பயனுறு சொல்

இந்திய தத்துவ மரபை எப்படி வகுத்துக்கொள்வது என்பதில் மேலைநாட்டு அறிஞர்களுக்கு எப்போதுமே ஓர் இடர் இருக்கிறது. இந்திய தத்துவம் என்று ஒன்று இல்லை, இந்தியாவில் இருப்பது இறையியலும் ஒழுக்கவியலும் மட்டுமே என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் இந்தியவியலின் ஆரம்ப காலத்தில் இருந்த இந்த விவாதங்கள் இன்று அதிகமாகப் பேசப்படுவதில்லை. இந்திய தத்துவம் தனக்கென்று சில தனித்தன்மைகள் கொண்டது, மேலைத் தத்துவ நோக்கில் இருந்து வேறுபட்டது என்ற பார்வை பரவலாக ஏற்கப்பட்டுள்ளது.

அந்த வேறுபாடு அல்லது தனித்தன்மை என்ன? ஏற்கனவே சொல்லிய அந்த அம்சம்தான். மேலைத்தத்துவத்தை பிரபஞ்சத்தையும் மனிதவாழ்க்கையையும் வரையறை செய்து புரிந்துகொள்ளமுயலக்கூடிய தூய தர்க்கங்களின் தொகுப்பாகப் புரிந்துகொள்ளலாம். மதத்தைச் சாராமல் அது இயங்க முடியும். இந்திய தத்துவத்தை இறையியல், அறவியல் என்ற இரண்டில் இருந்தும் பிரிக்கமுடியாது. மதத்தை சாராமல் அது தனித்தியங்க முடியாது.

மேலைத்தத்துவம் தத்துவத்தின் விதிகளுக்குள்ளேயே இயங்கமுடியும். அதன் பெயர் சுட்டுவதுபோல அது ஃபிலோ சோஃபியா. அறிவுத்தேவதையை விரும்புதல்தான். இந்தியதத்துவம் இரு எல்லைகளை இணைக்கக்கூடியதாகவே என்றும் உள்ளது. ஓர் எல்லை மெய்ஞானம், இப்பிரபஞ்சத்தின் சாரம்சமான உண்மைகளைப்பற்றிய தரிசனம். இன்னொரு எல்லை அன்றாட வாழ்க்கை. ஞானத்தை அன்றாட வாழ்க்கையில் கொண்டு வந்து சேர்ப்பதற்காகச் செயல்படும் ஒரு மாபெரும் தர்க்கக்களமே இந்திய தத்துவம் என்று சொல்லலாம்.

ஆகவேதான் இந்தியதத்துவத்தில் இருந்து மெய்ஞானத்துக்கான உள்ளுணர்வின் தேடலையும் கண்டடைதலையும் பிரிக்க முடியாமலிருக்கிறது. மெய்ஞானத் தரிசனம் என்பது அதன் சரியான பொருளில் தர்க்கபூர்வமாக விளக்கிவிடக்கூடியதல்ல என்ற எண்ணம் இந்திய சிந்தனையில் வலுவாகவே உண்டு. ‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்’ என்ற விவேகம் அது. இதனால்தான் இந்திய தத்துவ மரபு தத்துவத்தால் வரையறுக்கப்பட முடியாத விஷயங்களைப்பற்றியே அதிகமும் பேசிக்கொண்டிருக்கிறது. ஆகவே அது முக்கியமாக இறையியல்தான் என்று மேலைத்தத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அதேபோல இந்தியதத்துவம் மெய்ஞானத்தை அன்றாடவாழ்க்கையின் பகுதியாக ஆக்க எப்போதுமே முயல்கிறது. ஞானத்தை அடைவதற்கான செயல்முறைகள் நடைமுறைகளைப்பற்றி அது பேசுகிறது. யோகமும் பக்தியும் வழிபாடுகளும் தத்துவ எல்லைக்குள் வருகின்றன. அறம்,பொருள்,இன்பம்,வீடு நான்குமே ஒன்றுடன் ஒன்று கலந்ததாகவே இந்திய சிந்தனையால் முன்வைக்கப்படுகின்றன. ஆகவேதான் இந்திய தத்துவ சிந்தனை என்பது அறவியல் மட்டுமே என்ற தரப்பு ஒலிக்கிறது.

