நாயக்கர்களும் ஜாதியும்

நாயக்கர் மகால்

மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,

தமிழகத்தில் தெலுங்கு பேசும் நாயக்க மன்னர்களால்தான் நிறைய ஜாதிப் பாகுப்பாடுகள் வந்தன என்றும் தமிழையும் தமிழ் இசையையும் மழுங்கடித்தனர் என்றும் கூற்று உள்ளது . இது பற்றி விவரம் கூறினால் நன்று.

நன்றி

வீ. கிருஷ்ண குமார் நாயுடு

திருமலைநாயக்கர் சிலை

அன்புள்ள கிருஷ்ணகுமார்,

பொதுவாக எளிய மனங்கள் எதிரிகளைக் கண்டடைய விரும்புவார்கள். கட்டமைத்துக்கொள்வார்கள். அந்த எதிரிகளைத் தங்களுக்குப் பிடித்தமானபடி சித்தரித்துக்கொள்வார்கள். தங்கள் துன்பங்களுக்கெல்லாம் அந்த எதிரிகளே காரணம் என நினைத்து வன்மமும் விரோதமும் கொண்டு அதன் வழியாகத் தங்கள் சொந்தக்குறைபாடுகளையும் பலவீனங்களையும் பார்க்காமல் தாண்டிச்செல்வார்கள்.

நம் வீட்டில் மாடு செத்தால் பக்கத்துவீட்டுக்காரன் செய்த செய்வினைதான் காரணம் என நம்பும் அதே மனநிலைதான் இது. அந்தப் பக்கத்துவீட்டுக்காரனுக்கு ஒரு பொம்மைசெய்து அவனை ஊசியால் குத்தி குத்தி ‘வதைத்து’ மகிழும் அதே அறியாமைதான்.

சாதிகளைத் தெலுங்கர் கொண்டுவந்தார்கள் என்ற கூற்றில் இருப்பது அறியாமை அல்லது பேதமையின் உச்சம். ஆனால் தமிழில் படித்தவர்கள்கூட உச்சகட்ட அறியாமையை மேடையில் கூறுவதெல்லாம் மிகச்சாதாரணம்

தமிழக வரலாற்றில் எப்போது எழுத்துவடிவில் ஏதேனும் ஆதாரம் கிடைக்க ஆரம்பிக்கிறதோ அப்போதே சாதிகளைப்பற்றிய விவரிப்பும் கிடைக்கிறது. தமிழ்ப்பண்பாட்டின் ஆதார இலக்கணங்களை வகுத்த நூலான தொல்காப்பியமே இழிசினர் என்று மனிதர்களை வகுக்கும் வேலையையும் செய்துவிட்டது. மொத்த தொல்தமிழ்ப்பண்பாடும் சாதிப்பண்பாடே.பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார் முதல் ஜார்ஜ் எல் ஹார்ட் வரை வெவ்வேறு ஆய்வாளர்கள் இதை விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

சோழர்காலத்து சாதியமோதல்கள் கொந்தளிப்புகளைப்பற்றி கே.கே.பிள்ளை முதலியோர் முழுமையாகவே விவரிக்கிறார்கள். வலங்கை இடங்கை என சாதிகளை இருபெரும் பகுதிகளாகத் தொகுத்து மேலும் ஒரு பிரிவினையை உருவாக்கிய காலகட்டம் அது.சோழ ஆட்சியின் கடைசிக்காலகட்டத்தில் அப்பிரிவுகள் நடுவே கடும் மோதல்கள் நிகழ்ந்தன.

சாதி என்பது நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் ஒரு அதிகார அடுக்கு. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட இவ்வகை சமூக அதிகார அமைப்புதான் ஏதோ ஒரு வடிவில் அன்று உலகமெங்கும் இருந்தது. அது இல்லாத சமூகம் அன்று இருக்கவில்லை, இருக்கவும் முடியாது. அன்றைய உற்பத்திமுறையின் அடிப்படை அது.

