அண்ணாச்சி – 3

 

1

 

‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் குடிகாரன் குறிப்புகள் என்று ஒரு பகுதி வரும். கட்சியிலிருந்து நீக்கபப்ட்ட வீரபத்திரபிள்ளை குடிகாரனாகி தெருவில் இறப்பார். அவரது முழுமைபெறாத டைரி அது. அந்தக் குறிப்புகளைப் பற்றி அண்ணாச்சிஎன்ன சொல்கிறார் என்ற ஆர்வம் எனக்கிருந்தது. ஆனால் அவரிடம் கேட்கக்கூடாதென எண்ணியிருந்தேன். அண்ணாச்சி நாவலை வாசித்துவிட்டு குமுதத்தில் தமிழில் வெளிவந்த சிறந்த பத்து நாவல்களில் ஒன்று என்று சொல்லியிருந்தார்.

 

2002ல் அண்ணாச்சி  அவரது திஉவல்லிக்கேணி  நாகராஜ் மேன்ஷன் அறையில் ஈரல்பாதிப்பால் நினைவிழந்து விழுந்து கிடந்தார். அவரை ஒருநாள்வரை எவருமே கவனிக்கவில்லை. தற்செயலாக கவனித்தவர்கள் தகவல் சொல்ல அவரது சென்னை நண்பர்கள் அவரை அங்கே மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவர் ஈரல் மோசமாகப்பாதிப்பு அடைந்திருக்கிறது என்றார்கள். உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அனேகமாகக் குறைவு என்று சொல்லப்பட்டது. அண்ணாச்சி மொத்தமே 32 கிலோ எடைதான் இருந்தார்.

 

அவரை ஜோ-டி-க்ரூசின் காரில்போட்டுக்கொண்டு வசந்தகுமாரும் இன்னும் சில நண்பர்களுமாக நாகர்கோயிலுக்கு கொண்டுவந்து சேர்த்தார்கள். இங்கே ஜெயசேகரன் மருத்துவமனையில் அவர் சேர்க்கபப்ட்டார். நம்பிக்கை இல்லாமலேயே செய்த மருத்துவம் பலித்து அண்ணாச்சி திடமாக எழுந்தார். அவரது உடலை சென்னை மருத்துவர்கள் தவறாகக் கணித்திருந்தார்கள். பாரம்பரியமாக திடகாத்திரமான உடலமைப்பும் வலுவான உள்ளுறுப்புகளும் கொண்ட விவசாயி அவர். சென்னையில் நாற்காலியைத் தேய்க்கும் பாரம்பரியத்தில் வந்தவரல்ல

 

அண்ணாச்சி குணம்பெற்று வந்த காலகட்டத்தில் நான் அவரை அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று பார்ப்பேன். ஒருமுறை பேசும்போது சட்டென்று பின் தொடரும் நிழலின் குரலைப்பற்றிச் சொன்னார். ”குடிகாரன் குறிப்புகளை வாசிக்கிறப்ப நான் அழுதிருக்கேன்….எனக்க கிட்ட பேசி என்னைய வச்சுதான் நீங்க அந்த விசயங்கள எழுதினதாட்டு தோணிச்சு” என்றார். குறிப்பாக குடிகாரனின் காலைநேரம் பற்றி எழுதப்பட்டிருந்த வரிகளை நினைவிலிருத்து அப்படியே சொன்னார்.  காலைநேரக் குற்றவுணர்ச்சியையும் தன்னிரக்கத்தையும் ஜெயிக்க வேண்டுமென்றால் கொஞ்சம் குடித்தே ஆகவேண்டும் என்ற வரியை.

 

அதில் குடிக்கும்போது நிகழும் உளமாற்றத்தைச் சொன்ன ஒரு படிமம் இருக்கும். ஒரு மிகப்பெரிய கற்சிலை கனத்துக் கனத்து பிரக்ஞ்ஞைக்குள் கிடக்கும். குடிக்கும்போது அது எடையிழந்து எடையிழந்து பின்னர் மெல்ல பறக்க ஆரம்பிக்கும். ”அந்த வரி ரொம்ப உண்மை. எனக்கு எனக்கு உள்ள  இருக்க ஞாபகங்கள்லாம் அப்டியே கொஞ்சம் கொஞ்சமாட்டு கரைஞ்சு போய் நான் மட்டும் பறந்திட்டிருக்கிறதாட்டு தோணும்” குடிக்கக் கூடாது என்ற பிரக்கினையை அங்கே அண்ணாச்சி எடுத்தார். எட்டுமாசம்வரை குடிக்காமல் இருந்தார். மீண்டும் குடிக்க ஆரம்பித்தார். கடைசிவரை அவரால் அதை முழுக்க விட முடியவில்லை.

