ஏழுநிலைப்பந்தல்

சிவில் எஞ்சினியருக்குப் படித்தவன் என்றாலும் பந்தல் அலங்காரம்தான் என் தொழில். குலத்தொழில் இல்லையென்றாலும் குறைந்தது மூன்று தலைமுறையாக இதைச் செய்துவருகிறோம். என் தாத்தா அக்காலத்தில் மகாராஜாவின் முறைஜெபத்துக்காகப் பந்தல்போட்டுப் பட்டும் வளையும் வாங்கியவர். அது இப்போதும் என்னிடம் இருக்கிறது. ஆகவே இந்தப் பிராந்தியத்தில் ஒரு நற்பெயர். இக்காலகட்டத்தில் கல்யாணப்பந்தல்கள் போடுவது குறைவு. ஆனால் சின்னச் சின்ன முத்தாலம்மன்களும் மாடன்களும் கொடைவிழாக்கள்பெற ஆரம்பித்த பிறகு வருடத்தில் பாதிமாதம் எனக்கு குறைவில்லாமல் நிகழ்ச்சி இருக்கும். மழைக்காலம் முழுக்க ஓய்வு. அப்போது நான் வாழைநடவில் இறங்கிவிடுவேன்.

பெரியகல்யாணங்களுக்குத் தான் ஏழுநிலைப்பந்தல் கட்டுவது. கல்யாணப்பந்தலைக் கோவில்களுக்குப் போடுவது இல்லை. அப்பாவோடு பந்தல்வேலைக்குப்போன நாட்களில் திற்பரப்பில் ஒரு மாடம்பி வீட்டில் ஏழுநிலைப்பந்தல் போட்டோம். பிறகு இதுவரை அப்படி ஒரு வேலை வரவில்லை. ஆகவேதான் கீழமூலைக்காடு என்ற ஊரிலிருந்து ஏழுநிலைப்பந்தல்கட்ட ஆள் தேடிவந்தபோது எனக்கு சற்று சந்தேகமாக இருந்தது. விசாரித்தபோது அது ஆலஞ்சோலை மலையடிவாரத்து ஊர் என்று தெரிந்தது. ஆகவே முக்கால்பங்கு பணம் முன்கூட்டியே கேட்டுவாங்கினேன்.

கீழ்மூலைக்காட்டில் செல்லம் எஸ்டேட் உரிமையாளர் குமாரசாமி நாடாரின் பெண்ணுக்குத்தான் கல்யாணம். அவருக்குத் தன் மகளுக்கு ஏழுநிலைப்பந்தலில் முத்துவிதானம் அமைத்துக் கல்யாணம் நடத்தவேண்டும் என்று ஆசை. சின்ன வயதில் அவர் அப்படி ஒரு கல்யாணத்துக்கு சாப்பிடப்போய் இழுத்து வெளியேபோடப்பட்டிருக்கிறாராம் , சொன்னார்கள்.கிராம்பு விவசாயம் பணமாகக் கொட்டிக் கொண்டிருந்தால் ஏழுநிலை என்ன எழுபது நிலை கட்டலாம்.

மூங்கிலும் ஓலையும் அங்கெயே சுளு விலைக்குக் கிடைக்கும் என்று அறிந்தேன். கயிறும் பந்தல்துணியும் அலங்காரவஸ்துக்களும் மட்டும் ஒரு டெம்போ நிறைய கொண்டுபோய்ச் சேர்த்தேன். பத்துநாள்முன்னதாகவே நாங்கள் இருபத்திமூன்றுபேர் அங்கேபோய்விட்டோம். சமையல் பாத்திரங்கள் பாய்தலைகாணி சகிதம். குடிசை கட்டி தங்கிக் கொண்டு வேலை ஆரம்பித்தோம். எனக்கு சற்று உதறல்தான். ஏழுநிலைப்பந்தலுக்கு மூங்கிலில் மேலேமேலேயாக ஏழு அடுக்கு கட்டு தேவை. கணக்கு சரியாக இல்லாவிட்டால் குடை சாய்ந்துவிடும். ஊரில் வீசும் காற்றுகளை நன்றாக அவதானித்துக் கட்டவேண்டும்.

கீழடுக்கில் ஈசான மூலையில் பம்பரக்குண்டு கட்டிய நூலைத் தொங்கவிட்டுக் கோணம் பார்த்துக் கொண்டே கட்டினேன். நாலாவது அடுக்குக்குப் போனபோது பந்தல் சற்று சரிந்ததை தூக்குக்குண்டு காட்டியது— வெறும் கண்ணால் சரிவைப் பார்க்கமுடியாது. கம்பிவைத்து இறுக்கி தாங்குகொழுவும் இரண்டு சார்த்துகொழுவும் கொடுத்து நிமிர்த்தினேன். ஆனால் அரைமணிநேரத்தில் மீண்டும் சரிந்துவிட்டது. போட்டபந்தலைப் பிரித்தால் அமங்கலம். பந்தல் சரிந்தால் தொழிலே போயிற்று. ஏன் இதை ஒப்புக்கொண்டோம் என்ற கலக்கம் வந்துவிட்டது. நாகராஜ சாமியை நினைத்துக் கொண்டு நான்குபக்கமும் இழுகயிறு கொடுத்துக் கட்டினேன். அரைமணி நேரத்தில் கயிறு பட் பட் என்று வெடித்து அறுந்துவிட்டது. கம்பி போட்டு கட்டினேன். அதுவும் சரிந்துவிட்டது. பந்தலின் சரிவு இப்போது கண்ணுக்குத் தெரிந்தது.

