அன்புள்ள ஜெ,
உங்கள் “ஒருங்கிணைதலின் வழி” படித்தபோது, இந்த நிகழ்வை உங்களோடு பகரலாமென்று நினைத்தேன்.
நான் எனது ஐந்து வயது மகனை கடந்த மே 9-ம் தியதி பள்ளிக்கு அனுப்பச் சென்றிருந்தேன். அப்போது எனது மகனின் வகுப்பாசிரியை,
“நீங்கள் உங்கள் வீட்டில் எந்த மொழியில் பேசுவீர்கள்” என்று சாதாரணமாகக் கேட்டார்.
அதற்கு நான், “நாங்கள் வீட்டில் தமிழில் மட்டும்தான் பேசுவோம். எங்கள் குழந்தைகளையும் தமிழில் பேசவே ஊக்கப்படுத்துவோம். வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவதைத் தவிர்ப்போம்.” என்றேன்.
நான் எனது மகனுடன் மலையாளத்தில் பேசினால் நான் தமாசு செய்வதாக எண்ணிச் சிரிப்பான். இப்போது பரவாயில்லை. புரிந்து கொள்கின்றான். நிற்க. நான் சொல்லவந்த செய்தி இதுவல்ல.
உடனே சற்றும் தாமதியாமல் மகனின் வகுப்பாசிரியை,
“ஓ… அப்படியா? நீங்களும் அந்த கும்பல் தானா?” என்று சற்று அதிர்ச்சியோடு கேட்டார்.
மீண்டும் அவர் தொடர்ந்து, “எனது ஒரு சிங்கள நண்பியின் அப்பாவை தமிழ் புலிகள் ஒரு யுத்தத்தில் கொன்றுவிட்டார்கள். தமிழர்களால் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் இரத்த ஆறு ஓடுகின்றது என்றாள்.”
நான் சற்று மௌனமானேன்.
“நீங்களும் அந்த இலங்கை தமிழர் தானா?”
அதற்கு நான், “இல்லை. நான் ஒரு இந்தியத் தமிழன். ஆனால் நாங்கள் பேசுவது ஒரே மொழிதான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்களிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அவர்கள். உருவ அமைப்பிலும், பேச்சிலும் நானும் அவர்களும் ஒன்றே. ஆனால் நான் இந்தியத் தமிழன். அங்கே அவர்கள் தங்கள் விடுதலைக்காகப் போராடுகின்றார்கள். சிங்களர்களிடமிருந்து.”
அவர் ஒரு 7 அடி உயரமிருப்பார். நான் 5 அடி 4″. என்னை சற்று குனிந்து பார்த்துவிட்டு தனது கைக்கடிகாரத்தை பார்த்தார்.. எனக்குப் புரிந்தது நேரமாகிவிட்டதென்று. அவர் வகுப்பறைக்குச் சென்றார். நான் எனது அலுவலகத்திற்கு பயணமானேன்.
எனக்கு இருப்பு கொள்ளவில்லை. உண்மையைச் சொன்னால் இலைங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் என்னுள் சொல்லொணா துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.
அலுவலகத்தில் சென்று கீழ்க்கண்ட மூன்று கட்டுரைகளையும் பிரதி எடுத்துக்கொண்டேன். (இந்த கட்டுரைகள் ஏப்ரல் கடைசி வாரத்திலும் மே முதல் வாரத்திலும் வெளிவந்தவை. இவை மீண்டும் பிரசுரமாகியிருக்கின்றது.)
எனது மகனை பள்ளியிலிருந்து அழைக்கச் செல்லும்பொது அவனது வகுப்பாசிரியையிடம் அந்த பிரதிகளைக் கொடுத்தேன்.
என்னவென்றார். அதற்க்கு நான் “இது தான் இப்போது இலங்கையில் தமிழர்கள் நிலை. இதை நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இந்த கட்டுரையை எழுதியது உங்கள் மேற்குலக எழுத்தாளர்தான். இது வெளிவந்திருப்பது ஒரு நடுநிலை பத்திரிகையில். கொஞ்சம் நேரமிருந்தால் படித்துப்பாருங்கள்.” என்றேன்.
அடுத்த நாள் நான் என் மகனுடன் பள்ளிக்குச்சென்றேன். வகுப்பாசிரியை வகுப்பு வாசலில் நின்றிருந்தார்.
எனது கைகளைப்பிடித்து “மன்னித்து விடுங்கள்.”, அவர் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது, “நான் நேற்று இரவு தூங்கவில்லை.. எனது சிங்களத் தோழி தவறான செய்திகளை சொல்லியிருக்கின்றார். அதை நானும் நம்பிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்.”
நான் சொல்ல ஒன்றுமில்லை. மீண்டும் ஒருமுறை மௌனமானேன்.
“நானும் எனது கணவரும் ஏராளம் பணம் அந்த சிங்கள தோழிக்கு கொடுத்து உதவியிருக்கின்றோம்.”
அப்போது அவர் கண்களைப் பார்த்தேன். ஏமாற்றம் தெரிந்தது.
“இன்னும் நாங்கள் அந்த சிங்கள தோழியை நம்புவதாக இல்லை. சொல்லுங்கள் நாங்கள் இப்போது தமிழர்களுக்கு எப்படி உதவுவது?”
நான் சற்று யோசித்துவிட்டு, “இந்தப் பிரதியை நகலெடுத்து உங்களுக்குத் தெரிந்தவர் அனைவருக்கும் கொடுங்கள். அதுவே நீங்கள் செய்யும் பேருதவி.”
அவர் தனது கண்களை மூடி தலையை மெதுவாக ஆட்டினார்.
அன்புடன்
கிறிஸ்டோபர்