அண்ணாச்சி – 1

1

 

சுந்தர ராமசாமியுடன் பேசிக்கொண்டிருந்தேன். 1986 டிசம்பர் மாதம். மெல்லிய மழைச்சாரல் இருந்த அந்திநேரம். அப்போது இருவர் கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தார்கள். சுந்தர ராமசாமி எட்டிப்பார்த்தார். ”வாங்கோ” என்று என்னை அழைத்தார் ”ஒருத்தரை இண்டிரடியூஸ் பண்ணி வைக்கிறேன்…உங்களுக்கு அவரை ரொம்பப்பிடிக்கும்னு நெனைக்கறேன்…” நான் எழுந்தேன். சுந்தர ராமசாமி ”அவா ரெண்டுபேரும் உள்ள வரமாட்டாங்க.. யானைமேலே வராங்கன்னு நெனைக்கிறேன்”

நான் சிரித்துவிட்டேன். யானைமேல் அமர்ந்திருப்பவர்களின் அசைவு அவர்கள் உடலில் இருந்தது. சுந்தர ராமசாமி வீட்டுமுன்னால் அப்போது அலங்காரக்கொடி படரவிட்ட ஒரு பந்தல் இருந்தது. பந்தலில் அவர்கள் நின்றார்கள்.ஒருவன் மிக ஒல்லியான கரிய மனிதர். தாடி, நீளமான தலைமுடி. இன்னொருவர் குண்டான கனத்த முகம் கொண்டவர். கலைந்த கற்றைத்தலைமுடி

”நல்லாருக்கேளா?” என்றார் சுந்தர ராமசாமி ”எப்ப வந்தேள்?” கரியமனிதர் ”நான் நேத்தைக்கே வந்துட்டேன். ஒரு வேலையா போயிருந்தேன்….” என்றார். அப்போது அவர் வலது கையால் வாயைப்பொத்திக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு மடாதிபதியுடன் பேசுவது போல சற்று முன்னால் வளைந்து நின்று பேசினார். அதற்கான காரணம் புரிந்தது, இருவரிடமும் தூக்கலான பட்டைச்சாராயம் மணத்தது. ”உக்காருங்கோ” என்றார் ராமசாமி. இருவரும் அந்தப்பந்தலின் சிமிண்ட் திண்ணைகளில் அமர்ந்தார்கள். எதிரே நாங்கள் அமர்ந்தோம்.

”இவர்தான் ராஜமார்த்தாண்டன்…அவரு ராஜகோபாலன்.”என்று சுருக்கமாக அறிமுகம் செய்து வைத்தார் சுந்தர ராமசாமி. அவர்கள் இருவரும் அப்போது கொல்லிப்பாவை இதழை மீண்டும் கொண்டுவந்துகொண்டிருப்பதை அவர் சொல்லியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப்பின்னால் சுந்தர ராமசாமி பதிமூன்று கவிதைகளை  எழுதி ஒரேயடியாக அதில் பிரசுரித்து தமிழ் நவீன இலக்கியம் என்னும் வளையல்வட்டத்துக்குள் இருந்த நவீனக்கவிதை என்னும் மோதிரவட்டத்துக்குள் அலைகளை கிளப்பியிருந்தார்.

”இவர் ஜெயமோகன்…காஸர்கோட்டிலே இருக்கார். நல்லா எழுதிட்டுவரார்”என்றார் சுந்தர ராமசாமி. ராஜமார்த்தாண்டன் என்னைப்பார்த்து பிரியமாகப் புன்னகைசெய்தார். ராஜகோபாலன் என்னை பொருட்படுத்தவேயில்லை. அவர் உள்ளூர ததும்பும் போதையில் நிறைவுற்றிருந்தார். ”அம்மாண்டிவிளைக்கு காலைலேயே போய்ட்டேளா?” என்றார் சுந்தர ராமசாமி. ”இல்ல, ஒரு பத்து மணிக்கு…”என்றார் ராஜமார்த்தாண்டன் ‘ஒரு தப்பு நடந்துபோச்சு’ என்ற பாவனையில். ”வேலைல்லாம் எப்டி போகுது?” ”பரவால்லை சார்”

அதன்பின் சுந்தர ராமசாமி நாங்கள் ஏற்கனவே பேசிக்கொண்டிருந்த விஷயத்துக்கு வந்து விட்டார், தகழி சிவசங்கரப்பிள்ளை பழுத்த லௌகீகவாதி. பழுத்த லௌகீகமும் உயர் கவித்துவம் ஆக முடியும். ஆழமான சரித்திரப்பிரக்ஞையும் விவேகமும் அதற்குத் தேவைப்படும். தகழியிடம் அவை இல்லை. அவரிடம் இருந்த சரித்திரப்பிரக்ஞ்ஞை என்பது அவரே அடைந்தது அல்ல. அது மார்க்ஸியத்தின் உருவாக்கம்தான்.