 

அண்ணாச்சியை பெரும் குடிகாரர் ஆக்கி சீரழித்தது சென்னை. சென்னை திருவல்லிக்கேணியில் மேன்ஷன் எனப்படும் பழங்கலப் பெரிய பங்களா குடியிருப்பு ஒன்றில் அவர் தட்டியால் பாதியாக பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஓர் அறையில் குடியிருந்தார். நாகராஜ் மேன்ஷன் அறை இலக்கியவாதிகள் பலருக்கும் தெரிந்ததுதான். இரு கட்டில்கள் போடுவதற்கான இடம் மட்டுமே அதில் உண்டு. ஒரு கட்டில் நிறைய தூசு பிடித்த புத்தகங்கள். கட்டிலுக்குக் கீழேயும் புத்தகங்கள். ஒரு கட்டிலில் அண்ணாச்சி படுப்பார்.

 

யாரும் எந்நேரமும் எந்த தயக்கமும் இல்லாமல் வரக்கூடிய அறை அது. யாரிடமும்  அண்ணாச்சி சாவியைக் கொடுத்துவிடுவார். அந்த அறையில் திருடிக்கொள்ள எதுவுமே இல்லை. சென்னைக்கு வரும் இலக்கியவாதிகள், அவர்களின் நண்பர்கள், பொதுவாக குடிக்க இடம்தேடி அலையும் மனைவிக்குப் பயந்தவர்கள், போதை அடிமைகள் என பலர் அங்கே எந்நேரமும் இருப்பார்கள். விருந்தினருக்கு கட்டிலைக்கொடுத்துவிட்டு அண்ணாச்சி தரையில் படுத்துக்கொள்வார்.அண்ணாச்சி பேரைசொல்லி வராந்தாக்களில்கூட படுத்துக்கொள்ளலாம்.

 

எந்நேரமும் அங்கே ஒருவகை இலக்கிய விசாரம் நடந்துகொண்டிருக்கும். போதையில் கவிதை போன்ற நுட்பமான ஒரு விஷயத்தை ஆராய்வதென்பது எண்ணை தேய்த்துக்கொண்டு மல்யுத்தம் செய்வதுபோல வேடிக்கையான சமாச்சாரம். ஆளாளுக்கு அவரவருக்கு தோன்றியதைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.– விடிய விடிய.

 

திடீரென்று சண்டைகள். லோர்க்காவை எப்படி குறைசொல்லப்போயிற்று என்று ஒரு இளம்கவிஞர் மனமுடைந்து மார்பில் மடேர் மடேரேன்று அறைந்து கேவிக்கேவி அழுவார். அவரை பிறர் சமாதானப்படுத்துவார்கள். நெரூதாவைப் பழித்தவனை தாய்தடுத்தாலும் விடேன் என்று ஒருவர் போர்க்கோலம் பூண்டு எழுவார். மேலும் திரவத்தை அவரது கிண்ணத்தில் ஊற்றி உட்காரச்செய்வார்கள்.

 

அண்ணாச்சி மதுரையில் இருந்தபோது அங்கே அவருக்கு நல்ல நண்பர் குழு ஒன்று இருந்தது. அதற்கு முன்னர் கொஞ்ச காலம் நாகர்கோயிலில் இருந்தபோதும் நல்ல நட்புகள் இருந்தன. நாகர்கோயிலில் வேதசகாயகுமார், ‘சோபிதம் புக்ஸ்டால்’ சோபிதராஜ், கட்டைக்காடு ராஜகோபாலன், அ.கா.பெருமாள், சுசீந்திரம் மகாகணபதி , கவிஞர் உமாபதி போன்றவர்களின் நட்பு. அவர் ஒருவகை இலக்கியச்செயலூக்கத்துடன் இருந்தநாட்கள் அவை..

 

அத்துடன் சுந்தர ராமசாமியின் அழுத்தமான ஆளுமை அவரை கட்டுக்குள் வைத்திருந்தது.. கொல்லிப்பாவை இதழ்களை அவர் நண்பர்களுடன் இணைந்து கொண்டுவந்தார்.  அது அவரது வாழ்க்கையின் ஒரு பொற்காலம்.

 

கடைசிநாள் வரை ராஜமார்த்தாண்டன் அந்த நாட்களை தன் நெஞ்சில் இனிய நினைவாகப் போற்றி வந்தார். அவர் ஆர்வமாகப் பேச ஆரம்பிக்கும் ‘மலரும் நினைவுகள்’ கொல்லிப்பாவையுடன் தொடர்பானவை. கொல்லிப்பாவை காலகட்டத்தில்தான் அவர்  வேகத்துடன் எழுதவும்செய்தார். நகுலன்,சி மணி, பசுவய்யா போன்ற எழுத்து காலகட்டக் கவிஞர்களைப்பற்றி அவர் கொல்லிப்பாவை இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

 