வேடிக்கைபார்க்க ஆட்கள் வந்தார்கள். நான் ஓரமாக சோர்ந்து அமர்ந்துவிட்டேன். கூட்டத்தில் ஒருவன் என்னிடம் ” கைப்பள்ளியே நம்ம சங்கரன் மூத்தாசாரியக் கூப்பிட்டுக் காட்டப்பிடாதா?” என்றான்

“இது ஆசாரிப்பணியில்ல மக்கா…” என்றேன்

“மூத்தாசாரி கணக்கில கிண்ணனாக்கும். வயசு கொறெ ஆச்சு. ஆனா கண்ணும் மனசும் கிறுத்தியம் . விளிச்சோண்டு வரட்டா? பொகையிலைக்கும் கருப்பட்டிக்கும் பைசா குடுத்தாப்போரும்…”

நம்பிக்கை இல்லாமல் ” செரி , பாக்கலாம் ” என்றேன்.

மூத்தாசாரி ஒருகாலத்தில் ஆறடிக்கும்மேலே உயரமான மனிதராக இருந்திருக்கவேண்டும். நல்ல நிறமும் கனமான தாடையும் கொண்ட ஒருகாலத்திய அழகர். தலையில் நரைத்த குடுமி. பூணூல். உடம்பு சுக்குபோல காய்ந்துவற்றி இருந்தது. உள்ளே ரத்தமோ ஈரமோ இல்லை என்று தோன்றுமளவுக்கு . கண்கள் வெள்ளாரங்கல் போல இருந்தன.

வந்தபடியே பந்தலை ஏறிட்டுப் பார்த்தார். ” மூணுக்கு அரைபாகம் ஏந்தல் ” என்றார். எனக்கு ஆச்சரியத்தில் சொல்நின்றுவிட்டது. அத்தனை நேரம் சிக்கலாகக் கணக்குபோட்டு நான் அதைக் கண்டுபிடித்திருந்தேன்.

” என்னவாக்கும் கணக்குதப்பு ஆசாரியே ?” என்றேன்

“கணக்கில தெற்றில்ல . இந்த ஊரு காற்று ரெண்டு திக்கு சுற்றியடிக்குத காற்றாக்கும். மேக்க மூணு மலை ஏண்கோணிச்சு இருக்குல்லா…”

எனக்கு ஆறுதல் ஏற்பட்டது. “அதுக்கு இப்ப என்ன செய்தது?”

“பந்தலைக் கொஞ்சம் விரிச்சு கெட்டணும். ஒரு குட்டிப்பந்தலை அந்தால கெட்டி அதை இதோட சேத்தாப்போரும். இங்க காற்று தள்ளும்பம் அங்க அந்தப் பந்தலில அடிக்குத காற்று ஏந்திக்கிடும்”

ஒரு கணம் எனக்குப் புரியவில்லை. ஆசாரி தரையில் கோடுபோட ஆரம்பித்ததுமே புரிந்துவிட்டது. அப்படியே கை கூப்பிவிட்டேன். அத்தனை பெரிய குருநாதன். ஒரு தட்டில் நூறு ரூபாயும் பழங்களும் வெற்றிலையும் வைத்து வணங்கினேன். ஆசாரிக்குக் கண்கலங்கிவிட்டது.

”ஆசாரிக்கு என்ன வயசாச்சு ? ”என்றேன்

“அதாச்சு, தொண்ணூறுக்கும் மேல”

”இங்க ஆருகூடயாக்கும் தாமஸம்?”

”எனக்கு ஆருமில்ல. கோவிலில உள்ள தெக்கேப்பொர நான் கெட்டினதாக்கும் எழுபது வருசம் முன்ன. அதில இருக்க பெரசரண்டு ஏமான் சொல்லியிருக்காரு. ஊருக்குள்ள பலரும் சோறு தருவாவ. நமக்கு ஒருநேரம் கஞ்சி உண்டெங்கி போருமில்லா…”

ஆசாரி பந்தல்கட்டும் நாள்முழுக்க என்னுடன் தங்கினார். பெரியவிஷயங்கள் முழுக்க எளிமையான தீர்வுகள் கொண்டவையே என்பதை அவர் மூலம்தான் அறிந்தேன். அவருடன் ஒப்பிடுகையில் என் பொறியியல்கல்லூரிப் பேராசிரியர்கள் எல்லாம் கத்துக்குட்டிகள். ஆசாரி ஒரு பாயில் வெற்றிலைபாக்கும் செம்பில் மோரும் கருப்பட்டியுமாக உட்கார்ந்திருக்க நாங்கள் பந்தலை எழுப்பினோம். எட்டாம்நாள் முத்து அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. நான் என் மனதில் இருந்த ஆவலை மெல்ல எழுப்பினேன்

“இங்க கிடக்குததுக்கு ஆசாரி எனக்க கூட வரணும். நான் தெய்வம்போல வைச்சுக் கும்பிடுதேன்”

“போட்டு மக்கா. நுப்பதுவருசம் இப்டியே போச்சு… இனி ஒண்ணோ ரெண்டோ வருயம். …அது இப்டியே போட்டு…”

“அதுக்கில்ல…. இனி ஆசானை இப்டி இங்க விட்டுட்டுப் போனா எனக்கு மனசு ஆறுமா? “

“நீ நல்லவண்டே… ”என்றார் ஆசாரி. ” உனக்கு எனக்க அனுகிரகம் உண்டுலே…”

“அப்ப எனக்ககூட வரணும்…”

“இந்த மண்ண விட்டு நான் வரமாட்டேண்டே . நான் இங்க சாகணும்…”

“இங்க யாரு இருக்கா உங்களுக்கு?”

“இங்க ஆருமில்ல. ஆனா நல்ல பல ஓர்மைகள் இருக்கில்லா…” ஆசாரி பெருமூச்சுவிட்டார்.

”ஆச்சி நினைப்போ?”

“ஆமாண்ணு வை”

“அவங்க போயி பல வருசம் இருக்குமே… “

“ஆமா”

“ஆசையா இருந்தியளோ ?”

