திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
பல கட்டுரைகள் மூலம் உங்களுடைய சமய வெறுப்பை (குறிப்பாக, சைவ சமயம் ) வெளிப்படுத்துகின்றீர்கள்.
கதைகள், கட்டுரைகள் எனப் பலவழிகளில். இம்முறை, நகைச்சுவை என கூறி சமய பக்தியை ஏளனம் செய்து உள்ளீர்கள்.
இறைவனின் மீது உள்ள பக்தி, உங்களுக்கு ஏளனமாகத் தெரிகின்றதா?
உண்மையான பக்தன், அவனுடைய தெய்வத்திடம் எதுவும் வேண்டுவதில்லை. பிறப்பு இறப்பு அற்ற நிலையைத்தான் அவன் தன் தெய்வத்திடம் தூய பக்தியின் மூலம் வேண்டுகின்றான்.
உங்களின் வறட்டு எண்ணத்தை விட்டு, இறைவனின் திருவடி மீது பக்தி செய்து பாருங்கள், அப்பொழுது தெரியும் பக்தியின் எல்லையில்லா ஆனந்தம்.
சமய அருளாளர்களின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், அதற்காக தயவு செய்து சைவ சமயத்தையும், அதன் அருளாளர்களையும் நகைச்சுவை என்ற பெயரில் இகழவேண்டாம்.
நீங்கள் சொல்வதே உண்மை எனப் பலர் நம்பி வருகின்றனர். அவர்கள், இதனால் பக்தியைப் பற்றி ஒரு தவறான எண்ணத்திற்கு வரலாம்.
சோமசுந்தரம்
அன்புள்ள சோமசுந்தரம்
இறைவன் மீதான பக்தி எனக்கு ஏளனமாகத் தெரியவில்லை.
நன்றி
ஜெ
*
நவீனமாகச் சொல்ல வேண்டுமென்றால் மாஸ்! சான்ஸே இல்லை!
சிரித்து மாளவில்லை ஜெ!
சங்கத்தில் ஒரு புறப் பாடலையும் இனிமேல் சிரிக்காமல் படிக்க முடியாதபடி செய்து விட்டீர்கள்.
‘யாப்பு‘ அல்ல – இதுதான் ‘டாப்பு ‘
சீனிவாசன் ராகவன்
அன்புள்ள சீனிவாசன்
நன்றி
பக்திக்கு எப்போதுமே மாஸ் அப்பீல் உண்டுதானே?
ஜெ
அன்புள்ள ஜெ,
பக்திப்பாடல்மரபு அருமையான கட்டுரை. பகடி என்று தெரிகிறது. ஆனால் அதனுள் இருக்கும் ஆழமான வாசிப்பும் வரலாற்றுப்புரிதலுமே என்னுடைய கவனத்திற்கு வந்தன. சங்ககாலம் முதல் இன்றுவரை அறுபடாமல் இருந்து வரும் நீட்சி என்பது பக்திப்பாடலில் இருக்கும் இந்தத் துதி அம்சம்தான் என்பது மிகப்பெரிய ஒரு பார்வையாக இருந்தது. சங்ககாலப் பாணன் மன்னனைப்பாடிய அதே வரிசையில் அதே பாணியில்தான் இன்றைக்கும் நாம் பக்திப்பாடல்களை எழுதுகிறோம் என்பது எவ்வளவு பெரிய விஷயம். உண்மையிலேயே அது ஒரு பரவசமூட்டும் கண்டடைதல்தான். நன்றி
செல்வம்