அன்புள்ள ஜெ,
நலமா?
தங்களிடம் நெடுநாட்களாக கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த கேள்வி ஒன்று.
இதற்கிணையான அல்லது இதைப்போன்ற ஒரு மன ஆழத்திலேயே அந்தக் குறள் உங்கள் படைப்பில் மேற்கோள் காட்டப்பட்டதாக நான் உணர்கிறேன். தங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.
பின் தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு முன் “அறத்தாறு இதுவென வேண்டா” என்ற குறளை குறிப்பிட்டிருப்பீர்கள். அந்த குறள் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் குறிப்பிடும் வழமையானஅர்த்தத்தில் பொருள் தராமல் வேறொரு பொருளில் இந்த நாவலில் இயங்குவதாக நினைக்கிறேன். உண்மையில் பரிமேலழகர் அந்தக் குறளை சிவிகை பொறுப்பவனுக்கு சாதகமாக பொருள் கூறுவதாகவும்; தாங்கள் அதன் வேறொரு பக்கமான ஊர்பவனுக்கும் சாதகமாக இருக்க சாத்தியமான மற்றும் யார் ஒருவருக்கும் சாதகமற்ற நடுநிலையான, உண்மையை தேடுகிற கவித்துவ பொருளை வலியுறுத்துவதாகவும் நான் புரிந்து கொண்டுள்ளேன். இது சரியா?
உண்மையில் உங்களது பொருளே (எனது பார்வையில்) அந்தக் குறளை மேலும் அதிக ஆழமாக்குகிறது என நினைக்கிறேன். பொறுப்பவனையும், ஊர்பவனையும் கொண்டு அறத்தாறு இதுவென முடிவு செய்ய நாம் யார்? உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ அவர்கள் முதல் கல்லை எறியுங்கள் என்ற வசனத்தை கிறிஸ்து தலையை கவிழ்ந்தவாறு நிலத்தில் எதையோ கிறுக்கியபடி சொல்வதாக ஒரு திரைப்படத்தில் காட்டுவார்கள். உண்மையில் அந்த வசனம் சொல்லப்பட்டது கூட்டத்திற்கன்று தனக்கே. அவள் பாவப்பட்டவள் என தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு எப்படி வந்தது என்ற குற்றவுணர்வின் வெளிப்பாடு அந்த வசனம் என்பதாக காட்டுவார்கள். தீர்ப்பு என்பதுதான் முதல் கல் அன்றோ.
இளங்கோ கிருஷ்ணன்
***
அன்புள்ள இளங்கோ கிருஷ்ணன்,
தமிழின் கவனிக்கப்படும் கவிஞர்களில் ஒருவர் நீங்கள். உங்கள் கவிதைகள் நீங்கள் உத்தேசிக்கப்படாத தளத்தில் வாசிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? அதை உங்கள் கவிதையின் வெற்றி என்றே சொல்வீர்கள் இல்லையா? குறளாசிரியனும் கவிஞனே.
பன்முகப்பொருளை அளிக்கும்போதுதான் கவிதை கவிதையாகிறது. முடிவிலாத வாசிப்புச்சாத்தியத்தை அளிப்பதே நல்ல கவிதை. முடிவிலாத வாசிப்புச்சாத்தியத்தைக் கண்டுகொள்வதே நல்ல வாசிப்பு.
நல்ல கவிதை என்பது சொல்லமைவினால் மட்டுமல்ல சொல் மயக்கத்தால் கூட மேலும் பொருள் அளிக்க வல்லது. வில்லியம் எம்சன் என்னும் திறனாய்வாளர் சென்ற நூற்றாண்டில் பொருள்குழப்பம் கவிதைக்கு அளிக்கும் புதிய வாசிப்புச் சாத்தியக்கூறுகளைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்
கவிதையை ஒரு குறிப்பிட்ட கருத்துத்தளத்தில் நின்றபடி ஒரு குறிப்பிட்ட பொருளை வாசகனுக்கு அளிக்கும்பொருட்டு நிகழ்த்தப்பட்ட முயற்சி என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அது மொழியின் புறவயமான சமூகக் கட்டுமானமும் மொழி என்னும் அகவயமான அந்தரங்க நிகழ்வும் ஒரு தருணத்தில் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு. மொழியின் சாத்தியங்கள் வழியாக ஒரு அகம் தன்னை முன்வைக்கும் முயற்சி. மொழியின் சாத்தியங்கள் எப்படி முடிவிலி வரை செல்லுமோ அப்படியே அகத்தின் சாத்தியங்களும் செல்லக்கூடும்.