நிலப்பிரபுத்துவ அமைப்பில் எந்தெந்த மக்கள்கூட்டம் முன்னதாக பெருமளவு உற்பத்தி செய்து அதிக உபரிசெல்வத்தை ஈட்டுகிறதோ அது ஆதிக்கம் செலுத்துகிறது. அதுவே சமூகத்தையும் பண்பாட்டையும் கட்டமைக்கிறது. பிற சமூகங்களை அது அடக்குகிறது அல்லது தன்னுடன் இணைத்துக்கொண்டு மையப்பண்பாட்டுக்குக் கொண்டுவருகிறது.

இவ்வாறு மையப்பண்பாட்டுக்கு வருபவர்களை அது தனக்குக் கீழ் கீழாக அடுக்கி ஒரு சமூக அடுக்குமுறையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது அது. அதன் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை திரட்டி கூட்டாக உழைக்கச்செய்து, அவர்களின் உழைப்பின் உபரியை உறிஞ்சி மையத்தில் குவித்து, அரசாங்கத்தை உருவாக்குகிறது.

சாதிமுறை அப்படி பல நூற்றாண்டுக்காலமாக உருவாகி வந்த ஓர் உற்பத்தியமைப்பு.அது எவரும் திட்டமிட்டு உருவாக்கியது அல்ல.மனித உழைப்பே அடிப்படை ஆற்றலாக இருந்த அச்சூழலில் மனிதர்களை அப்படி வகைமைப்படுத்தி ஒருவர் மீது ஒருவராக அமைத்து மொத்த சமூகத்தையும் சமூகமே கட்டுப்படுத்தச் செய்துதான் அரசுகளை உருவாக்கவேண்டியிருந்தது.

அந்த அரசுகள்தான் பெரிய அளவில் செல்வத்தைத் திரட்டமுடிந்தது. அவர்கள்தான் பெரும் நீர்ப்பாசன அமைப்புகளையும் சந்தைகளையும் சாலைகளையும் அமைக்கமுடிந்தது. பெரிய படைகளை உருவாக்கி நிலைநிறுத்தமுடிந்தது. அப்படி சாதிமுறை மூலம் கீழிருந்து சுரண்டி மேலே கொண்டுவந்து அரசுகளை உருவாக்காமலிருந்தால் நீர்ப்பாசனம் வளர்ந்திருக்காது, தொழில்கள் உருவாகியிருக்காது.

அதாவது தஞ்சையின் நெல்வயல்கள் உருவாகியிருக்காது. கல்வியும் மருத்துவமும் பெருகியிருக்காது. பேரரசுகள் பிறந்திருக்காது. தமிழ்ப்பண்பாடே இருந்திருக்காது. பழங்குடி விவசாயமும்,அதையொட்டிய வினியோகமும்,பழங்குடிச் சமூகங்களும்தான் இருந்திருக்கும் .விளைவாக பெருகி வந்த மக்கள்கூட்டம் உணவில்லாமல் ஒருவரோடொருவர் போரிட்டு கொன்றுகுவித்து இறந்து அழிந்திருப்பார்கள்.

இப்படி மக்களை பிறப்படிப்படையில் வகைப்படுத்தி அடிமைகளாக்கி சுரண்டாமல் சமூகமும் அரசும் உருவாகியிருக்காதா என்றால் உலகில் வேறுவகையில் சமூகம் உருவானதற்கான சான்றே கிடைக்கவில்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. மேலே சொன்ன இரு வாய்ப்புகளே மனிதகுலத்தின் முன் இருந்தன. அடிமைகளைச் சுரண்டிய சமூகங்கள் வாழ்ந்தன, பழங்குடிச் சமூகங்கள் அழிந்தன.

இதுவே சாதிகளைப்பற்றிய வரலாற்றுப்பிரக்ஞை கொண்ட, அறிவியல்பூர்வமான பார்வை. மிகச்சுருக்கமானது, உங்களுக்கு ஆர்வமிருந்தால் வாசித்து விரிவாக்கிக்கொள்ளலாம்.

