அத்துடன் புன்னகையை அழகாக ஆக்கும் முக்கியமான அம்சமும் அவரிடம் இருந்தது. அவருக்கு உண்மையிலேயே மனிதர்களைப் பிடிக்கும். அவரது மனிதநேயம் என்பது ஒரு கோட்பாடோ நம்பிக்கையோ நிலைபாடோ அல்ல. அவர் அனைவரையும் உண்மையிலேயே நேசித்தார். ஆகவே எவருடைய குறைகளும் அவர் கண்களுக்குப் படுவதில்லை. அந்த பிரியம் எப்போதும் அவர் கண்களில் வெளிப்படும்.
ராஜமார்த்தாண்டன் சொந்த ஊரே இடையன்விளைதான். அவரது அப்பா ஊரின் முக்கியமான நிலக்கிழார். அப்பகுதி நிலங்கள் மார்த்தாண்டவர்மா காலத்திலேயே விரிவான பாசன வசதி பெற்றுவிட்டிருந்தன. சுசீந்திரம் முதல் பறக்கை வழியாக மணக்குடி வரைசெல்லும் நன்னீர் காயலும் அதன் கிளைகளாக விரியும் கால்வாய்களும் பலநூறு குளங்களுமாக செழிப்பான நிலம் அது. தென்னையும் நெல்லும் முக்கியமான பயிர்கள்.
அண்ணாச்சி அவரது சொந்த வாழ்க்கையைப்பற்றிச் சொல்ல மிகவும் கூச்சப்படுபவர். நினைவுகளைச் சொல்லுதல் என்றே பேச்சே இல்லை. குடித்திருந்தால் மேலும் நிதானமடையும் தன்மை கொண்டவர். தமிழகத்தின் மாபெரும்குடிகாரர்களில் ஒருவர் என்று நான் என்ணும் அண்ணாச்சி வாழ்நாளில் ஒரு சொல்கூட உளறியதில்லை என்று சொன்னால் அது முழுக்கமுழுக்க உண்மை. அவரைப்பற்றிய தகவல்கள் அவரது நண்பர்கள் சொன்னவை. அவர் தற்செயலாக சொல்லியவை. ஆகவே அவை எப்போதும் முழுமையற்றவை.
அண்ணாச்சி உணர்ச்சிகரமானவராகவே எப்போதுமிருந்திருக்கிறார். உயர் அழுத்த மின்சாரம் ஓடும் மெல்லிய கம்பி போன்றவர். சிறிய விஷயத்தைக்கூட உணர்ச்சியால் மெல்ல நடுங்கும் குரலுடன் மெதுவாகவே சொல்வார். அப்போது நம் கைகளை தன் கைகளில் பற்றிக்கொள்ள விரும்புவார். ஒரு தொடுகை கிடைத்ததும் அந்தவழியாக பாயந்துசெல்லும் மின்சாரம்போல மனம் சென்று படியும் விஷயங்களில் அப்படியே தன்னை கொட்டிக்கொள்வது அவரது இயல்பு
சிறுவயதில் அண்ணாச்சிக்கு சிவாஜி கணேசன் மீது அபாரமான ஈர்ப்பு இருந்திருக்கிறது. பல படங்களை மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார். சிவாஜியின் வசனமழையை அபப்டியே திருப்பிச் சொல்ல அவரால் முடியும். அண்ணாச்சிக்கு மிகவும் பிடித்தமான சிவாஜிபடம் ‘பிராப்தம்’. நான் அந்தப்படத்தைப் பார்த்ததில்லை. அதை எடுத்துத்தான் சாவித்ரி போண்டியானார் என்பார்கள். எப்படி அது அவருக்கு அவ்வளவு பிடித்தது தெரியவில்லை. சிவாஜி நடிக்காத படங்களில் ‘சுமைதாங்கி’ அவரைக் கவர்ந்த படம்.
