இன்று நமீபியா கிளம்புகிறேன்.ஆப்ரிக்காமீது எனக்குள்ள மோகம் அ.முத்துலிங்கத்தால் உருவானது. அவரது எழுத்துக்களில்வரும் ஆப்ரிக்கா ஒரு மெல்லிய வேடிக்கை கலந்த ஓர் உலகம். ஆப்ரிக்காவுக்கு இவ்வளவு சீக்கிரமாக ஒரு பயணம் சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை.
நானும் இயக்குநர் மாதவன்குட்டியும் செல்கிறோம். சென்று வந்தபின் அந்த அனுபவத்தைக்கொண்டு மலையாளத்தில் ஒரு படத்துக்கான கதையை எழுதவேண்டும். குஞ்சாக்கோ கோபன் நடிக்க மாதவன்குட்டி இயக்குகிறார். கதாசிரியர்கள் நட்சத்திரங்களாக உணரவேண்டுமென்றால் தெலுங்கில் எழுதவேண்டும் என்பார்கள். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக உணரலாம்.
மதியம் பன்னிரண்டு மணிக்கு திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து கிளம்பி மும்பை.அங்கிருந்து ஜொகன்னஸ்பர்க். அங்கிருந்து நமீபியாவின் விண்டோக். நமீபியா பற்றி இணையத்தில் இருந்து திரட்டிய தகவல்கள் மட்டுமே கைவசம் உள்ளன. அங்கே எந்த தொடர்பையும் பெற முடியவில்லை. முழுக்கமுழுக்க சுற்றுலா அமைப்பாளர்களை நம்பிய ஒரு பயணம் இது.
நமீபியாவில் சுற்றுலாப்பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள் பல உண்டு என்றார்கள். ஆப்ரிக்காவுக்கே உரிய நோய்கள். இருவகை மஞ்சள்காமாலைகள்.அவற்றுக்கு எர்ணாகுளம் சென்று தடுப்பூசிகள் போட்டுக்கொண்டேன். மாமிச உணவு உண்டால் வேறு சிறப்பு நோய்கள் உண்டு.சைவ உணவு சகிக்கமுடியாது என்றார்கள்.
‘சரி வேறென்ன?’ என்றேன். ‘உலகிலேயே அதிகமான எச்.ஐ.வி நோயாளிகள் உள்ள தேசம்’ என்றார் பயணமுகவர். ‘அதனாலென்ன, நாங்கள் கற்புள்ளவர்கள்’ என்றோம். ‘அதைத்தான் சொல்லவந்தேன்.அங்கே கற்பழிப்பு அடுத்த பெரிய பிரச்சினை’ என்றார். ‘அதுவும் பிரச்சினை இல்லை, நாங்கள் இருவருமே ஆண்கள்’ என்றோம். அவர் ‘…ஆண்களுக்கும் அந்த அபாயம் உண்டு’ என்றார்
அனைத்தையும் விட முக்கியமான பிரச்சினை, மாதவன்குட்டி இதுவரை வெளிநாடு சென்றதே இல்லை என்பது. அவருக்கு ஆயிரம் திகில்கள். 2000 த்தில் நான் கனடா சென்றேன். அதுதான் என் முதல் வெளிநாட்டுப்பயணம். எந்நேரமும் பேதியின் சாத்தியக்கூறுகளில் இருந்தேன். ‘ஒண்டுமே பயப்படாதீங்க’ என்று நூறுமுறை தொலைபேசியில் சொன்ன அ.முத்துலிங்கம் என்னை டொரொண்டோ விமானநிலையத்தில் கண்டதுமே ‘என்ன ஒரு பிரச்சினையும் இல்லாமல் வந்திட்டியள்? ஆச்சரியமா இருக்கு’ என்றார்
நான் முகம் வெளிறி ‘ஒண்ணுமே பிரச்சினை இருக்காதுன்னு சொன்னீங்களே சார்’ என்றேன். ‘பின்னே அப்டித்தனெ சொல்லவேணும்?’ என்றார் சிரித்தபடி. அதன்பின் நான் அருண்மொழியை சிங்கப்பூர் கூட்டிச்சென்றேன். நாஞ்சில்நாடனை மலேசியா கூட்டிச்சென்றேன். முதல் அன்னியநாட்டுப்பயணங்களை அவர்கள் பீதியுடன் அனுபவிப்பதைக் கண்டு என் பீதியை மறந்தேன். இப்போது மாதவன்குட்டி கூடவே இருக்கிறார். பயமில்லை
உலகின் மிக உயரமான மணல்மேடுகள் கொண்ட நாடு நமீபியா. பல ஹாலிவுட்படங்களில் கண்டிருக்கிறேன். நாங்கள் இரண்டுநாட்கள் மணல்மேடுகளில் இருப்போம்