” ஆமலெ. அவ ஆசாரிச்சி இல்ல. கொல்லத்தி . நான் எடைக்காநடைக்கு வேலையாப் போனப்ப அவளைக் கண்டு ஆசைப்பட்டு கெட்டி கூட்டினேன். எனக்க ஆசாரிக்குடி எட்டும் சேந்து என்னை சாதியவிட்டு வெலக்கினாவ. ஆத்தோரம் குடிலுகெட்டி நாங்க ரெண்டாளும் இருந்தோம். ஒருத்தர ஒருத்தர் நிறைச்சுக்கிட்டு. மக்கா நல்ல சினேகம்ணாக்க என்னலே? திற்பரப்பு அருவிக்க கீழ வச்ச சொம்புல்லா சினேகிச்சுத மனசு? அருவி விழுத வேகத்தில செம்பு பொங்கி ஒருக்காலும் அது நெறையாது. அதாக்கும்…ம்ம்ம் ஒரு நுள்ளு போயிலெ எடுடே”

அதன் பிறகு அவர் பேசவில்லை.

**

மூன்றாம்நாள் பந்தல் எழுந்துவிட்டது. அன்று விடியற்காலையில் நான் சற்று விழித்தபோது ஆசாரி தூங்காமல் இருப்பதைப் பார்த்தேன்.

“என்ன மூத்தாசாரியே?” என்றேன்

“மக்கா நீ என்ன தப்பா நினைக்கப்பிடாது… நான் இந்த ஊரை விட்டுவரப்பிடாது…அதாக்கும்” என்றார்.

“செரி அதுக்கிப்ப என்னா? நான் உங்களுக்கு இங்க வேண்டிய ஏற்பாட்ட செய்தேன்…வாரம் ஒருக்கா வந்து பாக்குதேன்..” என்றேன்.

“நீ குருத்துவமுள்ள பயல்டே” என்றார் ஆசாரி. பெரிய மூச்சுடன் “ஒரு கத கெடந்து துள்ளுது மனசில…ஒரு யட்சி கத…பலசமயமாட்டு கேட்ட கதைண்ணு வை… “

“சொல்லுங்க… கருக்கிருட்டு..தாழம்பூமணம். யட்சி கத கேக்குத நேரமுல்லா ? “

ஆசாரி பெருமூச்சுவிட்டு வெற்றிலையைத் துப்பிவிட்டு சொல்ல ஆரம்பித்தார்.

**

நரிக்கோட்டுவீடுண்ணாக்கும் பேரு. நல்ல உசந்த வம்சம். பழைய மகாராஜக்களுக்க ரெத்தம் கொறெ உண்டுண்ணு வை. அதில எளமொறத் தம்புரானுக்க பேரு கேசவப் பெருமாள். அந்த வம்சத்துக்கே நல்ல எலுமிச்சம்பழ நெறமும் உருட்டுத்தூணுமாதிரி தேக வாக்கும் உண்டு. கேசவன் ஆளு ஒரு மன்மதன்னு வை. அவனைப் பாத்து ஆசைப்படாத பெண்டுகுட்டிக அண்ணைக்கு ஊருக்குள்ள இல்ல. அவனை சம்பு ஆசாரீண்ணு ஒருத்தர் வரைஞ்ச படம் இப்பமும் பழைய கோவிலுக்குள்ள கோபுர வளைப்பில உண்டு. அப்பிடிப்பட்ட பேருகேட்ட அழகன்.

அந்தமாதிரி எட்டும் திகைஞ்ச அழகு ஆணுக்கானாலும் பெண்ணுக்கானாலும் வரப்பிடாது. வந்தா தெய்வங்க சும்மா விட்டுராது. இப்ப நல்ல பித்தளைப்பானைமாதிரி பூசணிக்காயி நம்ம தோட்டத்தில வெளைஞ்சா என்ன செய்யிதோம் ? . நேரா திருவனந்தபுரத்துக்குக் கொண்டுட்டுப் போயி மகாராஜாவுக்கு கானிக்கை வைக்குதோம் இல்லியா? அதுமாதிரீண்ணுவை.

கேசவன் திற்பரப்பு திருவாதிரை உத்சவத்துக்குப் போயிட்டு கதகளி கண்டுட்டு கூட்டுகாரன்மார்கூட சேந்து ராத்திரி நிலாவில தெக்கன்காட்டுவழியா வந்திட்டிருந்தான். தெக்கன்காட்டுவழி இண்ணைக்கு ஆளும் கோளுமா கெடக்கு. அண்ணைக்கு திற்பரப்பு விட்டா பின்ன பொன்னுமனை வரை குற்றிக்காடும் பனைமரமும் மட்டும்தான். சாதாரணமா ஆளுகள் அந்தவழியா மத்தியான்னமும் ராத்திரியும் நடமாடுறது இல்ல. ஆனா ரெத்தம் எள ரெத்தமில்லா. கள்ளும் கொஞ்சம் மோந்தியிருப்பாவண்ணு வை. பேசிட்டே வந்தாவ.

அந்தவழியில காளபைரவீண்ணு ஒரு யட்சி உண்டு. தெக்கன்காட்டில ஒரு பெரிய செம்மண் பொற்றை உண்டு. அதுக்கு மேல ஒரே ஒரு பனைமரம். பாத்தாலே தெரியும் யட்சிப்பனைண்ணு . அப்டி ஒரு ஊற்றம், அப்டியொரு உயரம். அந்தக் கரும்பனைமேல அவளுக்க தங்கல். யட்சி அண்ணைக்கு உலாத்துத நேரம். அவ ராக்குருவி போல மாறி பறந்து குற்றிக்காட்டில அலையிறப்ப இவனைப் பாத்திட்டா. ஆசைகேறிப்போச்சு. அப்டியே சரீரம் சிலுத்துப்போனாளாம்.