சிவாஜி வழியாக ஸ்தாபன காங்கிரஸ் அரசியலில் அண்ணாச்சிக்கு ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அந்த மேடைகளில் அப்போது பேசவந்த ம.பொ.சிவஞான கிராமணி மீதும் பெரும் ஈடுபாடு. அவரது தமிழார்வம் அவ்வாறு உருவானதுதான். ஒரு கட்டத்தில் அவருக்கு குமரி அனந்தன் பிடித்த பேச்சாளராக, இளம்தலைவராக இருந்திருக்கிறார். அண்ணாச்சியை திராவிட அரசியல் கவர்ந்ததே இல்லை.
சிறுவயதில் அண்ணாச்சி முக்கியமான மாணவராக இருந்திருக்கிறார். அவர் படித்த அகஸ்தீஸ்வரம் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பில் அவரே முதலிடம் பெற்றார். கல்லூரி புகுமுகப்படிப்புக்காக நெல்லை ஜான்ஸ் கல்லூரிக்குச் சென்றபோது அகஸ்தீஸ்வரத்தின் முக்கியமான பெரும்பணக்காரரும் வந்து அவர்களுடன் சேர்ந்தே காத்திருந்தாராம். அண்ணாச்சிக்கு இடம் கிடைத்தது. குறைவான மதிப்பெண் பெற்ற தனவந்தரின் மகனுக்கு இடம் கிடைக்கவில்லை. அந்த ரோஷத்துடன் அவர் அகஸ்தீஸ்வரத்தில் ஒரு கல்லூரியை நிறுவினார். அண்ணாச்சி காரணமாக நிறுவப்பட்ட கல்லூரி இன்றும் அகஸ்தீஸ்வரத்தில் உள்ளது.
அண்ணாச்சி இளங்கலை வகுப்பில் கணிதம்தான் படித்தார். கும்பகோணத்தில் இளங்கலை பயிலும்போதே இலக்கிய ஆர்வம் மெல்ல தலைக்கு ஏறியது. அப்போது கும்பகோணத்தில் கரிச்சான்குஞ்சு இருந்தார். கரிச்சான்குஞ்சுவின் தொடர்பும் நூல்களும் அவருக்குக் கிடைத்தன. தன் இயல்புப்படி அண்ணாச்சி தன்னை ஒட்டுமொத்தமாக புதுக்கவிதைமீது கொட்டிக்கொண்டார். பரிதாபகரமாக மதிப்பெண் வாங்கி இளங்கலையில் மேலே வர இலக்கியம் வழியமைத்தது. ”கணக்கெல்லாம் படிக்கிறதிலே அர்த்தமே இல்லை….அது வயித்துபிழைப்புக்கான படிப்பு. ஆத்மாவுக்கான படிப்பு இல்லை”
அதன்பின் முதுகலை படிப்பை தமிழிலக்கியம் எடுத்து படித்தார். பாலக்காடு அருகே உள்ள சிற்றூர் கலைக்கல்லூரி தமிழ்த்துறையில்தான் இடம் கிடைத்தது. இக்காலகட்டத்தில் இலக்கிய வெறி தலைக்கு ஏறிவிட்டிருந்தது. சொந்தச் செலவில் ஒரு சிற்றிதழை புதுக்கவிதைக்காக நடத்தினார். பெயரை அவரே மறந்துவிட்டிருந்தார். ஆச்சரியமான விஷயம் , பிற்காலத்தில் வானம்பாடி வகை கவிதைக்கு முமுமுதல் எதிரியாக விளங்கிய அண்ணாச்சி அப்போது வானம்பாடிக் கவிதைகளின் பாதிப்பில் அந்த இதழை நடத்தினார்.
”அப்ப எனக்கெல்லாம் அப்துல்ரகுமான், சிற்பி இவங்கள்லாம்தான் ஆதர்சம். அப்பவே புதுமைப்பித்தன்லாம் படிச்சாச்சு. க.நா.சு பக்கத்திலே சிற்றூருக்கு ஒரு தடவை வந்திருந்தபோது அவரிட்ட நெறைய விவாதிச்சோம். இருந்தாலும் வானம்பாடிக்கவிதைகள் பிடிச்சிருந்தது. ஏன்னா அவங்கள்லாம் தமிழ் பேராசிரியர்கள். நாமும் நம்மளை தமிழ் பேராசிரியர்னு நெனைச்சிட்டிருந்த காலம் அது” சிவாஜிபட ரசனையின் இன்னொரு பக்கம்தான் அது.
