அண்ணாச்சி – 4

1

 

ஜெயசேகரன் ஆஸ்பத்திரியில் பேசிக்கொண்டிருக்கும்போது அண்ணாச்சி சட்டென்று கண்ணீர் விட்டு அழுதார்.” எதையோ நம்பி என்னமோ செஞ்சாச்சு…குடும்பத்த காப்பாத்தல்ல. பிள்ளையளுக்கு ஒண்ணுமே செய்யல்ல. ஒரு நல்ல துணி எடுத்து குடுத்ததில்லை. நல்லா படிகக் வைக்கல்லை…ஒண்ணுமே செய்யாம போறேன்..” ஏற்கனவே பலமுறை கேட்ட அழுகைதான். ஆனால் அப்போது கிட்டத்தட்ட மரணப்படுக்கையில் கேட்டபோது வயிற்றைக் கலக்கியது.

பிழைத்துக்கொண்டபின் அவர் சென்னை செல்லவில்லை. விருப்ப ஓய்வு கொடுத்தார். கண் எதிரிலேயே அவர் மீண்டு வந்தார்.  புல் கருகிப்போயிருந்தாலும் ஒரே மழையில் மீள்வது போல என்று பட்டது. அவரை மீட்டது இரண்டு விஷயங்கள், ஒன்று காலச்சுவடில் அவர் பார்த்த வேலை. இரண்டு, மீன். காலச்சுவடில் அவர் அவருக்குப் பிடித்தமான எம்.எஸ் போன்றவர்களுடன் சேர்ந்து வேலைசெய்தார். அவர் விரும்பியது போலவே சிற்றிதழ் வேலை.

 

காலச்சுவடு இதழில் அவர் கௌரவமாக இருந்தார்.  மெய்ப்பு நோக்குவார். இதழுக்கு வரும் கவிதை கதைகளை வாசிப்பார். அங்குள்ள அனைவருடனும் அவருக்கு நல்ல உறவிருந்தது. அவர் சுந்தர ராமசாமியின் மகன் கண்ணனை ராமசாமியின் இடத்தில் வைத்திருந்தார். நெய்தல் கிருஷ்ணன் மட்டும்தான் அவர் ஒருமையில் அழைத்து வந்த நண்பர்.

ஆகவே அவர் பகலில் குடித்துவிட்டு காலச்சுவடுக்கு வரமுடியவில்லை. காலை பதினொரு மணிக்கு வீட்டில் சாப்பிட்டுவிட்டு வருவார். மதியம் அனேகமாக சாப்பிடுவதில்லை. மாலை அன்றைய குடிக்கு ஏதாவது திரட்டிவிட்டு ஊருக்குக் கிளம்பிச்செல்வார். வீட்டில் மீன்குழம்புடன் சோறு இருப்பதனால் அவர் வேறு எங்கும் தங்குவதில்லை. கொஞ்சமாக மது குடித்துவிட்டு ஊர் திரும்பி சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார். மீனும் சோறும் அவரது ஆரோக்கியத்தை மீட்டன. நான் அண்ணாச்சியை அவரது கடைசிக்காலத்தில் பார்த்தது போல அத்தனை திடமாகவும்  உற்சாகமாகவும் எப்போதுமே பார்த்தது இல்லை.

அண்ணாச்சியின் மனைவிபெயர் ரங்கம்மாள். மகள் அஜிதா. மகன் கிருஷ்ணபிரதீப். அவரது மனைவிக்கு அவர்மேல் தீராத மனவருத்தம் இருந்தது, அது இயல்பே. ஆனால் அவரது இரு பிள்ளைகளுக்கும் அண்ணாச்சி மேல் ஆழமான பிரியம் மட்டுமே இருந்தது. அவரது உடல்நிலை குறித்த  கவலையும் துக்கமும் இருந்ததே ஒழிய அவரது ஊதாரித்தனம், பொறுப்பின்மை ஆகியவை சார்ந்த சிறிய மனவருத்தம்கூட அவர்களிடம் இல்லை. இது ஆச்சரியமான ஒன்றுதான். அதற்கான காரணம் அவர்களை பார்க்கும்போது தெரியும். இருவருமே அண்ணாச்சியின் சாயல் கொண்டவர்கள். அதே பிரியமான புன்னகை. அதே மனமும் இருக்கலாம்.

