டியர் சார் தம்மம்பட்டியிலிருந்து ராகவேந்திரன் நலம் நலமே விழைக
இன்னொரு வெளிநாட்டு பயணத்திற்கு(புண்ணிய பூமி) எனது வாழ்த்துக்கள்.
நிற்க, உங்களது வலை தளம் மற்றம் சாரு நிவேதிதாவின் இணைய தளம் இரண்டையும் தினமும் தவறாது வாசிக்கும் வாசகன் ஆவேன். நானும் கடந்த 6 மாதகாலமாக கவனித்து வருகிறேன். உங்களை சாடுவதினை மட்டுமே குறியாக இருக்கிறார். அதிலும் எழுத்தாளர்கள் யாராகிலும் இறந்தால் தாங்கள் தெரிவிக்கும் அஞ்சலி கட்டுரையினை கூட அவர் பகடி செய்திருப்பது மிகவும் அருவருப்பாக உள்ளது. அதிலும் ஒருவர் இறந்தால் தண்ணி அடித்து இறந்து விட்டார் என்று தாங்கள் தெரிவிப்பது எந்த விதத்திலும் அந்த எழுத்தாளரை அவமதிப்பான செயல் கிடையாது.
அதிலும் கமலா சுரையா பற்றி தாங்கள் எழுதியிருப்பது அத்தனையும் உண்மை என தெரிந்தும் , கமலா சுரையா அழகு மிக்கவும், அவர் மட்டும் உயிருடன் இருந்தால் உங்களது கொட்டையை பிடித்து நசுக்கியிருப்பார் என்று எல்லாம் வசைபாடுகிறார்.
வாழ்க்கையை இப்படித் தான் வாழ வேண்டும் என தீர்மானமாக முடிவு செய்து வாழும் ஆசாமி நீங்கள். உங்களை எந்தவிதத்திலும் அவரது எழுத்து காயப்படுத்துவது கிடையாது போல, ஆனால் எனக்கு அவ்வாறு இல்லை. அந்த எழுத்தை படிக்கும் போது எல்லாம் எனக்கு அளவு கடந்த கோபம் வருகிறது. அதிலும் உங்களை காயப்படுத்துவதற்கு ஒருவரைமுறை இல்லாமல் மிகவும் அருவருக்கத்தக்க நாகரிகமற்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார். அடிக்கடி அவரது இணையத் தளத்தில் எழுதி வருகிறார். என்னுடைய எழுத்து பிடிக்கவில்லையென்றால் எனது தளத்தினை படிக்காதீர்கள் என்று. வாசகர்களாகிய அனைவரும் ஏதோ ஒரு அடிக்ஸனில் அவரது இணையத்தினை படிக்கிறார்கள் என்று கூறுகிறார்.
ஆனால் உண்மை என்னவென்றால் உங்களை வசை பாட வேண்டும் என்ற மன வியாதி அவருக்கு அதிகமாக உள்ளது என நினைக்கிறேன். அவருக்கு மூத்திரம் வரவில்லை என்றால் கூட அதற்கு நீங்கள் தான் காரணம் என்று வசைபாடுகிறார். இது என்னவிதமான மனோ வியாதியா தெரியவில்லை. எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நல்ல புத்தியினையும் நல்ல சிந்தனையையும் தர பிரார்த்திப்பதை தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலாது
வேதனையுடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி
அன்புள்ள ராகவேந்திரன்,
ஒன்றும் செய்ய முடியாது. ஒருமொழியின் இலக்கியத்தில் ஒரு காலகட்டத்தில் ஒருவருக்கு மட்டுமே சாத்தியமாகும் ஒர் இருக்கை உண்டு. அதில் தன் ஆக்கங்கள் மூலம் சென்றமர்பவன் வசைகளை கேட்டுத்தான் ஆகவேண்டும், வாழ்நாள்முழுக்க. ஒரு கட்டத்தில் அது இயல்பாக ஆகிவிடும்.
சாருவுக்கு அப்படி ஒன்றும் என் மீது காழ்ப்பு இல்லை. அவருக்குத்தெரியும் ஒரு பேச்சுக்குக்கூட என்னுடன் ஒப்பிட்டுக்கொள்ளும் புனைகதையாசிரியராக அவரை அவர் சொல்லிக்கொள்ளமுடியாதென.
என் மீதான வசைகளை விரும்பி வாசிக்கும், அதை சுடச்சுட பிறருக்கு அனுப்பி மகிழும் ஒரு கூட்டம் உண்டு. அவர் அவர்களுக்காகவே எழுதுகிறார். அது உருவாக்கியளிக்கும் இடத்தை இன்னொருவருக்கு அளிக்க அவர் விரும்பவில்லை அவ்வளவுதான்
நான் பொருட்படுத்தவில்லை. அவருக்கு நல்லது நடக்கட்டும்
ஜெ