முதுகலை முடித்தபின் அண்ணாச்சி முனைவர் பட்டத்துக்காக திருவனந்தபுரம் பாளையத்தில் இருந்த பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே பேராசிரியர் ஜேசுதாசனுக்கு மாணவரானார். எம்.வேதசகாயகுமார், கிருஷ்ணசாமி [சகாதேவன்] போன்றவர்கள் அவருடன் ஆய்வுசெய்த மாணவர்கள். திருவனந்தபுரம் பழைய தலைமைச்செயலகம் அருகே ஓர் அறை எடுத்துத் தங்கி ஆராய்ச்சிசெய்தார். இக்காலகட்டத்தில்தான் அவரது வாசிப்பும் ரசனையும் முதிர்ச்சி அடைந்தன.
அண்ணாச்சிமீது ஆழமான பாதிப்பைச் செலுத்திய ஆசிரியர், ஆன்மீகதளத்தில் குரு என்று பேராசிரியர் ஜேசுதாசனைச் சொல்ல வேண்டும். ”இலக்கியத்தில கருத்துக்கள்தான் முக்கியம்னு நெனைச்சிட்டிருந்தேன். ரசனைதான் முக்கியம்னு சார்தான் சொல்லிக்குடுத்தார்” என்றார் அண்ணாச்சி. இலக்கியப்படைப்பு வாசகனின் கற்பனையுடன் மட்டுமே உரையாடுகிறது, கற்பனையை படைப்பை நோக்கி திறந்துகொள்வதே இலக்கிய வாசிப்பு, கற்பனையை தூண்டி ஓரு வாழ்க்கையை முழுமையாக வாழச்செய்வதே நல்ல இலக்கியம்– இந்த அடிப்படைகளை ஜேசுதாசன் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்.
”கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்று அதன் குத்தொக்க கூர்ந்த இடத்து–ன்னு திருக்குறளிலே வார எடத்தை சார் அற்புதமாச் சொல்லுவார். குத்தொக்கன்னு சொல்றப்ப ஒரு காட்சி தெரியுதுல்ல. கொக்கு கொம்பால மீனைக் கொத்தாது செங்குத்தாட்டு குத்தும்னு கொக்கை பாத்தவங்களுக்கு தெரியும். அந்த அளவு நுட்பமான ரசனையோட இருக்கு திருக்குறள்னு சார் சொல்லுவார். எங்கூரெல்லாம் ஏகப்பட்ட கொக்குகள் உள்ள எடம்.ஆனா அந்த நுட்பம் குறள் வழியாத்தான் கெடைச்சுது. ரெண்டு வார்த்தைகள் நடுவிலே அவ்ளவு வேறு பாடு இருக்கு…அந்த நுட்பத்தை உணர்ந்து எழுதினாத்தான் இலக்கியம். அதான் இலக்கிய ரசனைன்னு சார்கிட்டதான் படிச்சோம்”
திருவனந்தபுரம் பல்கலையில் புதுக்கவிதை தோற்றம் வளர்ச்சி குறித்து முனைவர் பட்ட ஆய்வேடுக்காக சேர்ந்திருந்தார் ராஜமார்த்தாண்டன். அவரது ஆய்வு வழிகாட்டி நவீன இலக்கிய ரசனை மிக்கவரும் சுந்தர ராமசாமி, நகுலன், அய்யப்பணிக்கர் முதலியோரின் நண்பருமான கு.நாச்சிமுத்து அவர்கள். ஆய்வின் ஆரம்பத்தில் ராஜமார்த்தாண்டன்னுக்கு புதுக்கவிதை பற்றி இருந்த அபிப்பிராயங்கள் ஒட்டுமொத்தமாக நடுவிலே மாற நேர்ந்தது. ஆய்வேடு அப்படியே பாதியில் நின்றது.
