யாங்கோன் தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் நடத்திய தமிழ் மொழித் தேர்வு பரிசளிப்பு விழா நாளது 22-7-2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்2.15 மணிமுதல் இரவு 7 மணிவரை வண்ணமயமாக லைன் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்க் கல்வியில் தேறிய 108 மாணவமணிகளுக்கும் 2011-2012 தேசியக்கல்வி கல்லூரிநுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 61 தமிழ் மாணவமணிகளுக்கும் சிறப்பாகப் பரிசளித்துக் கௌரவிக்கப்பெற்றது.
செய்தி. சோலை.தியாகராஜன்,
செயலாளர்,தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம்,
Yangon,Myanmar
email : [email protected]
mobile: 00959 43042105
இந்த மின்னஞ்சலும் கூடவே வந்த புகைப்படங்களும் ஏனோ ஒரு மன எழுச்சியை உருவாக்கின. பர்மா இன்று நமக்குத் ‘தொலைந்து போன’ ஒருநாடாக இருக்கிறது. அங்குள்ளவர்களுக்கும் நமக்கும் இன்று நேரடி உறவுகள் குறைவு. நமது நூல்கள் அங்கே கிடைக்கின்றனவா? அங்கே தமிழ் பயிலப்படுகிறதா? யாராவது ஏதாவது எழுதுகிறார்களா? அச்சில் இதழ்களென ஏதேனும் உள்ளனவா? தெரியவில்லை
ஒருகாலத்தில் ரங்கூன் நமக்கு ‘இந்தா இங்கிண’ என்று இருந்தது. ரங்கூன்வீடு என்று இன்றும் பல வீடுகள் நாகர்கோயிலில் உள்ளன. உலகப்போருக்குப்பின் பர்மாவுடனான தொடர்பு அறுந்தது. இணையம்தான் மீண்டும் தொடர்பை உருவாக்குகிறது. அங்கும் ஒரு தமிழ்வாழ்க்கை நீடிப்பது உருவாக்கும் உணர்வு சாதாரணமல்ல. எங்கும் தமிழ் வாழும் என்ற செய்தி அதில் உள்ளது.
திரு சோலை தியாகராஜன் பர்மியத் தமிழ் வாழ்க்கையைப்பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதலாமென்று தோன்றுகிறது.