”நீங்க என்ன நெனைக்கிறேள்?”என்றார் சுந்தர ராமசாமி ராஜமார்த்தாண்டனிடம். குடிபோதையில் அவருக்கு என்ன புரிந்திருக்கக்கூடும் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் தீவிரமான முகபாவனையுடன்  ”எதுவா இருந்தாலும் நாமளே அனுபவிச்சு அறிஞ்சதா இருக்கணும் சார்…அது தப்பா இருந்தாக்கூட ஒண்ணுமில்லை” என்றார்

சுந்தர ராமசாமி உற்சாகத்துடன் ”அதைத்தான் நான் சொல்லிட்டிருக்கேன். சுயமான தரிசனம் இருந்தா அதோட வேல்யூவே வேற. அந்த தரிசனம் சரியா தப்பாங்கிற பேச்சே இலக்கியத்தில இல்லை. சொல்றவன் அதுக்கு உண்மையா இருக்கானா இல்லையாங்கிறது மட்டும்தான் முக்கியம்”

ராஜமார்த்தாண்டன் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். போதை இருப்பது போலவே தெரியவில்லை. கமலா மாமி உள்ளிருந்து வந்தார் ”ஆரு, ராஜ மார்த்தாண்டனா? எப்டி இருக்கே?”  ராஜமார்த்தாண்டன் எழுந்து வாயைப்பொத்திக்கொண்டு ”ம்ம்” என்றார். மாமி ”சாப்பிடறேளா?”என்று சுந்தர ராமசாமியிடம் கேட்டார். ”அப்ப நாங்க கெளம்பறோம்” என்றார் ராஜமார்த்தாண்டன். ”எப்டி வந்தேள்?” ”பைக்கிலே” என்றார் ராஜமார்த்தாண்டன்.

அவர்கள் வெளியே போய் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ராஜகோபாலனின் பைக்கில் ஏறிக்கொண்டு கிளம்பிச்சென்றார்கள். நானும் சுந்தர ராமசாமியும் சாப்பிடுவதற்காக உள்ளே சென்றோம். நான் அவரது வீட்டுமாடியில்தான் அப்போது தங்கியிருந்தேன். ”அவர் சாப்பிட மாட்டாரா?” என்றேன். ”சாப்பிடுவார்…இப்ப லிக்கர் சாப்பிட்டிருக்கார். லிக்கர் சாப்பிட்டிருந்தா அவர் எந்த வீட்டுக்குள்ளயும் நுழைய மாட்டார்…லேடீஸ்ட்டே பேசமாட்டார். அதை மரியாதையா வச்சிருக்கார்” என்றார் சுந்தர ராமசாமி

சாப்பிடும்போது சுந்தர ராமசாமி ராஜமார்த்தாண்டனைப் பற்றிச் சொன்னார். ”ரொம்ப சின்சியரான ஆள். இந்த அளவுக்கு சின்சியரான ஆட்கள் எப்பவாவதுதான் லைஃ·ப்லே பாக்க முடியும். ரொம்ப மென்மையானவர். யாரிட்டயும் எப்பவும் எந்த மனஸ்தாபமும் வச்சுகிட மாட்டார்…” ”மொத்தத்திலே ஒரு புனிதர் மாதிரி” என்றேன். ”நெஜம்மாவே அப்டித்தான்…இவரோட குருன்னா பேராசிரியர் ஜேசுதாசனைத்தான் சொல்லணும். அவரு இவரை உண்மையிலேயே ஒரு செயிண்டுன்னு நம்பினார்.. பெரிய ஆளா வந்திடுவார்னு சொல்லிடே இருந்தார். அப்றம்தான் இப்டி ஆயிட்டார்”

”ரொம்ப குடியா?” என்றேன்.”ரொம்ப…நிப்பாட்டத்தெரியாது…இப்பல்லாம் காலையிலேயே குடிச்சாத்தான் நடமாடவே முடியும்.  காலேஜ் டேய்ஸிலேயே ஆரம்பிச்சுட்டார். இவர மாதிரி தூய ஆத்மாக்கள் குடிக்க ஆரம்பிச்சா நிப்பாட்டுறது கஷ்டம். வயித்துல பல்லு உள்ள ஜென்மங்கள் ஒரு பெக்குன்னா ஒரு பெக்குலே நிப்பாட்டிக்கும். வயித்துக்குள்ள பல்லைகடிச்சுண்டு நிப்பாட்டிக்கும்னு நெனைக்கிறேன்” நான் சிரித்தேன்.