ஆனால் தத்துவ, நீதி நூல்களின் இயல்பு அது அல்ல. அவை திட்டவட்டமான செய்தி ஒன்றை சொல்லக்கூடியவை. பொருள் மயக்கம் அவற்றில் கருத்துக்குழப்பமாகவே அர்த்தப்படும். அவை கூறும் நீதியை அவை முன்வைக்கப்பட்ட காலத்தை கருத்தில் கொண்டு அச்சொற்கள் வழியாக கறாராக வாசித்தெடுப்பதை மட்டுமே ஒரு வாசகன் செய்ய வேண்டும்.
குறளை ஒரு கவிதை நூலாக எடுத்துக்கொள்வதா இல்லை தத்துவ – நீதி நூலாக எடுத்துக்கொள்வதா என்னும் குழப்பம் நெடுங்காலமாகவே தமிழில் இருந்து வந்துள்ளது. பொதுவாக அதை ஒரு நீதி நூலாகவே எடுத்துக்கொள்கிறார்கள். அதே சமயம் அதில் உள்ள கவித்துவத்தை ஓர் உபரியான கொடையாக எண்ணுகிறார்கள். ஆகவே குறள் சொல்வதென்ன என்ற கேள்வியே எப்போதும் முக்கியமானதாகப் படுகிறது.
ஒருவகையில் இது சரிதான். ஆனால் இதையே வறட்சியாகச் செய்து, ‘அமுதினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறு கை அளாவிய கூழ்’ என்ற குறளையெல்லாம் கறாரான நீதியாகக் கொள்ளும் தமிழ்ப்பண்டிதர்கள் உருவாகி குறள் மேல் உட்கார்ந்துகொண்டு குறளின் எல்லா கவித்துவ சாத்தியங்களையும் உலரச்செய்துவிட்டார்கள். இன்று தமிழில் குறளின் அரிய கவித்துவத்தை அடையாளம் காட்டும் ஒரு உரை கூட கிடைப்பதில்லை. குறளை இந்தியன் பீனல் கோடு போல விளக்கும் உரைகள் ஏராளமாகக் குவிந்துகிடக்கின்றன.
கூடவே நம் பள்ளி ஆசிரியர்கள். குறள் மனப்பாடம், குறள் ஒப்புவித்தல், குறள் அரும்பதவுரை, குறள் பொழிப்புரை, மூன்று பக்கத்துக்கு மிகாமல் நின்று எழுதுதல் என குறளை ஒரு வகை உலோகக் கட்டுமானமாக ஆக்கி பிரித்து மாட்டி அதற்கு கோனார் ‘பயனர் கையேடு’களும் போட்டு வருகிறார்கள். ஆகவே இன்று குறளின் கவித்துவத்தைப் பற்றிப் பேசினாலே ”எந்தக் குறளைச் சொல்றீங்க? திருவள்ளுவர் எழுதி இந்த பஸ்ஸிலே எல்லாம் எழுதி போட்டிருப்பாங்களே, அதானே?” என்று கேட்கும் அளவுக்கு ஆகியிருக்கிறது.
குறளை எப்போதுமே கவிதையாக மட்டுமே காண்பதை நான் ஜெயகாந்தனிடம் மட்டுமே கண்டிருக்கிறேன். அவரைப்பொறுத்தவரை குறள் வாசிப்பு என்பது குறளில் இருந்து சிறகடித்துக் கிளம்பிச்செல்வதுதான். அவரது உரையாடல்களில் குறள் பலப்பல ஆழமான அர்த்தங்கள் கொண்டு விரிவதைக் கேட்டிருக்கிறேன்.
