கமலா சுரையா:விவாதம்

அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமா? இணையத்தில் அவ்வப்போது உங்களுடன் அரட்டை அடித்தது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். வேலை காரணமாகவும் சோம்பேறித்தனம் காரணமாகவும் அதன் பின் அதிகம் தொடர்பு கொள்ளவில்லை. வீட்டில் அனைவரும் நலமாக இருப்பார்கள் என நம்புகிறேன்.

கல்லூரி காலங்களில் கமலா தாஸ் எனக்கு பிடித்த கவிஞர் மற்றும் கதாசிரியர். மிக குறைவாகவே படித்த போதும் (தமிழ் மொழிபெயர்ப்புகள்) அவரது தடாலடி பிடித்து இருந்தது. இப்போது மறுவாசிப்பில் அதே நிலைப்பாடு இருக்குமா எனத்தெரியவில்லை.

படைப்பு குறித்த விமர்சனங்கள் காட்டமாக நாகரீக கட்டுப்பாட்டுக்குள் வருவதை யாரும் மறுத்து விட முடியாது. உங்களை போன்ற படைப்பாளி நிச்சயமாக அத்தகு நேர்மையான விமர்சங்களை முன்வைப்பதை யாரும் மறுத்து விட முடியாது.

எனது உறுத்தல் கமலாவின் படைப்பு குறித்த உங்கள் விமர்சனம் மீது ஏற்படவில்லை.

கமலா குறித்த உங்கள் விமர்சனம் மீது எழுந்தது. படைப்பு குறித்து அதன் பின்புலம் குறித்து கேள்விகள் எழுப்புவது தவறல்ல. அனால் படைப்பாளியின் மனவியல் குறித்து ஒரு பொதுப்படையான கருத்தை முன்வைப்பது ஞாயம் அல்ல என்றே தோன்றுகிறது. ஒரு மனோதத்துவ அறிஞர் போல் நீங்கள் அவரை அலசி இருப்பது தேவையா? படைப்பாளியாக நீங்கள் மனித குலம் பற்றி பொதுவில் மட்டுமல்ல தனிமனித குணங்களை காண்பதும் தவறல்ல. அனால் அதே அளவு பொறுப்பு அந்ததனிமனிதனின அந்தரங்கத்தை பாதுகாப்பதும் உங்கள் பொறுப்பே.

கமலாவின் அதிரடிகள், அதிர்ச்சிகள், அவரது அங்க அசைவுகள், அவரது காமத்தின் ஊற்றுக்கண் இது குறித்து நீங்கள் எத்தகு முடிவுக்கு வேண்டுமானாலும் வந்து இருக்கலாம். ஆனால் அதை முதல்நிலைப்படுத்தி எழுவது தேவையா? மனிதனின் மனம் ஆயிரக்கணக்கான விசித்திரங்கள் கொண்டு இருக்கும் போது (இது படைப்பாளி என்ற முறையில் நீங்கள் உணராதது அல்ல) ஒற்றை சந்திப்பு மற்றும் அவர் பற்றிய செய்திகள் வைத்து நீங்கள் எடுத்துள்ள முடிவுகள் அவசரமானவையாக தோன்றுகின்றன.

அப்படி அவை உண்மையாக இருந்தாலும் கூட அவை பொதுவில் வைக்க படத்தேவை இல்லை .

பயம், விடுதலை உணர்வு, அலைக்கழிப்பு, வெறுமை உணர்வு, அர்த்தமின்மை குறித்த புரிதல் அல்லது புரிதலின்மை தான் மிக பெரும் இலக்கியங்களை உருவாக்கி உள்ளது. இதனை தனி மனித அடிப்படையில் அணுகி இருப்பது அவர்களின் அந்தரங்கத்தை அவமதிப்பது போல் உள்ளது. வருத்தம் அளிக்கிறது.