இக்கட்டுரைகளின் வரலாற்று முக்கியத்துவம் மிக அதிகம். ஏனென்றால் எண்பதுகளின் தொடக்கத்தில் சிற்றிதழ் இயக்கம் என்பது மிக ஆர்வமாக நடந்து வந்தபோதிலும் மிகச்சிறிய வட்டத்துக்குள்தான் இருந்தது. கொல்லிப்பாவை 200 பிரதிகளே அச்சிடப்பட்டது. அதுவும் அவர்களின் நண்பரால் நடத்தப்பட்ட பாரதி அச்சகத்தில் முக்கால்பங்கு கடனுக்கு. அது ஒரு பத்திரிகை என்பதைவிட நண்பர்களுக்குள் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை என்பதே பொருத்தம். பாதி இதழ்கள் தபாலில் கொஞ்சம் கொஞ்சமாக பணம்சேர்த்து மாதம் முழுக்க ஒன்றிரண்டாக அனுப்பப்படும். மிச்ச இதழ்கள் நேரில் கொண்டுபோய் கொடுக்கப்படும்.

 

சிற்ற்iதழ வட்டத்துக்கு வெளியே அன்று சீரிய இலக்கிய வாசிப்பே இல்லை. அது சுஜாதா,பாலகுமாரன், இந்துமதி,சிவசங்கரி போன்றவர்களின் கொடி பறந்த காலகட்டம். அவர்களே இலக்கியவாதிகள் என கல்வித்துறையும் ஊடகங்களும் நம்பிய காலம். பாலசந்தர்- பாரதிராஜா ஒப்பீடு, மணியன் -சாவி சண்டை, சுஜாதா-பாலகுமாரன் போட்டி ஆகியவைதான் தமிழ்ச்சமூகத்தின் கலாச்சாரக் கவலைகள் அன்று.

 

எண்பதுகளில் பாவை சந்திரன் புதுமைப்பித்தனின் ‘மனித யந்திரம்’ என்ற கதையை குங்குமம் இதழில் வெளியிட்டபோது ”இவர் தமிழில் கதைகள் எழுதிய பழைய எழுத்தாளர். சொந்தப்பெயர் சொ.விருத்தாசலம்’ என்று அறிமுகம் கொடுத்து பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. குமுதம் ,ராணி, விகடன்,  ஆகியவற்றுடன் குங்குமம் இதயம் சாவி போன்றவை பரபரப்பாக விற்றன. தொடர்கதைகளின் பொற்காலம் என்று அதைச் சொல்லலாம்.

 

கொஞ்சம் மேலே வந்தால் முற்போக்கு இலக்கியம். அப்போது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  இளவேனில் போன்றவர்கள் பிரிந்துசென்றமையால் கடுமையான விவாதங்களில் ஈடுபட்டிருந்தது. சோவியத் நூல்களை ஒட்டிய ஒரு போலியான வேகம் கொண்ட இலக்கியச்சூழல் அது. அதை ஒட்டியதுபோல மேலும் போலியான வானம்பாடி கவிதைகள். மு.மேத்தா, நா,காமராஜன், அப்துல் ரகுமான் ,சிற்பி , மீரா போன்றவர்களின் கவிதைகள் காதல்கடிதம் எழுதும் கல்லூரி இளைஞர்களுக்கு பிடித்தமானவையாக இருந்தன.

 

இச்சூழலில் எழுத்து புதுக்கவிதை முன்னோடிகள் எல்லாம் ஏதோ சோழர்கால கல்வெட்டில் தெரியும் மனிதர்கள் போல பின்னுக்குச் சென்றிருந்தார்கள். ஊதல்காற்றில் கைவிளக்கை அணையாமல் பொத்திக்கொண்டுபோவதுபோல சில சிற்றிதழ்கள் சீரிய  இலக்கியத்தின் தொடர்ச்சியை தக்க வைக்க முயன்றார்கள். கொல்லிப்பாவை அத்தகைய ஒரு முயற்சி. இந்தக்காலகட்ட சிற்றிதழ் இயக்கத்தின் முக்கியமான பங்களிப்பே இந்த தொடர்ச்சியை பாதுகாத்ததுதான் என்று நினைக்கிறேன். கொல்லிப்பாவையில் அண்ணாச்சி எழுத்து கவிஞர்களைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் முக்கியத்துவம் அங்கேதான்.

 

நாகர்கோயில் அப்போதும் ஓர் இலக்கிய மையமாக இருந்தது. சுந்தர ராமசாமி ஒரு காரணம். ‘தெறிகள்’ இதழை நடத்திய உமாபதி அப்போது நாகர்கோயில் அருகே பணியாற்றினார். வெங்கட் சாமிநாதனின் ‘யாத்ரா’ இதழ் அ.கா.பெருமாள் அவர்களால் நாகர்கோயிலில் இருந்துதான் கொண்டுவரப்பட்டது. நல்ல இலக்கியத்துக்காக மட்டும் நடத்தப்பட்ட ஒரே புத்தகக் கடையான சோபிதம் நாகர்கோயிலில் இருந்தது. நகுலன், நீலபத்மநாபன் ஆ,மாதவன், மா.தட்சிணாமூர்த்தி போன்றவர்களின் பல நூல்களை நாகர்கோயில் ஜெயகுமாரி ஸ்டோர்ஸ் என்ர புத்தகக்கடை வெளியிட்டது.

