செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி

தமிழ்மொழி தொன்மையும் தனித்துவமும் உடைய செம்மொழிகளில் ஒன்றாக இருந்தாலும் தன் தனிச்சிறப்பு இன்றும் வாழும் அதன் அழிவின்மையே. ஒவ்வொரு தளத்துக்கும் ஏற்ப மகக்ளால் விரிவுபடுத்தபப்ட்டு பயன்படுத்தபடுவதனூடாகவே அதன் ‘சீரிளமைத்திறம்’ வெளியாகிறது என்றால் மிகையல்ல. அவ்வகையில் தமிழின் பல்வேறு வகைபேதங்களை நாம் இன்று காண்கிறோம். அதில் ஒன்று வட்டார வழக்கு

நான் அறிந்தவரை எல்லாமொழிகளுக்கும் வட்டார வேறுபாடுகள் உண்டு என்றாலும் வரைமொழிக்கும் உரைமொழிக்கும் உள்ள வேறுபாடும் வட்டார வேறுபாடுகளும் இத்தனை துலக்கமாக உள்ள இந்தியமொழி வேறு இல்லை. தமிழின் தீராத அழகுகளில் ஒன்று இது. நவீன காலத்துக்கு ஏற்ப தமிழ் மறு ஆக்கம்செய்யப்பட்ட காலத்தில் தமிழின் இந்த நுண்மைகளை களைந்து அதை சீராகத் தரப்படுத்தும் முயற்சிகள் நிகழ்ந்தன. ‘கொச்சை வழக்கு’ என வட்டார வழக்குகள் தவிர்க்கப்பட்டன. சிறந்த உதாரணம் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அது பிரசுரித்த நூல்களில் மட்டுமல்ல, மறுபிரசுரம் செய்த நூல்களில் கூட வட்டார வழக்குகளைக் களைந்தே வெளியிட்டது.

இப்போக்கின் முன்னோடி என மறைமலை அடிகளையே சொல்ல வேண்டும். பொதுவாகவே தனித்தமிழியக்கம் வட்டாரவழக்குக்கு எதிரானது. அந்தச் சீராக்கும்பணி ஒருபக்கம் சாதகமான விளைவுகளை உண்டுபண்ணியது. இன்று தமிழகமெங்கும் நாம் அச்சில் காணும் சராசரித்தமிழ் என்பது அவர்களால் உருவாக்கபப்ட்டதே. கலைச்சொல்லாக்கம் போன்றவற்றில் தமிழ் அடைந்துள்ள தன்னிறைவும் அவ்வியக்கத்தின் விளைவே. ஆனால் அந்த மொழி இயந்திரத்தன்மை கொண்டதாகவும் சராசரியானதாகவுமே இருக்க இயலும். அதில் புனைகதைகளை உருவாக்குவது முடியாத காரியம். அதில் அன்றாட வாழ்க்கையின் நுட்பங்கள் படிய மறுக்கும். அதற்கு மு.வரதராசனின் தனித்தமிழ் புனைகதைகளே சான்றாகும்.

ஆகவே தமிழின் முன்னோடி படைப்பாளிகள் தமிழின் வட்டாரவழக்குக்கு முக்கியத்துவமளித்து அதிலுள்ள நுட்பங்களையும் அழகுகளையும் புனைகதைக்குள் கொண்டுவந்தார்கள். அ.மாதவையா அதில் முன்னோடி. ஆயினும் அதற்கு பெரும் வீச்சை அளித்தவர் புதுமைப்பித்தன். வட்டாரவழக்கின் அவசியத்திற்காக சலியாது குரல்கொடுத்து வந்தவர் இலக்கிய விமரிசகரான க.நா.சுப்ரமணியம். வட்டாரவழக்கு மக்களின் வாழ்க்கையுடன் நேரடியான தொடர்புடையது, அவர்களின் வாழ்க்கையின் அழகுகளையும் சிக்கல்களையும் உடனடியாக தானும் பிரதிபலிப்பது, வட்டாரப் பண்பாட்டின் மொழிவடிவம் அது என க.நா.சு வாதிட்டார்.

வட்டாரவழக்கு இலக்கியத்தில் மெல்ல அழுத்தமான இடம்பெற ஆரம்பித்தது. இரு படைப்பாளிகளை அதில் முக்கியமானவர்களாகச் சொல்லலாம். நீலபத்மநாபன் முழுக்கமுழுக்க வட்டாரவழக்கிலேயே அமைந்த ‘தலைமுறைகள்’ என்ற தன் முதல் நாவல்மூலம் ஒரு புதியவழியை திறந்தார். கி.ராஜநாராயணன் வட்டாரவழக்குக்கான தீவிரமான பிரச்சாரகர்.

