புறவயமாக, எப்போதைக்குமாக எவரும் வரையறை செய்துவிட இயலாது. ஆகவே இலக்கியத்தரம் என்ற ஒன்று இல்லை என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் நியாயம், நீதி, அறம், அன்பு போல பல நூறு அக உருவகங்கள் உண்டு. சமூகம் அவற்றின் அடிப்படையிலேயே கட்டப்பட்டுள்ளது. ஒரு நாளில் எத்தனையோ முறை இச்சொற்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இவை எதையுமே வரையறை செய்துவிடமுடியாது. அதேசமயம் நாம் இச்சொற்களைப் பயன்படுத்தும்போது கேட்பவர் பொருளைத் திட்டவட்டமாகவே புரிந்துகொள்கிறார். காரணம் நாம் இச்சொற்களை ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, ஒரு கலாசாரச் சூழலை பின்னணியாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நின்றபடிப் பயன்படுத்துகிறோம். இலக்கியத்தரம் என்பதும் அப்படியே.
ஒரு குறிப்பிட்ட மன உருவகத்தைச் சொல்லலாம், அக உருவகங்கள் நீர்நிலைகள் போல. அவற்றின் மேற்பரப்பு அலையடித்து மாறிக் கொண்டே இருக்கிறது. ஆழம் மாறுவது இல்லை. நாம் காண்பது எப்போதுமே நிலையற்ற மேற்பரப்பை மட்டுமே. ஆனால் நாமறியாத ஆழம் இருக்கிறது. அலைகளைக் கடந்து சிந்திக்கும் எவருமே அதை உணர முடியும். நியாயம் என்று நாம் சொல்வது எப்போதுமே சந்தர்ப்பம் சார்ந்த ஒன்றே. ஆனால் மானுடகுலம் மொத்தத்துக்கும் செல்லுபடியாகும் ஒரு நியாய அடிப்படை உண்டெனவும் நாம் அந்தரங்கமாக அறிவோம். ஒவ்வொரு நாளும் நாம் அதை அளவுகோலாகக் கொண்டே அனைத்தையும் மதிப்பிடுகிறோம் — ஈராக் தாக்குதல் சரியா, ரால்ப் நாடர் போட்டியிடத்தான் வேண்டுமா என்றெல்லாம்.
அக உருவகங்கள் மனிதனின் கலாசார உருவாக்கத்தின் பகுதிகளாக உருவாகி வந்தவை. தலைமுறைத் தலைமுறையாக கைமாறப்பட்டவை. சொல்லிச்சொல்லி நிலைநாட்டப்பட்டவை. மறுபரிசீலனை செய்துச் செய்து புதிதாக ஆக்கப்பட்டவை. சமூகம் அவற்றைப்பற்றி ஓயாது பேசியபடியே உள்ளது. யோசித்துப்பாருங்கள் இந்தக் கணத்தில் தமிழகத்தில் எத்தனை லட்சம்பேர் ‘எது நியாயம்’ என்று பேசிக் கொண்டிருப்பார்கள் என. எத்தனை நீதிமன்றங்கள் நீதியை விவாதிக்கும் என. அக உருவகங்கள் எதுவுமே எங்கும் மறுகருத்தின்றி ஏற்கப்படுவது இல்லை. அதாவது அக உருவகங்கள் எப்போதுமே விவாதம் மூலமே உருவாகின்றன. எந்த நிலையிலும் அவை இரு தரப்புகளுக்கு இடையே உள்ள சமரசப்புள்ளியாகவே இருக்கும். இலக்கியத்தரம் என்ற அக உருவகமும் அப்படியே.
இலக்கியம் என நாம் அறிவதெல்லாம் இலக்கிய மதிப்பீடுகள் உருவான காலத்துக்குப் பிறகு தொகுக்கப்பட்ட ஆக்கங்களையே. வேதங்கள் வியாசனால் தொகுக்கப்பட்டவை. வியாசன் என்றால் வெட்டித்தொகுப்பவன் – எடிட்டர். அவன் எந்த அடிப்படையில் தொகுத்தான்? சில இலக்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில்தானே? பல்லாயிரம் பாடல்களை அவன் நிராகரித்திருப்பானே. தமிழ்ச் சூழலில் நமக்கு இலக்கியத்தரம் என்பது பற்றிய இலக்கணம் தெளிவாக வரையறை செய்யப்பட்டு எழுதப்பட்ட பிறகுள்ள இலக்கியமே கிடைக்கிறது. ஆகவே உலகிலேயே குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டியவர்கள் நாம்தான். புறநானூறும் நற்றிணையும் தமிழாய்ந்த புலவர் சபையால் ஆய்ந்து தொகுக்கப்பட்டவை. பல்லாயிரம் படைப்புகளில் சிலவே இன்று நமக்குத் தரப்பட்டுள்ளன. அவ்வாறு தொகுப்பில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சில பாடல்கள் பிறகும் புழக்கத்திலிருந்து சில உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவையும் சிறந்த பாடல்களே. அப்படியானால் தெரிவு எத்தனைக் கறாராக [குரூரமாக என்று கூடச் சொல்லத்தோன்றுகிறது. சிலருக்கு ஒரே ஒரு பாடல்!] இருந்திருக்கிறது. அத்தனைத் திட்டவட்டமான தரவரையறை இருந்துள்ளது. அரங்கேற்றம் என்ற அமைப்பு இந்தத் தரமதிப்பீட்டு முறைக்கு உரியதாக பலநூறுவருடம் நம் பண்பாட்டில் இருந்துள்ளது. சங்கப்பலகை என்ற கவித்துவமான உருவகம் இலக்கியத்தரம் எந்த அளவு கூர்மையாக மதிப்பிடப்பட்டது என்பதற்கு உதாரணம்.