 

சி.மணி, நகுலன் குறித்தெல்லாம் கொல்லிப்பாவையின் பழைய இதழ்கள் வழியாகவே நான் வாசித்தறிந்தேன். சமீபத்தில் கலைஞன் பதிப்பக வெளியீடாக அண்ணாச்சியே கொல்லிப்பாவையின் பழைய இதழ்களில் இருந்து ஒரு தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு நல்ல வரலாற்று ஆவணம் அந்நூல். அக்காலத்தில்தான் நாகர்கோயிலில் தன் வீட்டு மாடியில் காகங்கள் என்ற நண்பர் சந்திப்பை சுந்தர ராமசாமி நடத்தி வந்தார்.அதில்தான் அண்ணாச்சியின் பல கட்டுரைகள் முதலில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

 

நாகர்கோயிலில் இருந்து அண்ணாச்சி மதுரைக்குச் சென்றபோதும் இலக்கியபோதையும் குடிபோதையும் ஏககாலத்தில் நீடித்தன. அங்கே சுரேஷ்குமார இந்திரஜித், ‘வைகை’ சிவராமன், சி.மோகன், முருகேசபாண்டியன் போன்றவர்களின் நட்பு உருவானது. சந்திப்பு என்ற இலக்கிய நிகழ்ச்சியை  அவர்கள் அங்கே நடத்தினார்கள். ராஜகோபாலன் நாகர்கோயிலில் இருந்து கொண்டுவந்த கொல்லிப்பாவை இதழில் தொடர்ந்து சில கட்டுரைகளை அண்ணாச்சி எழுதினார்.

 

அதன்பின் சென்னை. நான் அண்ணாச்சியைப்பார்க்கும்போது அவர் சென்னையில் இருந்தார். சென்னையில் அண்ணாச்சி முற்றாகக் கைவிடப்பட்ட மனிதர். சென்னையின் முக்கியமான இலக்கியக்குழுக்கள் கணையாழி, கசடதபற, தீபம்.  அவரால் எவற்றுடனும் இணைய முடியவில்லை. அவருக்கு எல்லாருடனும் தொடர்பிருந்தது. ஆனால் அவர் அவர்களுடன் இல்லை. அவர் நடத்திய இதழ்கள் நின்றன. அண்ணாச்சி எழுதுவதை அனேகமாக நிறுத்திக்கொண்டார்.

 

இக்காலகட்டத்தில்தான் அவரது குடி மிதமிஞ்சி போயிற்று. காலையிலேயே குடிப்பார். பகல் முழுக்க சிறிய சிறிய அளவாக குடித்துக்கொண்டே இருப்பார். ரத்தத்தில் ஆல்ஹகால் இல்லாமல் அவரால் இருக்க முடியாது. வேட்டி சட்டையை ஒழுங்காக துவைப்பதில்லை. சட்டென்று உச்சிக்குப் போதையேறும் பட்டைச்சாராயம்தான் அதிகமாகக் குடிப்பார் என்பதனால் விழுந்துவிடுவதும் உண்டு. உடம்பில் சிராய்ப்புகளும் உடைகளில் அழுக்கும் இருக்கும்.

 

நானும் அருண்மொழியும் ஒருமுறை அண்ணாச்சியுடன் பேசியபடியே சென்னைதெருவொன்றில் சென்றுகொண்டிருந்தபோது “ஒரு நிமிசம்” என்று சொல்லி அவர் சென்றார். ஐந்தே நிமிடத்தில் திரும்பி வந்தார். அதற்குள் அவர் நன்றாகக் குடித்திருந்தது தெரிய வந்தது. நாகராஜ் மேன்ஷனின் அருகே ஒரு கடையில் சாராயத்தை விற்றார்கள். எந்நேரமும் அண்ணாச்சி இறங்கிச்சென்று குடிப்பார். காலையில் எழுந்ததுமே குடிப்பதற்காக கொஞ்சம் சாராயம் வாங்கி அறைக்குள் புத்தகங்கள் நடுவே பதுக்கி வைத்திருப்பார்.

