அண்ணா ஹஸாரே, சோ – எதிர்வினை

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

திரு.சிவேந்திரன் வழியாக, என் கடிதத்துக்கான தங்கள் பதிலை அறிந்தேன்.

அது குறித்து இறுதியாக (என்று நினைக்கிறேன்) என்னுடைய சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதாக உத்தேசம். லட்சியவாத அணுகுமுறை அல்லாது நடைமுறைவாத அணுகுமுறையை திரு. சோ அவர்கள் பின்பற்றுவதாக திரு.சிவேந்திரன் சொன்னார். மிகவும் சரி. இன்று நமக்கு வைக்கப்பட்டிருக்கும் வழிகளைப் பின்பற்றுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். நமக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நம் முன் வைக்கப்பட்டுள்ள வழி தேர்தல் ஒன்று மட்டுமே என்று ஆகும்போது, அதை நோக்கி நம் சிந்தனைகள் அமைவது இயல்பான ஒன்றுதானே?

என்னதான் அண்ணா ஹஸாரே போராட்டங்கள் நடத்தினாலும், அதை நாம் ஆதரித்தாலும், தேர்தல் என்று வரும்போது, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் அல்லது ஏதேனும் ஒரு பிராந்தியக் கட்சிக்கு ஒட்டளிக்கும் நிலையில்தானே நாம் உள்ளோம்? அப்படியிருக்க அந்தத் தேர்தலை மனதில் வைத்து, இருக்கும் கட்சிகளில், குறைகள் குறைந்து இருக்கும் கட்சிக்கு ஓட்டுப் போட, தன் கையில் இருக்கும் ஊடகம் மூலம் ஒரு கருத்தை முன்வைப்பது அடிப்படையான, நியாயத்திற்கு உட்பட்ட விஷயம்தானே? இதில் என்ன தவறு இருக்க முடியும்?

சோ அவர்களின் முடிவுகள் சொந்த அடிப்படைக்கருத்தியல் சார்ந்தே அனேகமாக அமைகின்றதே அல்லாமல் பல்வேறுகாரணிகளை,சிக்கல்களை,ஆழங்களை ஆராய்வதன் அடிப்படையில் அமைவதில்லை என்று திரு. சிவேந்திரன் கூறுகிறார். இதை எப்படி இவர் சொல்கிறார் என்று தெரியவில்லை. கடந்த 40+ வருடங்களில், மக்களுக்கு எந்தக் கட்சி நல்ல ஆட்சியைக் கொடுக்கும் என்று சோ நினைக்கிறாரோ அந்தக் கட்சியை மட்டுமே ஆதரித்து வருகிறார். சமீபத்திய உதாரணமாக, 1991ல் திமுகவிடம் குறைகள் மலிந்த போது, அதிமுகவையும், 1996ல் அதிமுகவிடம் குறைகள் மலிந்தபோது, தமாகா மற்றும் திமுகவையும், 2001ல் (மற்றும் அதற்கு அப்புறமும்) மீண்டும் திமுகவில் குறைகள் மலிந்ததால் அதிமுகவையும் ஆதரித்து வருகிறார்.

தனக்குப் பிடித்த கட்சியை/பிரமுகரை மட்டுமே ஆதரிக்கிறார் என்று சொல்ல முடியாது. அப்படியானால், 1996லும், 2001லும் மாறுபட்ட கட்சிகளை அவர் ஆதரித்திருக்க மாட்டார்.

தனது ஜாதி சார்ந்த பிரமுகரை ஆதரிக்கிறார் என்றும் குறை சொல்ல முடியாது. காமராஜர், ஜி.கே. மூப்பனார் என்று அவர் மதித்த, ஆதரித்த, அவர் ஜாதி சாராத தலைவர்களும் இருக்கிறார்கள்.

எந்தக் கட்சி ஜெயிக்கும் என்று பார்த்து, தன்னுடைய கருத்துக்களை உருவாக்குவதில்லை. ஏனென்றால், இவர் ஆதரித்து, ஜெயித்த கட்சிகளைவிட, தோற்ற கட்சிகளே அதிகம்! :)

இப்படியிருக்க, அவரது சொந்த அடிப்படைக் கருத்தியல் சார்ந்துதான் அவர் முடிவெடுக்கிறார், மற்ற காரணிகளை அவர் ஆய்வதில்லை என்று சொன்னீர்கள் என்றால், அவர் இதுவரை எடுத்துள்ள முடிவுகளில் எது நாட்டுக்கு நன்மை செய்யாதது என்று விளக்கும் கடமையும் தங்களுக்கு (மற்றும்/அல்லது திரு.சிவேந்திரனுக்கு) உள்ளது.

எல்லோரும் ஊழல் செய்கிறார்கள் அதனால் புதிதாக வரும் ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்வது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் அதன் மூலம் வாக்குகள் பிளந்து வேண்டாத ஒரு ஆட்சி அமையும் என்றால், புதிதாக வருபவரை ஆதரிப்பதை கொஞ்ச நாட்களுக்கு தள்ளிப் போடுவதே சிறந்ததாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம்.