கல்விப்புலம் நெடுநாள் வட்டாரவழக்கு எழுத்துக்களை தவிர்க்கும் போக்கு கொண்டிருந்தது. அந்நிலையை மாற்ற பணியாற்றியவர்களில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டாரியல் மையப் பேராசிரியராக இருந்த தெ.லூர்து முக்கியமானவர்.

தமிழின் முதல் வட்டார வழக்கு அகராதி கி.ராஜநாராயணனால் உருவாக்கப்பட்டது. ‘கரிசல் வட்டார வழக்கு அகராதி’. [அகரம் வெளியீடு] அதன் பின் பெருமாள்முருகன் கொங்கு வட்டார வழக்கு அகராதியையும் , கண்மணி குணசேகரன் கடலூர் வட்டார வழக்கு அகராதியையும் முனைவர் அ.கா.பெருமாள் நாஞ்சில்நாட்டு வட்டாரவழக்கு அகராதியையும் சுபாஷ் சந்திரபோஸ் தஞ்சைமாவட்ட வட்டார வழக்கு அகராதியையும் உருவாக்கியுள்ளனர். [அனைத்துமே தமிழினி வெளியீடு]

செட்டிநாட்டு வட்டார வழக்கு அகராதி பழனியப்பா சுப்ரமணியனின் தொகுப்பில் வெளிவந்துள்ளது. செட்டிநாட்டு உரைமொழிக்கே உரிய தனித்த சொற்கள் பெரும்பாலும் அடையாளம் காணப்பட்டு இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய சொல்லகராதிகள் மிகுந்த ஆர்வமூட்டுவன. உதாரணமாக இதில் இத்தி- சிறிதளவு என்று பொருள் உள்ளது. அதேசொல் அப்படியே மலையாளத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒருபழந்தமிழ் சொல்லாக இருக்கலாம். ஆவர்த்தி- சுற்று என்ற சொல்லும் மலையாளத்தில் உள்ளது. ஆவர்த்தனம் என்ற வடமொழிச்சொல்லின் மருவிய வடிவம். ஆனால் அனுவல்-விசேஷம்,சுபநிகழ்ச்சி என்ற சொல்லின் ஊற்று எது? செவிக்கு ஒரு தொல்தமிழ்ச் சொல்லாகவே படுகிறது.

கும்மாயம் என்றால் மலையாளத்தில் சுண்ணாம்புச்சாந்து என்றுபொருள். இங்கே ஒருவகை தின்பண்டம். சத்துமாவுபோன்றது. வேங்கரிசியும் அதுபோன்றதே. சும்மாக்குழம்பு என்றால் அவசரத்துக்குக் காய்கறி இல்லாமல்செய்யப்படும் குழம்பு என்ற சொல்லுக்கு சொல் சார்ந்தல்ல, பண்பாடு சார்ந்துதான் முக்கியத்துவம் வருகிறது.

இந்நூலில் செட்டிநாட்டுச் சடங்குகள் மற்றும் வாழ்க்கைமுறைகள் பற்றிய குறிப்புகள் பின்னிணைப்பாக உள்ளன. அத்துடன் செட்டிநாட்டு மொழிக்கு சிறந்த படைப்பிலக்கிய உதாரணமான ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியில் உள்ள சில உரையாடல் பகுதிகளும் எடுத்து அளிக்கப்பட்டுள்ளன.

ஒரு வட்டாரவழக்கு அகராதி பலவகையான கற்பனைகளை தூண்டிவிடுவது. நாம் அதில் நுண்ணிய முறையில் புதைந்துகிடக்கும் பல்வெறு பண்பாட்டு அம்சங்களை வாசித்து எடுக்க முடியும். மேங்கோப்பு என்றால் ஒரு வீட்டின் மேல்மாடி மட்டும். மாளிகைகள் நிறைந்த செட்டிநாட்டில் மட்டுமே இப்படி ஒரு சொலலட்சி உருவாக இயலும். இன்று தொலைக்காட்சி போன்ற பொது ஊடகங்களின் ஆதிக்கத்தால் தமிழின் வட்டார இயல்புகள் அழிந்து பொதுமொழி உருவாகிவரும் காலகட்டம். இத்தகைய பண்பாட்டுக் கூறுகல் விரைவிலேயே அழிந்துவிடக்கூடும். அவற்றை பதிவுசெய்து தொகுக்கும் பணி மிக முக்கியமான கலாச்சாரக் கடமை.

[செட்டிநாட்டுவட்டாரவழக்குச் சொல்லகராதி. தொகுபபசிரியர் பழனியப்பா சுப்பிரமனியன். தமிழினி வெளியீடு]

முந்தைய கட்டுரைநீல பத்மநாபன் பாராட்டு விழா
அடுத்த கட்டுரைஅறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன்