புண்ணியபூமி:கடிதமும் பதிலும்

ஜெயமோகன், மக்களின் பதில் கடிதங்களை படித்தேன். “ஒரு குரூப்பாதேங் திரியிராங்கே” என்று ஒற்றை வரி குப்பை காமெடியில் ஒதுக்கிவிட்டு சென்றுவிட முடியும். அனால் தங்களுக்கும் திரு நீலகண்டன் அரவிந்தனுக்கும் பதில் எழுதினால் தேவலை என்று தோன்றியது. திரு நீலகண்டன் அரவிந்தனின் பதில் கருத்தில் கொள்ள வேண்டியது. திரு. நீ.அ., பின்வரும் கார்ல் சாகனின் வரிகளைத்தான் தாங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். “I know that the consequences of scientific illiteracy are far more dangerous in our time than in any time that has come before. It’s perilous and foolhardy for the average citizen to remain ignorant about global warming, say, or ozone depletion, air pollution, toxic and radioactive wastes, topsoil erosion, tropical deforestation, exponential population growth. . . . How can we affect national policy—or even make intelligent decisions in our own lives—if we don’t grasp the underlying issues? . . . Plainly there is no way back. Like it or not, we are stuck with science. We had better make the best of it. When we finally come to terms with it and fully recognize its beauty and power, we will find, in spiritual as well as in practical matters, that we have made a bargain strongly in our favor.” இதிலிருந்து இரண்டு விஷயங்கள் எழுகிறது. 1. கார்ல் சாகன் “scientific illiteracy” பற்றி குறிப்பிடும் போது, அவர் அமெரிக்கர்களை மாத்திரம் குறிப்பிடவில்லை. ஒட்டு மொத்த உலகத்துக்குமான வரிகள் அவை. அவர் அமெரிக்கர் என்பதால் நாம் அது அமெரிக்காவுக்கு மாத்திரமானதாக “வசதியாக” அர்த்தப்படுதுகிறோம். கொசுவை விரட்ட டயரை எரிப்பதை “scientific literacy” என்று என்னால் நினைக்க முடியவில்லை. 2. அதேசமயம், அவர் ஒரு புலம்பெயர்ந்த ரஷ்ய ஜுவிஷ் ஆக இருந்தால் கூட நாம் அவரை ஒரு அமெரிக்கரகவே இனம்கண்டுகொள்கிறோம். அனால், என்னை புலம்பெயர்ந்த தமிழனாகவோ, அல்லது அமெரிக்க ப்ரஜையாகவோ காணாமல் ஒரு இந்திய தமிழனாக கண்டதனால் வந்த விளைவுதான் தங்களின் கடிதம். ஜெயமோகன், தங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி. தாங்கள் குறிப்பிட்டது போல என்னுடைய கடித தொனி கொஞ்சம் மேலோங்கியது என்பதை விளங்கிக்கொண்டேன். அது இரண்டு காரணங்களால் வந்திருக்கலாம். ஒன்று, மேலாதிக்க சாதியில் பிறந்து வளர்ந்த சூழ்நிலையால் இருக்கலாம் அல்லது படித்த படிப்பில் சொல்லிக்கொடுத்ததை அப்படியே பின்பற்றியதால் வந்திருக்கலாம். மாற்ற முயற்சித்திருப்பதை தாங்கள் இக்கடிதத்தில் காணலாம். மற்றபடி, என்னை அதுபோன்றதொரு கடிதம் எழுத தூண்டிய விஷயங்களை பகிர்துகொள்ள எண்ணுகிறேன். 