அண்ணா- ஒரு விவாதம்

ஜெ,

அந்தச் செய்தியை ஒரு நிமிடம் நம்ப முடியவில்லை. இந்தாளுக்கு என்ன பைத்தியமா என்றுதான் நினைக்கத் தோன்றியது.

ஓராண்டுக்கு முன்பு, லோக்பால் சட்டம் கொண்டு வர அரசை நிர்ப்பந்திக்கும் முகமாக அண்ணா உண்ணாவிரதம் துவங்கியபோது, படித்த மத்திய வர்க்கத்தின் ஆதரவும், மாற்றம் விரும்பும் இளம் இந்தியர்களின் ஆதரவும், மிக முக்கியமான பரபரப்பு வேண்டிய ஊடகங்களின் ஆதரவும் இருந்தது. ஆளாளுக்கு ஒரு கை கொடுத்து, லோக்பால் மசோதாவை நிறைவேற்றிவிடலாம் என்று ஆசையும் இருந்தது..

நாட்டின் பெருநகரங்களிலும், பல சிறு நகரங்களிலும், சிறு குழுக்கள் கூடி, நடத்திய ஆதரவு பிரார்த்தனைக் கூட்டங்கள், அவற்றுக்கு ஊடக வெளிச்சம் என்று அந்தக் காலம் மிகப் பரபரப்பாகவும், நல்லது நடந்து விடலாம் என்றொரு நம்பிக்கையுடனும் இருந்தது..

ஆனால், விலாஸ்ராவ் தேஷ்முக் வழியாக அரசு செய்தியனுப்பியது ஒரு பெரும் குறியீடு என்பதை யாரும் அப்போது புரிந்து கொள்ள வில்லை.. குறியீடு மட்டுமல்ல, அரசுக்கெதிரான சுயமாக எழுந்த ஒரு எழுச்சியை தனக்குச் சாதகமாக முடித்துக் கொள்ள அரசு செய்த ஒரு மாபெரும் திட்டம் என்று கூடச் சொல்லலாம். அண்ணாவினால் எழுப்பப் பட்ட அந்த எழுச்சியை நன்றாக ஆராய்ந்து பார்த்தால், அது உணர்வுகளைத் தட்டியெழுப்பப் பட்டும் பூதம் போல் தோற்றமளித்ததுதானே தவிர பூதமல்ல. அது நிலைத்து நிற்கத் தேவையான நிர்வாக அமைப்பும் தலைமையும் அக்கூட்டத்துக்கு இல்லை. இதை நன்றாக உபயோகித்துக் கொண்டவர்கள் பாராளுமன்றத்தில் பேசும் திறன் கொண்ட அரசியல்வாதிகள். பிரணாப் முகர்ஜி, ஜ்யோதிராதித்யா, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்றவர்கள், பாராளுமன்றத்தில், சொற்பொழிவு ஆத்து ஆத்துன்னு ஆத்தி, தொலைக்காட்சி நிமிடங்களை இலவசமாகப் பெற்று, அல்வா கிண்டி, தேஷ்முக் வழியாக அண்ணா கையில் கொடுத்து, “போயிட்டு வா பெரிசு”ன்னு தந்திரமாக அனுப்பி விட்டார்கள்.

மிகப் பெரும் உணர்வலையின் உச்சியில், வெற்றிகரமாக சுபம் போட்டார்கள். எல்லோரும் மூன்று மணி நேர, உணர்ச்சிகர மசாலா சினிமா முடியும் போது வரும் நிம்மதி உணர்வுடன் வீட்டுக்குப் போயிட்டோம்.ஊழல் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் தேஷ்முக்கின் வழியாகச் செய்தி வந்த போதே புரிந்திருக்க வேண்டாமா?? லோக்பாலைக் கூட ஊழல்வாதிகள் தான் கொண்டு வருவார்கள் என்று? அல்லது, அவர்கள் வழியே லோக்பால் என்றுமே வரப் போவதில்லை என்று.. அரசியல்வாதிகளால், பல ஆண்டுகள் ஏமாற்றப் பட்டும், நம்பிக்கை கொள்ளும் நாம் எப்படிப் பட்ட முட்டாள்கள்??

இதைக் கூடத் திட்டமிடுதலின் தோல்வி என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அண்ணாவின் அடுத்த நடவடிக்கைதான் அவரின் எல்லைகளை வெளிக்காட்டி விட்டது. வார இறுதியில் தேர்தலை வைத்தால் எல்லோரும் கண்டாலா, கோவா போய்விடுகிறார்கள் என்று வார மத்தியில் தேர்தல் வைத்தால், கீழ், மத்திய, மற்றும் உயர் மத்தியதரப்பு என அனைத்துத் தரப்புக்கும் பொதுவான சோஷலிஸ வாகனமான ரயிலில் செல்வதிலிருந்து விடுதலை என்று ஓய்வெடுக்கச் செல்லும் மும்பையில், காஷ்மீரை விடக் குறைவான சதம் ஓட்டளிக்கும் மும்பையில் போராட்டம் நடத்தச் சென்றதுதான் அது..

அதுமட்டுமல்ல, மத்தியதர மக்கள் போராட்டம் நடத்த, அவர்களுக்கு இருப்பது வருடம் 7 நாட்கள் சாதா விடுப்பு மற்றும் 30 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு மட்டுமே. அதற்கு மேல் தங்கள் வாழ்க்கையை எப்படித் தியாகம் செய்ய வருவார்கள்?

பின்னடைவுகள் ஒரு இயக்கத்துக்கு வரும்தான். ஆனால், அவற்றில் இருந்து, இயக்கத் தலைமை என்ன பாடம் கற்றுக் கொள்கிறது என்பதுதான் முக்கியம். இந்த இயக்கத்துக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து பெரும் அளவில் இருக்கப் போவதில்லை என்பது மும்பையில் தெரிந்தது. ஆகவே, அதைக் கண்ட அரசும் லோக்பால் வாக்குறுதியை உறை பெட்டியில் போட்டு விடும் என்பதை ஊகிக்க, சட்ட வல்லுந மூளைகள் தேவையில்லை. அதன் பின்னும், மற்றுமொரு முறை அதே முறையில் போராட்டம் நடத்தத் திட்டமிடுதலுக்கு என்ன பெயர் சொல்வதென்றே புரியவில்லை.

அடுத்து உடனுறையும் காவல் தெய்வங்களின் சேட்டைகள். உயர் வகுப்பில் பயணம் செய்ததாகக் காட்டி, பணம் பெற்ற செயல் வெளிச்சத்துக்கு வந்த போது, அதைத் தவிர்த்துத் தாண்டிப் போனது. இது பொது வழக்கில் மிக முக்கியமான சில்லறைக் குற்றம். இம்மாதிரித் தவறுகளை அந்தக் காவல் தெய்வம் பணியில் இருந்த போது செய்திருந்தால், அவர் வேலை போயிருக்கும். தேசப்பிதாவின் பெயரால் நடத்தப் படும் போராட்டத்தில், ஊழலை எதிர்த்து நடத்தப் படும் போராட்டத்தில் இது போன்ற தவறுகள் களையப் பட்டிருக்க வேண்டும். பட்டிருந்தால், இயக்கத்தின் மதிப்பு கூடியிருக்கும். இதையும் செய்ய, மிகப் பெரும் அறிவு தேவையில்லை. காந்தி என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்தாலே போதும்.