 

கையில் குப்பியுடன் அண்ணாச்சியைத்தேடி வருபவர்கள் இருந்தார்கள்.  மாதக்கணக்கில் அவருடன் இலவசமாக தங்குபவர்களும் உண்டு. ஒருமுறை ஒரு கவிஞர் அவருடன் தங்கியிருந்தார். காலையில் நான் அண்ணாச்சியைப் பார்க்க போனபோது கவிஞர் அண்ணாச்சியை வசைபாடித்தள்ளிக்கொண்டிருந்தார். என்ன காரணம் என்றால் கையில் பணமில்லாமல் குடிக்கமுடியாமல் இருவரும் இருக்கும் நிலையில் அண்ணாச்சி மட்டும் ‘நைசாக’ சறுக்கிச் சென்று எங்கேயோ பத்து ரூபாய் தேற்றி ‘கட்டிங்’ அடித்துவிட்டு வந்து விட்டார். கவிஞர் தன் தாயையும் தமக்கையையும் வசைபாடுவதைக் கேட்டுக்கொண்டு அண்ணாச்சி  குற்ற உணர்ச்சியுடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

 

தினமணியில் அண்ணாச்சிக்கு அதிக வேலை இல்லை. அவர் ஒரு நாளிதழில் வேலைபார்த்த எழுத்தாளர். ஆனால் மிகமிகக் குறைவாகவே அவர் அவற்றில் எழுதியிருக்கிறார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி ஆகியோரை சில நல்ல பேட்டிகள் எடுத்திருக்கிறார். அதற்குக் காரணம் அவருக்கு அவர்களுடன் இருந்த நல்லுறவுதான். அவரது பொறுப்பில் தமிழ்மணி இருந்த குறுகிய காலத்தில் அதை இலக்கிய முக்கியத்துவத்துடன் நடத்த முயன்றிருக்கிறார். ஆனால் பொதுவாக தினமணியில் அவருக்கு பங்களிப்பே இல்லை என்றே சொல்லலாம்.

 

அதற்குக் காரணம் அவரது குடிதான். அலுவலக நெறிகளைப் பேண முடியாதவராகவே அவர் இருந்தார். தினமணி கிட்டத்தட்ட அரசாங்க அலுவலகம் போன்றது என்பதனால்தான் அவர் அங்கே நீடிக்க முடிந்தது. அத்துடன் தினமணி ஆசிரியர்களாக இருந்த ஐராவதம் மகாதேவன், கி.கஸ்தூரிரங்கன், இராம.சம்பந்தம் ஆகியோருக்கு  அவரது முக்கியத்துவம் தெரிந்திருந்தது. அத்துடன் அண்ணாச்சி தன் இடத்துக்காக போராடும் தன்மை கொண்டவர் அல்ல என்பதும் காரணம்.

 

அண்ணாச்சியின் சம்பளம் பிடித்தம்போக சொற்பமாகவே கையில் கிடைக்கும். அதை முதல்சிலநாட்களுக்குள் முடிந்த கடன்களை கட்ட செலவழித்துவிடுவார். பிறகு மாதம் முழுக்க கையில் பணமே இருக்காது. கடன் வாங்கியும் அன்பளிப்பாகவும் அன்றைய குடிக்கான பணத்தை திரட்டுவதிலேயே குறியாக இருப்பார். அலுவலகத்தில் பணம் கேட்டுக்கொண்டே இருப்பார் என்ற குற்றச்சாட்டு அவரது கௌரவத்தை பெரிதும் பாதித்தது. ஆனால் அவர் அன்றைய குடி என்பதற்கு மேலாக பணத்தை ஒரு பொருட்டாக நினைத்தவரே அல்ல. அவரது குடிக்கு மேல் எத்தனை பணம் அவர் கையில் இருந்தாலும் அது அனைவருக்கும் உரியதுதான்.

 

அவர் சென்னையில் ஒழுக்காகச் சாப்பிடுவதே இல்லை. நாகராஜ்மேன்ஷன் அருகே உள்ள டீக்கடையில் இரண்டு இட்டிலி சாப்பிடுவார். மதியம் அலுவலகத்து கேண்டீனில் ஒரு தயிர்சாதம். இரவு மீண்டும் இரு இட்டிலி. குடிக்கும்போது பொட்டலம் இரண்டு ரூபாய்க்குக் கிடைக்கும் உப்பு காரம்போட்டு  வறுத்த பாசிப்பருப்பு வாங்கிக்கொள்வார். அதுகூட வாங்க பணம் இல்லாமல் வெறும் உப்புக்கல்லை நக்கிக்கொண்டு சாராயம் குடிப்பதும் உண்டு.

 

குடிதவிர வேறு எதுவுமே இல்லாத அண்ணாச்சியின் சென்னை வாழ்க்கையில் சிறிய இடைவெளியாக சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு வந்தது. அதில் முதல் இதழிலேயே நம்பிக்கை தரும் மூன்று இளம்கவிஞர்கள் என்று சுகுமாரன்,சமயவேல்,ராஜசுந்தரராஜன் ஆகியோரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினார். நல்ல கட்டுரை அது. தொடர்ந்து எழுதியிருக்கவும்கூடும். ஆனால் எட்டு இதழுடன் சுந்தர ராமசாமி இதழை நிறுத்திக்கொண்டார்.

 

ஒரு கட்டத்தில் புதுக்கவிதை தவிர எதையுமே அவர் படிக்காமலானார். அண்ணாச்சி கவிதைகளை மட்டும் தேடித்தேடிப் படித்து குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்வார். விதிவிலக்கு சுந்தர ராமசாமியும் நானும். நான் என்றுமே அவரது ஆதர்ச எழுத்தாளன். என்னருகே அமர்ந்து ஒரு தமையனின் பெருமிதத்துடன் என் இளமைக்காலச் சவடால்களைப் பார்த்துக்கொண்டிருப்பார். என்னைப்பற்றிய விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்றும் கடுமையாக மறுத்துப்பேசுவார் என்றும் பலர் கேலியாகவும் பொறாமையுடனும் சொல்லியிருக்கிறார்கள்.

 

இலக்கியவாதிகளின் மையமாக இருந்த அவரது அறை வெறும் குடிமையமாக ஆகியது. அக்காலகட்டத்தில்தான் நான் அடிக்கடி அவரது அறைக்குச் சென்று தங்குவது வழக்கமாக இருந்தது. தூசுப்படலத்தில் புத்தகநெரிசலுக்குள்  அவர் படுக்க ,அவரது உடலின் வியர்வையும் பிசுக்கும் பரவிய அவரது கட்டில்மெத்தை மேல் நான் படுத்துக்கொள்வேன். ஒருபோதும் நான் கீழே படுக்க ஒப்புக்கொள்ளமாட்டார். ‘நீரு நம்ம ஆதர்ச எளுத்தாளன்லா” என்று கண்கள் மின்ன சொல்வார்.

 

அவர் மீதான பிரியம் காரணமாக அந்த கட்டிலின் நெடியே எனக்கு மிக அந்தரங்கமாகப் பிடித்திருந்தது. என் அண்ணனின் வியர்வைக்குப்பின் எனக்குப்பிடித்த வியர்வை அவருடையதுதான். அவர் மறைந்தபின் சாராயவாசனையே அவரை நினைவுறுத்தும் நறுமணமாக ஆகத்தொடங்கியது.

 

நான் அண்ணாச்சியிடம் எனக்குபிடித்தது பிடிக்காததை பொழிந்து கொட்டுவேன். அப்போதெல்லாம் கருத்துக்களை பிளந்து பிளந்து போடுவது என் வழக்கம். அண்ணாச்சிக்கு சில இலக்கியவாதிகள் மீதும் சில கருத்துக்கள் மீதும் மிகத்திடமான பற்று இருந்தது. அது வெறும் பிரியமல்ல. அவரே வாசித்து உருவாக்கிக் கொண்ட இலக்கியக் கருத்துக்கள். அவற்றுக்கு இடையேயான முரண்பாடுகளை அவர் சிந்தித்து தெளிவுபடித்திக்கொண்டிருந்தார். நாம் அவரது கருத்துக்களை மாற்ற முடியாது. சுந்தர ராமசாமியும் பிரமிளுமே அவரது கருத்துக்களை மாற்ற முடியவில்லை.

 

அண்ணாச்சிக்கு புதுமைப்பித்தன் ஒரு பெரும் கலைச்சிகரம். அவரது படைப்புகள் பெரும்பாலும் வடிவ அமைதியும் ஒத்திசைவும் கொண்ட சிரந்த கலைப்படைப்புகள் என அவர் எண்ணினார். புதுமைப்பித்தனுக்குப் பின்னர் சுந்தர ராமசாமியை தமிழ் உரைநடையின் சாதனையாளர் என அவர் நினைத்தார். மிகக் கவனமாகச் சொற்களைச் சேர்த்துச் சொல்பவர் அவர். சிறுகதை நாவல் என சுந்தர ராமசாமியை தூக்கிப்பேசமாட்டார். சுந்தர ராமசாமியின் தமிழ் உரைநடையையே அவரது சாதனையாக அவர் எண்ணினார்.

 

அதேபோல தமிழ்க்கவிதையின் சாதனையாளராக அவர் பிரமிளை எண்ணினார். ஆனால் பிரமிளின் விமரிசனக் கருத்துக்கள், கதைகள் எதையுமே அவர் பொருட்படுத்தவில்லை. ஜெயகாந்தனை அவரது கம்பீரமான இலக்கிய ஆளுமைக்காக, பண்பாட்டில் அவர் ஊடுருவிய விதத்துக்காக அண்ணாச்சி போற்றினார்.  இவர்களுக்குப் பின் வந்த முக்கியமான ஓர் இலக்கிய நிகழ்வு என்னும் இடத்தை எனக்கு அவர் அளித்து எழுதியிருக்கிறார். ஆனல் என் நாவல்களையே அவர் முக்கியமாக எண்ணினார். என்னுடைய விமரிசனக் கருத்துக்களின் கோணத்தை அவர் பொதுவாக ஏற்கிறார். ஆனால் பெரும்பாலும் என்னுடைய கருத்துக்களை மறுத்தார்.

