தீராக்குழந்தை

குழந்தைக்கு மிக நெருக்கமான உயிர் எது
இந்தப்பூமியில்?

முதல்பிரியம் என்பதனால் அம்மா
முதல் வலிமை என்பதனால் அப்பா
எளிதாகச் சொல்ல முடிவதனால் காக்கா
பிரம்மாண்டமென்பதனால் யானை

இருக்கலாம் ஆனால்
தீராத விளையாட்டுத்தனத்தால்
அழியாத புத்தார்வத்தால்
எதையுமே புதிய கோணத்தில் செய்யமுடியும் என்ற சாத்தியத்தால்
துள்ளிக்குதிக்கவே அமைந்த உடலால்
குறும்புக்கென்றே வடித்த வாலால்
அது அல்லவா மிக அண்மையில் இருக்கிறது.

எப்படிப் படைத்தாலும் குழந்தைகள் வளர்ந்துவிடுகின்றன என்று
கடவுள் நினைத்திருக்கவேண்டும்
வளராத குழந்தைகளையே
ஒரு சமூகமாகப் படைத்தாலென்ன என்ற
விபரீத ஆசைக்கு அதுவன்றி வேறேது காரணம்?

நாமும் கண்டுகொண்டோம்
நமது குழந்தைகளையும்
அவரது குழந்தைகளையும்
ஒன்றாக்கும் ஒரு கதையுலகு

முந்தைய கட்டுரைநாஞ்சில் சிலிக்கானில்
அடுத்த கட்டுரைகாடு, கொற்றவை-கடிதங்கள்