காந்தி தொழிலதிபர்களின் நிதி உதவியைப் பெற்றவர். ஆனால், அவர்களோடு மேடையில் அமர்ந்து அரசியல் செய்யவில்லை. பாபா ராம்தேவ், ஆயுர்வேதா, யோகா என்று பெயர் சொல்லி, வெற்றிகரமாகக் களிம்புகளை விற்கும் ஒரு வியாபாரி. அவருக்கும் நேர்மையான அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்றே புரியவில்லை. நாலு நாள் சாப்பிடாமல் இருக்க முடியாத அந்த ஆத்மா, தொலைக் காட்சியில் யோக சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவது வியாபாரம் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதா என்ன?? அண்ணாவுக்கு பாபா ராம்தேவின் தேவையென்ன? சாலையில், அண்ணாவின் பெயரால் நம்பிக்கை கொண்டு பொருள், நேரம் முதலியவற்றைச் செலவு செய்து அண்ணாவிற்காகக் கால்கடுக்க நிற்கும் ஒரு சாமானியனை விட ராம்தேவ் எந்தவிதத்தில் மேலானவர்?

ஊழலுக்குப் பல்வேறு முகங்கள் உள்ளன. அதற்கான போராட்டம் உண்மையிலேயே எல்லா நிலைகளிலும் துவக்கப் பட வேண்டும். லோக்பால் வெறும் சட்டமும், அதனால் ஏற்படுத்தப் படப்போகும் ஒரு அமைப்பு மட்டுமே. அது சர்வ ரோக நிவாரணி ஆகாது. அதே போல், காந்திய வழியில் போராட்டமும் ஒரு உத்திதான். போராட்டத்தில் ஒரு சிறு வெற்றி பெற்றவுடன், அடுத்த நடவடிக்கையாக, ஒரே நோக்கம் கொண்ட சமூக ஆர்வலர்களுடன் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி, களப் பணிகளைத் துவக்கியிருக்கலாம். ஆனால், அண்ணாவைச் சுற்றியிருக்கும் ஒரு சிறு குழு, ஒரு கருத்துப் பரிமாற்ற அளவில் கூட மற்ற சமூகப் போராளிகளுடன் தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை.

இதையெல்லாம் விடுத்து, இப்போது நடந்த உண்ணாவிரதத்தில் ஒரு பிரயோசனமும் இல்லாமல் போன பின்பு, அரசியலில் மாற்றுச் சக்திகளை யோசிக்கிறார்களாம்.. பிரமாதம். இன்றைய காலத்தில், அவர் எதிர்ப்பது இப்போதைய அரசாங்கமான காங்கிரஸை. அதற்கு மாற்றுச் சக்திகள் – பி.ஜே.பி, சம்ஜ்வாதி, ஜனதாதளம் மற்றும் கம்யூனிஸ்ட்கள். இதில் ஓரளவேனும் கறை படியாத அரசியல் கட்சி எனில் கம்யூனிஸ்ட்களையும், பீஹார் ஜனதாதளத்தை மட்டுமே சொல்ல முடியும். ஆனால், அவர்கள் நாடு முழுதும் செல்லுபடியாக மாட்டார்கள். வேறென்ன செய்ய முடியும்? இணையதளம் மூலமாகவும், ஃபேஸ் புக் மூலமாகவும் ஆதரிப்பவர்கள் ஒரு 10% கூட வாக்களிக்க வர மாட்டார்கள்.

சொந்தமாகக் கட்சி துவங்கலாம். அரசியலில் போராட தேவைப் படும் பணம் எங்கிருந்து வரும்?? அது காங்கிரஸ் காலகாலமாக வெற்றிகரமாகச் செயல் படுத்தி வரும் தொழில் மாடல். இவர்கள் தேற மிக நீண்ட நாட்களாகும். அது தெரிந்துதான், இவர்களின் மாற்றுச் சக்தி யோசனையை காங்கிரஸ் மிக ஆர்வமாக வரவேற்கிறது

மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்றுவதை விட, அவர் ராலேகான் சென்று ஓய்வெடுக்கலாம்.

லோக்பால் உண்ணாவிரதம் துவங்கிய நாளில், ஊழல் என்னும் பிரச்சினையைக் கொஞ்சமேனும் சரி செய்ய எழுந்த ஒரு சக்தி என்று தோன்றியது. இன்று அவர் இன்னுமொரு அரசியல்வாதியாக மாறிவிடும் அபாயம் தெரிகிறது.

-பாலா

*

பாலா..