பையன் சரியாகப் படிக்கவில்லை என்ற எண்ணம் அண்ணாச்சிக்கு இருந்தது. சென்னையில் அதைப்பற்றி பலமுறை புலம்பியிருக்கிறார். ஆனால் அவர் கல்லூரியில் நன்றாகவே படித்து ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்று நாமக்கல்லில் ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். மகள் திருமணத்துக்காக அண்ணாச்சி கொஞ்ச நாள் கவலை கொண்டிருந்தார். ஆனால் அதுவும் அவருக்கு மிகச்சிறப்பாகவே அமைந்தது.  அண்ணாச்சியின் மகள் அழகாக இருப்பார்.

அவரது மகள் திருமண முதல்நாள் இடையன்விளைக்கு நானும்  வேத சகாய குமாரும் சென்றிருந்தோம். அண்ணாச்சி அன்று வாழையிலை வரவில்லை என்று நாகர்கோயில் சென்றுவிட்டார். பெண்ணை வாழ்த்தினோம்.  ராஜமார்த்தாண்டனின் கிராமத்து வீடு அக்காலத்து பெரிய மாளிகை.. ஓடு வேய்ந்தது. மரத்தாலான மாடி உண்டு. நல்ல காற்றோட்டமான பெரிய மாடியறைகள். அதில் சன்னலோரம் அண்ணாச்சி உட்கார்ந்து வாசிக்கும் மேஜை, சாய்வுநாற்காலி. ஒன்பது மணிக்குத்தான் அண்ணாச்சி வந்தார்.. மனநிறைவால் எங்கள் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்கினார்.

”என்ன ராஜம்  ஃப்ரீ ஆயாச்சு…இனிமே காசி ராமேசரம்னு உண்டா?” என்றார் வேதசகாயகுமார். ”…எல்லாம் இங்கிணதான்”என்று சிரித்தார். அவரது மகள் திருமணத்துக்குத் திரண்டு வந்த முக்கியமானவர்கள் அந்த சிற்றூருக்கு அவரது முக்கியத்துவத்தைக் காட்டினர் என்றால் மிகையல்ல. அண்ணாச்சிக்கு ஊரில் உள்ள சல்லிப்பயல்கள் கூட சேர்ந்து குடிப்பவர் என்ற பிம்பம் இருந்தது. அவரது குடும்பத்துக்கேகூட அவருக்கு எவ்வளவு நண்பர்கள் தமிழகமெங்கும் இருக்கிறார்கள் என்பது அப்போது தெரிந்திருக்கும்

நெய்தல் கிருஷ்ணன் அவருக்கு சென்ற வருடம் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடினார். நாகர்கோயில் ரோட்டரி கிளப்பில் நடந்த அந்த விழாவில் நாகர்கோயிலின் மூத்த தியாகியான ஜனாப். கொடிக்கால் அப்துல்லா தலைமை வகித்தார். நாஞ்சில்நாடன், சுரேஷ்குமார் இந்திரஜித், முருகேசபாண்டியன், சுகுமாரன் ஆகியோர் பேசினார்கள். நானும் பேசினேன். அண்ணாச்சி தன்னுடைய வாழ்க்கை தன் நண்பர்களால் எப்படி நிறைவும் பொருளும் கொண்டது என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்

விழாமுடிந்து கிளம்பும்போது அண்ணாச்சியின் மனைவி நெய்தல் கிருஷ்ணனிடம்  ”எங்க குடும்பத்துக்கு பெரிய கௌரவம்சேத்துட்டீங்க” என்று சொன்னார். சுதீர் செந்திலின் உயிரெழுத்து  அவரது படத்தை அட்டையில் போட்டு வெளியிட்ட மலரும் அவரது முக்கியத்துவத்தை அனைவருக்கும் காட்டியது.. பல வருடங்களாக அண்ணாச்சி தனக்கே தான் இழைத்துக்கொண்ட அநீதிகளில் இருந்து மெல்ல மெல்ல கரையேறினார் என்று சொல்லலாம்.

சென்ற ஏப்ரலில் அவரது மகனுக்கும் திருமணம். அதற்கு நானும் வேதசகாயகுமாரும் சென்றிருந்தோம்.  நாங்கள் வெளியே நின்று பேசிக்கொண்டிருக்கும்போது அண்ணாச்சி வந்தார். ”பிரகாசமா இருக்கீங்க அண்ணாச்சி” என்றேன். மகிழ்ச்சியாகச் சிரித்தார். அவரது வாழ்க்கையின் பொன்னாட்கள் அவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருக்கான இன்பங்களை இயற்கை அதுவரை மறைத்து வைத்திருந்தது. ஆகவேதான் அவரை அது மீண்டெழச்செய்தது.