அக்காலத்தில் திருவனந்தபுரம் ஒரு முக்கியமான இலக்கிய மையம். பேராசிரியர் ஜேசுதாசன் பல்கலைகழகக் கல்லூரியின் தமிழ்த்துறையில் இருந்தார். அவரைத்தேடி சுந்தர ராமசாமி அடிக்கடி வருவார். அய்யப்ப பணிக்கர், ஜி.என்.பணிக்கர், வெட்டூர் ராமன்நாயர் போன்ற மலையாள எழுத்தாளர்கள் வருவார்கள். நகுலன் அவரது பழைய சைக்கிளை தள்ளிக்கொண்டு வருவார். நீல பத்மநாபன், ஆ.மாதவன், காசியபன், மா.தட்சிணாமூர்த்தி, சண்முக சுப்பையா போன்றவர்கள் வருவார்கள். அந்த சபைகளில் இருந்து அண்ணாச்சியின் பிற்கால ஆளுமை மெல்லமெல்ல திரள ஆரம்பித்தது.
இக்காலகட்டத்தில் தான் அண்ணாச்சிக்கு பிரமிள் அறிமுகம் ஆனார். சென்னையில் சி.சு.செல்லப்பாவின் வீட்டில் கொஞ்சநாள் தங்கியிருந்த பிரமிள் அங்கிருந்து டெல்லிசென்று வெங்கட் சாமிநாதன் வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்து ந.முத்துசாமி வீட்டிலும் பின்னர் சுந்தர ராமசாமி வீட்டிலும் தங்கியிருந்தார். ஓர் எழுத்தாளர் வீட்டில் பலவருடங்களைக் கழித்தபின்னர் அங்கே மனஸ்தாபம் கொண்டு கிளம்பி இன்னொருவர் வீட்டுக்குச் செல்வது பிரமிளின் பாணி. கடைசி சில மாதங்களில் அடுத்த கூடுக்கான ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்துகொண்டிருப்பார் என்றும் அது உறுதியான பின்னரே பிரச்சினைகளை ஆரம்பிப்பார் என்றும் சொல்கிறார்கள்.
பிரமிள் திருவனந்தபுரம் வந்து கிட்டத்தட்ட ஆறுமாதம் அண்ணாச்சியின் அறையில் தங்கியிருந்தார். தன்னுடன் இருப்பவரின் ஆளுமைக்குள் நுழைந்துவிடும் தீவிரம் பிரமிளுக்கு உண்டு. ஆனால் அண்ணாச்சியில் பிரமிளுடைய ஆளுமையின் பாதிப்பே இல்லை. கடைசிவரை அவர் பிரமிளின் நல்ல வாசகராகவும் நண்பராகவும் மட்டுமே இருந்தார். அண்ணாச்சிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு, பிரமிள் நெருங்கிப்பழகியவர்களில் அவரால் கட்டுரைகளில் வசைபாடப்படாத ஒரே நபர் அண்ணாச்சிதான்.
பிரமிள் கொஞ்சநாள் அண்ணாச்சியின் ஆதரவில் இடையன்விளையில் ஒரு சிறிய வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அண்ணாச்சியும் ஆய்வை பாதியில் விட்டுவிட்டு ஊரிலேயே இருந்தார். பிரமிளுக்கு ஊரிலேயே ஒரு சோதிடருக்கான மரியாதை உருவாக ஆரம்பித்தது. இங்கே இருந்த காலகட்டத்தைத்தான் பிரமிள் அவரது ‘ஆயி’ என்ற குறுநாவலில் சித்தரித்திருக்கிறார்.