”எனக்கு ஆச்சரியம் என்னன்னா ராஜகோபாலனோட கேஸ்தான். ஒருவருஷம் முன்னாடி நானும் இவருமா திருவனந்தபுரம் போயிருந்தோம். நகுலனைப் பாத்தோம். மா.தட்சிணாமூர்த்தி கூட இருந்தார். அவா ரெண்டுபேரும் குடிக்கணும்னு சொன்னாங்க. ஒரு பாருக்குள்ளே நுழைஞ்சோம். இவர் கோழி மாதிரி நின்னுட்டு முழிச்சார். அவா இவரை பீர் குடிக்கச்சொன்னாங்க…வேணாம் வேணாம்னு பதறினார்…நான் இவரோட தைரியத்துக்காக ஒரு கப் வைன் குடிச்சேன். இவர் பீர் சாப்பிட்டார். அரை தம்ளர் குடிச்சிருப்பார். திரும்பி வரவரைக்கும் குமட்டிகிட்டே இருந்தார்…இப்ப பாத்தா இப்டி ஆயிட்டார்”

”ராஜமார்த்தாண்டன் குடிக்கிறது பெரிய ஆச்சரியம். அவரு ரொம்பப் பெரிய குடும்பத்தைச் சேந்தவர். அவங்கப்பா எடையன்விளை ஊரிலேயே பெரிய பணக்காரர். ஏகப்பட்ட நிலம் வச்சிருக்கார். அந்தக்காலத்திலே மார்த்தாண்ட வர்மாவுக்கும் அவரோட பங்காளிகளுக்கும் சண்டை நடக்கிற சமயத்திலே பெரிய நாடார்பிரபுக்கள் எல்லாருமே பப்புத்தம்பி, ராமன் தம்பியைத்தான் ஆதரிச்சாங்க. சிலர்தான் மார்த்தாண்டவர்மாகூட நின்னாங்க. ஜெயிச்சு ராஜாவானதும் மார்த்தாண்ட வர்மா அவரை சப்போட் பண்ணின நாடார்பிரபுக்களுக்கு நெறைய லேண்ட்ஸ் குடுத்தார்… இன்னைக்கு வரை இவங்க கையிலே இருக்கிறது அந்த சொத்துதான்” என்றார் ராமசாமி.

”இவங்க ஊரிலே இவர் எங்க போனாலும் ஆட்கள் பணிவா எந்திரிச்சு நிப்பாங்க. இப்டி குடிக்கிறார்ங்கிறது அவங்களுக்கு பெரிய அதிர்ச்சியா இருக்கும். ரொம்ப ஸ்டேட்டஸ்லாம் பாக்கிற ஆளுங்க. அவங்க அப்பாவுக்கும் பெரிய ஹோப் இருந்தது இவர் மேலே. கடைசிக்காலத்திலே இவரை நெனைச்சு ரொம்ப கஷ்டப்பட்டார்” என்றார் ராமசாமி

”எப்டி இதை ஆரம்பிச்சார்?” ”தெரியல்லை. இவரோட குளோஸ் ·ப்ரண்டுதான் வேதசகாயகுமார். ஏதோ ஒரு லவ் அஃபயர் இருந்ததுன்னு சொன்னார். ஒரு மலையாளிப்பொண்ணு. நாயர். அதோட அண்ணாக்கூட இப்ப மலையாளத்திலே கதைகள்லாம் எழுதற ரைட்டர். அது விட்டுட்டு போய்ட்டுது. இவர் குடிக்க ஆரம்பிச்சார். ஒரு லவ் ஃபெய்லியர் வந்தா குடிக்காலாமேன்னு காத்திட்டிருந்தார் போல… எல்லாம் சினிமா பாத்து கத்துண்டது. காதல் தோல்வின்னா உடனே கையிலே குப்பிய ஏந்திண்டு பாட ஆரம்பிச்சுடறாளே.. இவர் வேற சிவாஜியோட பரமரசிகர்…”

கைகழுவும்போது ராமசாமி சொன்னார் ”உங்க கவிதைகளை ராஜமார்த்தாண்டன் கிட்ட குடுக்கிறேன்…கொல்லிப்பாவையில போடலாமே” நான் தலையசைத்தேன். அந்தக்கவிதைப்பொதியில் ஒன்று கொல்லிப்பாவையில் பிரசுரமாகியது. ‘கைதி’ என்ற அக்கவிதையும் கணையாழியில் ‘நதி’ என்ற கதையும் ஒரேசமயம் வெளியாகின. அப்படித்தான் நான் நவீன இலக்கியத்துக்குள் நுழைந்தேன்

[மேலும்]

முந்தைய கட்டுரைஅலகிலாதவை அனைத்தும்
அடுத்த கட்டுரைஈரட்டிச் சந்திப்பு -கடிதங்கள்