1. ஈழத்தில் சகோதரர்கள் கொத்து கொத்தாய் செத்து அழிந்தபோது, இந்திய, தமிழக அரசியல்வாதிகளின் சுயநல அரசியலும், கோழி பிரியாணி சாப்பிடவும் குடும்ப உருப்படிகளின் மந்திரி பதவிகளுக்காகவுமே திறந்த அரசியல்வாதிகளின் வாய்களையும் நினைத்து இந்திய வம்சாவளி என்பதற்காக அருவருப்படைந்திருந்த நேரத்தில் தங்களின் ஆஸ்திரேலிய பயணம் அமைந்தது. அந்த நேரத்தில் தங்களிடம் நிறைய எதிர்பார்த்தேன். அதற்கு தகுந்தாற்போல நிறைய ஈழ தமிழர்களை சந்திக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அடைந்தேன். அனால் தாங்கள் புலம்பெயர்ந்த ஈழ தமிழர்களின் மனநிலையை தற்போதைய ஈழ நிகழ்வுகளில் இருத்தி விரிவாக பதிவு செய்யாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கபட வேடதரிகளான அரசியல்வாதிகளுக்கும் தங்களுக்கும் வித்தியாசம் கண்டறியவேன்டியாய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது வேதனை. எனக்கு நானே சொல்லிக்கொண்ட ஆறுதல் வார்த்தைகள் “May be that is not his expertized area” 2. விளம்பரம் கட்டுரை ஒரு நகைச்சுவையுடன் கூடிய ஜனரஞ்சக கட்டுரையாக இருந்தால் கூட, விளம்பரங்களுடன் தங்களின் அனுபவமின்மையை காட்டியது. விளம்பரம் பற்றி பேச எனக்கு என்ன அருகதை என்று குழம்ப வேண்டாம். நான் படித்தது சென்னை பல்கலைகழகத்தில் MBA (Finance and Consumer Psychology). உண்மையில் எனக்கு வந்த எண்ணம், ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத விளம்பரம் கட்டுரை எழுத முடியும் போது ஒரு வரலாற்று பதிவை தவறவிட்டு விட்டாரே என்ற ஆதங்கம். அதே சமயத்தில் தங்களின் அமெரிக்க பயணம் பற்றிய அறிவிப்பு. இவர் அமெரிக்க வந்து Oak Park சென்று ஹெமிங்க்வயின் அடுத்த பக்கத்தை அப்படியே பதிவு செய்து தமிழுக்கு எடுத்து செல்ல போகிறாரா என்ற அலட்சியம் வந்தது. அதனால் வந்த கோபத்தின் விளைவாக தாங்கள் மீது சிறு கீறல் ஏற்படுத்த செய்த முயற்சியாகவும் என்கடிதத்தை கொள்ளலாம். மற்றபடி, திருப்பி அடித்தால் தாங்க முடியாத ஆயுதத்தை ( ராஜாஜி, பக்தவத்சலம், காமராஜர், அண்ணா தவிர சொந்த வாழ்வில் சுத்தமான ஒரே ஒரு முதல்வர் உண்டா? என்று கேட்டால் பதில் கூற முடியாத நிலை, விவசாயிகளிடம் 11 ரூபாய்க்கு கோதுமை ஜனவரியில் வாங்கி, 16 ரூபாய்க்கு ஏற்றுமதி மார்ச்சில் செய்துவிட்டு, மீண்டும் மே மாதத்தில் 27 ரூபாய்க்கு அவுஸ்திரேலியாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்த இந்திய அரசு….. ) என் கையில் கொடுத்து, என் எதிரில் பரிதாபமாக நிற்கும் மற்ற கடித எழுதிகளுக்கு நோ காமெண்ட்ஸ். மணிவண்ணன்