குறளை நீதி நூல் என்றே எடுத்துக்கொண்டு அந்த நீதியை அது கவிதையாக முன்வைக்கிறது என்று புரிந்துகொள்வதே குறளை உள்வாங்குவதற்கான ஆகச்சிறந்த வழிமுறை என்பது என்னுடைய எண்ணம். அதாவது குறள் சொல்வது ஒரு மாபெரும் மானுட நீதியை என்று எடுத்துக்கொண்டு அந்த நீதியின் பல்வேறு சாத்தியங்களுக்குள் செல்வதாக அதன் வரிகளை வாசிப்பது.
”தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு” என்ற வரியை கற்கும்தோறும் அறிவு,தோண்டும்தோறும் ஊற்று என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் வள்ளுவர் மணற்கேணி என்கிறார். தோண்டுவதை நிறுத்தினால் விரைவிலேயே தூர்ந்து இல்லாமலாகி விடும் ஊற்று அது என எண்ணும்போது மேலதிகப் பொருள் சாத்தியமாகிறது. என்னுடைய கட்டுரைகளில் குறள் மீதான இந்த அணுகுமுறை இருப்பதைக் கவனிக்கலாம்.
குறள் மீதான தமிழ்ச்சமூகத்தின் வாசிப்பு மூன்று பொதுக்காலகட்டங்களாகப் பிரிக்கத்தக்கது. அது ஒரு சமண- ஆசீவக நூல் என்றே நான் எண்ணுகிறேன். சமணர்களின் கல்விச்சேவை நீதிநூல்களையும் இலக்கண நூல்களையும் உருவாக்கியது. அவ்வாறு உருவான நூல்களில் முதன்மையானது குறள். சமணத்தை மீறி அது ஒரு பொது நீதி நூலாக தனியிடம் பெற்றது. அக்காலத்தில் குறள் வாசிக்கப்பட்டது சமணக் கோணத்தில்.
பின்னர் சோழர்காலகட்டத்தில், பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர், அது உரையாசிரியர்களால் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டது. பரிமேலழகர், மணக்குடவர் உரைகள் குறளை மிகவிரிவான ஒரு தத்துவ தளத்தில் பொருத்தி விளக்கின. ஆனால் இக்காலகட்டம் சைவ, வைணவப் பெருமதங்களின் காலகட்டம். ஆகவே குறள் அந்தப் பெருமதங்களால் முன்வைக்கப்பட்ட நீதித்தத்துவங்களின் ஒளியில் விளக்கப்பட்டது.
பின்னர் குறள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சு வடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அதற்கு புதியவகையான வாசிப்புகள் உருவாயின. இவ்வாசிப்பை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அன்று மேலோங்கியிருந்த சைவ நோக்கில் குறளை ஒரு சைவநூலாகச் சுட்டும் முயற்சி. வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் போன்றவர்கள் இதன் தொடக்கப்புள்ளிகள். ஜமீந்தாரிணி உரை [திருக்குறள் தீபாலங்காரம்] கா.சு.பிள்ளை திருக்குறளும் சைவமும் போல ஏராளமான சைவ விளக்க நூல்கள் அக்காலத்தில் வெளிவந்துள்ளன.
தமிழ்நாட்டில் சமணர்களுக்கும் சைவத்துக்கும் இடையேயான உறவு சிக்கலானது. சமணத்தை மறுத்து வென்று உருவானது தமிழ்நாட்டின் இன்றைய சைவமும் அதன் அடிப்படைத் தத்துவமான சைவ சித்தாந்தமும். இக்காரணத்தால் அவற்றில் ஒரு ‘போரிடும்தன்மை’ இன்றும்கூட இருந்துகொண்டே இருப்பதைக் காணலாம். ஆனால் தமிழ்நாட்டுச் சைவர்களில் பெரும்பாலானவர்கள் சமணர்களாக இருந்து மாறியவர்கள். ஆகவே சமணர்களின் ஆசாரங்கள் -சைவ உணவு சிறந்த உதாரணம் – அவர்களிடம் நீடித்தன. மனநிலைகள், சடங்குகள், தத்துவங்கள் ஆகியவையும் நீடிக்கின்றன.