ராஜரத்தினம்

***

அன்புள்ள ராஜரத்தினம்,

கமலாதாஸ் பதிவு குறித்து:

எழுத்தாளர்களில் இருவகை உண்டு, தன் எழுத்தை தன்னில் இருந்து விலக்கி ஒரு தனித்த வஸ்துவாக முன்வைக்கும் எழுத்தாளர்கள். ஒருபோதும் தங்கள் அந்தரங்க உலகை அவர்கள் நேரடியாக முன்வைப்பதில்லை. ஆகவே அவர்களின் அந்தரங்கத்துக்குள் செல்ல வாசகர்களுக்கோ அல்லது விமரிசகர்களுக்கோ உரிமை இல்லை. இது என் நெறி. உதாரணமாக சுந்தர ராமசாமியைச் சொல்வேன்.

ஆனால் மேலைநாடுகளில் இந்த நெறியைக்கூட கடைப்பிடிப்பதில்லை. எழுத்தாளன் ஒரு பொது மனிதன். தன்னை சமூகத்தின் முன் நிறுத்துபவன், ஆகவே அவனது அந்தரங்கத்தை அறிய வாசகனுக்கு உரிமை உண்டு என்பார்கள். ஒரு படைப்பு சமூகத்தில் ஆழமான பாதிப்பை உருவாக்கி சமூகத்தின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் மாற்றியமைக்கும் என்றால் அந்த படைப்பை உருவாக்கிய மனநிலைகளையும் சமூகச்சூழல்களையும் அறிந்து விவாதித்தே ஆகவேண்டும் என்பார்கள். உதாரணமாக ஒரு படைப்பு குடும்பத்தை உடைப்பதைப்பற்றி பேசுகிறது என்றால் அதை எழுதியவரின் குடும்பச்சூழலை ஆராய விமரிசகனுக்கு உரிமை உண்டு என்பார்கள். ஆகவே மேலைநாடுகளில் எல்லா எழுத்தாளர்களும் அவர்களின் அந்தரங்கங்கள் முழுக்க வெட்டவெளிச்சமாக்கப்படும் நிலையில்தான் இருக்கிறார்கள்.

இரண்டாவது வகை எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே வெட்டவெளிச்சமாக்குபவர்கள், அல்லது தங்களுடைய ஆளுமை என்று ஒன்றை தாங்களே புனைந்து முன்வைப்பவர்கள். அத்தகைய எழுத்தாளர்களின் அந்தரங்கத்தைப்பற்றி பேசுவது இன்றியமையாதது. ஏனென்றால் அதை அவர்கள்தானே தொடங்கி வைக்கிறார்கள். தன் அந்தரங்க பாலியல் வேட்கையையும் ஏமாற்றங்களையும் நேரடியாக கமலா தாஸே பதிவுசெய்திருக்கிறாரே. ‘என்கதை’ என்று ஒருவர் எழுதுகிறார். அவரது கதையை விவாதிப்பது தவறா என்ன? ஒருவர் தன் அந்தரங்க வாழ்க்கையை முன்வைக்கும்போது அதை விவாதிப்பதோ கருத்து சொல்வதோ எப்படி நாகரீக விளிம்பை தாண்டியதாக ஆகும்? அதை விவாதத்துக்குக் கொண்டுவந்தார் என்றுதானே அவரை பெண்ணியர்கள் புகழ்கிறார்கள்?

நம் சூழலில் பெண்ணியர்களிடம் உள்ள ஒருவகை பாசாங்கு இது. தங்கள் பாலியலை அவர்கள் எழுதுவார்கள். அப்படி எழுதுவதன் புகழையும் அங்கீகாரத்தையும் அனுபவிப்பார்கள். ஆனால் அது விவாதிக்கப்படுமென்றால், அவர்கள் விரும்பாத கோணத்தில் விவாதம் செல்லுமென்றால், உடனே பெண்மைக்கு இழுக்கு, தனிமனித அந்தரங்கம் என்னும் ஆயுதங்களை ஏந்திக்கொள்வார்கள்.