இலக்கியப்படைப்பின் தரத்தைக் ‘காலம்’ தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடும் மரபு அல்ல தமிழர்களுக்கு உரியது. சிற்றிலக்கியங்களின் காலம் என்று சொல்லப்படும் காலகட்டம் வரை மிகக்கறாரான தரமதிப்பீடுகள் இருந்தன. குட்டுவதற்குப் பிள்ளைப்பாண்டியனும் குறும்பையளவுக்குக் காதைத் தோண்டி எடுக்க ஒட்டக்கூத்தனும் இருந்தார்கள். [ஐம்பெரும் காப்பியங்கள் ஐஞ்சிறுங்காப்பியங்கள் என வகுத்தவர் யார்? அவரே மற்றக் காப்பியங்களை ஒழித்துக்கட்டியவர் இல்லையா?] அளவுகோல்கள் மழுங்க ஆரம்பித்த பிறகே தமிழ்க் கவிதை சரிய ஆரம்பித்தது. பாரதி எழுந்தபோது அவன் முதலில் செய்தது ‘கம்பனைப்போல் வள்ளுவன் போல இளங்கோவைப்போல்’ என்ற மிகக் கறாரான இலக்கிய மதிப்பீட்டை உருவாக்கியதைத்தான். அன்று மேலோங்கியிருந்த பல்லாயிரம் புராணங்களின், சிற்றிலக்கியங்களின் வரிசையை ஒரே விரலசைவில் தூக்கி வீசினான். இலக்கியம் வாழும் சமூகம் இலக்கியத் தரமதிப்பீட்டில் சமரசமே செய்துகொள்ளாது. இடைவிடாது அங்கே இலக்கியத்தரம் குறித்த விவாதம் நடைபெறும். ஆகவே இலக்கியத்தரம் என்பது நமக்கு நம் மரபால் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை அகஉருவகம். அன்பு, நீதி போல. அது நாம் நம் மரபினை ஆழ்ந்து அறியும் தோறும் நம்மில் ஆழப்பதிகிறது. இன்று ஒரு படைப்பை நாம் மதிப்பிடும்போது இதுவரை இங்கே உருவான படைப்புகளை வைத்தே, அவற்றுடன் ஒப்பிட்டே மதிப்பிடுகிறோம்.
நம் மரபில் இருந்து நமக்கு கிடைக்கும் இலக்கியத்தரம் குறித்த அளவுகோல்கள் என்ன?
அ] நாம் கவிதை என்பது மறைபொருள் என்று நம்பி வந்தவர்கள். சொல்வதையல்ல குறிப்பாலுணர்த்துவதையே இலக்கியத்தின் கலை என்று சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியம் வரை காண்கிறோம்.
ஆ] சுருங்கச்சொல்லல் விளங்கவைத்தல் என்பது தமிழிலக்கியத்தின் அடிப்படை வரையறை. வளர்த்தல், சாமர்த்தியம் காட்டல் முதலியவற்றுக்கு எதிரானது நம் இலக்கியம்.
இ] சீரிய கூரிய செஞ்சொல் என்று கவிதையை வரையறுத்தவர் நாம். மகத்துவமும் கூர்மையும் கொண்ட மொழியையே முதல் அடையாளமாக்கினோம்.
ஈ] சாதாரணமாக அறியப்படும் உண்மைக்கு அப்பாற்பட்ட ஆழ்ந்த உண்மையை, பிற அறிவுத்தளங்களால் அறியப்படாத ஒன்றைச் சொல்வதே இலக்கியம் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தது. கவிஞனில் இருந்து வருவது அவனுடைய சொந்தக் கருத்து என நாம் எப்போதுமே எண்ணியது இல்லை, அவன் வழியாக அவனை மீறிய அவனைவிட மகத்தான ஒன்று நம்மிடம் பேசுகிறது என்று நம்பினோம். பலநூறு வாய்மொழிக்கதைகள் இதையே மீண்டும் மீண்டும் சொல்கின்றன.
இந்த அளவுகோலை வைத்துப் பார்த்ததனால்தான் இளங்கோ முன்னகர்ந்தார், சீத்தலை சாத்தனார் பின்னகர்ந்தார். கம்பன் முதன்மைபெற்றான், சேக்கிழார் மதத்துக்குள் நின்றார். இன்று எழுதும் ஒரு படைப்பாளியை இந்த அளவுகோலால் இயல்பாக அளவிடுகிறோம். இதுவே நியாயம். நாம் வந்தடைந்த இடத்திலிருந்து முன்னகர வேண்டும். பின்னால்போவது மனித இயல்பே அல்ல.
