அன்புள்ள ஜெயமோகன்,
நன்றி. இப்போது படித்து முடித்து ஒரு முழுமை மனதில் வந்து படிகிறது.
அலுவலகப் பணியில் கொஞ்சம் ஓய்வு கிடைத்ததால் விஷ்ணுபுரம் கௌஸ்துபம் முடிந்து மணிமுடியில் வந்து தங்கிவிட்டேன்.
சுடுகாட்டு சித்தன் மீண்டும் வருவாரா என்ற ஏக்கத்துடன் படிக்கிறேன் . அதற்குள் பிரளயம் வந்து விட்டதே.
எனக்கென்னவோ விஷ்ணுபுரம் இன்னும் கூட எழுதலாம் என்றே தோன்றுகிறது. ஸ்ரீ பாதத்தில் இருந்த வக்கணை கௌஸ்துபத்தில் இல்லை. ஆனால் தர்க்கங்கள் தத்துவ விசாரங்கள் நேரடியாக இருந்தது பிடித்திருந்தது. ஆனால் நீளம் போதவில்லை என்றே தோன்றுகிறது. தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதே மெய் ஞானம் எனும் போது அப்பாடா என்ற நிம்மதி வருகிறது (அதனால் தர்க்கம் வீண் என்று நான் பொருள் கொள்ளவில்லை. அதன் எல்லைகள் நான் புரிந்தது போலவே அமைந்தது மன நிறைவைக் கொடுக்கிறது).
விஷ்ணுபுரம் முடிவடைவது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குள் பல விஷ்ணுபுரங்கள் தோன்றுகிறது. பல சர்கங்கள் பல தர்க்கங்கள் பல கற்பனைகள் தோன்றுகிறது. அதற்கான விதையாக விஷ்ணுபுரம் அமைகிறது. ஆனால் எனக்கு இலக்கியத்தில் தேர்ச்சி இல்லை (தேர்ச்சி என்ன தொடக்கமே இல்லை). ஆனால் மனம் முழுமை இல்லாமையே உணருகிறது.
இன்னும் இன்னும் வேண்டும் என்று தோன்றுகிறது. அதுவே இதன் சிறப்பு, அதுவே இதன் குறை.
எப்படி இத்துணை கடினமான தத்துவ தர்க்க முறைகள் (பெளத்த தத்துவ கட்டமைப்பு குறித்த சொற்கள், ஜைன வைபாஷிக தத்துவ கட்டமைப்பின் ஞானம் இவை போன்று பல சிந்தனை மரபுகளின் ஞானம் ) இதெல்லாம் எப்படி கற்றீர்கள்.
தமிழில் வேத வாக்கியங்கள் படித்தது மன நிறைவைக் கொடுக்கிறது. அதன் மூல நூல்களை சுட்டியிருந்தால் அந்த வாக்கியங்களுக்கு முன்னும் பின்னும் படித்து இன்னும் சுவையைக் கூட்டியிருக்கக் கூடும்.
பிராமணர்கள் மீது இத்துணை காழ்ப்பா. நகைச்சுவையாக இருந்தது என்பதை ஒத்துக்கொள்கிறேன். இருந்தாலும் கொஞ்சம் நிரடலாக இருந்தது. நான் பிராமண குலத்தில் பிறந்ததால் மட்டும் அல்ல. இது ஒரு பெரிய விஷயமல்ல தான்.இருந்தாலும் இது ஒன்று தான் குறை என நான் படிக்கையில் நினைத்தது
முழுதாகப் படித்து மீண்டும் ஒரு முறை படித்து அதில் சில நாள் திளைத்து ஒழுங்காக எழுதுகிறேன்.
என்றென்றும் அன்புடன்
ஸ்ரீதர் விஸ்வநாத்
அன்புள்ள ஸ்ரீதர்,
விஷ்ணுபுரத்தின் வாசகர்களான பிராமணர்களில் ஒருசாராருக்கு எப்போதும் இந்த ஐயம் அல்லது வருத்தம் எழுகிறது. நாவலை வாசித்த நாட்களில் சுந்தர ராமசாமிகூட அதைப்பற்றித் தன் வருத்தத்தைச் சொன்னார். சென்ற பதினைந்து வருடங்களாக அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
இந்த நாவல் தமிழில் அன்றி பிறமொழிகளில் வெளிவந்திருந்தால் இந்த வினாவே எழுந்திருக்காது. இங்கே இந்த சங்கடம் எழுவதற்குக் காரணம் புரிந்துகொள்ளக்கூடியதே. சென்ற அரைநூற்றாண்டாக இங்கே அரசியல் காரணங்களுக்காக இங்குள்ள இடைநிலைச்சாதி அரசியல்வாதிகளால் கடுமையான பிராமணக்காழ்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அது எல்லா ஊடகங்களிலும் வெளிப்பட்டபடியே உள்ளது. ஒரு மாநிலத்தின் அத்தனை மக்களுக்கும் சட்டபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள முதலமைச்சரே ஒரு குறிப்பிட்ட சாதியைச் சுட்டி அவமதிப்பதும் வசைபாடுவதும் மிரட்டுவதும் நிகழ்கிறது. இச்சூழலில் பிராமணர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வது இயல்பே. அந்தப் பாதுகாப்பின்மையுணர்ச்சியின் விளைவே இத்தகைய வினாக்கள்.
சமகால அரசியல், சமூகவியல் தளங்களைக் கணக்கில்கொண்டு இலக்கியப்படைப்புகளை வாசிக்க நாம் பழகிவிட்டிருக்கிறோம். இலக்கியம் சமூகத்தை நோக்கிப் பேசுவது என்று நமக்கு திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது. ‘இந்தக் கருத்துக்கள் மக்கள்கிட்ட போய்ச் சேரணும் சார்’ ‘பாமரனுக்கும் புரியறாப்ல எழுத்து இருக்கணும்’ போன்ற வரிகள் நம் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கின்றன.
ஆனால் நடைமுறையில் இன்னும் ஒருபடி கீழே சென்றே வாசிக்கிறோம். அரசியல் அல்லது சமூகவியல் சார்ந்து நமக்கு எந்த ஒட்டுமொத்த அவதானிப்பும் இருப்பதில்லை. கொள்கைகளோ கோட்பாடுகளோ தெரிந்திருப்பதில்லை. நாம் அரசியலையும் சமூகவியலையும் அன்றாடச் செய்திகளாகவும், அரட்டையாகவும், வம்புகளாகவுமே அறிந்துகொண்டிருக்கிறோம். எல்லா வாசிப்பையும் அந்தச் செய்தி-அரட்டை- வம்பு உலகின் ஒரு பகுதியாகவே வாசிக்கிறோம்.
ஒரு நவீன இலக்கியப் படைப்பின் மீதான வாசிப்பில் ஓர் எல்லைவரை இந்த அம்சத்துக்கு இடமுண்டு. அவற்றிலும்கூட இவ்வகையான வாசிப்பு அப்படைப்பின் சாராம்சமான அழகனுபவத்தை, உணர்வுநிலையை, ஆன்மீக தளத்தைத் தவறவிடவே வழிகோலும். ஆகவே அவற்றை வாசிக்கையில் அரசியலில், சமூகவியலில் உள்ள சிந்தனைகளை, பண்பாட்டுக்குறியீடுகளை, அறவுணர்வை மட்டுமே இலக்கிய வாசிப்பின் தளத்துக்குக் கொண்டு வரவேண்டும். சமகாலச் செய்திகளையும் அரட்டையையும் வம்புகளையும் கவனமாக விலக்கி விடவேண்டும். இது நாம் நமக்கு நம் சூழல் அளிக்கும் இயல்பான பயிற்சியில் இருந்து விலகிச்சென்று அடையவேண்டிய ஒரு நிலை. இதற்கு நாம் பிரக்ஞைபூர்வமாகவே முயலவேண்டும்.
ஆனால் விஷ்ணுபுரம் கொற்றவை போன்றவை செவ்வியல்தன்மை கொண்ட ஆக்கங்கள். அவை நவீன இலக்கியத்தின் வடிவத்தை, மொழியை, அழகியல் கூறுகளைப் பயன்படுத்திக்கொண்டு செவ்வியல்கலையை உருவாக்க முயல்பவை. செவ்வியல் தன்னை ஒரு ‘அகால’ வெளியில் நிறுத்திக்கொள்ளவே முயல்கிறது. அது நேரடியாக சமூகத்துடனும் வாழ்க்கையுடனும் தன்னை தொடர்புபடுத்திக்கொள்வதில்லை. செவ்வியல் ஆக்கங்கள் தங்களுக்கென ஒரு செறிவான உலகை உருவாக்கிக் கொள்கின்றன. உண்மையான வாழ்க்கையில் இருந்து உறிஞ்சி எடுத்துக் காய்ச்சி கெட்டியாக்கப்பட்ட ஒரு வாழ்க்கையே அவற்றில் உள்ளது.
