குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து -3 ராஜகோபாலன் ஜானகிராமன்

தொடர்ச்சி

குரு சிஷ்ய உறவின் பிரதான அம்சமே இருவரிடையேயும் நிகழும் உரையாடல்களே. இன்றளவிலும் இந்த முறை தொடர்ந்து வருகிறது. குரு முதலில் ஒரு சிறு வினாவை அல்லது கருத்தினை எழுப்பி தனது சீடனின் பதிலை அல்லது கருத்தினை அறிய விழைகிறார். சீடன் தரும் பதிலில் இருந்து அவன் அறிந்த எல்லையை உணர்ந்து அங்கிருந்து அவனறியா எல்லைக்கு அவனை இட்டுச் செல்கிறார். அறியா இடம் நோக்கி குருவின் உரை பற்றி நகரும் சீடன் தெளிவு வேண்டி அவரிடம் மேலும் கேள்விகளைக் கேட்டு அறிகிறான். குரு, சிஷ்ய உறவின் முதற்படியான ஆச்சார்ய, வித்யார்த்தி உறவு இன்றுவரை அப்படித்தான்.

விஷ்ணுபுரத்தில் ஆயுர்வேத ஞானி கணதேவர் தன் சீடர்களுக்கு பவதத்தரின் உடல் நிலை குறித்து விளக்கும் இடம் சிறந்த உதாரணம். மரணத்தை ஆயுர்வேதம் அறிந்து கொண்ட விதம், உடல் தோன்றும் விதம், வளரும் முறை, செயல்படும் விதம், உடல் மீது மரணத்தின் சாயல் படியும் விதம், உடல் விட்டு படிப்படியாக உயிர் பிரியும் விதம், மரணம் உணர்ந்த நொடி மனித மனம் அடையும் மாற்றங்கள் என ஒரு ஆயுர்வேதிக்குத் தேவையான மொத்தத்தையும் அள்ளித்தருகிறார். இந்த இடம் வரை ஆசிரியராக எண்ணப்பட வேண்டியவர் அதனைத் தாண்டிய நிலைக்குப் போவது இந்த விஷயங்களை விளக்கும் விதத்தில் தனது அனுபவங்களை, தனது தடுமாற்றங்களை , தனது புரிதல்களை தன் சீடர்களறியத் தரும் இடத்தில்தான்.

ஒரு ஆயுர்வேதியாக மரணத்தை அறிய வேண்டித் தவித்ததையும், பின் தனது கடமையாகத் தான் செய்வதொன்றே தன் கருமம் என உணர்ந்து அமைதி கொண்டதையும் கணதேவர் சொல்கிறார். மரணத்தை தேவன் என விளித்து தன் சீடர்களுக்கு புன்னகையுடன் ஒரு நோயாளியின் மரணத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்று கண தேவர் சொல்லும் இடம் இன்றைய மருத்துவர்களும் பாடமாகக் கொள்ள வேண்டியது.

கணதேவரை வாசிக்கும் கணந்தோறும் , சோனாவின் கரையினில் மேனியில் கதிரவன் மின்ன மெய் பணிந்து நிற்கும் சிஷ்யர்களில் நானும் ஒருவனே! மரணம் என்னை அணைக்கும் நொடியிலும் நான் அவரது உரையை உணர்ந்தோனாக இருக்க வேண்டுமென்பதே பிரார்த்தனையாகிப் போனது. சீடனின் அறிவை விரித்தெடுக்கும் அதே கணத்தில் அவர்களிடம் பயச் சாயல் தோன்றுவதை அறிந்ததும் , அந்த பயத்தையும் கடந்து வர உதவிய கண தேவருக்கு சிஷ்யர்களில் ஒருவனாக எனது வணக்கங்களும்.

சீடனை அவதானிக்கும் குருதான் எத்தனை அன்புடன் இருக்கிறார். எல்லா சீடர்களுக்கும் ஒரே முறையிலான அறிதலை ஒரு குரு தருவதில்லை. சீடனின் இயல்பு எதுவோ அதுவே அவனது அறியும் மார்க்கம் என்று உணர்ந்து வழிகாட்டுவது குருவின் சிறப்பு. பாவகனையும், பத்மனையும் ஒருங்கே கண்டுதான் பேசுகிறார் ஸ்ரீ நாமர். காவிய விவாதம் செய்து கொண்டிருக்கும் இருவரையும் ஓவியம் வரைபவராக வந்து சந்திக்கிறார் அவர். ஆனால் அதிலிருந்து நாலைந்து நாட்களில் பத்மனிடம் தான் அவனைத் தேடிக் கண்டுபிடித்ததாகக் கூறி பிங்கல மார்க்கத்தில் அவனை இணைக்கிறார். நட்பின் ஆவலில் “பாவகனையும்” என்று பத்மன் கேட்கும்போது ஸ்ரீநாமர் சொல்கிறார் -”பாவகன் எதையும் தன்னை மையமாக்கி அறிபவன், கரையாத பிரக்ஞை கொண்டவன். அவனுக்கு யோக மரபே சரி”. குருவாய் நின்று ஸ்ரீ நாமர் சொன்ன கூற்று மெய்யாயிற்று. பத்மன் பிங்கல மார்கத்தை பின்பற்றியே பிரபஞ்ச உண்மையை மகா யோனி தர்சனமாக உணர்ந்து , அதன் ஸ்தூல வடிவென விளங்கிய சோனாவில் விஸ்வரூப சக்கர தர்சனத்தில் தன் தேடலை முடிக்கிறான்.

ஸ்ரீ நாமரால் சரியாகக் கணிக்கப்பட்ட பாவகன் அவ்வாறே குரு சுதபஸ்ஸால் ஆட்கொள்ளப்பட்டு சுதேவ மார்க்கத்துக்கு ஆட்படுகிறான். ஞானம் என்பது “அங்கு” இல்லை; “இங்கு” இல்லை. ஞானமே நான் என்று பேசும் சுதேவ மார்க்கமே பாவகனுக்கு லபிக்கிறது. பத்மன் எவ்வாறு ஸ்ரீ நாமரால் சிஷ்யனாக்கப்பட்டானோ அதே முறையில்தான் பாவகனும் ஒரு மதிய வேளையில் முன் வந்து நிற்கும் சுதபஸ்ஸால் அவருக்கு சீடனாக்கப்படுகிறான். யோக மார்க்கத்தை தன் குருவான சுதபஸ் மூலம் அளிக்கப்பெற்ற பாவகன் தனது இறுதி நேரத்தின் த்யான மந்திரமாக பெருகி வரும் “உனது மகத்தான தனிமை” எனும் வரிகளுக்குள்ளாகவே மூழ்கி மறைகிறான்.

இதுவரை இங்கு பேசியவற்றில் குரு சிஷ்ய உறவு எனும் பதமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெகு கவனமாகவே குரு,சிஷ்ய பரம்பரை எனும் பதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. குருவுக்கும், சிஷ்யனுக்கும் இடையேயான நேரடி உறவு மட்டுமே அவ்வுறவின் அனைத்து சாத்தியங்களுடனும் பரிணமிக்கக் கூடியது. குருவின் தரிசனம் சீடனின் அனுபவமாக ஆகும் வேளையில் சீடனும் குருவாக பரிணாமம் அடைகிறான். அந்நிலையில் அவன் குருவினைப் படி எடுத்து நிற்பதில்லை. குருவின் வழியில் அவன் தனக்கான தரிசனத்தை அடைந்த குருவாகவே ஆகிறான்.

இதற்கு மாறாக, தன்னனுபவத்தில் அல்லாது குருவின் தரிசனத்தை மட்டுமே தன் தரிசனமாக சீடன் மனப்படிவம் கொள்ளும்போது குரு சிஷ்ய பரம்பரை தொடங்குகிறது . இங்கு குருவின் மூல தரிசனம் தத்துவமாக மாறுகிறது. குருவின் செயல்கள் மார்க்கமாகப் பயிலப்படுகின்றன. இந்தத் தத்துவங்களைக் கற்று, மார்க்கத்தையும் பின்பற்றி தனக்கான தரிசனம் அடைய இயலாதோர் அதனைப் பற்றிப் பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்கின்றனர். அவ்வாறானவர்களே பெரும்பான்மை என்பதால் இங்கு குரு சிஷ்ய பரம்பரைகளே அதிகம்.

இந்தப் படைப்பில் நாம் சம காலத்தில் காணும் சிலர், அவர்களது அனுபவங்கள், ஆற்றாமைகள் , அலைச்சல்கள் ஆகியவை பிற்காலத்தில் எவ்வாறு தத்துவங்களாக , வெவ்வேறு பிரிவுகளாக, மார்க்கங்களாக , வரலாறாக, புராணங்களாக, தொன்மங்களாக, குரு சிஷ்ய பரம்பரைகளாக மாறுகின்றன என்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். பிங்கலன், திருவடி தொடக்கம் ஸ்ரீதரன் வரை பெரிய தொடர்ச்சி படைப்பு முழுவதும் .

குரு சிஷ்ய பரம்பரை என்பது அமைப்பு ஒன்றினால் தவிர வேறொன்றாலும் கட்டிக் காக்கப்பட முடியாதது. அமைப்பாய் மாறும் எதுவும் அதற்கான விதியாய் மரபின் பெயராலமைந்த சம்பிரதாயங்களின் சங்கிலியால் பிணைக்கப்பட்டே தீரும். ஒரு கட்டத்தில் சம்பிரதாயங்களைக் கட்டிக் காப்பது மட்டுமே அமைப்பின் வேலையாக மாறும். ஆதி குரு வெறும் பிம்பமாகவும், மார்க்கம் வெற்றுச் சடங்கு, சம்ப்ரதாயங்களுமாகவே எஞ்சும்.

அவ்வாறான ஒரு நிகழ்வை விஷ்ணுபுரம் அங்கதச் சுவை பட சொல்கிறது. பிரளயத்தின் இறுதி நாட்களில் போஷிப்பார் யாருமில்லா நிலையில் திருவடி மடத்தின் குரு பீடமான முதியவரும், அவரது ஒரே சீடனாக பீதாம்பரமும் எஞ்சுகிறார்கள். அறிதலின் ஆர்வமன்றி , வாழ்வதன் வழி தேடி சிஷ்யனானதால், சிறுவன் பீதாம்பரம் வெகு விரைவில் “லோகாதாய குரு மகா சந்நிதானமாகப்” பரிமளிக்கப் போகும் அனைத்து சாத்தியக்கூறுகளோடும் விளங்குகிறான். பாண்டிய மன்னன் எழுதியதாக தானே கடிதம் எழுதுவதாகட்டும்; தம்பிரான் மடம் தாண்டா மரபை மரமல்லி இலைகளால் உடைப்பதாகட்டும்; யவன மது போல வயது எரிய குருவின் தேவை இருப்பதை சுட்டுவதாகட்டும் – சிறுவனின் கணக்குகள் கச்சிதமானவை. அமைப்பாய் மாறும் அனைத்து தத்துவங்களும் இறுதியில் அடையப் போகும் நிலைதான் இது என்பதை மடத்தில் விஸ்வரூப விஷ்ணுவின் கதாயுதம் மீது காய வைக்கப்பட்டிருக்கும் கெளபீனம் தெளிவாக்குகிறது.

திருவடி மடத்தின் சம்பிரதாயம் இவ்வாறாய் அங்கதச் சுவை பட முடியுமென்றால் சர்வக்ஞ பீடத்தின் சம்பிரதாயம் அவலச் சுவை படத்தான் முடிவடைகிறது.

