கவிப்பெருக்கம்

என் மின்னஞ்சலுக்கு வந்த இந்தக்கடிதம் பீதியைக் கிளப்பியது.

சிறப்புஅழைப்பு!!!

உலக சாதனைக்காக, 5005 கவிஞர்கள் ஆசிரியர்களாக இணைந்து படைக்கும் ஒரு நூலிற்குத் தங்களின் கவிதையை வேண்டிக் கேட்டு இச்சிறப்பு அழைப்பைத் தனிப்பட்ட முறையில் அனுப்புகிறோம். பிரபல கவிஞர்களாகிய தாங்கள் இதில் ஓர் ஆசிரியராகப் பங்கு பெறுவது வளரும் இளம் கவிகளுக்கு உற்சாகம் ஊட்டுவதாகவும், கவிப் பெருக்க ஒரு தளமாகவும் அமையும் என்பது திண்ணம்.

தாங்கள் படைத்த ஒரு கவிதையை (20 வரிகளுக்குள் ) கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி .. !

முகவரி

செ.பா.சிவராசன்,

எண்-42,ஆவடி,சென்னை-62.

mail : [email protected]

விளம்பரங்கள் ஏற்றுக்

கொள்ளப்படும்.

தொடர்புக்கு : 8438263609

http://www.vahai.ewebsite.com/

வண்ணப் படத்துடன் கவிதை வெளியிடப்படும் நாள் : 14-01-2013.

கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25-09-2012.

அரசியல் மதம் சாராத கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படும் . தாங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை இருக்கலாம் . மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் . -mail / Post – மூலம் கவிதை அனுப்புபவர்கள் வீட்டு முகவரி , அலைபேசி எண் , வயது குறிப்பிட்டு அனுப்பவும் .

கட்டணம் இல்லை .

இதன் விபரீதங்களை யோசிக்க யோசிக்கத் தூக்கம் பிடிக்கவில்லை. தமிழகத்தில் சிலநூறு கவிஞர்கள் மட்டுமே உள்ளனர் என்பது என் எண்ணம். அவர்கள் ஜப்பானியவிசிறி போல ஒருவர் பலராகிப் பலநூறு கவிஞர்களாக விரிகிறார்கள் என்றே எண்ணியிருக்கிறேன். இந்த சிறிய சமூகமே தமிழகத்தில் ஒரு பண்பாட்டுக்கொந்தளிப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. போஸ்ட்கார்டு கவிதைகள் ஸ்டாம்பு சைஸ் கவிதைகள் என வகைவகையாக எழுதுகிறார்கள். படகுக் கவியரங்கம் நீர்மூழ்கிக்கவியரங்கம் என்றெல்லாம் அசத்துகிறார்கள்.

ஆனால் ஐயாயிரத்தி ஐந்து கவிஞர்கள் என்றால்!!! சங்குடைந்துபோய் “பூதம்வணங்கும்கண்டன்சாஸ்தா பொன்னுதம்புரானே” என்று ‘விளிச்சா விளி கேக்கும்’ பக்கத்துத்தெரு கடவுளை நோக்கிக் கதறிவிட்டேன். அதன்பின் ஒரு ஆறுதல். அவ்வளவெல்லாம் கண்டிப்பாகத் தேறாது. சும்மா தெருவில் போகிறவர்களை எல்லாம் கூப்பிட்டு மகஜரில் கையெழுத்து வாங்குவதுபோல ஏதாவது செய்வார்கள். அற்றகைக்கு பிரியாணிப்பொட்டலம் குவார்ட்டர் கூட அளிப்பார்களாக இருக்கும். இருந்தாலும்…

வயிற்று நமநமப்பு குறையவில்லை. வயது வேறுபாடு இல்லை என்கிறார்கள். கைக்குழந்தைகளையும் சேர்க்கலாம். ஆனால் அரசியலும் மதமும் பேசப்படக்கூடாது.அதாவது தமிழ்ப்பண்பாட்டின் தலைவிழுமியங்களில் மானமும் வீரமும் விலக்கு. அப்படியென்றால் எஞ்சுவது காதல். ஐயாயிரம் கவிஞர்கள் காதல்வசப்படும் அபாயம் புவிவெப்பமயமாதலுக்கு ஏதாவது பங்களிப்பாற்றுமா? சூழியலாளர் யாராவது இதையெல்லாம் கண்காணிக்கிறார்களா?

எப்படித் தேற்றுவார்கள்? ஈழக்கவிஞர் மு.பொன்னம்பலத்தை அணுகலாம். அவர்தான் ஒருமுறை ஈழக்கவிதையை நான் ஏதோ சொல்லிவிட்டேன் என்று அங்கே எழுதிக்கொண்டிருக்கும் முந்நூற்றி எழுபத்தேழு கவிஞர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார். புனைபெயர்களை எல்லாம் தனிமனிதர்களாகக் கணக்கிட்டிருப்பார் என்று நினைக்கிறேன். ‘அன்புடன்’ புகாரி ஒரு நூறு தேற்றிக்கொடுப்பார். சுரதா போய்ச்சேர்ந்துவிட்டார். பத்து இருபது வருடம் அவர் ஒரு ஐம்பது கவிஞர்களைப் பத்திக்கொண்டு திரிந்தார். ஆனாலும் மிச்சம் கிடக்கிறதே…

அதிமுக, மதிமுக, திமுக, பாமக, சமக அமைப்புகளில் இலக்கிய அணிகள் உள்ளன. அங்கே அவர்கள் கொஞ்சம் கவிஞர்களைத் தேற்றி ஒதுக்கி வைக்க வாய்ப்புள்ளது. கைமாற்றாகக் கேட்டால் கொடுக்காமலிருக்க மாட்டார்கள். திருப்பிக் கொடுக்கும்போது மாற்றிக் கொடுத்துவிடக்கூடாது, அவ்வளவுதான்.