சிரிப்புச் சத்தம் கேட்டு ஒரு கூட்டுகாரன் நடுங்கிப்போயி ‘ கேளுங்கடா யட்சி சிரிக்கா ‘ ண்ணு சொன்னான். மத்தவனுக ‘மடப்பயலா இருக்கியே அது ராக்குருவிலே’ ண்ணு சொல்லி குருவியக் காட்டினாங்க. குருவி அவங்க பின்னாலயே சிரிச்சிட்டே வருது. அண்னைக்கு ஊர் எல்லைவரை வந்து யட்சி ஒரு மரத்தில தங்கிட்டா. ஊருக்குள்ள அம்மன் இருக்கதனால வரமுடியாது அவளால.

மூணாம்நாள் கேசவன் விதைப்பு பாக்க வயலுக்கு போறநேரம் யட்சி எதிரில வந்தா. தறவாட்டு நாயர் ஸ்திரீ மாதிரி முண்டும் கச்சைமுறியும் சரிகை நொறியும் கட்டி காதில தக்கையும் மூக்கில புல்லாக்கும் சரப்பொளிமாலையும் போட்டுட்டுவாறா . அப்டி ஒரு அழகான பெண்ணை அவன் அதுக்குமுன்னால பாத்ததே இல்லை. அவளைப் பாத்து பேச்சு இல்லாம ஆயி நின்னான். பிறகு உன் பேரு எண்ணான்னு கேட்டான். அவ வெட்கப்பட்டுகிட்டே பேரைசொன்னா. காளஸ்தலம்னு அவ வீட்டுபேரு. காளன்நாயர்னு அப்பா பேரு. அவபேரு காளி . இங்க அம்மன் கோவிலிலே நோம்பிருக்க வந்தாளாம். பின்ன என்ன, கதை அப்டித்தான். கேசவன் அவ மேல கிறுக்குபிடிச்சவனா ஆனான். மறுநாளும் அங்கபோயி அவளைப் பாத்தான். என் வீட்டுக்கு வாண்ணு கூப்பிட்டான். நீங்க என் வீட்டுக்குவந்து எங்க அப்பா அம்மாகிட்டே பேசி சம்மதம் வாங்குங்கண்ணு யட்சி சொன்னா. கேசவனும் சரீண்ணு சொன்னான்.

யட்சி அவளுக்க வீடு தெக்கன் காட்டுக்கு அந்தால ஒரு பொற்றை மேல உள்ள ஏழுநெலைமாளிகைன்னு சொன்னா. அவருக்கு ஏழுமலைக்கு மாடம்பி ஸ்தானம் உண்டு. அவரை அப்டி சாதாரணமா பாக்க முடியாது. பூர்ண அமாவாசை அண்ணைக்கு ராத்திரி அவர் குலதெய்வத்துக்கு பூசைபோட வருவார். அப்ப வந்தா அவரைப் பாக்கலாம்னு சொன்னா. அப்பாவைப்பாத்து சொல்லி அனுமதி வாங்கின பிறகு உங்க விட்டிலே சொன்னாபோரும்னு சொல்லிப்போட்டா.

இந்தமடையனும் யாரிட்டயும் சொல்லாம, கூட்டுகாரனுகளையும் கூட்டாம, அம்மாவாசை அண்ணைக்கு ராத்திரி அவளுக்கு ஒரு நகையும் அவ அப்பனுக்கு ஒரு குப்பி துரைகள் கொண்டுவார பன்னீர்ச்சாராயமும் கொண்டுட்டு போனான். போகும்போதே இது நமக்கு பழக்கமான மலைப்பாதையாக்குமே இங்க பொற்றைமேல ஏழுநிலைமாடம் ஒண்ணும் இல்லையேண்ணு நினைச்சிட்டே போனான். ஆனா பாதிவழி போகும்போது ஒரு செம்பகமரத்தடியில அவளைப் பாத்துட்டான். பூத்த கொன்றைமாதிரி அவ அப்டி நின்னுட்டிருக்கா. அழகுண்ணா அப்டி ஒரு அழகு. எல்லாத்தையும் மறந்திட்டான். ஏன் ராத்திரியில நிக்கேண்ணு கேட்டான். நீங்க வழிதவறப்பிடாதேண்ணு நிக்கேன்னு சொன்னா. அப்டியே கண்கலங்கிட்டானாம். அவளை தொடப்போனா அவ சிரிச்சிட்டே இப்ப என்ன அவசரம் அப்பாகிட்டே கேளுங்கண்ணு சொல்லியிருக்கா…

பொற்றைமேல ஒரு பெரிய ஏழுநிலைமாடம் பந்தமும் வெளக்குமா தகதகண்ணு தெரிஞ்சிருக்கு. அதுதான் எனக்க வீடு , வாங்கண்ணு கூட்டீட்டுப் போயிருக்கா. படியெல்லாம் பவுன்போல மின்னுது. எங்க பாத்தாலும் ஐஸ்வரியம். இப்டி ஒரு மாளிகையை யாருமே இதுவரை சொல்லலியேண்ணு நினைச்சிருக்கான். மனசில ஒரு சின்ன பதற்றம்.

அவ உள்ள கூட்டீட்டுப் போயி அவளுக்க அப்பனையும் அம்மையையும் காட்டியிருக்கா. ரெண்டாளும் அரண்மனைக்குள்ள பள்ளியறையில உக்காந்திருக்காங்க. அப்பாவும் அம்மையும் நல்ல கறுப்பு. ‘ உன் அப்பனும்அம்மையும் ஏன் கறுப்பா இருக்காங்க ? ‘ ண்ணு கேட்டிருக்கான். ‘கறுப்பு வெறகில சிவப்புத்தீ எரியப்பிடாதா ?’ ண்ணு கேட்டு அவ சிரிச்சாளாம்.

