காந்தி எல்லைகளுக்கு அப்பால் -சுநீல் கிருஷ்ணன்

சென்ற ஆண்டு இந்தியா முழுவதும் செல்வாக்குடன் திகழ்ந்த அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் காலகட்டத்தில் அண்ணாவின் மீது குவிக்கப்பட்ட அபாண்டமான விமரிசனங்களை எதிர்கொள்ளும் முகமாக சென்ற ஆகஸ்ட் மாதம் ஹசாரேவிற்காக தமிழில் சில நண்பர்கள் இணைந்து ஓர் வலைதளத்தைத் தொடங்கினோம். அண்ணா மீது வைக்கப்படும் விமரிசனங்களின் வேர்களை ஆராயும்போது அங்கு ஆழ்ந்த காந்தி வெறுப்பு இருப்பது புலப்பட்டது.

இந்திய ஒருமைப்பாட்டை உடைக்க முனையும் பலதரப்பட்ட சக்திகள் தொடர்ந்து காந்தியைக் கட்டுடைக்க முயன்றவண்ணம் இருக்கின்றனர். காந்தியின் மீதான பழிகளும், அவதூறுகளும் காந்தி வாழ்ந்த காலத்திலிருந்தே தொடர்ந்து வருவன. திட்டமிட்டுப் பரப்பப்படும் அவதூறுகள் மூலம் எளிய மக்களைக் குழப்பி அவர்களைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கும் முயற்சியின் வெளிப்பாடுதான் இவை.

காந்தி மீதான ஆக்கபூர்வமான விமரிசனத்திற்கு காந்தியோ இல்லை அவர் வழிவந்தவர்களோ ஒரு போதும் அஞ்சியதில்லை. ஏனெனில் தவறுகளைத் திருத்திக்கொள்வதன் மூலமே மானுடம் முன்நகர முடியும் என அவர்கள் நம்பினார்கள். காந்தியின் மீது சுமத்தப்படும் அவதூறுகள் சரியா தவறா என்ற தேடல் உள்ளவர்கள் அறிந்துகொள்ள இன்றைய சூழலில் சரியான வாய்ப்பு இல்லை. தமிழில் காந்தியின் மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்கு வலுவான எதிர்வினை ஆற்றும் பணியை தனது இன்றைய காந்தி நூல் மூலம் எழுத்தாளர் ஜெயமோகன் தொடங்கி வைத்தார். ஒருவகையில் அதன் நீட்சியாகவே ‘காந்தி இன்று’ தளம் உருவானது.

‘காந்தி இன்று’ தளம் உருவாகிய குறுகிய காலத்திற்குள் தமிழ் இணையச் சூழலில் பரவலான கவனத்தைப் பெற்றது. பரவலான வாசகப் பங்களிப்புகள் மூலம் தளம் தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

காந்தியின் பன்முகத்தன்மை ஆச்ச்சரியமளிப்பது. இவர் தான் காந்தி, இவ்வளவுதான் காந்தி என்று அவரைக் குறுகிய வரையறைக்குள் அடைத்துவிட முடிவதில்லை. காந்தியை மேலும் நெருக்கமாகப் புரிந்துகொள்வதே இந்த நூலின் நோக்கம். இந்தத் தொகுப்பில் ‘காந்தி இன்று’ தளத்தில் வெளிவந்த நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ‘வெளிநாட்டவர்களின் பார்வையில் காந்தி’ என்பதே இந்தத் தொகுப்பிற்கான மையச் சரடு. இவைகளில் மூன்று மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், மற்றொன்று முழு மொழிபெயர்ப்பு அல்ல, அதே சமயம் நூல் அறிமுகமும் அல்ல. பின் நவீனத்துவ காந்தி எனும் லாயிட் ருடால்ப் எழுதிய நூலின் முக்கியமான அம்சங்களைப் பற்றி விரிவாக அலசும் கட்டுரை.

ஜீன் ஷார்ப் எழுதிய காந்தியின் இன்றைய அரசியல் முக்கியத்துவம் எனும் கட்டுரையில், ஷார்ப் காந்தி மீது வைக்கப்படும் முக்கியமான குற்றசாட்டுகளை எதிர்கொள்கிறார். ஷார்ப்பைப் பொறுத்தவரை காந்தி ‘வன்முறையற்ற போர்’ எனும் வழிமுறையை உலகுக்களித்த முன்னோடி. காந்தி மிக முக்கியமான அரசியல் பங்களிப்புகளை நிகழ்த்தியவர் என்று ஷார்ப் அவரைப் புகழ்கிறார். ஷார்ப் காந்தியின் ஆன்மீக அம்சம் குறித்துப் பெரிதாகக் கவலைப்படவில்லை. இதற்கு நேர்மாறாக, ருடால்ப் காந்தியை வெறும் அரசியல் முன்னோடியாக மட்டும் காண்பதை ஏற்கவில்லை. அவருடைய ஆன்மீக அம்சங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். அவற்றைக் கணக்கில் கொள்ளாமல் அவரது அரசியல் போராட்டம் பொருளற்றது என்கிறார். இரண்டு கட்டுரைகளும் காந்தியைப் பற்றிய முற்றிலும் புதிய வகையான புரிதலை நமக்கு அளிக்க வல்லவை.

