பின் நவீனத்துவம், பின்கொசுவம்

அன்புள்ள ஜெ …
நலம் . நலமறிய அவா..

பின் நவீனம் பின் நவீனம் என்று எல்லோரும் பீற்றிக் கொள்(ல்)கிறார்களே,அதனால் மக்களுக்கும் சமுதாயத்திற்கும் விளைந்த நன்மைகள் என்ன? முன்னேறத் துடிக்கும் இயற்கை விழைவைத் தடுத்து மனிதர்களின் விழுமியப் பண்புகளை அலட்சியப்படுத்தி விட்டு சமுதாயம் என்ற கட்டுக்கோப்பான ஒரு அமைப்பை உடைக்கும் விதமாகத் தனி மனித உணர்வுகளைப் பிரதானப்படுத்தும் ஒரு பிற்போக்கு வாதமாகவே எனக்குப் படுகிறது தயவு செய்து விளக்கவும்..

அன்புடன்
சேது

அன்புள்ள சேது,

இவ்வகைக் கடிதங்கள் எனக்கு அவ்வப்போது வருவதுண்டு. ஆகவே இந்தப்பதில்

நீங்கள் பின்நவீனத்துவம் என்று எதைப் புரிந்துகொண்டீர்கள்,எதைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்று புரியவில்லை. எதையாவது கட்டுக்கோப்பில்லாமல் எழுதிவிட்டு அதைப் பின்நவீனத்துவ எழுத்து என்று சொல்பவர்களைக் கண்டு ஏற்பட்ட எரிச்சலில் எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்

நவீனத்துவம் – பின்நவீனத்துவம் என்பவை போன்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைப்பார்வையை அல்லது எழுத்துமுறையை சுட்டக்கூடியவை அல்ல. அவற்றை ஒரு பொதுப்போக்குகளைச் சுட்டிக்காட்டவே பயன்படுத்துகிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட நோக்கின் அடிப்படையில் அமைந்த
பகுப்புப்பார்வை, அவ்வளவுதான்.

பெண்கள் ஐம்பதுகள் வரை பின்கொசுவம் வைத்துப் புடவை கட்டினார்கள். பின்பு முன்கொசுவம் வந்தது. தமிழ்ப்பெண்களின் புடவையைப்பற்றி ஆராயும் சில ஆய்வாளர்கள் ஒரு புரிதலுக்காகாக ஐம்பதுகள் வரை இருந்ததைப் பின்கொசுவ காலகட்டம் என்றும் பிறகு வந்ததை முன்கொசுவ காலகட்டம் என்றும் பிரித்து வகைப்படுத்துகிறார்கள் என்றால் அதில் என்ன பிழை? அது ஒரு வரலாற்றுநோக்கு மட்டுமே.

அந்தப் பகுப்பு நம்முடைய பண்பாட்டை முழுமையாகப் பகுத்துவிடுவதில்லை. ஏன் நம் புடவைகட்டும்முறையைக்கூட முழுமையாக அடையாளப்படுத்துவதில்லை. அதை சிலபேர் இது முன்கொசுவ காலகட்டம், இப்ப இதான் ஃபேஷன், அமெரிக்க ஆராய்ச்சியாளனே சொல்லிட்டான் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தார்கள் என்றால் அது அவர்களின் அறியாமை மட்டுமே.

நாம் நம் இன்றைய சமூக,அரசியல், ஆன்மீகத் தேவைக்கு ஏற்ப நம் வாழ்க்கையை எழுதுகிறோம், பேசுகிறோம். அதை நாம் இயல்பாகச் செய்வதே முறை. அதை ஆய்வாளர் எப்படி அடையாளப்படுத்தினாலும் நமக்கு ஒன்றும் இல்லை.

இலக்கியத்தில் நல்ல எழுத்து, நன்றாக வராத எழுத்து என்ற பிரிவினை மட்டுமே உள்ளது. நல்ல எழுத்து வாசகனை அவனுடைய வாழ்க்கையை மேலும் நுட்பமாக கற்பனையில் வாழச்செய்யும். மேலும் விரிவான ஒரு வாழ்க்கையை அவனுக்கு அளிக்கும். மோசமான எழுத்து அவனை வெறுமே கிளர்ச்சியடையச்செய்யும்.நவீனத்துவம் பின்நவீனத்துவம் என்பதெல்லாம் அந்த எழுத்துக்களை வெவ்வேறு கோணங்களில் வரலாற்றுடனும் அரசியலுடனும் இணைத்து ஆராய்வதற்கான கருத்துமுறைமைகள் மட்டுமே

ஆகவே ஆர்வமிருந்தால் நவீனத்துவம் பின்நவீனத்துவம் என்று ஆய்வாளர்களால் சொல்லப்படுபவை என்ன என்று கற்கலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். கோபம் கொள்ளவேண்டியதில்லை

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தி-நாராயண் தேசாய்
அடுத்த கட்டுரையானை-ஒரு கடிதம்