கமலா தன் வாழ்நாள் முழுக்க தன் அந்தரங்க வாழ்க்கையை முன்வைத்து பேசியவர். விழுமியங்களை நிராகரிக்கவும் மாற்றிக்கொள்ளவும் அறைகூவியவர். பாலியல் சுதந்திரம் கொண்ட பெண்ணியம் பேசியவர். ஆணுக்கு அடங்கி பர்தாபோட்டால்தான் பெண்ணியம் முழுமையடைகிறது என்று கடைசியில் கண்டுகொண்டவர். அவர் சொன்னவற்றையெல்லாம் பரிசீலனை செய்யவேண்டுமென்றால் அவரைப் பரிசீலனைசெய்தே ஆகவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

கமலாதாஸ் கேரளத்தின் முக்கியமான படைப்பாளி. முதிரா இளமையில் அவரது படைப்புகள் நம்மை மேலும் கவரும் என்பதும் உண்மை. கமலாவின் தத்தளிப்புகள் கசப்புகள் போலிப்பாவனைகள் எல்லாம் அவரது படைப்புகளுக்கு உரமாக இருந்தவையே. அவரது தனிப்பட்ட இயல்புகளை வைத்து அவரது படைப்புகளை நான் நிராகரிக்கவோ குறைத்து மதிப்பிடவோ இல்லை. அவை படைப்பாளிக்குரிய இயல்பான தன்மைகள் என்றே என்ணுகிறேன். ஆனால் அவர் சொன்ன அரசியல், சமூகவியல் கருத்துக்களைப் பரிசீலனைசெய்வதற்கு அவற்றுக்குப் பின்னால் உள்ள உளவியல் விவாதிக்கப்படவேண்டும்.

அவ்வாறு விவாதிப்பதற்காக என் அவதானிப்பை முன்வைத்திருக்கிறேன். அது என்னுடைய நெடுங்காலமாக நான் கூர்ந்து கவனித்து அறிந்த நேர்மையான கருத்து. ஆனால் அது தவறாக இருக்கலாம். அதை இன்னொருவர் மறுக்கலாம். அப்படி ஒருவிவாதம் நடந்தாகவேண்டும். அவ்வாறன்றி அவர் முன்வைத்த அதிரடிகளையெல்லாம் அப்படியே சிந்தனைகளாக எடுத்துக்கொள்வதே அபத்தமானதாக ஆகும். ஓர் எழுத்தாளனின் மறைவு என்பது அவனை தொகுத்துக்கொள்வதற்கான ஒரு தருணம். மரணத்துக்குப் பின்னரே எழுத்தாளன் முழுமையாக அணுகப்படுகிறான்.

நாராயணகுருவைப்பற்றி, காந்தியைப் பற்றி, இ.எம்.எஸ்ஸைப் பற்றி கமலா கருத்து சொல்லலாம், அப்படி கருத்துசொல்லும் கமலாவின் உளவியலை ஆராயக்கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்? அக்கருத்தை நான் கமலாமீதான என் மதிப்பீடாகவே முன்வைக்கிறேன்.

மேலும் அது உளவியல்நிபுனரின் ஆய்வல்ல. நான் கமலாவை ‘கௌன்ஸிலிங்’ செய்து அம்முடிவுக்கு வரவில்லை. அவரது நூல்களையும் பிற வெளிப்பாடுகளையும் கொண்டுதான் அந்த முடிவுக்கு வருகிறேன். ஆகவே அது இலக்கியவிமரிசனம் மட்டுமே. இத்தகைய ஆய்வுகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் இலக்கியத்திறனாய்வில் முக்கியமான இடம் இருப்பதை உலக இலக்கிய மரபை வாசித்தால் அறியலாம்.

ஜெ

***

அன்புள்ள ஜெ

இன்றைய தினமணி [11-6-2009] இதழில் ராஜ்ஜா என்பவர் கமலாதாஸ் அவர்களைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அஞ்சலிக் கட்டுரைகளில் வழக்கமாகச் செய்வதுபோலவே கமலாதாஸை வானளாவப்புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரை இது. இந்தக்கட்டுரையிலும் நீங்கள் உங்கள் அஞ்சலிக்கட்டுரையில் சொல்லிய எல்லா விஷயங்களும் உள்ளன. அதாவது கமலாதாஸ் ஓர் இஸ்லாமிய இளைஞரை திருமணம்செய்துகொள்ள விரும்பி மதம் மாறினார். பின்னர் இஸ்லாமியர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தன் பொருட்களை திருடிவிட்டதாகவும் எல்லாம் புகார்சொன்னார் என்று கட்டுரையாளர் சொல்கிறார். நீங்கள் எழுதிய கட்டுரைக்குப் பதிலாக வஹாபி என்பவர் கடுமையாக வசைபாடி திண்ணை இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஏற்கனவே கமலாதாஸைப்பற்றி அப்படி எழுதியவர்களை அவர் வசைபாடியிருப்பதையும் வாசித்தேன். நீங்கள் ஏதாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன். ஒருவேளை செவிவழிச்செய்திகளின் அடிப்படையில் நீங்கள் சொல்லியிருக்கலாமோ என்றும் தோன்றியது. இன்று ராஜ்ஜா கட்டுரையைப் படித்தபோதுதான் இதெல்லாம் மலையாளத்தில் எல்லாருக்கும் தெரிந்த விஷயங்கள் தானா என்ற எண்ணம் ஏற்பட்டது. உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

சுரேஷ். எம்.எஸ்
சென்னை [தமிழாக்கம்]
அன்புள்ள சுரேஷ்,

வஹாபி என்பவரின் கட்டுரைகளுக்கு நான் பதில் சொல்லவிரும்பவில்லை. அது ஏதோ மதவெறியர் எழுதுவது .அவர்களுக்கு உண்மை முக்கியமல்ல-அவர்களின் மதவெறித்தரப்பே முக்கியம். அந்த மதவெறி கிட்டத்தட்ட ஒரு மனநோய். விவாதத்தை அது விரும்பாது. அடுத்த கட்டத்தில் அது வன்முறையின் ஆயுதத்துடன் வரும். எனக்கு மிகக்கசப்பான அனுபவம் அதில் உள்ளது.

ராஜ்ஜா பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர். தமிழில் மொழியாக்கங்கள் செய்கிறார். ஸ்டிபன் ஸ்வெய்க் எழுதிய நாவலை ‘யாரோ ஒருத்தியின் கடிதம்’ என்றபேரில் மொழியாக்கம் செய்திருக்கிறார். [அதுதான் ‘தென்றல்’ என்ற சினிமாவாக வெளிவந்தது]

கமலா சுரையா குறித்து நான் எழுதியவை எல்லாமே வெளிப்படையாக அவரால் மேடைகளில் சொல்லப்பட்டவை, பேட்டிகளில் சொல்லப்பட்டடவை, எழுதப்படவை. ராஜ்ஜாவும் அதைச்சார்ந்தே எழுதியிருக்கிறார். குறிப்பாக இஸ்லாமுக்கு திருமண ஆசையால் மதம் மாறியதாக கமலா அவரே கொடுத்த பேட்டியைத்தான் குறிப்பிடுகிறார். நீண்டநாட்களாக தலையணையைக் கட்டிப்பிடித்து தூங்கியதாகவும், இனிமேல் தனக்கு துணை உண்டு என்றும், பர்தாதான் பெண்களுக்குச் சிறந்த ஆடை என்றும் அவர் அதில் சொன்னார். அப்பேட்டியை இறுதி வரை மறுக்கவும் இல்லை.

இஸ்லாமுக்கு மாறச்சொல்லி ஏமாற்றி விட்டதாக அவர் பேசியது 2006ல் கொச்சியில் கைரளி புத்தக நிறுவனம் என்ற சிறிய அமைப்பு நடத்திய புத்தகவெளியீட்டு நிகழ்ச்சியில். அதில் நான் கலந்துகொண்டேன். இயக்குநர் ஜோஷியைப் பார்க்க கொச்சி சென்றிருந்தேன். அந்த கூட்டம் எனக்குத்தெரிந்தவரின் புத்தகவெளியீடு. தலையைக் காட்டிவிட்டு வெளியே வந்து சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

தாமதமாக வந்த கமலாசுரையா அவரது பழைய வெளிநாட்டு பயணம் பற்றி ஏதோ தொடர்ச்சியில்லாமல் பேசுவது கேட்டுக்கொண்டிருந்தது. பிறகு சம்பந்தமே இல்லாமல் ”மனுஷனுக்கு மதமே தேவையில்லை. எனக்கு மதம் சலித்துவிட்டது ‘ என்று சொல்லிச்சென்று, மேலும் சம்பந்தமே இல்லாமல் தன்னை இஸ்லாமியர் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிட்டதாகச் சொன்னார். அந்த மதப்பிரச்சாரகரின் பெயரையும் சொல்லி மிக அதீதமாக போய் பல விஷயங்களைச் சொன்னார். சபையே தவிக்க ஆரம்பித்தது.