ஒன்றுசெய்யலாம். கவிதை ஞானஸ்னானம் கொடுக்கலாம். உள்ளூர் டாஸ்மாக்கிலேயே. முக்கி எழுந்ததும் கவிதைக்கான குறியீட்டைக் கழுத்திலே மாட்டிவிட்டால் போயிற்று. என்னைத் தனியாகக் கேட்டால் வைணவர்கள் ஐந்து நாமங்களை சூடு போட்டுக் கொள்வதைத்தான் சிபாரிசுசெய்வேன், ஐம்பது இடங்களில். முன்பின்பக்கவாட்டு எப்படிப்பார்த்தாலும் கவிஞர் என்று தெரியவேண்டும் பாருங்கள்.

ஆனால் இங்கே ஒரு ஐயம். என்னை பிரபல கவிஞர்கள் என்கிறார் கடிதமனுப்பியவர். என் மனைவி மக்களையும் சேர்த்துவிட்டாரா? ஒருவர் கவிஞர் என்றால் அவருக்குத் தொடர்புள்ள மற்றவர்களும் அதில் இணைக்கப்பட்டு விடுவார்களா என்ன? ஃபேஸ்புக் மாதிரி ஏதாவது மென்பொருள் அதற்கிருக்கிறதா?

நான் கவிப்பெருக்கத்துக்கு வழிகோலவேண்டும் என்கிறார்கள். அது ஓர் இன்றியமையாத நிகழ்வு என்று வரிகளில் தெரிகிறது. சரியாகத்தான் எழுதியிருக்கிறார்களா, இல்லை இனப்பெருக்கத்தை அப்படிக் கைமறதியாக எழுதிவிட்டார்களா? உயிர்களுக்கு இனப்பெருக்கம் தேவை. இனப்பெருக்க உறுப்புகளும் உள்ளன. கவிப்பெருக்க உறுப்புகள் சிலருக்கு இருக்குமோ? நமக்கு இருக்கக்கூடுமென்றால் எங்கே தேடிப்பார்க்கவேண்டும்? தெரியவில்லை.

மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது. எப்படித் தேற்றுவார்கள் ஐயாயிரத்தை. ஐயாயிரம் ஆகிவிட்டதென்றால் அந்த ஐந்துபேர் சேர்வது பெரியபிரச்சினை இல்லை. ஐயாயிரம் கவிதைகளைத் தட்டச்சு செய்பவர் பிழைதிருத்துபவர் தபால்காரர் எட்டிப்பார்க்கும் பக்கத்துவீட்டுப் பெரியவர் எல்லாரும் கவிதையொளிபெறக்கூடும்.

ஆம், ஒரு வழி இருக்கிறது? ஆம் வே அண்ணாச்சி! ஆம்வே! ஒருவர் ஐந்து கவிஞர்களைக் கண்டுபிடித்துக்கொடுத்தால் அவர் கவிஞர் என்று அறியப்படுவார். அவருக்குச் சான்றிதழும் பட்டமும் தபாலில் அனுப்பப்படும். அந்த ஐவரும் இருபத்தைந்து கவிஞர்களை உருவாக்குவர். ஒரே வாரத்தில் தமிழகத்தில் அத்தனைபேரும் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள். ஐயாயிரம் என்ன ஐந்துகோடிக் கவிஞர்கள்!

என்ன ஒரு அரிய வாய்ப்பு! நாம் கவிதைகளைப் பதப்படுத்தி ஏற்றுமதிகூடச் செய்யலாம். சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அருகே அதற்காகப் பண்டகசாலைகளை அமைக்கலாம். ‘கவிதையோட சொந்தம் நாடு’ போன்ற வரிகளை உருவாக்கி சிறந்த பேக்கிங்குடன் அவற்றை அனுப்பினால் வெள்ளைக்காரர்கள் விரும்பி வாங்குவார்கள். தொழில்வளம் பெருகும். மிஞ்சிய கவிதைகளை உலரவைத்துப் பாதுகாக்க அரசு ஆவன செய்யவேண்டும். மத்திய அரசில் இதற்காக துறை ஒதுக்கப்பட்டால் கவிதாயினி கனிமொழிக்குத் துணையமைச்சராக ஒரு வாய்ப்பும் அமையும்.

கவிதை இத்தனை சாத்தியங்கள் உள்ளது என்று இப்போதுதான் தெரிகிறது. கவிதை என்பது கைவிதை! அய்யய்யோ அப்படியென்றால் நானும் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேனா!

முந்தைய கட்டுரைஞானத்தின் பேரிருப்பு – வேணு தயாநிதி
அடுத்த கட்டுரைசாகித்ய அகாடமி நூல்கள்