இருபதாம் நூற்றாண்டில் அச்சு ஊடகம் மற்றும் மொழிபெயர்ப்புகள் மூலம் உலக இலக்கியம் என்ற ஒன்று உருவாகி வந்தது. உலகின் அனைத்து மொழிகளிலும் உள்ள அனைத்து சிறந்த படைப்புகளும் சிறந்த வாசகனுக்குக் கிடைக்கும் என்ற நிலை உருவாயிற்று. இவ்வாறாக இலக்கிய மரபு என்பதற்கு உலகளாவிய ஒரு பொருள் கிடைத்தது. எப்படித் தமிழ் மரபு இன்றைய தமிழ்ப்படைப்புக்குத் தர அளவுகோல்களை உருவாக்கியளிக்கிறதோ அப்படியே உலக இலக்கிய மரபும் தர அளவுகோல்களை உருவாக்கியளிக்கிறது. கம்பன் அளவுகோலானதுபோல தல்ஸ்தோயும் அளவுகோல் ஆனார்.
மரபின் நீட்சி ஒரு கோடு என்றால் அதனுடன் முரண்படும் சமகால வாழ்வின் சிக்கல்கள் எதிர்க்கோடு. இலக்கியம் இரண்டின் பின்னலால் உருவாவது. மரபில் இருந்து எழுந்து சமகாலத்தில் எப்படி செயல்படுகிறான் என்பதே இலக்கியப்படைப்பின் முக்கியமான அளவுகோல். எல்லா படைப்பும் சூழலைவைத்துத்தான் மதிப்பிடப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தின் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறான், எப்படி இன்றைய மொழியை அதற்கேற்ப வளர்த்தெடுக்கிறான், எப்படி அதற்கென புதிய வடிவங்களை உருவாக்குகிறான், எப்படி அப்பயணத்தின் உச்சத்தில் புதிய அகத்தரிசனங்களை நிகழ்த்துகிறான் என்பதெல்லாம் இதில் பரிசீலிக்கப்படுகின்றன. ஆகவே மரபின் நுனியில் நின்றெழுந்து மரபை மீறிச்செல்வதே இலக்கியத்தின் வெற்றி
ஆகவே ஒரு சூத்திரமாக இப்படி சொல்லலாம். ‘மரபின் உச்சம் X சமகாலத்தின் தேவை’ என்ற முரணியக்கம் [Dialectics] தான் நல்ல இலக்கியத்தின் இயங்குவிதி. கம்பனிலிருந்தும் தல்ஸ்தோயிலிருந்தும் தொடங்கி மேலே சென்று இன்றைய வாழ்க்கையைப் பேசுவதே நல்ல நாவல் என்று சொல்லலாம். அப்படி ஒரு ‘உதாரண நாவல்’ நம் மனதில் இருக்கையில் அதனுடன் ஒப்பிட்டே ஒவ்வொரு நாவலையும் நாம் மதிப்பிடுகிறோம். இது சுமார், இது நல்ல நாவல், இது மிகச்சிறந்தது என. எல்லா இலக்கியத்திறனாய்வும் ஒப்பிட்டே இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்குகிறது. எல்லா அக உருவகங்களும் இப்படித்தான் நம் மனதில் ஓர் உதாரண உச்ச வடிவில் உள்ளன. நியாயம் நீதி எல்லாம் அப்படித்தான். அதனுடன் ஒப்பிட்டே நாம் அன்றாட நியாயத்தையும் நீதியையும் மதிப்பிடுகிறோம். அதைப்போலத்தான் இலக்கியமும்.
இலக்கியத்தரம் என்பது நடைமுறையில் ஒரு பெரிய விவாதக்களனின் மையம். ஒரு பெரிய விவாத நதியின் ஒரு கணம். நீங்கள் ஒன்றைத் தரமானது என்பீர்கள். அவர் இன்னொன்றைச் சொல்வார். நான் ஒன்றைச் சொல்வேன். விவாதம் உருவாகும். விளைவாக ஒரு பொதுமதிப்பீடு உருவாகி காலம்தாண்டி அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது. கம்பராமாயணத்தை விடப் பெரியபுராணத்தைப் பேரிலக்கியம் என்று சொல்லிவந்தவர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். முத்தொள்ளாயிரத்தை இவ்விரண்டையும் விட மேலாகச் சொன்னவர்களும் உண்டு. அவ்விவாதமே கம்பனை முன்னிலைப்படுத்துவதாக அமைந்தது.
ஒட்டுமொத்தமாக இவ்வளவுதான் சொல்லமுடியும். இலக்கியத்தரம் இலக்கிய மரபால், சமகாலச் சூழலால் உருவாக்கப்படுவது. கலாசாரத்தின் விளைச்சல் அது. ஒரு சூழலில் கண்ணுக்குத் தெரியாத வரையறை