தன்னுடைய நூலகத்தில் இருந்த புத்தகங்களையெல்லாம் கொண்டு போய் விற்றுவிட்டார்கள் என்றார்– நூலகப்புத்தகத்தை பழைய பேப்பர் கடையில் போட்டால் என்ன கிடைக்கும் என நான் சொல்லி சிரித்தேன். ‘என்றே மனசில் குருவாயூரப்பன் இப்போழும் உண்டு’ என்றர். அப்போது அவர் கொஞ்சம் சுயநிலையில் இருக்கவில்லை.

அச்செய்தி மறுநாள் எல்லா செய்தித்தாளிலும் வந்தது. உண்மையில் மிகவும் சுதி குறைத்தே போட்டிருந்தார்கள். ‘மாதவிக்குட்டிக்கு மதம் மடுத்து’ என்று. பெயர்களை போடவில்லை. இன்னொருவரென்றால் கிழித்து தோரணம் கட்டியிருப்பார்கள். ஆனால் இரண்டுநாட்கள் கழித்து கமலா சுரையா ·போனில் எல்லா நிருபர்களையும் கூப்பிட்டு அழுதார் என்றார்கள். என் சாவுக்கு பத்திரிகையாளரே காரணம் என்றாராம். மறுப்பு அறிக்கையை அந்த மதப்பிரச்சாரகரே தட்டச்சு செய்து கமலாசுரையா கையெழுத்துடன் நாளிதழ்களுக்கு கொண்டுவந்து கொடுத்தார். அது பிரசுரமாகியது.

பொதுமேடையில் பலர் சாட்சியாக பேசப்பட்டவற்றையே நான் எழுதினேன். அல்லாத தனிப்பட்ட விஷயங்கள் என்றால் இன்னும் எவ்வளவோ எழுதலாம். ஏன், என்னிடம் அவர் ·போனில் வசைபாடிச் சொன்னவற்றையே எழுதலாமே. அவரது குணச்சித்திரத்தை வார்ப்பது என் நோக்கமல்ல. ஓர் அஞ்சலிக் கட்டுரையில் அவ்விஷயங்களை விரிவாக எழுத நான் நினைக்கவில்லை. எழுத்தாளர் என்ற வகையில் ஒரு பொது மதிப்பீட்டுக்காகவே சிலவற்றை எழுதினேன். கமலா சுரையா இஸ்லாம் குறித்து சொன்ன எதிர்மறை விஷயங்கள் உட்பட எதுவுமே கவனிக்கத்தக்கவை அல்ல என்பதே என் எண்ணம்.

‘மாதவிக்குட்டி’ ஒரு நல்ல சிறுகதையாசிரியர். அவரது கலைத்திறனுக்கு அந்தக் கிறுக்கு – மதுரமான கிறுக்கு என்று நித்யா சொல்வார்- ஒருவகையில் பலம்சேர்த்தது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத்தாவும் உணர்ச்சிகரமான மனம் கொண்டவர் அவர். காமஇச்சையும் சுயவலியுறுத்தலுமே அவரது ஆளுமையின் சாரம். அவற்றின் மூலம் அவர் அறிந்த ஒரு வாழ்க்கையை அவர் எழுதினார். அது அவரதுதனித்தன்மை கொண்ட அழகியலை உருவாக்கியது. அது ஓர் இலக்கிய சாதனை. நிலையில்லாது அலைந்த பேரிலக்கியவாதிகள் பலர் உண்டு. நிலைத்த ஞானம் கொண்ட பேரிலக்கியவாதிகளும் உண்டு. இலக்கியம் என்பது பார்வையினால் அல்ல வெளிப்பாட்டினால்தான் இலக்கியத்தன்மையை அடைகிறது.

ஜெ

 வகாபி கட்டுரை

http://hikari1965.blogspot.com/2009/06/blog-post.html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20906046&format=html

தினம்ணிகட்டுரை

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=72339&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=கமலா+தாஸ்+மேஜிக்

முந்தைய கட்டுரைபுண்ணியபூமி:கடிதமும் பதிலும்
அடுத்த கட்டுரைநாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது