சமூக, அரசியல் மாற்றத்துக்கான ஆயுதப்போராட்டம் உருவாக்கும் ஒட்டுமொத்த விளைவு அழிவே என்றும் ஆக்கபூர்வமானது அகிம்சைப்போராட்டமே என்றும் தொடர்ந்து பேசிவருகிறேன். அதற்கான காரணங்களை இந்த தளத்தில் தொடர்ந்து விவாதித்து வருகிறேன். அவை இன்றையகாந்தி, அண்ணா ஹசாரே, ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகிய இரு நூல்களாக வெளிவந்துள்ளன
ஒற்றை வரிகளில் சொல்லப்போனால் என் தரப்பு இதுதான். அகிம்சை வழிப்போராட்டம் என்றுமே உண்மையான மக்கள்போராட்டமாகத்தான் இருக்கும். பெரும்பான்மையினரின் உண்மையான ஆதரவு இருந்தால் மட்டுமே அது நடைபெறும், நீடிக்கும். மக்கள் சரியாகவோ தவறாகவோ அதை ஆதரிக்கத் தவறினால் அது தோற்கும். ஆகவே அது என்றுமே ஜனநாயகத்தன்மை கொண்டது
நேர்மாறாக ஆயுதப்போராட்டம் என்றுமே அந்தப்போரைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ராணுவத்தலைமையினால்தான் கொண்டுசெல்லப்படும்.ராணுவமயமாக்கப்பட்ட சிறுபான்மையினர் மிகப்பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துக்கு எதிராக அந்தப்போரை நடத்தமுடியும். ஆகவே ஒட்டுமொத்தமாக அதன் விளைவு ஃபாசிசமாகவே இருக்கும்.
ஆகவே அகிம்சைப்போராட்டம் முழுமையாகத் தோற்பதில்லை. அது ஆதரவிழந்து நின்றால்கூட அடைந்தவரை வெற்றி என்றே கொள்ளப்படும். அதன் கருத்தியல்பாதிப்பே அதன் உண்மையான வெற்றி. அதன் இழப்புகள் மிகக்குறைவுதான். ஆனால் ஆயுதப்போராட்டம் வென்றாலும் அப்போரை நிகழ்த்திய சிறு குழுவின் அதிகாரத்தையே மக்கள்மேல் சுமத்தும். தோற்றால் அதன் இழப்பு அச்சமூகத்தையே வேரோடு அழிக்கும்.
அகிம்சைப்போராட்டம் அதிகமான மக்களை உள்ளே கொண்டுவரவேண்டிய கட்டாயத்தில் இருப்பதனால் அது சமரசத்தையே தன் வழியாகக் கொண்டிருக்கும். தங்கள் சொந்த முரண்பாடுகளைக் களையவும் பூசல்களைத் தவிர்க்கவும் அது கவனம் கொள்ளும். முரண்படும்நலன்களும் பார்வைகளும் கொண்ட பெருவாரியான மக்கள் சம்பந்தப்பட்ட போர்கள் அகிம்சைப்போராக இருந்தால் மட்டுமே வெற்றிகரமாக நீடிக்கமுடியும். இல்லையேல் உள்முரண்பாடுகள் பெருகி, பூசல்கள் வலுத்து, அச்சமூகம் தன்னுள் போரிட்டு அழியும்.
அகிம்சைப்போராட்டம் பெரும்பாலும் செய்தித்தொடர்பையே சார்ந்திருப்பதனால் அது சிந்திக்க,விவாதிக்க,முரண்பட இடமளிக்கும். தர்க்கபூர்வமான அணுகுமுறையைக் கொண்டிருக்கும். ஆயுதப்போராட்டம் என்றுமே மிகையுணர்ச்சிகளை நம்பி நடக்கக்கூடியது. தியாகம்,வீரவழிபாடு போன்றவற்றைப்பற்றிய உணர்ச்சித்தூண்டலும் எளிய கருத்துக்களைத் திரும்பத்திரும்ப முன்வைக்கும் ஒற்றைப்படையான உக்கிரமான பிரச்சாரமுமே அதன் வழிமுறை. வெறுப்பையும் காழ்ப்பையும் நம்பியே அதுசெயல்பட முடியும்.
ஆகவே அகிம்சைப்போராட்டம் ஜனநாயகபூர்வமான அமைப்புகளை உருவாக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் அது ஜனநாயகத்தை நோக்கித் தள்ளுகிறது. நேர் மாறாக ஆயுதப்போராட்டம் போரிடும் நோக்கத்துக்கே ஃபாசிசத்தை உருவாக்கும். ஒரு விதிவிலக்குகூட இன்றுவரை உலகில் உருவானதில்லை. அது வென்றால் சர்வாதிகார ஃபாசிச அரசு உருவகும். தோற்றால் தோற்கடித்த சக்தியின் அடக்குமுறைக்கு ஆளாகவேண்டியிருக்கும்.மேலும் ஆயுதப்போர் தோற்றால்கூட அந்த உக்கிரமான பிரச்சாரத்தின் பின்தூறலான வன்மங்களை அச்சமூகம் சுமந்துகொண்டு சிந்தனையின்றித் தேங்கிக்கிடக்கும்.
நான் சொல்லிவந்த இந்தக்கருத்துக்களை அப்படியே வரிக்குவரி விரிவான ஆதாரங்கள் மூலம் பேசும் ஒரு நூலைப்பற்றி சொல்வனத்தில் வெளிவந்துள்ள இந்தக்கட்டுரை மிக முக்கியமானது. அசட்டு மிகையுணர்ச்சிகளில் திளைக்கவும், தங்களைப்பற்றி மிகையான போலிப்பிம்பங்களைக் கட்டமைத்துக்கொள்ளவும்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் இன்று வன்முறை அரசியல் பேசுகிறார்கள். அவர்களில் சிலருக்காவது கண் திறந்தால் நல்லது