ஊழ்க அமர்வு

அன்புள்ள ஜெ மோ

தங்களது தென்கரை மகராஜா பற்றிய பதிவு பார்த்தேன். அதில் சாஸ்தா சிலை யோக உபவிஷ்ட நிலையில் உள்ளதாக எழுதி இருந்தீர்கள். எனது குல தெய்வமான வாகைக்குளம் சாஸ்தாவும் அதே போலத் தான் இருக்கிறார். (வாகைக்குளம் நாங்குனேரிக்கு அருகில் உள்ளது). யோக பட்டம் விலகி இருக்கிறது. வலது காலைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டும், இடது காலைக் குத்துக்கால் இட்டுக் கொண்டும் இருக்கிறார். இது தான் யோக உபவிஷ்ட நிலை என்பதா? இதைப் பற்றி சிறிது விளக்கமாக கூற முடியுமா? இதில் வேடிக்கை என்ன வென்றால் எனக்கு சொந்தக் கிராமம் சிங்கி குளம் என்பது. அந்த ஊரிலும் சாஸ்தா கோவில் உள்ளது. ஆனால் சிங்கி குளத்தில் இருந்த பிராமணர்கள் அருகில் உள்ள வாகைக்குளம் சாஸ்தாவைத் தான் குல தெய்வமாகக் கும்பிடுகிறோம். பங்குனி உத்திரத்தன்று வெளியூரில் இருந்து வரும் அனைத்து பிராமணர்களும், உள்ளூர் மக்களும் ஒன்றாக சாஸ்தாவைத் தொழுவது ஒரு அருமையான அனுபவம்.

எங்கள் கிராமமான சிங்கி குளத்தில் ஒரு குன்றின் மேல் ஒரு அம்மன் கோவில் உள்ளது. அதில் ஒரு முனிவரின் சிலை உள்ளது. அவரை மகரிஷி என்றே எல்லாரும் அழைக்கிறார்கள். ஆனால் சமீபத்தில், சிருங்கேரி சங்கராச்சாரியார், திருநெல்வேலி வந்திருந்த பொழுது, ஒரு புகைப்படக் கண்காட்சி வைத்திருந்தார்கள். இப்போதைய சங்கராச்சாரியாரின் முந்திய பட்டமான ஸ்ரீ அபினவ வித்யா தீர்த்த சுவாமிகள், ஐம்பதுகளில் அந்த மலைக் கோவிலுக்கு வருகை தந்திருந்த பொழுது எடுக்கப்பட்ட அபூர்வமான சில கறுப்பு வெள்ளைப் படங்கள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. அதற்குத் தலைப்பாக ‘சுவாமிகள் ஜீன மலைக்கு வருகை தந்திருந்த பொழுது எடுக்கப் பட்ட படம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். அந்த மலையில் சமணர்கள் இருந்தார்களா?. அந்த சிலையும் சமண முனிவரின் சிலையாகத் தெரியவில்லை. சமணர்கள் எங்கே தென் கோடிக்கு வந்தார்கள் என்பது புரியவில்லை.. அடுத்த வருடம் பங்குனி உத்திரத்திற்கு ஊருக்கு செல்லும் பொழுது நன்றாக கவனிக்க வேண்டும்.

அன்புடன்

சுந்தரம் செல்லப்பா

சபரிமலை சாஸ்தா, யோக பந்தனத்துடன்

அன்புள்ள சுந்தரம்,

உபவிஷ்ட என்றால் அமர்தல். யோகத்தில் அமர்ந்த கோலம் என்பதே அச்சொல்லின் பொருள். ஆனால் அமர்ந்த கோலத்தில் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் யோகத்தில் அமர்ந்திருத்தல் என்ற சொல் பொருந்தாது. உதாரணமாக பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தை அப்படிச் சொல்வதில்லை.

யோகத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ள பழைய சிலைகள் ஹரப்பா நாகரீகத்திலேயே கிடைத்துள்ளன. அது இந்தியப்பண்பாட்டின் மிகமிக ஆரம்பகாலத்திலேயே உருவாகிவிட்ட ஒரு விஷயம்

சமண தீர்த்தங்கரர்கள் அமர்ந்திருக்கும் கோலம் யோக உபவிஷ்ட நிலை என்றே சொல்லப்படுகிறது. யோகத்துக்கான பழந்தமிழ்ச் சொல் ஊழ்கம். புத்தர் சிலைகளில் யோகத்திலமர்ந்த கோலம் சாதாரணமாக உள்ளது .பழந்தமிழ்ச் சிற்பங்களில் தட்சிணாமூர்த்தி [தென்றிசை முதல்வன்] யோகநிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

போதிசத்வர் சிலைகளில் மூன்றுவகை யோகத்திலமர்ந்த கோலம் உள்ளது. ஒன்று காலைத்தொங்கவிட்டபடி அமர்வது. இரண்டு சபரிமலை சாஸ்தா போல இருகால்களை மடித்து அமர்வது. மூன்று பத்மாசனமிட்டு அமர்வது. சாஸ்தாக்கள் போதிசத்வர்கள் என்பது வரலாற்றுப் பார்வை

சாக்தம் வந்தபின் தேவியர் யோகத்திலமர்ந்த நிலையில் இருக்கும் சிலைகள் அதிகமாக உருவாயின. யோகநிலையில் இருக்கும் சிலைகளில் யோகபந்தனம் என்ற பட்டை கால்களை இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். ஒரு சிலை யோகத்தில் இருக்கிறதா இல்லையா என்பதற்கான அடையாளமாகவே அதைக் கொள்வார்கள்

நரசிம்மர் சிலைகளில் யோகநரசிம்மர் யோகபந்தனத்துடன் இருப்பதைப் பார்க்கலாம்.

ஜெ

சாஸ்தா சிலை, யோகபந்தனத்துடன்
ஹம்பி யோகநரசிம்மர், யோகபந்தனத்துடன்
சாஸ்தா. பூர்ணா புஷ்கலா தேவியருடன். சாஸ்தா மட்டும் யோகநிலையில் இருக்கிறார். யோகபந்தனத்துடன்
முந்தைய கட்டுரைஹீரோ-கடிதம்
அடுத்த கட்டுரைநமீபியா , நிஜமாகவே