ஆகவே சமணநூலான குறள் அவர்களுக்கு மிக உவப்பானதாகவும், சைவநூலாக விளக்கத்தக்கதாகவும் இருந்தது. அவர்களின் விளக்கங்கள் வழியாகவே நவீன காலகட்டத்தில் குறள் மறுபிறப்பு எடுத்தது. திருவள்ளுவரின் இன்றைய தோற்றம் என்பது அவர் சமணராக அடையாளப்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் சைவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. திருவள்ளுவ நாயனார் புராணம் போன்ற பல கதைகளும் திருவள்ளுவர் குறித்து உருவாக்கப்பட்டன.
இன்னொரு நவீன வாசிப்பு இந்தியாவில் மதச்சார்பற்ற ஜனநாயகப் பண்புகள் உருவானபோது அதற்குரிய நூலாக குறள் அடையாளப்படுத்தப்பட்டதுதான். அதற்கான எல்லா அடிப்படைகளும் கொண்ட நூல் என்றே குறளைச் சொல்லமுடியும். குறள் சமண தெய்வங்களைச் சொல்லும் வரிகள் பொதுவான கடவுள் உருவகத்துக்கு உரியனவாகவே உள்ளன. அதன் நீதி என்பது பெரும்பாலும் காலம் கடந்த விவேகத்தைச் சார்ந்ததாகவே உள்ளது.
சைவ அறிஞர்களின் உரையில் இருந்து மேலெழுந்து உருவாக்கப்பட்ட உரைதான் இந்த நவீன ஜனநாயக உரை. கச்சிதமான உதாரணம், மு.வரதராஜனின் பெரும்புகழ்பெற்ற உரைதான். கா.சு.பிள்ளை உரையில் இருந்து மு.வ உரை வரையிலான இடைவெளியில் குறைந்தது 100 உரைகளையாவது காணமுடியும். இந்த பண்பாட்டுப் பரிணாமம் விரிவாக ஆராயத்தக்க ஒன்றாகும்.
இந்த வாசிப்புகளில் விடுபட்ட அல்லது சேர்க்கப்படவேண்டிய இரு கூறுகள் என நான் நினைப்பவை இரண்டு. ஒன்று குறள் மீதான சமண நோக்கு தமிழில் அரிதாகவே உள்ளது. சமணசூத்திரங்களுக்கும் பிற முக்கியமான சமண நெறிநூல்களுக்கும் இடையேயான ஆழமான ஒப்பீட்டு வாசிப்பு இன்றுவரை நிகழவில்லை. அது குறளின் தமிழ்த்தனித்தன்மையை இல்லாமலாக்கிவிடும் என தமிழாய்வாளர் அஞ்சுகிறார்கள் என நினைக்கிறேன். அந்த ஒப்பீட்டு ஆய்வு குறள் மீதான பல புதிய திறப்புகளைச் சாத்தியமாக்கும்.
குறளை நவீன கவிதை வாசிப்பின் வழிமுறைகளைக் கொண்டு வாசிப்பதென்பது அதை கிட்டத்தட்ட புதிதாகக் கண்டுபிடிப்பதுதான். அதன் சாத்தியங்களை எல்லாம் திறந்து விடுவதுதான். அதன் மூலம் நாம் குறளை முழுமையாக வாசிக்க ஆரம்பிக்கிறோம் என நினைக்கிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட குறள் மீதான என் வாசிப்பு என்பது இந்த இரண்டு சாத்தியங்களையும் ஒட்டியது. அக்குறள் அதிகமாகப் புகழ்பெற்ற ஒன்றல்ல. ஏனென்றால் விதிவலிமையைச் சொல்லும் எளிய குறளாக மட்டுமே அது அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அது மட்டும்தானா?