ஆகவே செவ்வியல் படைப்புகள் காட்டுவது யதார்த்தம் அல்ல. அந்த யதார்த்தம் வெளியே உள்ள வாழ்க்கையில் இருக்காது. அவை காட்டுவதை ‘செவ்வியல் யதார்த்தம்’ என்று சொல்லலாம். அந்த யதார்த்தம் தீவிரமான உணர்ச்சிகள் கொண்டது. தொடக்கமும் வளர்ச்சியும் முடிவும் கொண்டது. தத்துவார்த்தமானது. படிமத்தன்மை மிக்கது. விஷ்ணுபுரம் காட்டும் வாழ்க்கையை நீங்கள் வெளியே காணமுடியாது. அந்த வாழ்க்கை இந்தியாவின் ஆயிரம் வருட ஞானத்தேடல் மரபில் இருந்து உருவாக்கி எடுக்கப்பட்டது.
செவ்வியல் தனக்கென ஒரு படிம உலகை உருவாக்கிக்கொள்கிறது. அதில் கதைமனிதர்கள், பொருட்கள், சூழல் எல்லாமே படிமங்கள்தான்.அந்தப்படிமங்களைக்கொண்டு செவ்வியல்படைப்பு தன்னுடைய தரிசனத்தை முன்வைக்கிறது. இந்தப்படிமங்களை உருவாக்கிக்கொள்ளவே அது ஒரு பண்பாட்டை, அதன் வாழ்க்கையைச் சார்ந்திருக்கிறது. அதற்கு அப்பால் ஒரு செவ்வியல்படைப்பு ஒரு குறிப்பிட்ட மொழிக்கு, பண்பாட்டுக்கு, காலகட்டத்துக்கு சொந்தமானது அல்ல. விஷ்ணுபுரத்தை உலகின் எந்தமொழியிலும் ஒருவர் தன் சொந்தப்படைப்பாக உணர முடியும். அக்குறியீடுகள் அவரது அந்தரங்கத்துடன் உரையாடும்.
ஆகவே ஒரு செவ்வியல் ஆக்கத்தை ஏதாவது ஒரு சூழலுடன், ஒரு காலகட்டத்துடன் பிணைத்துக்கொண்டு வாசிப்பதைப்போல வீண்வேலை ஒன்றும் இல்லை. அது அந்தப்படைப்பை உடைத்து உயிரில்லாத துண்டுகளைப் பார்ப்பது போலத்தான். அதன் உயிர் மறைந்துவிடும், அது உங்களிடம் ஒன்றுமே பேசாது. விஷ்ணுபுரத்தை அது உருவாக்கும் உலகம் வெளியே உள்ள உலகுக்குச் சமானமான ஓரு செறிவுள்ள உலகம் என்று எண்ணி வாசிப்பதுதான் நல்ல வாசிப்பு. அந்த மண்ணில் அந்த மனிதர்களுடன் அந்த கனவுகளுடன் வாழ்வது.
ஆகவே இந்த வரியை ஜெயமோகன் என்ற எழுத்தாளர் ஏன் எழுதினார், அவரது நோக்கம் என்ன என்றெல்லாம் எண்ணி வாசிப்பது அந்நாவலை நோக்கி நம் வாசலை நாமே மூடிக்கொள்வதுதான். அதில் ஜெயமோகனுக்குப் பெரிய இடமேதும் இல்லை. அது தன்னுடைய அழகியல் விதிகளின்படி தன் படிமங்களைக் கருவியாகக் கொண்டு சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு முழு உலகம்.
இந்தப்பார்வையுடன் விஷ்ணுபுரத்தைப் பார்த்தால் உங்களுக்கே எளிதில் விடை கிடைக்கும். ஒன்றை முன்வைத்ததுமே அதை நேர் எதிர்திசையில் திருப்புவது, ஒன்றைக் கட்டியதுமே அதை உடைப்பது, உச்சங்களுக்குச் சென்றதுமே நேர் எதிர் உச்சங்களுக்குச் செல்வது விஷ்ணுபுரத்தின் கூறுமுறையாக இருக்கிறது. முதல் இரு அத்தியாயங்களை வாசிப்பவர்கள் அதை உணரமுடியும். விஷ்ணுவின் நீட்டிய பெரும்பாதத்தின் பேரழகுத்தோற்றம் வர்ணிக்கப்பட்ட அத்தியாயத்தின் அடுத்த அத்தியாயம் அதை குஷ்டரோகியின் நீட்டிய கால்களுக்கு ஒப்பிடுகிறது. இந்த ஆரோகண அவரோகணம் நம்முடைய செவ்வியலின் அழகியல்முறையாகும். நாவல் முழுக்க அப்படி என்னென்ன இருக்கிறது என்று பார்த்தாலே நீங்கள் நாவலை முழுமையாகத் தொகுத்துக்கொள்ளமுடியும்.
அப்படியென்றால் அந்த உணவுக்கூடக் காட்சி ஏன் வருகிறது என உங்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். விஷ்ணுபுரத்தின் இரண்டாம்பகுதி முழுக்க ஞானசபை விவாதங்கள். கவித்துவம் மிக்க படிமங்களினூடாக, நாடகீயமாக, இந்திய ஞான தளத்தில் ஈராயிரம் ஆண்டு நிகழ்ந்த ஒட்டுமொத்த விவாதமும் மிகச்சுருக்கமாக மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. அதில் ஒவ்வொரு உச்சத்துக்குப்பின்னும் அந்த எழுச்சி நேர் எதிராகத் திருப்பப்படும் பகுதிகள் வரும். இந்திய மெய்யியல் விவாதம் மீதான பகடிகள், அதன் குரூரங்களைப் பற்றிய சித்தரிப்புகள் அவை.
அவற்றின் ஒரு பகுதியே அந்த உணவறைக் காட்சி. தத்துவஞானத்தின் உச்சநிலைகளின் நேர்மறுபக்கம். அதுவும் அங்குதான் நடக்கிறது. தத்துவவிவாதக் களத்தில் பேசப்பட்ட அதே விஷயங்கள்தான் அங்கும் பேசப்படுகிறது. முற்றிலும் எதிராக பாதாளத்தில் இருந்து. உங்கள் பிரச்சினை அது பிராமணர்களின் உணவுக்காட்சியாக இருப்பது மட்டும்தான், இல்லையா?அது ஏன் அப்படி இருக்கிறதென்றால் அந்த ஞானசபையில் உச்சகட்ட தத்துவத்தையும் தரிசனத்தையும் முன்வைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் பிராமணர்கள் என்பதனால்தான்.
ஞானசபை பிராமணர்களால் நிரம்பியிருப்பது அன்றைய இந்திய சமூகஅமைப்பின் யதார்த்தம். உணவறைக் காட்சி அதன் மறு எல்லை. இதுவும் நூல்கள் காட்டும் யதார்த்தமே. இன்றும் நீடிக்கும் யதார்த்தமே. விஷ்ணுபுரம் அந்த புற யதார்த்தத்தில் இருந்தே தன் யதார்த்தத்தை செறிவாக்கி எடுத்துக்கொண்டிருக்கிறது. ஒன்றை மட்டும் சொல், இன்னொன்றை விட்டுவிடு என்பது உங்கள் கோரிக்கை என்றால் அதை ஓர் இலக்கிய ஆக்கம் பொருட்படுத்தாது.
என்னைப் பொறுத்தவரை, ஓர் இலக்கியவாசகன் தன்னுடைய பிறப்பால் வளர்ப்பால் உருவாகும் சாதி, மத, இன, மொழி பேதங்களைத் தாண்டி தன்னை ஒரு தூய அறிவார்ந்த தன்னிலையாக உணரக்கூடியவன். அந்த அறிவார்ந்த தன்னிலையை மட்டுமே ஒரு படைப்பின் முன்னால் திறந்துவைக்கக்கூடியவன். அவனுக்குத் தனிவாழ்வில் இருந்து என்னதான் காழ்ப்புகள், கசப்புகள், முன்தீர்மானங்கள் கிடைத்திருந்தாலும் அவற்றைத் தாண்டி வந்து படைப்பின் முன் நிற்க முடிந்தவன்.
செவ்வியல் ஆக்கம் எப்போதுமே அத்தகைய ஒரு முன்னுதாரண வாசகனை மட்டும் இலக்காக்குகிறது. ஒரு ஆக்கத்தை முழுமையாக வாசிக்கக்கூடியவன் அவனே. செவ்வியல் ஆக்கத்தின் வடிவச்சிக்கலையும் உள்விரிவையும் தரிசனஅமைதியையும் அவனைப்போன்றவர்களே உணர முடியும். ஆகவே தங்கள் சொந்த சில்லறை அரசியலையும், எளிய புரிதல்களையும், காழ்ப்புகளையும், கசப்புகளையும் முன்னிறுத்தி நாவலை வாசிப்பவர்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. ‘மன்னிக்கவும், இது உனக்கான ஆக்கம் இல்லை’ என்பதே என் மௌனமான பதில்.
உங்கள் கேள்வி ஒரு முதல்படி வாசகனின் கேள்வி. ஆனால் உங்களை நான் இதற்கான வாசகன் அல்ல என
நினைக்கவில்லை. உங்கள் கடிதங்கள் நீங்கள் விஷ்ணுபுரம் முன்வைக்கும் தேடலை நோக்கி வரக்கூடியவர் என்றே காட்டுகின்றன. ஆகவேதான் இந்த விரிவான விடை. சிந்தித்துப்பாருங்கள்!
ஜெ