முழுவதுமாக ஒத்துபோக முடியவில்லை..ஏற்றுக்கொள்ளவும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு..ஆனால் உண்மை இருக்கிறது..

திட்டமிடலில் சில முக்கியமான பிழைகள் ஏற்பட்டுவிட்டது..

ராம்தேவ் உடன் மேடை ஏறியது எனக்கும் அத்தனை சரி என்று படவில்லை..ஆனால் மும்பை போராட்டத்திற்கு பின்னர் மக்கள் ஆதரவு குறைந்ததை கண்டுகொண்ட அவர்கள் எதுக்கும் இருக்கட்டும் என்று அவருடைய உதவியை நாடியிருக்கலாம்…ராம்தேவ் – அண்ணா கூட்டு அதிக நாள் நீடிக்காது என்று தோன்றுகிறது, காங்கிரஸ் அரசு மாயாவதி முலாயமுக்கு எதிராக எடுக்கும் அதே சி.பி.ஐ அஸ்திரத்திற்கு ராம்தேவும் vulnerable ..

அரசியல் அரங்கில் கால் பதிக்கும் இந்த முடிவு- கொஞ்ச நஞ்ச இருந்த ஆதரவையும் இல்லாமல் ஆக்கிவிடும்..இந்த முடிவை நான் தவறென்று சொல்ல மாட்டேன், ஆனால் எந்த அலையும் இல்லாத இந்த நேரத்தில் இந்த அறிவிப்பு எதையும் சாதிக்காது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது…அரசியல் கட்சிகள் எதிர்பார்த்ததும் இது தான்..

இந்த இயக்கம் காந்தி சேவா சங்கம் போல செயல்பட முடிந்தால் நலம் தான்..அந்த கட்டுகோப்பும் நேர்த்தியும் சாத்தியமா என்று தெரியவில்லை, எனினும் பார்க்கலாம்..ஏதோ ஒரு நம்பிக்கை எனக்கும் இன்னும் இருக்கிறது..

சுநீல் கிருஷ்ணன்

*

புதுடெல்லி: லோக்பால் ம்சோதாவை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட தமது குழுவின் பணி முடிவடைந்து விட்டதாகவும், எனவே குழுவை கலைப்பதாகவும் அறிவித்துள்ளார் அன்னா ஹசாரே.

வலுவான லோக்பால் மசோதா தொடர்பாக போராடி வந்த அன்னா ஹசாரே குழு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசியல் கட்சி துவக்க போவதாக அறிவித்து தங்களது போராட்டத்தை கைவிட்டது.

இந்நிலையில் அக்குழுவில் இருந்து தான் விலகுவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.மேலும் வலுவான லோக்பால் மசோதா அமைக்க மட்டுமே தான் குழு அமைத்தாகவும், அரசியல் கட்சி துவங்க அல்ல என்றும் ‌ஹசாரே தெரிவித்துள்ளார்.

அரங்கசாமி

*

அன்புள்ள பாலா, சுநீல், அரங்கா,

அண்ணா ஹசாரே காந்தி அல்ல. காந்தியவாதி. அதை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

இந்தப்போராட்டத்தை ஒரு கிராமத்துப்பெரியவரான அவர் இந்த அளவுக்குக் கொண்டுவந்ததே ஒரு மாபெரும் சாதனை. இதன் விளைவுகள் கண்டிப்பாக இந்தியாவின் சிவில்மனசாட்சியின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்துள்ளன என்றே நான் நினைக்கிறேன். இந்திய வரலாற்றில் நெருக்கடிநிலைக் காலகட்டத்திற்குப்பின் நிகழ்ந்த முக்கியமான குடிமைநிகழ்வு இது

அண்ணாவின் முக்கியமான பலவீனம் அவர் காந்தியைப்போல படித்தவர் அல்ல, ராஜதந்திரி அல்ல என்பதுதான். கந்தியை எவரும் வழிநடத்தவோ திரிக்கவோ முடியவில்லை. காந்தி மாபெரும் ராஜதந்திரப்பேச்சுவார்த்தைகளில் அவரே ஈடுபட்டார். அண்ணா அதற்காக படித்தவர்களை நம்பவேண்டியிருந்தது.