தமிழில் குறள் மீதான உரைகளில் வடமொழி அறிவு இன்மையின் பெரும் பிழைகளும், இந்தியஞானமரபில் பழக்கம் இல்லாததனால் இந்திய ஞானமரபின் விவாதங்களில் வைத்து குறளைப் பார்க்க முடியாமையின் விடுபடல்களும் நிறைந்திருக்கின்றன.
பரிமேலழகர் ”அறத்து ஆறு இது எனல் வேண்டா. அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா, சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை- சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானோடு காட்சியளவை தன்னானே உணரப்படும்” என்று சொல்கிறார்.
இதில் இருந்து எளிமையான ஓர் உரையை பிற்காலத்தவர் தருவித்துக்கொண்டார்கள். அதாவது ‘அறத்தின் வழி இது என்பதற்கு சான்றாக பல்லக்கு தூக்குபவனையும் அதில் ஏறிச் செல்பவனையும் எடுத்துக்கொண்டாலே போதுமே’ என்பதே அக்குறளின் பொருள் என்று கொண்டார்கள். பரிமேலழகர் சொல்லுவதாக இவர்கள் எடுத்துக்கொண்ட அந்த உரையையே நாம் இன்றுவரை எல்லா நூல்களிலும் காண்கிறோம். கணிசமான குறள் உரைகள் ஒரு அடுப்பில் தீ வாங்கி ஊரே சமைப்பது போன்றவை.
அக்காலத்து தத்துவ விவாதத்தின் தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய குறள் இது. அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா என்கிறார் பரிமேலழகர். ஆகம அளவை என்றால் என்ன?
அளவைவாதம் என்பது மீமாம்சத்துக்கு தமிழில் சுட்டப்பட்ட பெயர். இதை நாம் மணிமேகலையில் காணலாம். இதில் ஆகம அளவைவாதம் என்பது பூர்வ மீமாம்சை. வேதங்களை தன் முழுமுதல் அடிப்படையாகக் கொண்ட ‘வேதமுதன்மைவாதம்’ அல்லது ‘வேள்விமையவாதம்’ என்று பூர்வ மீமாம்சையைச் சொல்லலாம்.
பூர்வ மீமாம்சையின் அடிப்படையான கருத்துக்களில் ஒன்று ‘அபூர்வம்’ என்பது. ஒரு செயலைச் செய்தால் அதற்கான பயன் உண்டு என்பதும் அந்தப்பயன் செய்தவனும் செய்யப்பட்டவனும் இல்லாமலான நிலையில் கூட இருந்துகொண்டிருக்கும் என்றும் மீமாம்சகர் சொன்னார்கள். அவ்வாறு திகழும் செயல்பயனே அபூர்வம். இது வேள்விக்கருமங்களை விளக்கும் கருதுகோள். வேள்விகளின் மூலம் கிடைக்கும் ‘பயன்’ அல்லது ‘லாபம்’ எங்கோ ஓர் இடத்தில் இருந்து உரிய நேரத்தில் வந்து சேரும் என்று மீமாம்சம் சொன்னது.
அபூர்வம் என்னும் கருத்து பிறவிவினை வாதத்துக்குச் சமானமானதாக சிலரால் இப்போது கொள்ளப்படுகிறது. அது பிழை. வேள்விசெய்தால் அதன் பயன் ஒருவனை அடுத்த பிறவியானாலும் வந்து சேரும் என்று பூர்வமீமாம்சம் தன் அபூர்வம் கோட்பாட்டில் சொல்கிறது என்பது உண்மை. ஆனால் அது பிறவிவினைவாதம் அல்ல.
பிறவிவினைவாதம் என்பது ஒருவனின் எல்லா நன்மை தீமைகளும் அவன் முற்பிறவியில் செய்தவற்றின் விளைவுகளே என்கிறது. அபூர்வவாதம் ஒருவன் எந்தப்பிறவி எடுத்தாலும் வேள்விகள் செய்தால் அப்பிறவியிலேயே எல்லா மேன்மைகளையும் அடையலாம் என்கிறது. அசுரர்களும் ராட்சதர்களும்கூட வேள்விசெய்து பயன்பெற்றார்கள். அது சிலருக்கு வேள்விகளை தடைசெய்ததுகூட அவ்வேள்விகளை அவர்கள் செய்தால் தங்களை விட மேலே சென்று விடுவார்கள் என்பதனால்தான்.
