ஒரு வாரமாக ஊரில் இல்லை. ஒருமாதத்துக்கு மேலாக எழுதிக்கொண்டிருந்த நாவலின் முதல்வடிவை முடித்து நண்பர்கள் வாசிக்கக் கொடுத்தபோது கனமான சோர்வு வந்து மூடிக்கொண்டது. சோர்வு ஒரு அழுத்தமான பிசின் போல. கைகால்களை அசைக்கக் கஷ்டமாக இருக்கும். இமைகள்கூட கனக்கும். எண்ணங்கள்கூடக் கண்ணாடிப்பரப்பில் புழு போல அங்கேயே நெளிந்துகொண்டிருக்கும்.

ஆனால் எனக்கு அப்படி ஆகுமென்று முன்னரே தெரியும். ஆகவே பெங்களூருக்கு ஒரு இருக்கை முன்பதிவுசெய்துவைத்திருந்தேன். பயணத்தகவல் அஜிதனுக்கு மட்டும்தான் தெரியும். ஜடாயுவுக்குப் பின்பு சொன்னேன். அஜி காலையில் லால்பாக் அருகே வந்து நின்று வரவேற்றான். சிரித்துக்கொண்டே சின்னப்பையன் போலக் கையசைத்தபடி வந்தான். அவன் எல்கேஜி பையனாக இருக்கும்போது அப்படியேதான் ஓடிவருவான்
வழக்கமாக தங்கும் விடுதி மூடப்பட்டிருந்தது. இன்னொரு விடுதியில் அறைபோட்டேன். அஜி கல்லூரிக்குச்சென்றபின் நான் சற்றுநேரம் ஓய்வெடுத்தேன். பிரம்மாண்டமான ஒரு ஆலைபோல ஓலமிட்டது நகரம். ஆகவே அந்தக் குளிரிலும் அநியாய வாடகைக்கு ஒரு குளிர்சாதன அறை எடுத்துக்கொண்டேன்.
இருநாட்கள் அஜிதனுடன் நகரில் அலைந்தேன். கால்போனபோக்கில். அவனுக்கு ஒரு டெல் மடிக்கணினி வாங்கிக் கொடுத்தேன். இரண்டுவருடமாக வாங்கித்தருகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். வேண்டவே வேண்டாம் என்று மறுத்து சூழியல்காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். வாங்கிக்கொடுத்த ஒருமணி நேரத்தில் பயல்முகம் பிரகாசமானது. அதை வருடிக்கொண்டே இருந்தான்
நகரில் பேசிக்கொண்டே அலைந்தோம். அவன் வாசித்த நூல்களைப்பற்றிச் சொன்னான். லால்பாக்கில் அமர்ந்திருந்தோம். அங்கே கூடுகட்டும் பல பறவைகளை அவன் மூன்றுவருடங்களாக அனேகமாக தினமும் பார்த்துக் குறிப்பு எடுத்து வருகிறான். அதாவது தலைமுறைகளாக. திரும்பவரும்போது நான் லால்பாக் வாசலில் ஒரு பெண்ணைப்பார்த்தேன். அவளுடைய இரு பாதங்களும் மிகப்பெரியதாக சிவப்பாக ஊதியிருந்தன. பலூனால்செய்யப்பட்ட பாதங்களைப்போல. அவளை முன்னரும் கண்டிருக்கிறேன். லால்பாகிலேயே இருப்பவள். அது என்ன விபரீத நோய் என்று தெரியவில்லை. அஜிக்குச் சுட்டிக்காட்டினேன்.அவன் அப்போதுதான் அதைப்பார்ப்பதாகச் சொன்னான்.
மறுநாள் மதியம் ஜடாயு வந்தார். அவருடன் சென்று ஆந்திரா உணவகத்தில் சாப்பிட்டோம். அல்சூர் ஏரிக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அஜிதன் காலை முதலே ‘ஒருமாதிரி இருக்கு…நீ இன்னைக்கே போயாகணுமா?’ என்று சொல்லிக்கொண்டிருந்தான். மாலை ஆக ஆக மிகவும் சோர்ந்திருந்தான். ஆனால் இரவு பத்துமணிக்குக் கிளம்பும்போது நான் புத்தம்புதிய மனநிலையுடன் இருந்தேன்.
திரும்பவந்து சில எழுத்துவேலைகள். சனிக்கிழமை கிளம்பி ஈரோடு சென்றேன். அங்கே சி.கெ.கெ அறக்கட்டளையின் விருது. நிதி விஷ்ணுபுரம் அமைப்புக்கு என்பதனால் அமைப்பாளர்கள் உற்சாகமாக வந்திருந்தார்கள். விஜயராகவன் வீட்டில் தங்கினேன். கடலூர் சீனு வந்திருந்தார்.
காலை பத்துமணிக்கு அரங்குக்குச் சென்றோம். மரபின்மைந்தன் முத்தையா தலைமையில் கவியரங்கு. முத்தையா மேலும் இளமையாக இருந்தார். அவருடன் சென்றமுறை சி.கெ.கெ.அறக்கட்டளை விருது பெற்ற வண்ணதாசனும் வந்திருந்தார். கவியரங்கு பாதியில் கிளம்பி அருகே விஸ்வம் என்ற நண்பரின் இல்லம் சென்றோம். அங்கே நிறைய நண்பர்கள் வந்திருந்தனர். பேசிக்கொண்டிருந்தோம்.
மாலையில் விருதுவிழா. என்னை ஒரு சிம்மாசனத்தில் அமரச் செய்தார்கள். ‘நற்றமிழ் கொற்றவ’ என்று யாரோ பேசப்போகிறார்கள் என பீதியுடன் இருந்தேன். நடக்கவில்லை. பொதுவாக விழாவின் எல்லாப் பேச்சாளர்களும் தரமாகவே தேர்வுசெய்யப்பட்டிருந்தனர். காரணம், அறக்கட்டளையின் ஆலோசகர்களில் ஒருவரான கவிஞர் ரவி உதயன். அவரை எனக்கு 94ல் தருமபுரியில் பணியாற்றிய காலகட்டத்திலேயே தெரியும்.
விருதுவிழாவை ஒட்டி ஒரு கருத்தரங்கம். வெ.இறையன்பு, அ.வெண்ணிலா, பிரபஞ்சன் ஆகிய மூவரும் சிறப்பாகவே பேசினார்கள் என்றாலும் மிகச்சிறந்த உரை கரு.ஆறுமுகத்தமிழன் ஆற்றியதே. அவரைத்தான் அன்றைய விழாநாயகன் என்று சொல்லவேண்டும். தமிழர் தத்துவ இயல் என்ற தலைப்பில் எந்த சமரசமும் இல்லாமல் சுருக்கமாக ஆனால் முழுமையாகப் பேசினார். ஆழமான ஓர் உரை ஆத்மார்த்தமாக நடத்தப்பட்டால் எந்த அவையையும் கவனிக்கச்செய்யும் என்பதற்கு அந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம். பலவகையான மனிதர்களக்கொண்ட அந்த சபை பிரமித்துப்போய் உரையை கவனித்தது
தமிழில் மேடையுரை செத்துக்கொண்டிருக்கிறது. மேல்நாட்டில் ஸ்டேண்ட்அப் காமெடி என்று சொல்லப்படுவதை இங்கே மேடைப்பேச்சாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மேடைப்பேச்சு கருத்துக்களைச் சொல்ல, விவாதிக்க உருவான ஊடகம் என்ற எண்ணமே நம்மிடமிருந்து அழிந்துவிட்டது. நம் மேடைக்கேளிக்கையாளர்கள் தூக்கி வீசப்பட்டு ஆறுமுகத்தமிழன் போன்றவர்கள் முக்கியத்துவம் பெறும்போதுதான் நாம் மேடையுரைக் கலையை அழியாமல் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசெல்ல முடியும்.
புகழ்பெற்ற மேடைப்பேச்சாளரும் அரசியல்வாதியுமான பழ. கருப்பையாவின் மகன் கரு.ஆறுமுகத்தமிழன். சைவசித்தாந்தத்தில் முனைவர் பட்டம்பெற்றவர். ’திருமூலர்-காலத்தின்குரல்’ என்ற முக்கியமான நூலின் ஆசிரியர். தமிழினி இலக்கிய இதழின் ஆசிரியர்.
மாலை மீண்டும் விஸ்வம் இல்லத்தில் கூடிப் பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் ஒரு மலைப்பயணம். திரும்பும் வழியில் குற்றாலம் செங்கோட்டை அச்சங்கோயில் என மலைகள் காடுகள். இலஞ்சியில் ஒரு பயணியர் விடுதியில் நான்குநாள் தங்கியிருந்தேன். ஏதோ பழைய வேளாளப்பிள்ளைவாளின் பங்களா. இந்தமுறை தென்மேற்குப்பருவமழை குறைவு. குற்றாலத்தில் சீசன் பொய்த்துக் கூட்டமே இல்லை. சாரல் இல்லாத குற்றாலம். ஆனாலும் மலைகள் நீலநிற அலைகளாக விரிந்த மேற்கு அற்புதமான அமைதியை அளித்தது
இப்போது பிரம்மாண்டமான பல எழுத்துப்பணிகள். திரைப்படங்கள் ஒருபக்கம். அவற்றைத் தொழில் என்று சொல்லலாம். மறுபக்கம் எந்த எழுத்தாளரும் வாழ்நாள்சாதனை எனத்தக்க இரு வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன். கணநேரம் கூட வீணடிக்கமுடியாதபடி நாட்கள் செல்கின்றன. ஆகவே இணையத்தில் மின்னஞ்சல் , என் தளம் தவிர எதையும் பார்ப்பதில்லை. நாளிதழ்களை வாசித்து இன்றோடு எழுபது நாட்களாகின்றன. வேறு ஒரு அக உலகம்.