சம்பிரதாயங்களின் கனம் தோளில் அழுந்த நிற்கும் சர்வக்ஞ பீடம் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே தன் இடத்தைக் காத்துக் கொள்கிறது. அதனை விழைவோர் அதற்குப் பலியாகத் தர வேண்டியது தன் சுயத்தையே.

நிலவின் ஒளி உச்சம் கொண்டு நிற்கும் உஷத் கால வேளையில், பித்ருக்கள் உலவும் வெகு காலையில் தேவ தத்தனைக் காணும் பவதத்தர் தான் சுயபலியானதை கண்ணீருடன் ஒப்புக் கொள்கிறார். தேவததனை “படியிறங்கிச்” சென்றுதான் அணைக்கிறார். சர்வக்ஞ பீடத்தின் தனிமையை, அந்த பொன்சிறையை அவனறியக் காட்டுகிறார். தருக்கத்தின் மீது கட்டப்படும் எதுவும் நிலைப்பதில்லை என்று கதறுகிறார். தான் இழந்த தன் மகனை, தினமும் கண்முன் நின்றாலும் மகனென அணைக்க இயலாத் தொலைவில் அவன் இருப்பதையும், அவனிடம் ஓடிச் சென்றுவிட முடியாத அளவில் சர்வக்ஞ பீடம் தன்னை சிறைப்படுத்தி வைத்திருப்பதை கண்ணீருடன் தன் பேரன் முன் வைக்கிறார்.

பேரனாகிய தேவதத்தன் பவதத்தரை “குருநாதரே” என்றுதான் விளிக்கிறான். சர்வக்ஞ பீடத்தின் வலிமை சொல்லுக்கும் சிறையிட முடிகிறது. தேவதத்தன் “தாத்தா” என்று விளித்த கணம் இருவருமே நெகிழ்ந்து நிற்கின்றனர். தேவதத்தனின் உறவு முறை விளி பவதத்தரின் முன்னோர்கள் அனைவருக்குமான விளியோ? அந்த பித்ருக்கள் உலவும் வேளையில் பவதத்தர் விட்ட கண்ணீர் மொத்த தத்த பரம்பரைக்கும் சேர்த்துதானோ? ஆயினும், வேததத்தனைக் கண்டு கண்ணீர் மல்கிச் சாகும் ஆர்யதத்தர் வரை சர்வக்ஞ பீடத்தின் பொன்சிறைக் கதவுகள் திறக்கப்படவே இல்லை.

நண்பர்களே! தேடல் ஒன்றே உயிர் வாழ்வின் குறிக்கோளாய் கொண்டு நிற்கும் எந்த முமுட்சுவும் முதலில் தேடி அலைவது தனக்கான குருவையே. கேள்விக்கான விடைகளை நூல்களில் தேடி அலையும் ஒருவன் பண்டிதனாகப் பரிணமித்தாலும், கேள்வியையே உணர வைக்கும் குருவின் கருணையே தேடலைத் தெளிவாக்குகிறது. வரைபடத்தோடு கூடிய வழிப்பயணமாய் தேடலை அமைக்கிறது. இன்று நமக்குத் தரப்பட்ட ஞானமனைத்தும் நமது குருமார்களுக்கிருந்த கருணையின் விளைவே!

“கூடி அமர்ந்து ஒன்றாகக் கற்போம்” என்றே சொல்கிறார் குரு உபநிடத வாக்கியங்களில். அத்தகைய குருவின் அருள் நமது அறிதலின் ஆர்வத்தை ஆசிர்வதிக்கட்டும். நன்றி!


விஷ்ணுபுரம் இணையதளம்


குருகுலமும் கல்வியும்

முந்தைய கட்டுரைஆத்மானந்தா நூல்கள்
அடுத்த கட்டுரைஃபோர்டு ஃபவுண்டேஷன், மியான்மார்-கடிதங்கள்