ஒரு விலங்குச்சிற்பம்-கடிதம்

ஆசிரியருக்கு ,

எந்த நிபந்தனையும் உணவைத் தவிர எந்த எதிர்பார்ப்பையும் வைக்காதவைகள் இந்த செல்லப் பிராணிகள். எனக்கு வளர்க்கும் பழக்கமில்லை என்றாலும் விலங்குகளை நான் சற்று கவனித்ததுண்டு. அவைகளுக்கு உணர்விருக்கிறதா அதை முக பாவனைகளால், உடல் மொழிகளால் வெளிப்படுத்துமா என்ற கேள்வி எனக்கு நீண்டநாட்கள் உண்டு. சிற்பங்களை நான் பார்க்கும் போதும் இதே எண்ணம் வந்து செல்லும். எஜமான விசுவாசத்தையும் அன்னமிட்ட அன்பையும் தவிர வேறெதையும் வெளிப்படுத்தாததா நம்வீட்டு விலங்குகள் என்ற துணைக்கேள்வியும் உண்டு .

ஆனால் இக்கட்டுரை அதன் உணர்வெழுச்சி மூலம் எனக்கு பதில் சொல்லிவிட்டது . ஆம் அவைகள் அதை வேறு மொழியில் செய்கின்றன , மனம் திறந்து இருந்தால் நம் உள்ளுணர்வை ஊடுருவுகின்றன. இது நிரூபணம் தேவைப் படாத உண்மை . நீங்கள் ஈரோடு வந்திருந்த பொழுது இதைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம் , இரு திரைப்படங்கள் ‘Hachiko- A dog’s story’ மற்றும் “Black beauty”. நீங்கள் டால்ஸ்டாயின் கஜக்கோல் சிறுகதையையும் நினைவு படுத்தினீர்கள் நான் குப்ரினின் எமரால்டை .

கலைகள் என்னதான் அன்பை மனதின் கையருகில் நிறுத்தினாலும் , நேர் நிஜ அனுபவம் அது கலாபூர்வமான (கரிக்குவியலில் இருந்து தீ போல அவனுடைய செந்நாக்கு படபடத்துவெளிவந்தது) விவரிப்பென்றால் அது இன்னும் மனதுக்கு நெருக்கமான உண்மையாகிறது. கடைக்காரன் உணர்ந்தது , இறுதியாக நக்கியதில் முதல் தீண்டல் நினைவுக்கு வந்தது ஆகியவை இதை ஒரு புனைவுபோலாக்குகின்றன , நிஜம் புனைவுபோல ஆகாதா என்ன ?

ஆண் பெண் உறவுகளையும், ஆண் ஆண் , மற்றும் பெண் பெண் ஆகிய உறவுகளைவிட ஏன் குரு சிஷ்ய, தாய் சேய் உறவை விட மகத்தானது இந்த விலங்கு- மனிதன் உறவு . மொழியில்லாததாலேயே இது சாத்தியமாகிறது , இதில் எதுவும் அறிந்து கொள்ளுதல் இல்லை , அனைத்தும் உணர்ந்துகொள்ளலே.

கிருஷ்ணன் .

அன்புள்ள கிருஷ்ணன்

ஓர் உரையாடலில் நித்யா சொன்னார். ‘புற உலகின் பிம்பங்கள் மனிதனுக்குள் ஐம்புலன்கள் வழியாகவும் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. அவற்றை சீர்ப்படுத்துவதே தியானம். அவ்வாறு உள்ளே வரும் பிம்பங்களின் அளவை மட்டுப்படுத்தாவிட்டால் தியானமே சாத்தியமில்லை. ஆகவேதான் சாதகன் வாழ்க்கைகொந்தளிக்கும் இடங்களில் இருந்துவிலகி இயற்கையின் மடியில் இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது. மலர்களும் மிருகங்களும் மட்டுமே அவனுடன் இருக்கவேண்டும்’

நான் கேட்டேன் ‘மிருகங்களும் வாழ்க்கை கொண்டவைதானே? அவற்றுக்கும் காமகுரோதம் உண்டே’ .நித்யா அதற்கு விரிவான பதில் அளிக்கவில்லை. ‘நம்மருகே ஒரு சகமனிதன் இருக்கையில் நாம் அவனுடனான உறவை மட்டுமே அறிகிறோம். நம்மருகே ஒரு மிருகம் இருக்கையில் நாம் நம்மை மீறிய ஒரு நியதியை உணர்கிறோம்’நெடுநாள் நான் யோசித்த வரி இது.

மிருகங்களுக்கும் மனிதனுக்குமிடையேயான உறவு ஓர் ஆன்மீக அனுபவமாகவே இருக்கிறது. காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி படத்தில் பாலைவனத்தில் வழிதவறிப் போன ஒருவனுக்கும் அவனைக் கடிக்கவந்து அவன் செருப்பைக் குதற ஆரம்பித்து அவனைத் துரத்திவந்து மெல்ல அவனுடன் சேர்ந்து பயணித்துப் பின் அவனுக்கு நெருக்கமாகி அவனை விட்டுப்பிரிய முடியாது தவிக்கும் ஒரு கீரிவகை மிருகம் வரும்.

சிறுவயதில் அந்தக்காட்சியைத் திரையரங்கில் பார்க்கையில் அரங்கே நெகிழ்வதைக் கண்டிருக்கிறேன். அந்த நெகிழ்வு எதனால் உருவாகிறது என எண்ணினால் புரியும். நாம் மனிதன் என்பதனாலேயே நமக்கு அளிக்கப்பட்ட அந்தக் ‘கூண்டை’த் திறந்து வெளியே செல்ல முயன்றபடியே இருக்கிறோம். ஏங்கிக்கொண்டே இருக்கிறோம் என்று. மிருகம் ஒன்று நம்மை அடையாளம் காணும்போது அந்த எல்லை மெல்ல இல்லாமலாகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைசங்கரப்பிள்ளையும் சக்கைக்குருவும்
அடுத்த கட்டுரைகடி