 

அண்ணாச்சி அவரது ’புதுமைப்பித்தனும்’ கயிற்றரவும்  ‘பசுவய்யா கவிதைகள் ஆய்வு’ போன்ற நூல்களில்  என்னுடைய கருத்துக்களை விரிவாக மறுப்பதற்கே அவர் அதிக பக்கங்களைச் செலவிட்டிருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் நான் என் கருத்துக்கள் பலவற்றை அவரிடம் பேசிப்பேசியே உருவாக்கினேன். அப்போதெல்லாம் அண்ணாச்சி பிரியமான புன்னகையுடன் சும்மா கேட்டுக்கொண்டிருந்தாரே ஒழிய ஒரு முறைகூட மறுத்து வாதாடியதில்லை.

 

ஜெயகாந்தனைப்பற்றி சுந்தர ராமசாமியும் , சுந்தர ராமசாமியைப்பற்றி பிரமிளும் இதேபோல கடுமையான விமரிசனங்களை முன்வைக்கும்போதும் அண்ணாச்சி கண்களில் பிரியமான சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்திருப்பார். ஆனால் அவரது கருத்துக்கள் திடமானவை என்பதை அவர் எழுதும்போது அவர்கள் கண்டுகொண்டிருப்பார்கள்.

 

பிரமிள், ஜெயகாந்தன் ஆகியோரின் சில குணச்சிக்கல்களை அண்ணாச்சி ஒத்துக்கொள்வார். ஆனால் ஒருபோதும் சுந்தர ராமசாமியை குறைசொல்வதை ஏற்க மாட்டார். அவரைப் பொருத்தவரை சுந்தர ராமசாமி அப்பழுக்கற்ற முழுமையான ஆளுமை. அவரது ஆளுமையை அண்ணாச்சி வழிபட்டார். தன்னுடைய குறைகள், சிதறல்கள், தத்தளிப்புகள் எதுவுமே இல்லாத ஒருவராகவும் தான் அந்தரங்கமாக ஆக விரும்பும் தன் மறுபாதியாகவும் அவரை அண்ணாச்சி எண்ணினார். அந்த வழிபாட்டுணர்வு கடைசி வரை அவரிடம் இருந்தது.

 

1994ல்  கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் வந்திறங்கி ஆட்டோ பிடித்து நான் அண்ணாச்சியின் அறைக்கு காலை ஏழரை மணிக்குச் சென்றேன். அன்று அவர் குடிக்கவில்லை. புதிய வெள்ளை ஆடைகள் அணிந்திருந்தார். என்ன விசேஷம் என்று கேட்டேன். சற்று தயங்கியபின் பேசத்தொடங்கினார்

 

அன்று அவரது  46 ஆவது பிறந்தநாள். காலையில் இருட்டிலேயே எழுந்து அமர்ந்திருக்கிறார். பலவகையான எண்ணங்கள். ஏக்கங்கள். எல்லாவற்றையும் விரலிடுக்கு வழியாகவே நழுவவிட்டுவிட்டோம் என்னும் உணர்வு. நெடுநேரம் அழுதிருக்கிறார். இனிமேல் புதிய ஒரு வாழ்க்கையை தொடங்கவேண்டும் என்று முடிவுசெய்திருக்கிறார். குடிக்கக் கூடாது. நெடுநாள் கனவான புதுக்கவிதை வரலாறை எழுதி முடிக்கவேண்டும். அதற்காக புத்தகங்களை எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டிருக்கும்போதுதான் நான் வந்துசேர்ந்தேன்.

 

நான் அப்போது விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்தேன். கனவு என்பதே என்னை உற்சாகப்படுத்தும்.  நானும் அண்ணாச்சியும் ஆவேசமாக புதுக்கவிதை வரலாற்றைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். நான் அதற்கு ஒரு முன்வரைவை உருவாக்கினேன். எந்த கவிஞர்களைப்பற்றி விரிவாக எழுதுவது என்றெல்லாம் பேசினோம்.

 

ஆனால் அன்றும் அண்ணாச்சி குடித்தார். மாலையில் அவர் அறையில் அவர் இல்லை. இரவு வரை வரவில்லை. பிற்பாடு அவர் அந்நாளைப்பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார்.