இந்த பலவீனங்களால் அண்ணாவின் சில பிழைகள் நிகழ்ந்தன. ஆரம்பம் முதலே அவரது பேட்டிகளில் ராஜதந்திர நேர்த்தியும் நாசூக்கும் இருப்பதில்லை. அவற்றை ஊடகமும் எதிரிகளும் எப்படித் திரிக்கமுடியும் என அவர் அறிந்திருக்கவில்லை. ஒரு சாதாரண கிராமத்துப்பெரியவர் போலவே அவர் பேசிவந்தார். ஊழலுக்கு எதிரான இயக்கத்தை அவரைச்சுற்றியிருப்பவர்கள் பரபரப்பு ஊடகங்களை மட்டுமே நம்பிச் செயல்படுத்தியபோது அவரும் அதற்கு உடன்பட வேண்டியிருந்தது

ஆனால் அண்ணா ஹசாரேவின் பலமும் அவர் எளிய கிராமத்து பெரியவர் என்பதே. அவரது எளிமையும் நேரடித்தன்மையும்தான் அவரது நம்பகத்தன்மையை உருவாக்கின. படித்தமேதைகள் ஊரை ஏமாற்றும் காலம் இது என்பதை நாம் அறிவோம்.

அண்ணா தோற்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். அவரால் முடிந்ததை அவர் செய்திருக்கிறார். இனியும்செய்வார். அவர் எதையும் தன் நலனுக்காகச் செய்யவில்லை

அவரது தோல்வியை ஏதோ தேசியவெற்றி போல களியாட்டத்துடன் எதிர்கொள்பவர்களைத்தான் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் ஊழல் ஒழியக்கூடாது என்று, அதற்கெதிராக உண்மையான வலிமை கொண்ட எந்த தேசியசக்தியும் கிளர்ந்து எழுந்துவிடக்கூடாது என்று உள்ளூர ஆசைப்படுபவர்கள் இவர்கள். எங்கோ அந்த இயக்கம் தங்கள் சொந்த சுயநலங்களையும் அர்ப்பத்தனங்களையும் வந்து சீண்டுகிறது என அறிந்தவர்கள். அவர்கள் அப்படித்தான் எதிர்வினையாற்ற முடியும்

ஆம், சிவா சொன்னதுப்போல இனி ஒரு கும்பல் அண்ணா தோற்று ஓடிப்போய்விட்டார் என துள்ள ஆரம்பிக்கும். அவர் ஏன் தோற்றார் என ஆராய்ச்சிகள் நாளிதழ்களில் வெளிவரத்தொடங்கும். நமக்கு தேவை அதுதானே? அன்றாட அரசியலும் நாளிதழ்க்கட்டுரைகளும். அதற்கு நாமே இலட்சியவாதமுகமூடி மாட்டியிருக்கிறோம்

பலியபால், நர்மதா போராட்டம் முதல் கூடங்குளம் ஈறாக இந்தியாவின் மாபெரும் மக்களியக்கங்கள் பெரும்பாலும் தோல்வையையே கண்டுள்ளன. காரணம் நம் சமூகத்தின் பிரம்மாண்டமான சுயநல நோக்கு. அதில் குளிர்காயும் அறிவுஜீவிகளின் அயோக்கியத்தனமான இரட்டைவேடம்.

ஆனாலும் இந்த போராட்டங்கள் வழியாகத்தான் நம்முடைய குடிமைப்பிரக்ஞை வளர்கிறது. நாம் உயிருள்ள சமூகமாக எஞ்சுகிறோம். அவ்வகையில் இந்தப்போராட்டங்கள் எல்லாமே வெற்றிகளே

ஜெ

[குழும விவாதத்தில் இருந்து]

[குழும விவாதம்]

முந்தைய கட்டுரைமுடிவிலா இலையுதிர்தல்
அடுத்த கட்டுரைஒழிமுறி இணையதளம்