அன்புள்ள மணி

உங்கள் தரப்பைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி

சில விஷயங்களை சொல்வது முக்கியம். சில விஷயங்களை சொல்லவேண்டிய நேரத்தில் சொல்வது முக்கியம். சிலவிஷயங்களைச் சொல்லாமலேயே விடுவிடுவது முக்கியம். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ,இதழாளர்கள் எந்த விஷயமும் தெரியாமல் பிரச்சாரங்களை நம்பியே முன்செல்பவர்கள். தமிழ்ச்சூழலில் உணர்ச்சிக்கொந்தளிப்பே எப்போதும் மைய ஓட்டம் ஆகையால் தாங்களும் கொந்தளித்து வெகுஜன ஆதரவு தேடுபவர்கள். விஷயம் தெரியும்தோறும் குரலில் அடக்கம் தேவைப்படுகிறது.

ஓர் உதாரணம், ஏப்ரல் இருபதாம் தேதிக்கு முன்னர் ஒருவர் விடுதலைப்புலிகள் தோல்விமுகத்தில் இருக்கிறார்கள், பிடிவாதத்தால் மானுட அழிவை உருவாக்கப்போகிறார்கள்  என எழுதியிருந்தால் அவரை உங்களைப்போன்ற உணர்ச்சியாளர்கள் என்னதான் செய்திருக்க மாட்டீர்கள்? கடைசிப்பெருந்தாக்குதலில் சிங்களர்களை கிழித்து தோரணம் கட்ட புலிகள் தயாராகிறார்கள் என்ற ‘நிலைபாடு’ தவிர எதைச் சொன்னவனும் தமிழின விரோதியாக வசைபாடப்பட்டான் என்பதை இப்போது இணையத்தைப் பார்த்தால் தெரியும்.

இப்போதுகூட நான் ஈழத்தமிழர்களிடம் எதையுமே சொல்ல முனையவில்லை. நான் பேசுவது அதை ஒட்டி பல கோணங்களில் யோசிக்கும் இந்திய வாசகர்களிடம் . அவர்கள் நான் சொல்லும் வகையிலும் சிந்தனைசெய்து பார்க்கலாமே என்றுதான்…

எதை எழுதுவது எப்படி எழுதுவது என்பதெல்லாம் எழுத்தாளனின் உரிமை. உங்கள் கோஷங்களை ஏற்று கோஷமிடுவதற்கு பிரியாணிப்பொட்டலம் கொடுத்து எழுத்தாளர்களைக் கூட்டிக்கொண்டு செல்ல முடியாது. அப்படிச்செல்பவர்கள் நல்ல எழுத்தாளர்களும் அல்ல. உங்கள் விருப்புவெறுப்புகளுக்கும் கோபங்களுக்கும் எழுத்தாளன் பொறுப்பல்ல.

”இதைச்சொல்ல இவர்கள் யார், என்ன தகுதி”’என்ற வரிகளை இப்போது அங்குமிங்குமாகக் கேட்கிறேன்.  நீங்களெல்லாம் என்ன சொன்னாலும் சரி எழுத்தாளன் சமூகத்தின் ஓர் உறுப்பு அல்ல, அவன் சமூகத்தைவிட மேலானவன். சமூகத்தை நோக்கி பேச, ஏன் அறிவுரை சொல்ல, கடிந்துரைக்க உரிமையும் தகுதியும் உள்ளவன். ஒரு நல்ல படைப்பை எழுதிய எவனுக்குமே சமூகத்தை நோக்கிப்பேசும் தகுதி உள்ளது. ஏனென்றால் தர்க்க அறிவுக்கு அப்பால் நுண்ணுணர்வின் தகுதி தனக்க்குள்ளது என அவன் நிரூபித்துவிட்டான்.

பாமரத்தனம் மேலோங்கிய ஒரு சமூகம் எழுத்தாளனிடம் ‘நீ யார்’ என்றுதான் கேட்கும். சினிமா அரசியல் பிரமுகர்கள் கருத்து சொன்னால்போதும் என்றுதான் நம்பும். அதை பிரதிபலிக்கும் குழிஎலிகள் சிலர் தங்களையும் எழுத்தாளர்கள் என்று சொல்லவும்கூடும். அரசியல் ஆத்மாக்கள் வெறுப்பைக் கக்கக்கூடும்.  ஆனால் எழுத்தாளன் அதைப்பொருட்படுத்த வேண்டியதில்லை என்றே எண்ணுவேன். அவனுடைய கடமை தானே உருவாக்கிய தன் பீடம் மீது ஏறி நின்று, ஆம் குன்றேறிநின்று,  சமூகத்தை நோக்கிப் பேசுவதே.