ஆனால் அவரது கிறுக்குகள் மெல்லமெல்ல பிற இடங்களைப்போலவே அங்கும் அவரை இருக்கவிடாமல்செய்தன. ஒரு கிராமத்துக்குழந்தையை கடுமையாகத் தாக்கி ஊராரால் பிரமிள் தாக்கப்பட்டார் என்று சொன்னார்கள். ராஜமார்த்தாண்டனின் தந்தை காரணமாக அது சமாதானமாக ஆகியது என்றாலும் அண்ணாச்சிமேல் கடும் கோபத்துடன் பிரமிள் கிளம்பிச்சென்றார். வழக்கம்போல வசைக்கடிதமும் சோதிடம் சொன்ன வகையில் மிச்சபணத்தை ‘செட்டில்’ செய்யும்படி மிரட்டலும் வந்தது.
ஆனால் அண்ணாச்சியை எவரும் ஒன்றும் செய்துவிடமுடியாது. அவர் கடைசிவரை பிரமிளுக்கு மிகவேண்டிய நண்பராகவே இருந்தார். அதேசமயம் சுந்தர ராமசாமியை திட்டவட்டமாக ஆதரிப்பவராகவும் இருந்தார். பிரமிள் எழுதிய பலவற்றை அவர்தான் வெளியிட்டார். சுந்தர ராமசாமி எழுதியதையும் அதே இதழில் வெளியிட்டார். பிரமிள் கொதிப்பார், கொந்தளிப்பார், வசைபாடுவார். அண்ணாச்சி குளிர்ந்து சிரித்து அமர்ந்திருப்பார். தண்ணீரை நெருப்பு என்ன செய்ய முடியும்?
ஆய்வுக் காலகட்டத்தில்தான் அண்ணாச்சி காதலில் விழுந்தார். ஐம்பது வயதிலும் அதைப்பற்றிப்பேசினால் அண்ணாச்சிக்கு முகம் சிவக்கும். வழக்கம்போல அதில் அப்படியே தன்னைக் கவிழ்த்துக்கொண்டார். அண்ணாச்சியை அந்தப்பெண் காதலித்ததில் ஆச்சரியமில்லை. வித்தியாசமான தோற்றமும் ஆளுமையும் கொண்ட ஆண்களை பெண்கள் சட்டென்று விரும்புவார்கள். கைவிட்டதிலும் ஆச்சரியமில்லை, அபப்டிப்பட்ட ஆண்களை பெண்கள் திருமணம் செய்துகொள்வதில்லை.
கேரளம் எப்போதுமே குடியின் நிலம். அண்ணாச்சி மெல்லமெல்ல குடியின் பிடிக்குள் விழுந்தது அப்போதுதான் என்பதை வேதசகாயகுமார் நினைவுகூர்ந்தார். அவருக்கென்று குடிநட்பு வட்டம் உருவாகியது. அண்ணாச்சியின் வழக்கபப்டி அவர் குடியில் தலைகுப்புறக் குதித்தார். ஒருநாள் வேதசகாயகுமாரிடம் கேட்டேன்”ஏன் அவர் உங்க கூட இருக்கிறப்பதானே குடிச்சார்? உங்களாலே ஒண்ணுமே செய்ய முடியலையா?” வேதசகாயகுமார் ”என்ன செய்ய? ராஜம் முதமுதலா குடிச்சதுக்கு ரெண்டாம் மாசம் முழுக்குடிகாரனாட்டு மாறியாச்சுல்லா? ஒரு வெக்கேசனுக்கு போயிட்டுவாரப்ப ஆளே மாறியிருந்தார்” என்றார்
அங்கிருந்து ஆரம்பித்தது இன்னொரு வாழ்க்கை. அவர் முனைவர் பட்ட ஆய்வை முறித்தார். சீராக வாசிப்பதும் கட்டுக்குள் நின்று உழைப்பதும் சாத்தியமில்லாமல் ஆயின. தற்செயலாக தினமணியில் பிழைதிருத்துநராக வேலை கிடைத்தது. ஆகவே அவரது வாழ்க்கை அந்த நிலைகுலைவுக¨ளையும் தாண்டி நீடித்தது
[மேலும்]
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Jun 14, 2009 @ 0:09