மைக்கேல் பிளாட்கின் எழுதிய ஆய்வுக்கட்டுரையும் காந்தியின் மீதான விமரிசனங்களைப் பற்றிப் பேசுகிறது. இந்திய அரசியலில் வலுவான குரல்களாகக் கருதப்படும் இந்துத்வத் தரப்பு, மார்க்சிய தரப்பு, மற்றும் தலித் தரப்பு ஆகியவை ஆண்டாண்டு காலமாக முன்வைக்கும் விமரிசனங்களைத் தொகுத்தளிக்கிறார். அத்துடன் பாகிஸ்தானிய முஸ்லீம் தரப்பின் விமர்சனங்களையும் இணைத்து முழுமையான சித்திரத்தை அளிக்கிறார். இதில் விந்தை என்னவென்றால் ஒருவரின் விமரிசனத்திற்கு மற்றொருவரின் விமரிசனம் பதிலாக இருப்பதுதான். தன் புரிதலின் எல்லையில் அவைகளுக்கு உரிய எதிர்வினையையும் வைத்துள்ளார்.

மற்றொரு கட்டுரை காந்தியைப் பற்றிய கிளேர் ஷேரிடனின் நினைவுக் குறிப்பு. கனமான கட்டுரைகளுக்கு இடையே காந்தியை அன்பொழுக அணுகும் பெண் சிற்பியின் கட்டுரை அது. காந்தி வாழ்வை எப்படி அணுகினார் என்பதை புரிந்துகொள்ள, காந்தியுடன் அவர் கழித்த ஒரு நாளின் குறிப்பு உதவக்கூடும்.

ஆங்கிலத்தில் காந்தி தொடர்பான அநேக தகவல்களையும் கட்டுரைகளையும் கச்சிதமாக இணையத்தில் தொகுத்து நடத்தி வரும் மும்பை சர்வோதயா சங்கத்தின் இணையதளத்திற்கு (mkgandhi.org) இந்தத் தருணத்தில் நன்றி தெரிவிக்கப்பட வேண்டும். இந்தப் புத்தகத்தில் உள்ள ஜீன் ஷார்ப் மற்றும் மைகேல் பிளாட்கின் எழுதிய கட்டுரை அங்கிருந்தே எடுக்கப்பட்டது. காந்தி இன்றில் இடம்பெற்றுள்ள பல கட்டுரைகள் அங்கு வெளியான கட்டுரைகளின் மொழியாக்கம்தான்.

இந்தப் புத்தகம் வெளிவரும் தருவாயில் தொடர்ந்து தங்களது படைப்புகளைத் தந்து தளத்தின் வளர்ச்சியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். புத்தகத்தின் அட்டைப்பட ஓவியத்தைப் பிரத்யேகமாக நமக்காக வரைந்து கொடுத்த ஓவியர் சேதுராமலிங்கம் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்தும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எங்கள் நன்றிகள். வாசகராக இருந்து பதிப்பாளராக உயர்ந்த அருமை நண்பர் கடலூர் சீனுவிற்கு அன்பு கலந்த வந்தனங்கள். புத்தகத்தை ஒருங்கிணைக்க மற்றும் மெய்ப்பு நோக்க உதவிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் எங்கள் நன்றிகள் உரித்தாகுக. இறுதியாக தளத்தை தொடர்ந்து வாசித்து ஆக்கபூர்வமான விமரிசனங்களை முன்வைத்து எங்களை ஊக்கப்படுத்தும் தமிழ் இணைய வாசக அன்பர்களுக்கு எங்கள் நன்றிகள்.

காந்தி உலகிற்கு விடுத்த மகத்தான செய்தி “என் வாழ்வே நான் விடுக்கும் செய்தி”. நம் அனைவருக்கும் அப்படி அறைகூவல் விடக்கூடிய துணிவும் நேர்மையும் கைகூடட்டும்!

அன்புடன் ,
‘காந்தி இன்று’ தள நிர்வாகிகள்

www.gandhitoday.in

[சொல்புதிது வெளியீடாக வரவிருக்கும் காந்தி எல்லைகளுக்கு அப்பால் நூலுக்கு சுநீல் கிருஷ்ணன் எழுதிய அறிமுகம்]

காந்தி டுடே இணயதளம்

முந்தைய கட்டுரைசாகித்ய அகாடமி நூல்கள்
அடுத்த கட்டுரைகாந்தி: புறவயநோக்கில்