பிகு:  1 மீண்டும் கவனிக்காமல் எழுதுகிறீர்கள் அரவிந்தன் ஒரு பத்தியைச் சொல்லவில்லை. ஒரு முழுநூலையே சொல்கிறார். நீங்கள் வாசிப்பில் செல்லவேண்டிய தூரம் மிகவும் அதிகம்

2 விளம்பரம் பற்றிய கட்டுரை விளம்பரத்துக்கு இலக்காகும் மக்களின் கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் படித்திருப்பது சந்தோஷம். ஆனால் எனக்கு விளம்பர உலகம் தெரியும். எழுதியும் இருக்கிறேன்
 
ஜெ

 

அன்பான ஜெயமொகன்

தங்களுக்கும் திரு. மணிவண்ணனுக்கும் இடையேயான கடித போக்குவரத்து மனவருத்தத்தை அளித்தது. ஒருவர் தனது கருத்தை, அதில் பிழை இருந்தாலும் பதிவு செய்ய அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் அவர் பதிவு செய்த முறை தவறானது. எதிர்வினைகள் என்பதற்க்கு சண்டையை தூண்டுவதற்க்கான வரிகளை உபயோகப்படுத்துதல் என்று அர்த்தமில்லை. அவர் அப்படித்தான் புரிந்து கொண்டார்போலும். இந்த தளத்தின் வாசகர்கள் அனைவரும் உங்களை போற்றி துதி பாடி மட்டும் எழுதியிருப்பதாக சொல்கிறார். இதிலிருந்தே அவர் இந்த தளத்தை முறையாக படித்து வருபவர் அல்ல என தெரிகிறது. வாசகர்கள் தங்களால் ஏற்றுக் கொள்ள தயங்குகிற உங்களின் சில கதை (எ.க – அனல்காற்றின் இறுதிபாகம்) மற்றும் கட்டுரையை பற்றி கண்ணியத்துடன் விவாதித்திருக்கிறார்கள்.  மணிவண்ணன் அவர்கள் எழுத்தாளர்களுக்கு சில உதவி செய்வதால் (அது வரவேற்புக்கு உரியதே) அவர்களுக்கு கட்டளை இடும் தொனி (இது வரவேற்புக்கு உரியது அல்ல) வந்துவிட்டது போலும். “அமெரிக்காவில் எல்லாமே ‘கருப்பு வெள்ளை’. யாரும் பொய் சொல்லி தப்பிக்க முடியாது” என்பதில் இருந்தே அவர் எந்த அளவிற்க்கு அமெரிக்காவை புரிந்து கொண்டிருக்கிறார் என தெரிகிறது. என்னை பொறுத்தவரை இந்த விசயத்தை நீங்கள் கடக்க விரும்பியே உங்களுக்கான நிதானத்துடன் மன்னிப்பு கோரியிருக்கிறீர்கள் என எனக்குப்பட்டது.
 
அன்புடன்
தனசேகரன்
சென்னை

அன்புள்ள தனசேகர்

 

ஆம், உண்மை. அதில் பேசி விரிவாக விவாதிக்க ஏதுமில்லை. தனிப்பட்ட சில மனவருத்தம் தவிர. மனவருத்தங்களை உடனடியாக முடித்து வைக்கவேண்டுமென்பதே என் எண்ணம்.

 

என் கடிதங்களில் எவருக்காவது நான் கடுமையாக எழுதியிருந்தால் அது பெரும்பாலும் திட்டமிட்டதாகவே இருக்கும். நம்பிக்கை, மனநிலை ஆகியவற்றில் ஒரு தப்பான திசையில் நிற்பவர், அதேசமயம் மிகுந்த நம்பிக்கை ஊட்டும் அளவுக்கு அக்கடிதம் மூலம் வெளிப்படுபவர், ஒருவரிடம் மட்டுமே கடுமையாக எழுதுவேன். அதன்மூலம் அவருக்கு ஒரு நிலைகுலைவை, அசைவை உருவாக்க மு டியும். அது அவரைச் சிந்தனைசெய்ய வைக்கும். அவரை அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்லும். எனக்கு சுந்தர ராம்சாமி, பி.கெ.பாலகிருஷ்ணன், நித்யா ஆகியோரு ன் அத்தகைய அழுத்தமான உரசல்களும் உடைவுகளும்நிகழ்ந்தது உண்டு. நான் சுந்தர ராமசாமியை  திட்டி கடிதமெல்லாம் எழுதியது ண்டு. ஆனால் அது சிந்தனையின் ஒரு பகுதி