பக்கத்தில போனவன் என்னமோ ஒரு யோசனை தோணி அவ அப்பா அம்மாவைக் கும்பிட சட்டுண்ணு கீழே குனிஞ்சிருக்கான். அவ அப்பாவுக்க ரெண்டுகாலிலயும் குளம்பு இருந்திருக்கு. அம்மாவுக்க ரெண்டுகாலும் பண்ணிக்காலு . அலறிக்கிட்டே சாடி எந்திரிச்சானாம். அப்பா எருமைமாடன். அம்மா வராஹிணியம்மன். ரெண்டுபேரும் சுயரூபத்தில தெரிஞ்சாங்க. மாடனுக்கு தலையில வளைஞ்ச எருமைக்கொம்பு ,பெரிய எருமைக்காது, எருமைக்கண்ணு. பண்ணியம்மனுக்கு மூக்கு நீண்டு காது ரெண்டும் தொங்கி கீழ்த்தாடையில ரெண்டு வெள்ளித்தந்தம்.

கேசவன் அலறிக்கிட்டே திரும்பி ஓடினா எதுக்கால காளபைரவி நிண்ணுட்டிருக்கா. கரும்பனை வெடலிபோல தேகம். வெடலிப்பனைஓலை மாதிரி கூந்தல். பன்னருவா மாதிரி பல்லு. பயங்கரமா சிரிச்சிட்டு அவனைப் பிடிக்க வந்தாளாம். அவன் படியைப் பாத்து ஓடினா அங்க அப்டி ஒண்ணும் இல்ல. அவனிருக்க இடம் நல்ல உச்சிக்கரும்பனைக்க மேல.

அருவிவிழுதது மாதிரி சிரிச்சிட்டு யட்சி அவனப் பிடிக்கவருதா. அவளுக்க ரெண்டுகையும் நிலைக்கள்ளி மாதிரி கிளைபிரிஞ்சி நாலாகி எட்டாகி பன்னிரண்டாகி விரிஞ்சிட்டே வருது. ஆனா பக்கத்தில வந்தாலும் பிடிக்கமுடியல்ல. சங்கரன் கிட்டே அவனுக்க குடும்பத்தில குழந்தை பிறக்கும்போதே ஜெபிச்சுகெட்டுத தாயத்து இருக்கு இடுப்பில. யட்சி கண்ணிலேர்ந்து தீ பறக்குதாம். அதை அவுத்துப் போடூண்ணு நிலைவிளிக்கா. வாயத்திறந்து முதலைப்பல்லைக்காட்டி பயமுறுத்துதா. நீ இந்த பனைமேலேருந்து கீழே போக முடியாது. உன்னை விடமாட்டேன். எத்தனை வருசமானாலும் சரி. மரியாதையா தாயத்தை கழட்டுங்கிறா. இவன் மாட்டேங்கிறான்

யட்சி அவனை ஒரு பனைவண்டா மாத்தி ஒரு நுங்குக்கு உள்ள வைச்சிட்டா. அவனுக்கு அது தெரியாது. ஒரு அறைக்குள்ள மாட்டிக்கிட்டமாதிரித்தான் அவனுக்குத் தெரியுது. தாயத்தை அவுத்திருண்ணு அவ. அவுக்கமாட்டேனு அவன். ஏழுநாள் தர்க்கம். அவ போடாத வேஷம் இல்ல, காட்டாத நாடகம் இல்ல. குலஸ்திரீமாதிரி வந்து நிண்ணு கொஞ்சி மயக்கினா ஒருநாள். முலையும் இடுப்புமா மோகினியா வந்து கண்ணுகாட்டி பசப்பினா ஒருநாள். மூணாம்நாள் மாலைமாலையா கண்ணீருவிட்டாள். அம்மையா வந்தா, சகோதரியா வந்தா. ஒண்ணும் நடக்கலை. இவன் ஆரு ஆளு? இவனுக்க சீவனுல்லா அதில இருக்கு?

எட்டாம் நாள் அவ வந்து சமாதானம் பேசினா. அவனை அவ விடமாட்டா. அவளால அவனை அடுக்கவும் முடியல்ல. முழுங்கமுடியாத தவளைய கவ்வின பாம்பு. ரெண்டும் சாவணும் ,அதாக்கும் விதி. என்ன செய்யலாம். அவ சொன்னா ‘ ஒரு வழி இருக்கு. நீ என்கூட ஒருவருஷம் குடும்பம் நடத்தணும். ஒருவருஷமும் என்னை நீ மனசாலயும் உடம்பாலயும் சமாதானம் செய்யணும். ஒருவருசம் நீ என்னைய சமாதானம்செய்தா உன்னை நான் விட்டிருவேன். நான் உனக்க அடிமை. உன் சொல்லுகேட்டு நீ இருக்க எடத்தில இருப்பேன். ஒருதடவை என் மன்சடங்கல்லண்ணா செய்யல்லண்ணா நான் உன்னை கீறித் திம்பேன். இதில எள்ளுபோலகூட கள்ளம் சொல்ல மாட்டேன். நான் சத்தியம் செய்தேன். நீ எனக்கு அந்த தாயத்தைக் குடுக்கணும், சம்மதமா ? ”ண்ணு கேட்டா.

அவனுக்கும் வேற வழி தெரியல்ல. ‘நீ சத்தியம் செய்யி ‘ ண்ணான் .அவ மூச்சை பனம்பாளையில ஊதி தீயுண்டாக்கி அதை மூணுதடவை வலம்வந்து கையடிச்சு சத்தியம் செய்தா. அவன் பதிலுக்கு அந்த தாயத்தை அவ கழுத்தில கெட்டினான். அவ உடனே அழகான பெண்ணா மாறினா. ரெண்டாளும் வெளிப்பார்வைக்கு ரெண்டுவண்டாக்கும். ரெண்டாளும் இருக்க இடம் ஒரு நுங்கு .ஆனா அவன் அறியியது பளிங்கில செய்த மூணு அறையுள்ள அரண்மனையில அவகூட இருக்கதாட்டு.