பிரிக்கமுடியாதபடி வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பார்வையின் விளைவு இது என்று புரிந்துகொள்வதே நல்லது. பகுத்து அறியும் நோக்கை மேலைச்சிந்தனை பெரிதும் சார்ந்திருக்கிறது. முழுமைநோக்கை நம் சிந்தனை முன்வைக்கிறது. இந்த வேறுபாடே நம்முடைய தத்துவத்தைத் தனித்துக்காட்டுகிறது

இந்திய ஞானநூல்கள் அனைத்துமே பலசுருதி என்ற பகுதியை முன்னால் வைத்துள்ளன. அந்நூலை வாசித்தால் என்ன பயன் என்பதை அவை எடுத்துச்சொன்னபின்னரே ஆரம்பிக்கின்றன. இந்திய ஞானமரபில் உள்ள எல்லா சிந்தனைப்போக்குகளும் அச்சிந்தனையின் பயன் என்ன என்று தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கும். அது என்றுமே முக்தி, அதாவது விடுதலைதான். எது விடுதலை என்ற விளக்கம்தான் வேறுபடும். அறியாமையில் இருந்து, துக்கத்தில் இருந்து, பிறவிச்சுழலில் இருந்து விடுதலை.

அந்த விடுதலைக்காகவே சிந்தனைகள் எல்லாம் நிகழவேண்டும். அவ்வாறு ஓர் இலக்கு இல்லாத சிந்தனைகளால் பயனில்லை. நான் தத்துவத்தை அணுகுவது இந்தக் கோணத்தில் மட்டும்தான். நம் வாழ்க்கையை விளக்க, நமக்கும் பிரபஞ்சத்துக்குமான உறவை தெளிவாக்க, மேலும் சிறந்த வாழ்க்கையை நோக்கிக் கொண்டுசெல்ல, நம்மைக் கட்டியிருப்பவற்றில் இருந்து நம்மை விடுதலைசெய்ய வல்லமை உள்ள சிந்தனையே உண்மையான சிந்தனை.

ஆகவே இந்திய மதச்சூழலில் அதிகமும் நடக்கும் வெறும் விவாதங்களை நான் கவனிப்பதில்லை. மயிர்பிளக்கும் சொல்லாராய்ச்சிகள், மடக்கிமடக்கி முன்வைக்கப்படும் தர்க்கங்கள் ஆகியவற்றில் இருந்து முழுமையாக விலகிவிடுகிறேன். மதப்பூசல்களில் ஈடுபடுவதே இல்லை. என் சிந்தனைகள் வாழ்க்கை சார்ந்த புறக்கணிக்கமுடியா வினா ஒன்றில் இருந்தே எழுகின்றன. இந்த நூலின் அமைப்பும் அதுவே. என் நண்பர்கள், வாசகர்கள் எழுப்பிய கேள்விகளில் இருந்தே நான் மேலே செல்கிறேன். அக்கேள்விகளுக்குப் பதில்காணவே என் வாசிப்பை, அறிதல்களைப் பயன்படுத்துகிறேன்.

’சேர்ந்து பயணம் செய்யுங்கள், உங்கள் மனங்கள் ஒன்றாகட்டும்’ என்கிறது ரிக் வேதம். ஆம், அவ்வாறே ஆகுக

ஜெயமோகன்

[சொல்புதிது வெளியீடாக வெளிவரவிருக்கும் ‘இந்திய ஞானம் – விவாதங்கள்’ நூலுக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைமேற்குச்சாளரம்
அடுத்த கட்டுரைசோழர்காலச் செப்பேடுகள்- தினமலர் விருது