 

திருமணிவண்ணன் அவர் கல்வி கற்றவர், வெளிநாட்டில் வாழ்பவர் ஆகவே எழுத்தாளர்களுக்கு உபதேசம் செய்யும் தகுதி கொண்டவர் என்று எண்ணுகிறார். எனக்குத்தெரிந்து பாதிப்பங்கு அமெரிக்க- ஐரோப்பிய இந்தியத்தமிழர்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் என்னைக்கண்டதுமே எனக்கு அலோசனைகள், வழிகாட்டல்கள், அறிவ்றுத்தல்கள் அளிக்க ஆரம்பித்துவிவார்கள். ஈழத்தமிழர்கள் ஒருபோதும் இதைச்செய்வதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு எழுத்தாளர்களிடம் கோபதாபங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களை முக்கியமானவர்களாகவே அவர்கள் எண்ணுகிறார்கள் என்பதுதான் காரணம். இந்தியத்தமிழர்கள் பொதுவாக எழுத்தாளர்களை விட தங்களை மேலானவர்களாக, எழுத்தாள ர்கள் கௌரவமான வருமானம் இல்லாத சிறிய ஆட்களாக நினைக்கிறார்கள். இதற்கு நம்மு ய சமூக மனநிலையின்  கட்டுமானம் முக்கியமான காரணம். இதை இந்த இணையதளத்திலேயே நான் எழுதிக்கோன்டே இருக்கிறேன் .  நான் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினை இது என்றால் மிகையல்ல. எழுத்தாளனை படிப்பவர்களை விட திட்டுபவர்கள் அதிகம்!

 

சென்ற மாதம் இருபது நாள் நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். ஈழத்தமிழர்களுடன் பெரும்பாலும். நான் சந்தித்த வெகுசில இந்தியத்தமிழர்களில் ஒரு அம்மையார் என்னைப்பார்த்ததுமே அட்வைஸ் மழை ஆரம்பித்தார். நான் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக போராடவேண்டும்  அதையெல்லாம் செய்யாமல் ஏன் வீணாக எழுதுகிறேன் என்றெல்ல்லாம் பேசித்தள்ளிவிட்டுச் சென்றார். இம்மாதிரி ஆட்களை சந்திக்கும் போது நான் செய்வதையே செய்தேன். மன்னிக்க வேண்டும், தெரியாமல் போய்விட்டது. உடனே செய்கிறேன்என்றேன். வேரு என்ன செய்வது?

 

ஜெ

 

அன்புள்ள ஜெ,

உங்களுக்கு வந்த ஒரு கடிதத்தில் உங்களுக்கு ஒருவர் கம்ப்யூட்டர் கொடுத்ததாக இருந்ததே…உண்மையா?

சிவம்

 

அன்புள்ள சிவம்

நீங்கள் கவனிக்கவில்லை. நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் வாசகர்களின் அன்பளிப்புகளை ஏற்பதில்லை– மிக நெருக்கமான நண்பர்களிடம் தவிர. இந்த இணையதளத்துக்கு உதவிசெய்கிறோம் என பலர் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் பெற்றுக்கொள்வதில்லை என்றால் அதில் ஒரு பகுதியினரின் மனம் ஆரோக்கியமாக இல்லை. பரிசில் வழங்கும் குறுநில மன்னர்களாக எண்ணிக்கொள்கிறார்கள்
ஜெ

முந்தைய கட்டுரைராஜமார்த்தாண்டன் அஞ்சலி,சென்னை
அடுத்த கட்டுரைகமலா சுரையா:விவாதம்