அன்புள்ள ஜெ.மோ,
அண்ணாச்சியின் மரணச்செய்தியை தங்களின் வலைப்பதிவில் படிக்கும் நேரம், அவரின் “பார்வையாளனின் சோகம்” கவிதை நினைவில் வந்து நின்றது. சாலையில் நடக்கும் விபத்தினை விமிர்சிக்கும் பார்வையாளனின் துயர விமர்சனமாக அந்தக் கவிதை இருக்கும். கவிதையானது இப்படி முடியும்..(முழுக்கவிதை தங்களிடம் இருந்தால் பிரசுரிக்கவும்)
“போர்க்களத்தில் உயிர் துறந்தால் வீரமும் தியாகமும் அதற்குண்டு
இது போலான மரணங்களுக்குக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?”
ஆங்கில வழியில் படித்த என் போன்றவர்களைத் தமிழ்க்கவிதை பக்கம் திருப்பிய பெருமை அண்ணாச்சி அவர்களையே சேரும். நல்ல தமிழ்க் கவிதைகளை தினமணி கதிர் இதழில் பிரசுரம் செய்வார். அவற்றைப் படித்த பிறகே தமிழ்க்கவிதைகளின் பக்கம், தமிழ் இலக்கியத்தின் பக்கம் எங்களின் கவனம் திரும்பியது.
அண்ணாச்சி அவர்களை இரண்டு வருடங்களுக்கு முன்னால் புத்தக கண்காட்சியில் முதல் முதலாய் நேரில் பார்த்தேன். தமிழினி யில் அவருடைய புத்தகம் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தவளுக்கு அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் தேடின அவருடைய கவிதைப் புத்தகங்கள் அப்போது எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அண்ணாச்சி என்னுடைய முகவரியை வாங்கிக்கொண்டு மறக்காமல் எனக்கு புத்தகங்களை அனுப்பி வைத்தார்(எந்த பலனையும் எதிர்பாராமல்).
போட்டி பொறாமை தற்பெருமை மிகுந்த இலக்கிய உலகத்தில் அண்ணாச்சி போன்றவர்களின் மௌனப்புரட்சி தான் இக்கால தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு செல்கிறது என்பதை மறுக்க இயலாது.
துயரத்துடன்
கல்பனா
அன்புள்ள கல்பனா
ராஜமார்த்தாண்டனைப்பற்றிய உங்கள் கடிதம் மீண்டும் அவரது முகத்தை நினைவுறுத்தியது. இலக்கியம் என்பதை கிட்டத்தட்ட ஒரு மதம்போல– மீட்புக்கான இறுதி வழிபோல- நம்பிய சென்ற காலகட்டத்து சிற்றிதழாளர் அவர்
ஜெ
அன்புள்ள ஜெ,
ராஜமார்த்தாண்டனைப்பற்றிய உங்கள் அஞ்சலியும் கடிதங்களும் என் மனதை மிகவும் பாதித்தன. நான் அவரது எந்த எழுத்தையும் படித்தவனல்ல. அவரது கொங்குத்தேர்வாழ்க்கை தொகுப்பை மட்டுமே பார்த்திருக்கிறேன். கையிலே வைத்திருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். ராஜமார்த்தாண்டனைப்பற்றிய பழைய செய்திகளை எல்லாம் படித்தேன். அவரைப்பற்றி இந்த அளவுக்கு வேறு எந்த இதழிலாவது இருக்குமா தெரியவில்லை. உங்களுடைய இணையதளம் கிட்டத்தட்ட ஒரு இதழ்போல எல்லாருக்குமான செய்திகளுடன் ஒரு உரையாடல்மையமாக ஆகிவருகிறது. நன்றி
சுப்ரமணியம்