என்ன இருந்தாலும் அவனுக்கு அவளை மனசுக்குள்ள பிடிக்கும்லா. சினேகிச்ச பெண்ணு. பாக்க அம்பிடு ஒரு அழகு. ஒரு பெண்ணை சினேகிச்சு கைக்குள்ள வைச்சிருக்கது தோளும் திடமும் உள்ள ஆம்பிளைக்கு ஒரு பெரிய காரியமாண்ணு அவனுக்கு நெனைப்பு. அவளை எப்டி நெறைய வைக்கிறதுண்ணுதான் எப்பமும் மனசில நினைப்பு. அவளுக்கும் அவமேல ஆசைல்லா. அவனும் நிறைஞ்ச ஆளு. அப்பம் ரெண்டாளுக்கும் வெளி லோகமே தெரியாது. அவன் கண்ணசைஞ்சா அவளுக்கு புல்லரிக்கும்ணாக்க பாத்துக்க…

நாளுக்கு நாப்பது வட்டம் அவன் அவளுக்க அழகை புகழ்ந்து பேசுவான். அவன் சொல்லுத ஓவ்வொரு சொல்லும் அவளை பூமரத்தில காத்துபட்டமாதிரி சிலுக்கவைக்கும். நாலஞ்சு நாள் கழிஞ்சப்பம் அவனுக்கு தெரிஞ்சுது அவளுக்க சந்தோஷம் கொஞ்சம் குறையுதுண்ணுட்டு. காரணம் அவன் புகழுதது ஒரே மாதிரி இருக்கு . செரீண்ணு அதை இன்னும் மாத்தி சொன்னான். அவளுக்கு மறுபடியும் சந்தோஷம். அடுத்தவாரம் மாத்திச் சொன்னான். இப்பிடி புதிசு புதிசா மாத்திட்டே இருந்தான். மனுஷனுக்கு பெண்ணைப்பத்தி பேசும்ப நாக்கு ஆயிரம் நினைப்பு மூவாயிரம்லா?

ரெண்டு மாசம் கழிஞ்சப்ப புதிசாட்டு சொல்ல ஒண்ணுமில்லண்ணு தெரிஞ்சுது. உடனே அவளுக்ககூட கொஞ்சம் செல்லச் சண்டைபோட்டான். என்னமாம் ஒண்ணும் ரெண்டும் பேசி சண்டைவந்திரும். ‘என்னை தின்னுடீ என்னை தின்னுடீ நீலீ ‘ ண்ணு நெஞ்சை திறந்துட்டு முன்ன நிப்பான். அவளுக்கு திங்க முடியுமா? கனி விளையல்ல இல்லியா? அவ மனசுடைஞ்சு போயி அழுவா. ‘நான் உங்களுக்க தாசில்லா, இப்டி சொல்லலாமா’ ண்ணு அழுவா. ‘என்ன இருந்தாலும் நீ யட்சி , நான் மனுஷன் ‘னு இவன் சொல்லுவான் . ‘நான் இப்பமே யட்சிப் பதவிய விட்டுட்டு வந்திடுதேன் ‘ னு அவ சொல்லுவா. அப்டியெ போவும் பாத்துக்கோ. ரெண்டாளு மனசிலயும் சிரங்கு சொறியுத சொகம். அதுக்கு ஒரு புள்ளி இருக்கு. அங்க வந்ததும் இவன் போயி அவகிட்டே விழுவான். ரெண்டாளும் கெட்டிப்பிடிச்சு கொஞ்சநேரம் கண்ணீரு விடுவாங்க. மனசும் கெடந்து இனிக்கும். பின்ன முத்தமும் கெட்டிப்பிடியும் எல்லாம் . அப்டி கொஞ்சநாள்

ரெண்டுமாசம் கழிஞ்சா இந்த நாடகமே அலுத்துப்போச்சுண்ணு அவனுக்குத்தெரிஞ்சுது. சண்டை தொடங்கினா சிலசமயம் நீண்டு நீண்டு பெரிய சண்டை மாதிரி ஆயிடும். நாய் பொய்கடி கடிக்கும்பம் சிலசமயம் செரியான கடிபெட்டு சண்டை தொடங்கிடுமில்லா அதுமாதிரி ஆயிடுமோண்ணு பயந்தான். ஒருக்கா அவங்க சண்டைபோட்டுட்டு இருக்கும்பம் ஒரு இமைக்கும் நேரத்தில அவ மேல யட்சி சொரூபம் வந்து போறதைப் பாத்திட்டான். வாயில வீரப்பல்லு மின்னி மறைஞ்சுது. நடுங்கிட்டான். ஆகா, மாயையில இல்லா சிக்கி கெடக்கோம், இவ யட்சில்லாண்ணு நினைச்சான். கொடலு கேறி வாயில அடைச்சுப்போட்டுது

மறுநாள் ஒரு வழி தெரிஞ்சுது. அவகூட இருக்கும்பம் தன்னை சின்னப்பிள்ளையா நினைச்சுக்கிட்டான். ‘நீ என் அம்மை ! என்னை கொல்லணுமானா கொல்லு ‘ண்ணு சொல்லி முலைநடுவில முகம் பொத்திகிட்டான். அவளும் பிள்ளையமாதிரி அணைச்சுகிட்டா. பிறவு கொஞ்சநாளைக்கு அது போரும்ணாச்சு. அவ இவனை மகனை மாதிரி வெரட்டுததும் சீராட்டுததும் இவன் அவளுக்க கிட்ட கொஞ்சுறதும் மிஞ்சுறதுமா ரெண்டாளுக்கும் காலம்போற போக்கே தெரியல்ல.