ஒரு மனிதராக ராஜமார்த்தாண்டன் தேடிய நண்பர்வட்டம் அத்தனை பெரியது. அவருக்கு பிடிக்காதவர்களோ அவரைப் பிடிக்காதவர்களோ இல்லை. அது அவரது ஆளுமையின் அடையாளம். ஒட்டுமொத்தமாக அண்ணாச்சியைப்பற்றி ஒரே ஒரு சொல் சொல்லவேண்டுமென்றால் ”பண்பாளர்” என்றே சொல்லவேண்டும். தமிழிலக்கிய உலகின் ஆகச்சிறந்த பண்பாளர் அவரே.  ஒருபோதும் ஒருசொல்கூட எவரையும் இகழ்ந்தோ புண்படுத்தியோ பேசியவர் அல்ல.  அந்தரங்கமாகக்கூட. ஏனென்றால் அத்தகைய சிந்தனைகளே அவரது மனதில் இல்லை.

அண்ணாச்சிக்கு பொறாமையோ மனக்கசப்புகளோ இருந்ததாக நான் அறிந்ததே இல்லை. அவரை வசைபாடினால்கூட ”அவரோட கருத்து அது” என்றே அவர் மென்மையாகச் சொல்வார். எனக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையே கருத்துவேற்றுமை வந்ததில் அவருக்கு கடுமையான வருத்தம் இருந்தது. அதை மென்மையாக பலமுறை சொன்னார். பின்னர் விட்டுவிட்டார். அந்த கருத்துவேற்றுமை மோதலாக ஆனபோது அவர் சுந்தர ராமசாமியின் தரப்பில் நின்றார். எழுதினார். ஆனால் மென்மையாகவே என்னை மறுத்திருந்தார்.

ஒருமுறை சுந்தர ராமசாமி அ.மார்க்சைப் பற்றி கடுமையாக மறுத்துப்பேசிக்கொண்டிருந்தார். அவரது பங்களிப்பு முற்றிலும் எதிர்மறையானது என்று சொன்னார். அவர் பேசி முடித்தபின் ”நீங்க என்ன நெனைக்கிறேள்?” என்றார் . ராஜமார்த்தாண்டன் மென்மையாக அதை மறுத்தார். தமிழில் அ.மார்க்ஸ் ஒரு சொல்லாடலை உருவாக்கியிருக்கிறார் என்றார். ”இலக்கியத்தில  கருத்துக்களுக்கு இருக்கிற எதிர்மறையான அதிகாரத்தைப்பத்தி அவருதான் சார் சொன்னார்” என்றார். அ.மார்க்ஸ் தமிழின் முக்கியமான ஒரு கருத்துத்தரப்பு என்றார். அவரது இலக்கியக்கொள்கைகளை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மேலும் விளக்கினார்

அ.மார்க்ஸ் புதுமைப்பித்தனை சரமாரியாக விமரிசனம்செய்திருக்கிறார். ஓரளவு தனிப்பட்ட விமரிசனம் அது. அதில் அண்ணாச்சிக்கு வருத்தம் உண்டு, புதுமைப்பித்தன் அவருக்கு கடவுள் போல. ஆனால் அதற்காக அவர் அ.மார்சை மறுக்கமாட்டார். அதுவே அண்ணாச்சியின் குணம். ஒருவேளை அ.மார்க்ஸ் அண்ணாச்சியையே போட்டு வறுத்து எடுதிருந்தாலும் அந்தக் கருத்து மாறாது.

அண்ணாச்சியின் ஆளுமையை இப்போது எண்ணும்போது ஆச்சரியமளிக்கும் சில விஷயங்கள் உள்ளன. அவர் கேரளத்தில் பலகாலம் வாழ்ந்தவர். ஆனால் அவருக்கு மலையாளமே தெரியாது. மலையாள இலக்கியம் ,சினிமா, பண்பாடு,அரசியல் எதைப்பற்றியும் ஆரம்ப அறிமுகம் கூட கிடையாது. அவர் கும்பகோணத்தில் இருந்திருக்கிறார். ஆனால் அவருக்கு கும்பகோணம் பற்றிய ஞாபகமே கிடையாது. அவர் சென்னையில் வாழ்ந்திருக்கிறார். சென்னையின் மொழி அவரில் ஒட்டவே இல்லை. அவர் கடைசிவரை அகஸ்தீஸ்ரம் வட்டார வழக்கையே பேசிக்கொண்டிருந்தார். ‘இனி’ என்பதை ‘எனி’ என்றுதான் சொல்வார்.

