ஹீரோ-கடிதம்

அன்புள்ள மோகன்,

ஹீரோ இறந்த செய்தியை ஃபோனில் சொல்லிய உங்கள் குரல் இன்னும் எனக்கு நினைவில் உள்ளது. கண்ணீர் சிந்தவைத்த கட்டுரை. அவனை நான் அறிவேன் என்பது மட்டும் காரணமல்ல. கட்டுரையின் முதல் வரியிலிருந்தே அவனது வாசத்தை நான் உணர்ந்தேன். படுத்திருந்தபடியே என்னைப் பார்த்து அவன் சிரித்ததை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்.

பெரும்பாலான பிராமணப் பையன்கள் போல, சிறுவயதில் ‘நாய்’ என்றாலே பதறி ஓடும் நண்பன் குஞ்சுவுக்கு, சமீபத்தில் ஹீரோவைப் போலவே ஒரு கருப்பு லேப்ரடார் நாயைப் பரிசளித்தேன். திருநெல்வேலி வீட்டில் உள்ள ஷாலுவின் குட்டி. தனது ஃபேக்டரியின் பரந்த நிலப்பரப்பில் வளர்க்கும் நோக்கத்துடன் குஞ்சு, அதை வாங்கிக் கொண்டபோதும், பழைய ‘நாய் பயம்’ அவனுக்கு இருந்தது. அப்போது சொன்னேன், ‘எல வேணா பாரு. இன்னும் கொஞ்ச நாள்ல இந்த நாயப் பத்தியே எங்கிட்டெ எந்த நேரமும் பேசிக்கிட்டிருப்பே’.அப்போது அதை அவன் நம்பவில்லை. இப்போது வாயைத் திறந்தால் ‘பைரவ்’ புராணம்தான். ‘எல அத ஏன் கேக்கெ? ஆஃபீஸ்க்குப் போம்போது இந்த பைரவ் பயலுக்காவெ பளைய சட்ட, பேண்டா பாத்துப் போடுதென். மேல விளுந்து கொஞ்சி அளுக்காக்கிருதான். எந்த நேரமும் என் ரூம்வாசல்லயே நிக்கான். டெய்லி சாய்ங்காலம் அவன் கூட பந்து வெளயாடலென்னா, எனக்கு ஒண்ணும் ஓட மாட்டெங்கு’.

முன்பெல்லாம் சென்னைக்கு வந்தால், அவனது வேலைகள் முடிந்தபின்னும் ஒன்றிரண்டு நாட்கள் இருப்பான். இப்போது அப்படியில்லை. ‘பைரவ் தேடுவான். கெளம்புதென்’ என்று ஊருக்கு ஓடிவிடுகிறான். சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்பில், நாய் வளர்க்க முடியாத வருத்தத்தைக் குஞ்சுவின் ’பைரவ்’ மூலம் போக்கிக் கொள்கிறேன். அவன் சொல்லவில்லையென்றாலும், நானே ஃபோன் பண்ணி, ‘எல, பைரவ் என்ன பண்ணுதான்?’ என்று கேட்கிறேன். குஞ்சுவின் வீட்டம்மா ஃபோனைப் பிடுங்கி, ‘என்னைக்காது புள்ள என்ன பண்ணுதான்னு கேட்டிருக்கேளா?’ என்று ஏசுகிறாள். ‘புள்ளையத்தானெ கேக்கென்’ என்று நான் சொல்லும் பதில், இன்னும் அவளைக் கோபப்படுத்துகிறது.

’ஹீரோ’ உங்கள் பிள்ளை என்பதை, இந்தக் கட்டுரையைப் படிக்கும் அனைவரும் உணர்வார்கள். அதுவும் நம்மைப் போன்ற ‘நாய்க்கோட்டிகள்’ நன்றாகவே உணர்வார்கள்.

செல்வி ‘டோரா’வுக்கு என் பிரியங்களைச் சொல்லுங்கள்.

நன்றி.

சுகா

சுகா,

உண்மையில் அந்தக்கட்டுரை எழுதும்போது உங்களை நினைத்துக்கொண்டேன். அதை நீங்கள் வாசிக்கவேண்டும் என்றும் எண்ணிக்கொண்டேன்.

டோரா கொஞ்சம்- கொஞ்சமென்ன ஜாஸ்தியாகவே- ஹைப்பர் ஆக்டிவ். டாபர்மான் பெண்கள் அப்படித்தானாம். அசையாத நிலையில் பார்க்கவே முடியாது.

அவளுக்கு உடம்பில் சீவி விட்டுவிட்டு இப்போதுதான் வந்தேன். என்னை மண்ணிலே போட்டுப் புரட்டி எடுத்துவிட்டாள்.

ஆனால் டாபர்மானுக்கு இருக்கும் பிடிவாதமான விசுவாசம் மயிர்கூச்செறியச்செய்வது. ஒருநாள் இரவு முழுக்க பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். விடியும்வரை ஜன்னலில் உள்ளே பார்த்தபடி நின்றிருந்தாள். நகரவே இல்லை. சலிப்பு சோர்வு ஏதும் இந்தப் பிறவிகளுக்கு இல்லை

மனிதனைக் கடவுள் முழுக்க கைவிட்டுவிடவில்லை என்பதற்கான ஆதாரம் நாய்கள்

ஜெ

முந்தைய கட்டுரைநாயக்கர்களும் ஜாதியும்
அடுத்த கட்டுரைஊழ்க அமர்வு