பூர்வமீமாம்சத்தின் அபூர்வம் அல்லது வேள்விப்பயன் வாதத்துக்கு எதிராக வள்ளுவர் பிறவி வினை வாதத்தை முன்வைக்கிறார் என்றுதான் தன் உரையில் பரிமேலழகர் சொல்கிறார். அளவைவாத அடிப்படையில் பார்க்காதே, முன்னைவினையின் பயன் என்ன என்பதை சிவிகை சுமப்பவனையும் ஏறுபவனையும் கண்ணால் பார்த்தாலே தெரிகிறதே என்பதுதான் குறளின் பொருள் என்கிறார் அவர். இந்த விவாதம் சமணத்துக்கும் சைவத்துக்கும் நடுவே அக்காலத்தில் தீவிரமாக நடந்த ஒன்று.
வள்ளுவர் அப்படிச் சொல்கிறாரா , அது உண்மையா என்பது வேறு விஷயம். ஆனால் நம் பிற்கால உரைக்காரர்களுக்கு அளவைவாதம் என்றால் என்னவென்றே தெரியாததன் விளைவே அவர்களின் எளிமையான புரிதல். இன்று வரை ஒரு தட்டையான வரியை இக்குறளின் பொருள் என்று கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
உரைகளுக்குள் போகாமல் ஒரு நவீன வாசகன் வாசிப்பானாகில் அவனுக்குக் கிடைப்பவை இரண்டு விஷயங்கள். ஒன்று இவ்வரிகளின் சொற்கள். இப்பிரதி. இரண்டு திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கக் கூடும் என்ற ஊகம். இவ்விரண்டின் அடிப்படையில் அவன் தன் வாசிப்பை நிகழ்த்தலாம். நான் செய்திருப்பது அதைத்தான்.
சமணர்களுக்கு பிறவிப்பயன் என்பது முக்கியமான கோட்பாடு. இப்பிறவியில் அடையும் நன்மைகள் எல்லாம் முற்பிறவிப்பயனே என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் சமணம் தமிழகத்தில் ஒரு பெரிய விடுவிக்கும் சக்தியாக வந்த ஒன்று. அதை சிரமண மதம் என்று சொன்னார்கள். உழைப்பவர்களின் மதம். அந்நிலையில் பல்லக்கு சுமப்பதை மாற்றமுடியாத விதி என்றா அது சொல்லியிருக்கும்?
அவ்வரிகளைப் பார்க்கும்போது ‘அறத்தின் வழி இது என்று நினைத்தல் வேண்டாம்’ என்கிறார் வள்ளுவர். யாருடன்? ‘இதுவே அறத்தின் மாற்றமில்லா வழி’ என்று நம்புகிறவர்களிடம் தானே. அப்படியானால் மாற்றம் உண்டு என்பதைத்தானே அவர் சொல்கிறார்? அவ்வரிகள் அளிக்கும் பொருள் அதுதானே? சிவிகை பொறுப்பவனுக்கும் ஊர்பவனுக்கும் நடுவே உள்ள வழியே அறத்தின் வழி என்று எண்ணவேண்டாம் என்பதே அக்குறள் என்பதுதான் கவிதையின் தரிசனம் என்பதே என் வாசிப்பு.
ஜெ
***
மறுபிரசுரம், முதற்பிரசுரம் ஜூன் 17, 2009
==========================
- இந்திய சிந்தனை மரபில் குறள் 5
- இந்திய சிந்தனை மரபில் குறள் 4
- இந்திய சிந்தனை மரபில் குறள் 3
- இந்திய சிந்தனை மரபில் குறள் 2
- இந்திய சிந்தனை மரபில் குறள்.1