கொஞ்சநாளில அவனுக்கு ஒரு காரியம் தெரிஞ்சுபோச்சு. அம்மைண்ணு சொல்லி அவளை அவன் தன் மேல ஏத்திவைச்சுகிட்டான். அவ கிட்ட அவன் கோவிச்சுக்கிட முடியாது. என்ன சொன்னாலும் அவ அவனை சின்னப்பிள்ளையாட்டு நினைச்சு அதட்டி பிறவு கெட்டிப்பிடிச்சு கொஞ்சி செரியாக்கிப்போடுவா. பிறவு கெவுனிச்சான். அவளுக்கு அவன்கூட இருக்கும்பம் நெனைப்பு வேற போறத. சேந்திருக்கும்ப அவ கண்ணில யட்சிக்க ஒளி வந்திட்டு போறத. அய்யோ சங்கதி கைமிஞ்சியில்லா போச்சு, இவ யட்சியில்லாண்ணு அவனுக்கு வெப்ராளமாயிப்போச்சு.

ஒருநாளைக்கு அவ இவன்கூட இருக்கும்ப ஏங்கியும் மனசு நொந்தும் இருக்கத பாத்திட்டான். அவனுக்கு மனசில தீப்பிடிச்சுப்போட்டு. அவ இவனுக்க நகத்தை வெட்டிகிட்டு இருக்கா அப்ப . ஒருநகம் கொஞ்சம் பிய்ஞ்சுபோச்சு. ‘ சீ நீலி ‘ எண்ணு சீறிட்டு எந்திரிச்சு அவளை தலைமுடியை சுத்திப்பிடிச்சு அடிச்சு நொறுக்கிட்டான். அவ அய்யோ அய்யோண்ணு அலறித்துடிக்கா. அப்டியே விட்டுட்டு அவன் போய் உக்காந்திட்டான். இருந்து அழுதப்ப அவளுக்க மனசில ஒரு நிறவு. இவன் போயி அவளைக் கெட்டிப்பிடிச்சு சமாதானம் செய்தான். ரெண்டாளுக்கும் கெட்டிப்பிடிச்சு அழுதப்ப ஒரு கனிஞ்ச சமாதானம். பிறகு இதாக்கும் போக்கு. அடியும் அழுகையும் , பிறவு சமாதானமும். மனுஷமனசுக்க கதை அப்டியாக்கும், என்ன ?

அதுக்குப்பிறவு அவன் கண்டுகிட்டான், அவளை ஜெயிக்கிறதுக்கு உள்ளவழி என்னாண்ணா அவள உதாசீனம் செய்றதுதான்னுட்டு. அவள ஏறிட்டும் பாக்கமாட்டான். அவளைப்பத்தி நினைக்கமாட்டான். அவகூட அவனே போயி பேச மாட்டான். பேசினாலும் ஒத்தவரி ரெட்டவரி. அவளுக்கு அவனுக்க உதாசீனத்தை பொறுக்கமுடியல்ல. பூலோக சுந்தரியா வந்து நிப்பா. கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொஞ்சிப்பேசுவா. கண்ணீரு விட்டுட்டு அவனுக்காட்டு காத்து நிப்பா. அவ நிக்கது அவனுக்குத்தெரியும். செரி , இதுதான் இவளை விடாம இருக்கதுக்கு வழிண்ணு விடைப்பா இருப்பான். அவ ஏங்கி ஏங்கி அவனுக்க கிட்ட பேசும்ப சிலசமயம் ஒரு புன்னகை காட்டுவான். ஒரு நல்ல சொல்லு சொல்லுவான். அப்டியே அவ பூத்துப்போவா. அவன் அவளை கும்பிட்டு கொண்டாடின நாளிலகூட அவ அப்டி பூத்துப்பொலிஞ்சதில்ல.

இப்டி முந்நூறு நாளாச்சு. எல்லாம் செரியாப் போறப்ப காலம் போற போக்கு கண்ணில விழாதுல்லா ? அதாக்குமே மனுஷமனசுக்க ரீதி ? நுங்குக்கு உள்ள அவன் ஒரு அறையில இருப்பான். அவ ஒரு அறையில இருப்பா. ரெண்டாளும் சந்திக்கிறது இன்னொரு அறையில. ஒருநாளைக்கு இந்தமாதிரி அவனுக்க அறையிலேருந்து மத்த அறைக்குப் போறான். அவ வரல்ல. மத்தநாளில அவனுக்க கால்சத்தம் கேட்டா சாடிவந்துபோடுவா. இவன் நிண்ணான்,நடந்தான். வரல்ல. செரி இண்ணைக்கு அவளுக்கு ஒரு நல்ல நாளாட்டு இருக்கட்டும்ணு ஆசையோட அவ அறைக்குள்ள போனான்.

அறையில இருட்டு. அவ ஓரமா கால்முட்டில முகம் சேத்து உக்காந்துட்டு இருக்கா. தலைமுடி தரையெல்லாம் விரிஞ்சு நிறைஞ்சிருக்கு. வகிடு பவுன்கோடுமாதிரி தெரியுது. அவ நிழலு சுவரில விரிந்து நிக்குது. அடுக்க போயி அவன் ‘காளீ ‘ண்ணு கனிஞ்சு கூப்பிட்டான். அவ தலை நிமுத்தல்ல. மறுபடியும் கூப்பிட்டான். மெள்ளமா தொட்டுக் கூப்பிட்டான். அவ தலையை நிமுத்தினா. முகமில்ல. மண்டைஓடு வெள்ளென சிரிச்சிட்டிருக்கு. கைகால் எல்லாம் வெள்ளெலும்பு. பின்னால ஒரு பயங்கரச்சிரிப்பு . திரும்பினா அவளுக்க நிழலு காளபைரவியா நின்னுட்டிருக்கு. ‘ நாந்தான் நிஜம். அது என் நிழலு ‘ ண்ணு சொல்லி சிரிச்சுட்டு கைவிரிச்சு அவனை பிடிக்கவருது. ‘ எனக்கு இப்ப நிறைவில்ல. அடக்கு உன்னால முடிஞ்சா என்ன அடக்கு’ ண்ணு சொல்லுதா.