அண்ணாச்சி ஈழக்கவிதையின் பெரும்பகுதியை பொருட்படுத்தியதில்லை. ஈழ விடுதலைப்போராட்டம் சார்ந்த கவிதைகளை ‘கோசங்கள்’ என்று சொல்லி ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டார். கவிதையின் அடக்கமும் குறிப்புணர்த்தும் விதமும் அவர்களுக்கு கைவரவில்லை என்றே நினைத்தார். ஆகவே ஈழ வாசகர்களில் கணிசமானவர்களுக்கு அவரை பிடிக்கவில்லை.  அப்படியும் ஒருவகை கவிதைகள் இருக்கலாமே என்ரு நான் கேட்டிருக்கிறேன். ”மிகையாச்சொன்னா அதில உண்மை இல்லாம ஆயிடுதே” என்றார்

அதேசமயம் ஈழக்கவிதைகளில் முக்கியமானவற்றை பெரும்பாலும் அவர் அடையாளம் கண்டு அங்கீகரித்திருக்கிறார். அவரது பெருந்தொகையில் சு.வில்வரத்தினம் முதல் திருமாவளவன் வரை ஈழத்தின் முக்கியமான எல்லா கவிஞர்களும் உண்டு. பஹீமா ஜகான் போல யாரென்றே தெரியாதவர்களைக்கூட அவர் அடையாளம் கண்டு சேர்த்திருக்கிறார்.

ஆனால் போராட்டக்கவிதைகளை புறக்கணித்த அண்ணாச்சிக்கு ஈழப்போராட்டம் மீது அபாரமான ஈடுபாடு இருந்தது. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டபோது மனம் கொதித்திருக்கிறார். பிரபாகரனின் மரணம்தான் கடைசியில் அவரை துன்பத்தில் ஆழ்த்திய நிகழ்ச்சியாக இருந்திருக்கிறது. நாலைந்து நாட்கள் அவர் எதுவுமே செய்யாமல் குடியில் மிதந்து கரைந்திருக்கிறார். இந்த முரண்பாடை நாம் அவரது ரசனையை வைத்தே புரிந்துகொள்ள முடியும்.

அண்ணாச்சி குடிகாரர். ஆகவே குடிகாரர்களுடன் அவருக்கு இயல்பான நட்பு சாத்தியமாகியது. ஆனால் அவர் குடியை ஒருபோதும் நியாயப்படுத்தியவரல்ல. அதில் கலகமோ புரட்சியோ இருப்பதாக அவர் சொல்லவில்லை. அது ஒரு பெரிய பலவீனம் என்றே அவர் நினைத்தார். ஒரு நோய் என்றே சொன்னார். குடிகாரர்களுடன் சேர்ந்து அவர் கலகங்களில் ஈடுபட்டதில்லை. குடித்துவிட்டு சற்றுகூட வரைமீறி நடந்ததில்லை. குடித்தபின் அத்தகைய நட்புகளை தவிர்த்துவிடுவார். சொல்லப்போனால் அவர் குடித்தபின் மிகமிக நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்.

அண்ணாச்சி பழந்தமிழிலக்கியத்தில் படிப்பு உள்ளவர். கம்பராமாயண ஈடுபாடு இருந்திருக்கிறது. ஆனால் அவர் நவீனகவிதையின் எல்லையை விட்டு அதிகமாக விலகிச்செல்லவில்லை. புதுமைப்பித்தன் தவிர பிற முன்னோடிகளை  அவர் கூர்ந்து வாசித்தது இல்லை. பின்னர் வந்த எழுத்துக்களில் கணிசமானவர்களை அவருக்கு பழக்கமில்லை. ஆனால் என்னுடைய படைப்புகளை மிகக்கூர்ந்து வாசித்திருக்கிறார். எல்லா சந்தர்ப்பங்களிலும் சொல்லியும் இருக்கிறார். அவரைக் கவர்ந்த என் முதல் படைப்பு ‘படுகை’தான். என்னை அதை வாசித்தபின் சந்தித்தபோது இரு கைகளையும் பற்றிக்கொண்டு கண்கள் மின்ன ”நல்லாருக்கு….” என்றார்.

அண்ணாச்சியின் உருவம் நெடுநாட்களுக்கு கண்களில் நீடிக்கும். மெலிந்த உடலுடன் நம் இருகைகளையும் பிடித்துக்கொண்டு ”பெறவு?” என்று கேட்கும் அன்பே உருவான முகம்.

 

[நிறைவு]

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Jun 16, 2009 @

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைநெல்லின் ரகசியம்