வரம்பெற்றாள்-கடிதங்கள்

இந்த மண்ணில் இந்த மழையில் நூறுவருடம் நலமாக வாழ்வதை விடப் பெரிய வரம் ஏது?

இதுதான் வரம் என்று உணர்வதற்குள் காலம் தன் சோதனைக்குழாயில் போட்டு உருட்டி வெறு ஒரு வேதிப்பொருளாக நம்மை ஆக்கிவிடுகிறது. ஆக, இதனினும் பெரிய வரம், இதை வரம் என்று முன்னரே உணர்ந்த ஞானத்தைத்தான் சொல்ல வேண்டும்.

ரத்தன்

அன்புள்ள ரத்தன்

ஆமாம், வாழ்க்கையில் நமக்கு வெற்றி செல்வம் அதிகாரம் என்பவையே சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. இன்பத்தை நாமேதான் கண்டுகொள்ளவேண்டும். உரிய வயதில் எது நம் இன்பம் என்று கண்டுகொள்ள நேர்வது ஓரு அதிருஷ்டம்

ஜெ

அன்புள்ள ஜெ,

தங்கள் ” வரம் பெற்றாள்’ பதிவு படிக்கப் படிக்க, மதுரைநகர் மையத்தில் வாழும் நாங்கள் எவ்வளவு துரதிர்ஷ்டசாலிகள் என்பது தெரிகிறது.காலை எழுந்தவுடன் ஒரு அருமையான
நடை க்கு வரமில்லையே? காசுகொடுத்து நகரப் பேருந்தில் ஏறிச்சென்று நடை பழகிவரவா?

லௌகீக வாழ்வின் பயன் கருதி சென்னை போன்ற பெருநகரங்களுக்கு சென்றுவிடாமல் பிறந்துவளர்ந்த அருமையான சூழலிலேயே வீடு அமைத்துக் கொண்டதற்கு உங்களை எவ்வளவு
பாராட்டினாலும் தகும்.தங்கள் இடம் நகரிலிருந்து எவ்வளவு தூரம்?இரண்டு நாட்களாவதுஉங்களைப்போல் நடந்து அனுபவிக்க எங்கு தங்க வேண்டும்?

ஜன்ம பூமியில் இருப்பது மிகச்சிறப்பு என்றாலும் எங்களைப் போல் நகரவாசிகள் வாழ்க்கையைஇயற்கையுடன் கொண்டாடி அனுபவிக்க என்னதான் செய்யலாம்? புரியவில்லை.

அன்புள்ள,
ராதாகிருஷ்ணன்,
மதுரை.

அன்புள்ள ராதாகிருஷ்ணன்

நாகர்கோயிலில் இருந்து இரண்டுகிமீ தூரத்திலேயே அழகான இடங்கள் உள்ளன. என் வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடத்தைப்பற்றியே நான் எழுதினேன்

ஆமாம் இந்த இடத்தில் இருந்தாகவேண்டும் என்றே இங்கே பிடிவாதமாக இருந்துகொண்டிருக்கிறேன். தொழில் என்று பார்த்தால் சென்னை செல்லவேண்டியிருக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைநான்கு வேடங்கள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’