அவன் ‘என்னைய விட்டுரு ‘ண்ணு அழுதான். ‘இனி என்ன மிச்சம் ? இனி என்ன மிச்சம் ? ‘ ணாக்கும் அவ கேக்குதது. அவனுக்குத் தெரிஞ்சுப்போட்டு இனி ஒண்ணும் மிச்சமில்ல, அம்பிடுதாண்ணுட்டு.

கெதிகெட்டு அவன் அலறுதான் தப்பி ஓடுதான். நுங்குக்குள்ள என்னத்த ஓட ? சுத்திச்சுத்தி அவமுன்னாலத்தானே வரணும்.? அவனை ஓடவிட்டுபிடிக்கதில அவளுக்கும் ஒரு சந்தோஷம். எலிய பூனை விட்டுப்பிடிச்சுத்தான் திங்கும். ‘ குடுடா ! உனக்க நெஞ்சைக் குடுடா’ ண்ணு கேக்குறா. இடி மாதிரி சத்தம் போடுதா. கருமேகம் மாதிரி சுத்திப்போட்டா. மின்னல் மாதிரி சிரிக்கா. அவ எப்டிப்பட்டவண்ணு அப்பதான் தெரியுது. அவளை அப்ப பிடிச்சு நிப்பாட்ட பிரம்மாவிஷ்ணுசிவனுக்கும் முடியாது.

அவன் களைச்சுப்போயி காலு தளந்து கீழெ விழுந்ததும் அவன் தொடைமேல காலைத்தூக்கி வைச்சு சவிட்டிப்பிடிச்சு கையை நீட்டினா . கையில ஓரோ நகமும் ஒரு கூர்மையான கத்தி. அப்டியே நெஞ்சைப் பிளந்து அவனுக்க நெஞ்சுக்குருத்த பிய்ச்சு எடுத்து வாழைப்பழம் திங்குத மாதிரி சாற உறிஞ்சி உறிஞ்சி திங்குதா அவ. அதை அவன் பாத்தான். அவ அவனுக்க நெஞ்சைப் பிளந்தப்ப அவனுக்கு அப்டி ஒரு சொகம். கண்ணெல்லாம் சொக்குது. அவ அவன் இருதயத்த திங்குறப்ப அவனுக்கு குட்டி முலகுடிக்கிறப்ப அம்மைக்கு வாற மாதிரி ஒரு சொகம்.

அவனுக்க எல்லும் தலையோடும் யட்சிப்பனையடியில கெடக்குதத குறெநாள் கழிஞ்சுதான் கண்டாவ. அவனுக்க துணியை வைச்சாக்கும் கண்டுபிடிச்சது. அதையெல்லாம் பெறுக்கி எடுத்து கொண்டுவந்து கர்மங்கள் செய்து எரிச்சாங்க.

ஆத்தோட்டத்தில போட்டாக்க அவனுக்க எல்லு என்ன செய்தாலும் தண்ணியில முங்கல்ல . சருகுசுள்ளிமாதிரி மெதக்கும். அதாக்கும் யட்சி திண்ண எல்லுக்க குணம். ஆத்மாவ உறிஞ்சிப்போடமாட்டாளா அவ? கரகாணாக் கடலில போனாலும் ஆழத்தைக் காணமுடியாம அது அலையில் தவிக்கும்லா? ஏது?

பண்டுமுதல் கேட்ட கதையாக்கும். அந்தக்காலத்தில இப்டி ஓரோ கதைக. அதுபோட்டு. வெத்திலயுண்டா?

*********

ஆசாரி மீண்டும் வெற்றிலைபோட ஆரம்பித்தார்

“இப்பம் என்ன சட்டுண்ணு ஒரு யட்சிக்கதை நினைப்பு ?”

“இல்லமக்கா…இந்த ஏழுநெலைப்பந்தல் கண்டப்ப எனக்கு யட்சிக்க ஏழுநிலைமாடமாக்கும் நினைப்புவந்தது. ஒரு மடத்தனம் . போட்டு…”

”நல்ல நினைப்பு. அமங்கலமா ”. என்றேன்

”செரி விடுடே. கெழட்டு சென்மமுல்லா…”

நான் கொல்லத்தி ஆச்சியைப் பற்றி அன்று காலை ஊர்க்காரன் ஒருவன் சொன்னதைப்பற்றி கேட்கலாமென்று எண்ணினேன். கிழவரைப் புண்படுத்த விரும்பாததனால் அடக்கிக்கொண்டேன்

++++++++++++++++++++++++++++

1] பட்டும் வளையும்: திருவிதாங்கூர் மன்னர்கள் சிறந்த சேவைகாக அளிக்கும் பட்டுச்சால்வையும் கங்கணமும்
2] மாடம்பி : நிலப்பிரபு. ஒரு பகுதியின் வரிவசூல் உரிமை உடையவர்
3] கைப்பள்ளி: தென்னைமரம் சம்பந்தமான வேலைகளைச் செய்யும் சாதியினர்
4]ஓர்மை : நினைவு
5]முண்டு:வேட்டி

[ கிழக்கு வெளியீடான பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் தொகுப்பில் இருந்து]

முந்தைய கட்டுரைபொன்முடி
அடுத்த கட்டுரைகாந்தியும் விமானமும்