 

நிஜம்

 

நேற்றைப்போலவே
இன்றைப்போலவே
ஏதுமின்றி
கடந்துபோயிற்று
நாற்பத்தாறாவது ஆண்டும்

 

காலையிலும் மாலையிலும்
உடன்வரும் நெடிய நிழலை
உச்சிப்போதில்
நாய்க்குட்டியென
காலடியில்
பதுங்கிவரும் நிழலை
அறிவேன்

 

அறிந்திலேன் இதுவரை
நிழலின் நிஜத்தை

 

 

அண்ணாச்சியின் மனதில் அந்த ஏக்கம் நீடித்து வளர்ந்திருக்க வேண்டும். வீணாகப்போய்க்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு. ஒன்றும் செய்யாமலேயே வாழ்நாள் தீர்கிறது என்ற அச்சம். நாற்பது வயதில் அந்த உணர்வு வலுவாகவே உருவாகும்.  அது வாழ்நாளின் பாதி தாண்டியதை உணரும் பருவம். நாட்கள் குறைகின்றன என அலாரம் அடிக்கும் கட்டம்.

 

அதன்பின்பே அண்ணாச்சி அவர் எழுதிய கவிதைகளை சேர்த்து ஒரு சிறு தொகுப்பாகக் கொண்டுவந்தார். அவரது முதல்புத்தகம். ”அப்படியே நிற்கட்டும் அந்த மரம்” என்ற அந்த தொகுப்புக்கு அவருக்கு 1200 ரூபாய் செலவாகியது. அது அவருக்கு மிகப்பெரிய தொகை. ஊருக்கு அனுப்ப பணம் இல்லாமல் அந்தக் குற்ற உணர்வில்நாளெல்லாம் அழும் மனிதர் அவர்.

 

ஆனால் அவருக்கு அது தேவைப்பட்டது. ”இதெல்லாம் நல்ல கவிதை கெடையாது. அது எனக்கும் தெரியும்.செரி ,நாம வந்ததுக்கு அடையாளமா ஒண்ணு இருக்கட்டுமே” என்று எனக்கு ஒரு பிரதி அளித்தார். அந்த நூலின் தலைப்பே அவரது ஏக்கத்தின் சின்னம்தான். எங்கும் அர்த்தமின்மையைக் கண்டு வெறுத்துப்போய் கோயிலுக்குச் சென்று அங்கே தெய்வத்தின் முகத்தில் அதே அர்த்தமற்ற வெறிப்பைக் கண்டு குரூர திருப்தியுடன் திரும்பிவருபவரைப்பற்றிய ஒரு கவிதை அதில் உண்டு. அது கிட்டத்தட்ட அண்ணாச்சியின் பிரகடனம்போல.

 

இந்தக் காலகட்டத்தில் அண்ணாச்சிக்கு தமிழினி வசந்தகுமாரின் தொடர்பு ஏற்பட்டது. அந்தத் தொடர்பைப் பற்றி என்னிடம் மிக மனம் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.  இன்று அவரது பேரைச்சொல்லும் படைப்புகள் தமிழினி வசந்தகுமாரின் தொடர்பால்– கட்டாயத்தால் என்றே சொல்ல வேண்டும்–  உருவானவையே. ‘புதுமைப்பித்தனும் கயிற்றரவும்’ ,அண்ணாச்சியின் ரசனையைச் சொல்லும் பெருந்தொகுப்பான ‘கொங்குத்தேர் வாழ்க்கை’ அவரது நெடுநாள் கனவான ‘தமிழ்ப்புதுக்கவிதை வரலாறு’ மற்றும் அவரது கவிதைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பான ‘ராஜமார்த்தாண்டன் கவிதைகள்’  தமிழினி வெளியீடாக வந்தன. இவற்றில் பெரும்பகுதியை அண்ணாச்சி தமிழினி அலுவலகத்தில் கட்டாயபப்டுத்தி உட்கார வைக்கப்பட்டமையால்தான் எழுதினார்

 

இலக்கியத்தின் அண்ணாச்சியின் பங்களிப்பு புதுக்கவிதை விமரிசகர்- வரலாற்றாசிரியர்- தொகுப்பாளர் என்னும் தளத்தில்தான். தமிழினி வெளியிட்ட நவீனக்கவிதைகளின் தொகுதியாகிய கொங்குத்தேர் வாழ்க்கை அவரது சாதனைதான். புதுக்கவிதைக்கு மேலும் விரிவான வரலாறு வரக்கூடும். அண்ணாச்சியே அபப்டி ஒன்றை எழுத்வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் முதல் முயற்சி அவர் எழுதியதுதான். அண்ணாச்சி முனைவர் பட்டத்திற்காக புதுக்கவிதையை பற்றி எழுதியிருந்தால் அது அவரோடு போயிருக்கும். விட்டுவிட்ட முயற்சி பல்லியின் அறுந்த வல் என வாழ்நாள் முழுக்க துடித்துக்கொண்டிருந்தது.அது முழுமைகொள்ள ஒரு வாழ்நாள் தேவைப்பட்டிருக்கிறது.

 

[மேலும் ]

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jun 15, 2009

முந்தைய கட்டுரைசெய்தொழில் பழித்தல்
அடுத்த கட்டுரைஈரட்டிச் சிரிப்பு -கடிதங்கள்