இருவகை வரலாற்றுக்குப்புறம்பான மூடத்தனங்கள் நம்மிடம் உண்டு. ஒன்று, இன்றைய கருத்துத்தளத்தில் நின்றுகொண்டு நேற்றைய சாதிகளைப் பார்த்தல். அதன் விளைவாக சாதியமைப்பு என்பது ஓர் அநீதி மட்டுமே என்றும், அது அநீதிக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும் எண்ணிக்கொள்ளுதல். அது இந்தியாவில் மட்டுமே உள்ள தீமை என்று நம்புதல். அதை உருவாக்கினார்கள் என்று சொல்லி இன்று சகமனிதர்கள்மேல் வெறுப்பை உருவாக்கிக்கொள்ளுதல்

இன்னொரு மூடத்தனம் சாதி முன்னோர் உருவாக்கிய புனிதமான அமைப்பு என்று நம்புதல். அது இன்றும் செல்லுபடியாகும் என எண்ணுதல். இது நேற்றைய கருத்துத்தளத்தை இன்றைக்குக் கொண்டுவருதல்.

இவர்கள் இருவருமே சாதியை சிலர் உருவாக்கிய ஒரு கருத்துநிலையாகவே பார்க்கிறார்கள். அது ஓர் உற்பத்திமுறை, ஒரு பொருளியல்கூறு என்பதை காண்பதில்லை.

இவ்விரண்டு தரப்பினரும்தான் நம் சூழலில் அதிகமும் பேசிக்கொண்டிருப்பவர்கள். பெரும்பாலும் மேடைகளில் இருந்துபெற்ற சிலவரிகளுக்கு அப்பால் வாசிப்போ சிந்தனையோ இல்லாப் பாமரர்கள். இவர்களின் விவாதம் நடுவே புகுந்தால் விஷயமறிந்தவர்களுக்கு இருசாராரின் அடியும் கிடைக்கும்.

எந்த ஒரு நிலையான பேரரசும் அது உருவாகும்போது சமூக அதிகார அடுக்கை குலைத்து தனக்குச் சாதகமானபடி அடுக்கும். அந்த அடுக்கை வலிமையான ராணுவ ஆதிக்கம் மூலம் இறுக்கமானதாக ஆக்கி நிலைநாட்டும். அதன்வழியாக அது சமூக உறுதியை உருவாக்கும். அதன் விளைவாக சமூக அமைதி உருவாகி உற்பத்தி பெருகும். இதுவே நாம் காண்பது. சோழர்காலகட்டம், முதல் நாயக்கர் காலகட்டம் வரை.

சாதி என்பது நிலவுடைமைச்சமூகத்தின் ஓர் அதிகார அடுக்குமுறை. ஆகவே நில உடைமை மாறும்போது அதுவும் மாறிக்கொண்டேதான் இருந்தது. ஒருபோதும் அது நிலையாக இருந்ததில்லை. நிலத்தை வென்ற சாதிகள் அடுக்கில் மேலே செல்கின்றன. தோற்கடிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்ட சாதிகள் அடுக்கில் கீழே செல்கின்றன. இப்படி மேலே செல்வதற்கான கடுமையான போட்டி இங்கே எப்போதும் நடந்துகொண்டிருந்தது. ரத்தம் சிந்தி நடந்த போட்டி அது.

அப்போட்டியில் மேலே வந்தவர்கள் தெலுங்கு நாயக்கர்கள். அவர்கள் வறண்ட ராயலசீமா நிலங்களில் நாடோடிகளாக மேய்ச்சல் வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்களை இணைத்து ஆனைக்குந்தி யாதவ அரசு அமைந்தது. அது இஸ்லாமியர்களால் எளிதில் அழிக்கப்பட்டது.

இக்காலகட்டத்தில் மாடுமேய்த்த அவர்கள் குதிரைமேய்க்க ஆரம்பித்தனர். ராயலசீமா வறண்ட நிலம் பின்னாளில் கிரேட் மராத்தா என அழைக்கப்பட்ட சிவப்புக்குதிரை வளர மிக உகந்த அரைப்பாலைநிலம். சட்டென்று பெரும் குதிரைப்படை கொண்டவர்களாக நாயக்கர்கள் மாறினார்கள். அவர்கள் விஜயநகரப்பேரரசை அமைத்தனர். மேய்ச்சல்நில மக்கள் ஆளும் இனமாக மேலே சென்றார்கள். [இந்தப்பரிணாமத்தை விளக்க்கிக்கொள்ள ஜாரேட் டைமண்டின் துப்பாக்கிகள், கிருமிகள் இரும்பு’ [Guns, Germs and Steel” – Jared Diamond] என்ற நூல் எனக்கு பெரிதும் உதவியது]

விஜயநகரப்பேரரசு தென்னிந்தியாவையே ஆண்டது. அவர்கள் தமிழ்ச்சாதிகளை தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றி இங்கே அரசமைத்தனர். ஏராளமான தெலுங்குக் குடியேற்றங்கள் தமிழகத்தில் நிகழ்ந்தன. இந்த வரலாற்று நிகழ்வு இங்கே சாதியமைப்பில் ஒரு மாற்றத்தை உருவாக்க்கியது

சாதியமைப்பு ஒரு உற்பத்திசார்ந்த அதிகார அடுக்கு என்றேன். ஓர் அரசு வலுவிழக்கும்போது அந்த அதிகார அடுக்கு வலுவிழக்கும். சாதிகளின் அதிகாரம் முன்பின்னாக மாறும். தமிழகத்தில் சங்ககாலத்தில் மருதநிலச் சாதிகள் மையச்சாதிகள். மலைமக்கள் கீழ்ச்சாதியினர். பின்னர் களப்பிரர் காலகட்டத்தில் சாதியடுக்குமுறை மாறியிருக்கலாம். பலசாதிகள் மேலே சென்றன, பல சாதிகள் கீழே வந்தன. பறையர்கள் தமிழகத்தில் ஆதிக்கசாதியாக இருந்த காலம் இது என்பது அயோத்திதாசர் முதலிய ஆய்வாளர்களின் தரப்பு. வலுவான ஆதாரங்கள் அதற்குள்ளன.

பிற்காலப் பல்லவர்,சோழர்,பாண்டியர் காலகட்டத்தில் சாதியமைப்பு மீண்டும் கலைத்து அடுக்கப்பட்டு உறையவைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் எவர் நிலம் வைத்திருந்தார்களோ அவர்களெல்லாருமே வேளாளர்கள் என்ற பெரும்சாதியாக மாறினார்கள். சைவர்களான சோழர்களால் தோற்கடிக்கப்பட்ட சமண- பௌத்த மதத்தவரான களப்பிரர்களின் ஆதரவுச்சாதிகளான பறையர் போன்றவர்கள் நிலம் பிடுங்கப்பட்டுக் கீழே தள்ளப்பட்டனர். நில அடிமைகளாக ஆனார்கள்.

அதன்பின்னர் இஸ்லாமியப் படையெடுப்பு சமூக அஸ்திவாரத்தை அசைத்தது. ஆனால் அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. அந்நிலையில்தான் நாயக்கர்கள் வர ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு நிலம் தேவைப்பட்டது.அவர்கள் நஞ்சைநில விவசாயத்தில் பழக்கம் உடையவர்கள் அல்ல. ஆகவே புஞ்சைநிலங்களை நோக்கிப்பரவினார்கள்.

சோழர்காலத்துக்கு முன்னால் நஞ்சை விவசாயம் மள்ளர் என்ற பள்ளர் கைகளில் இருந்தது. சோழர்காலத்தின் வேளாள ஆதிக்கம் மள்ளர்களைப் புஞ்சை நோக்கித் தள்ளியது. அந்தப் புஞ்சை நிலங்களை நாயக்கர்கள் பெரும்பாலும் பிடுங்கிக்கொண்டார்கள். அங்கே நாயக்கர் கிராமங்கள் அமைந்தன. மள்ளர்களின் இடம் மேலும் கீழே சென்றது.

மற்ற எந்த அரசுகளையும்போலவே நாயக்கர்களும் சாதியடுக்கை தங்களுக்குச் சாதகமாகக் கலைத்து அடுக்கி உறையச்செய்து நிலைத்ததாக ஆக்கினார்கள். ஒவ்வொரு சாதிக்குமான இடம் மறுவரையறை செய்து தீர்மானிக்கப்பட்டது. அதையொட்டி கிராமப் பஞ்சாயத்து நடைமுறைகள் உருவாக்கப்பட்டன.அந்த உறுதியான கட்டமைப்புமூலம் வேளாண்மை உற்பத்தி- வினியோக அமைப்பு சீரானது. ஒட்டுமொத்த விளைவாக தமிழகம் பொருளியல் மீட்சியை அடைந்தது.

சோழர்காலத்துக்குப் பின்னர் தேங்கிச் சீரழிந்து இடிபாடுகளாகக் கிடந்த தமிழகத்தை மீட்டவர்கள் நாயக்கர்களே. இன்று தென்தமிழகத்துக்கு நீர் அளிக்கும் கணிசமான மாபெரும் ஏரிகள் அவர்களால் உருவாக்கப்பட்டவை. மாபெரும் மங்கம்மாள் சாலை உட்பட இன்றும் புழக்கத்திலிருக்கும் சாலைகள் அவர்கள் அமைத்தவை. இன்றைய வணிகநகரங்கள் அவர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.

நாயக்கர் ஆட்சிக்காலம் நம்முடைய நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் கடைசி உச்சம். தமிழக வரலாற்றில் மிக அதிகமாகச் செல்வம் தேங்கிய வலுவான மைய அரசு அவர்களுடையது. அதை அவர்கள் பெரும்பாலும் ஏரிகளைக் வெட்டவும் கோயில்கள் கட்டவும்தான் செலவழித்தார்கள்.அவர்கள் தெலுங்கர்களாதலால் தமிழ் மொழிவளர்ச்சிக்கு பெரும்பாலும் எதுவும் செய்யவில்லை.

ஆனால் அவர்கள் தங்கள் ஆட்சியில் தமிழகத்தில் வலுவாக இருந்த சைவ-வைணவப் பூசல்களை இல்லாமலாக்கினார்கள். அவர்கள் பெரும்பாலும் வைணவர்களாக இருந்தாலும் சைவ ஆலயங்களையும் பேணினார்கள். சைவக்கோயில்களில் வைணவச்சன்னிதிகளும் வைணவக்கோயில்களில் சைவச்சன்னிதிகளும் உருவாயின. சைவ- வைணவ மடங்கள் செல்வாக்குடன் உருவாகி வந்தன.

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிக்காலகட்டத்தில்தான் இரண்டாவது பக்தி இயக்கம் ஆரம்பித்தது. சோழர் காலத்தில் உருவான பக்தி இயக்கம் புத்தெழுச்சி கொண்டது. அது தமிழின் பக்தி இலக்கிய மரபை வீறுடன் எழச்செய்தது. சைவ வைணவ மடங்களைச்சார்ந்து இந்த தமிழ் வளர்ச்சி அமைந்தது

தமிழின் முக்கியமான பல பக்திப் பேரிலக்கியங்கள் இக்காலகட்டத்தில் உருவானவைதான். குமரகுருபரர் , தாயுமானவர், பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் வீரமாமுனிவர் என பல பெரும்படைப்பாளிகளின் காலகட்டம் இது.ஊர் ஊராக கோயில்கள் மீண்டெழுந்த காலகட்டமாதலால் இது புராணங்கள், அதிகமும் ஸ்தலபுராணங்கள், செழிக்க காரணமாகியது. இந்த அலை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரைக்கூட நீடித்தது. அதை நாம் உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதையில் காணலாம்

இக்காலகட்டத்தை சிற்றிலக்கியங்களின் பொற்காலம் எனலாம். உலா, தூது, கலம்பகம் போன்றவை பெருமளவில் உருவாயின.தமிழ் இலக்கியவரலாற்றில் அவற்ற்றுக்கு முக்கியமான இடம் உண்டு.

நாயக்கர் காலகட்டத்தில் தமிழகத்தின் மாபெரும் ஆலயங்கள் முழுக்க இஸ்லாமியப்படையெடுப்பால் இடிந்து கற்குவியல்களாகக் கிடந்தன. அவற்றை நாயக்கர்களே எடுத்துக்கட்டினார்கள். இன்று நாம் காணும் தமிழகத்தின் கலைச்செல்வங்களில் பெரும்பகுதி அவர்களால் உருவாக்கப்பட்டதே.

சோழர்களும் நாயக்கர்களும் வெட்டிய ஏரிகள்தான் இன்றும் தமிழகத்தின் உண்மையான செல்வங்கள். அந்த தண்ணீரைத்தான் நாம் இன்றும் குடிக்கிறோம். சுதந்திர இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்சியாளர்கள் சேர்ந்தால்கூட அவர்கள் உட்கட்டமைப்பில் செய்ததில் கால்வாசியைக்கூட தமிழகத்துக்குச் செய்ததில்லை. அவர்கள் போட்ட சாலைகளில் தார்போட்டதே நம் சாதனை. அவர்கள் வெட்டிய ஏரிகளை தூர்வாராமல் பிளாட் போட்டுக்கொண்டிருப்பதே நம் இன்றைய வளர்ச்சித்திட்டங்கள்.

நாயக்கர் ஆட்சி இஸ்லாமியர் படையெடுப்பால் வீழ்ச்சி அடைந்தது. இஸ்லாமியரால் நிலையான ஆட்சியை உருவாக்க முடியவில்லை. அந்த அராஜக காலம் அரைநூற்றாண்டு நீடித்தது. அதில் பிரிட்டிஷார் உள்ளே வந்தனர். அவர்கள் வழியாக வணிகத்தை மையமாக்கிய முதலாளித்துவம் அறிமுகமாகியது.

நிலப்பிரபுத்துவத்தின் எல்லாத் தீய அம்சங்களும் நாயக்கர் காலகட்டத்துக்கு உண்டு, நிலப்பிரபுத்துவ அமைப்பின் எல்லா சாதனைகளும் உண்டு. உலக வரலாற்றில் எங்கும் ஒரு மிகச்சிறந்த நிலப்பிரபுத்துவ அமைப்பு தன் மக்களுக்கு எதை வழங்கமுடியுமோ அதை நாயக்கர் அரசு வழங்கியது. பட்டினி இல்லாத அடித்தளச் சமூகம். கலைகளும் இலக்கியமும் செழித்த மேற்கட்டுமானம்.திருமலை நாயக்கர் ஆட்சிக்காலம் தமிழகம் வெற்றியும் சிறப்பும் கொண்டு உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் ஒன்று.

நாயக்கர்கள் உருவாக்கிய வேளாண்மை- வணிக அமைப்புகள் அவர்களைத் தோற்கடித்த இஸ்லாமியப்படையெடுப்பாளர்களின் தொடர்கொள்ளைகள் மூலம் சிதைக்கப்பட்டன . அதன்பின் பிரிட்டிஷாரின் கடும் சுரண்டல் மூலம் அவை மேலும் அழிந்தன.

விளைவாக 1770ல் தமிழக வரலாற்றின் முதல் மாபெரும் பஞ்சம் வந்து லட்சக்கணக்கானவர்கள் செத்தழிந்தார்கள்.அதன்பின் நூறு வருடம் பஞ்சங்களின் காலம். 1886ல் இரண்டாவது பெரும்பஞ்சத்தில் தமிழகத்தின் மக்கள்தொகையில் நாலில் ஒரு பங்கினர் பட்டினியால் இறந்தார்கள் அல்லது அகதிகளாக அன்னியமண்ணுக்குச் சென்றார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் மக்கள்.

நாயக்கர்காலகட்டத்தில் தலித் சாதிகள் நிலவுடைமைச்சமூக அடுக்கின் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அது ஓர் உண்மை. ஆனால் அந்தச் சமூக அமைப்பு அவர்களைச் சாக விடவில்லை. அது இன்னொரு உண்மை. பிரிட்டிஷாரின் முதலாளித்துவப் பொருளியலமைப்பு தலித் சாதிகளுக்கு விடுதலைக்கான பாதையைத் திறந்தது. அது உண்மை. அவர்கள் தங்கள் உழைப்பை ஒரு வணிகப்பொருளாக விற்க வாய்ப்பளித்தது. ஆனால் அவர்களை கோடிக்கணக்கில் பஞ்சத்தில் சாகவிட்டது. அது இன்னொரு உண்மை. வரலாற்றை எப்போதும் இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது

இந்த சமநிலையையே ஒட்டுமொத்தமாக வரலாற்றைக்கொண்டு யோசிக்கும்போது நாம் அடைகிறோம். அடிப்படை வாசிப்பு மற்றும் சிந்தனைமூலம் அதை அடைந்தவர்களையே அறிவுஜீவிகள் என்கிறோம். அவர்களின் கருத்துக்களே பொருட்படுத்தத் தக்கவை

ஜெ

முந்தைய கட்டுரைகருக்கலைப்பு ஓர் எதிர்வினை
அடுத்த கட்டுரைஹீரோ-கடிதம்