உதாரணத்திற்கு X,Y என்ற இரு கட்சிகள் ஊழல் நிறைந்தவை என்று வைத்துக் கொள்வோம். ஒப்பீட்டளவில் X கட்சியை விட Y கட்சி ஊழல் நிறைந்தது என்றும், Z என்ற கட்சி புதிதாக நிறைய (Xஐ விட அதிகமான) தூயவர்களை உள்ளடக்கி உதயமாகி இருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம். Z கட்சி தூயவர்களைக் கொண்ட கட்சியாக இருக்கிறது ஆகவே எல்லோரும் Z-ஐ தான் ஆதரிக்க வேண்டும் என்று சொல்லலாம். எப்போது என்றால், தேர்தலில் Z கட்சி, X,Y இரண்டின் வாக்குகளையும் பெருவாரியாகப் பிளந்து ஜெயிக்கும் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே.

மாறாக Z ஆனது Xன் வாக்குகளைப் பிளந்து அதனால் Y ஆட்சிக்கு வரும் சூழல் இருந்தால், பேசாமல் Xஐ ஆதரித்து Zஐ கண்டு கொள்ளாமல் விடுவது உத்தமம். மாறாக Zஐ தான் ஆதரிப்பேன் அதனால் X வீழ்ந்தாலும் எனக்குக் கவலையில்லை என்று ஒருவர் சொன்னால் அது நாட்டுக்குத்தான் கேடு. இந்தத் தவறு 2006ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் நடந்தது. 2011ல் புத்திசாலித்தனமாகத் தடுக்கப்பட்டது. இதற்கு சோ அவர்களும் ஒரு முக்கியக் காரணம் என்றே நினைக்கிறேன். அவர் இந்தத் தவறு தடுக்கப் பட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து எழுதியும், பேசியும் வந்தார். அவருடைய துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் அவருடைய அந்த விடா முயற்சியைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். தன்னுடைய கருத்தைத் திரும்பத் திரும்ப விடாது விளக்கி, வலியுறுத்தி வெற்றி பெற்றுள்ளார்.

இதே சூழ்நிலை அண்ணா ஹஸாரே விஷயத்திலும் நடக்கிறது. X=>பாஜக,Y=> காங்கிரஸ்,Z=>அண்ணா ஹஸாரே. என்ன ஒன்று அண்ணா இன்னுமும் கட்சி ஆரம்பிக்கவில்லை (அவர் குழுவினர் கட்சி ஆரம்பிக்க விரும்புவதாய் செய்திகள் வருகின்றன என்பது வேறு விஷயம், நல்ல விஷயமும் கூட).

ஒப்பீட்டளவில், ஊழலில் பாஜக, காங்கிரஸைவிட இன்னமுமே குறைவாகத்தான் உள்ளது. அப்படியிருக்க அண்ணா, தன்னுடைய ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் பாஜகவுடன் (அதன் ஊழல்களையும் எதிர்த்துக் கொண்டு) கைகோர்ப்பதில் என்ன அசௌகரியம் என்று தெரியவில்லை. கைகோர்க்க வேண்டாம் சரி. அதற்காக “சிறந்த நிர்வாகத்திற்காக” பல விருதுகளைப் பெற்ற குஜராத்தின் மோடி அரசை, தக்க ஆதாரங்களில்லாமல், “ஊழல் நிறைந்தது” என்று சொல்லியிருக்க வேண்டாம் :) இப்படியாக, இருக்கும் கட்சிகளில் உருப்படியான ஒரு கட்சிக்கு சேதம் விளைவிக்கும் வகையில், அண்ணா அவர்கள் தேர்தலில் செயல்பட்டால், அவரைக் கண்டுகொள்ளாமல் விடுவதே உத்தமம்!

பாஜகவின் ஊழல்களைப் பற்றிய ஒரு கேள்விக்கு சோ அவர்கள் அளித்த பதில் மிகவும் சிந்திக்கத் தக்க ஒன்று.

கே: ஊழல் விஷயத்தில், பாஜகவின் சாயமும் வெளுத்து விட்டது போலிருக்கிறதே?
சோ: ஆம் உண்மைதான். ஆனால் மற்ற கட்சிகள் கிழிந்து கந்தையாகி விட்டதே? கிழிந்த ஆடைகளுக்குப் பதில், சாயம் போன ஆடைகள் மேலானது என்பதால் இன்னமும் பாஜக ஆதரிக்கத் தக்கதுதான்!

அவர் எடுத்துக்கொண்ட தரப்பின் குற்றங்கள், தவறுகள்,குறைபாடுகள்,பலவீனங்கள் இருட்டடிப்பு செய்யப்படும் அல்லது தாக்கப்படும்.மற்றைய தரப்புக்களின் நிறைகளிற்கும் இதுவே நடக்கும் என்று திரு. சிவேந்திரன் கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவையெல்லாம் template answers. இவர் எந்த அளவு சோ அவர்களின் கருத்துக்களை முழுமையாகப் படித்தார் என்று தெரியவில்லை. அண்ணா அவர்களைப் பற்றிய சோவின் கருத்துக்களை முந்தைய கடிதத்தில் இணைப்புகளாகத் தங்களுக்கு அனுப்பியிருந்தேன். அவற்றைப் படித்திருப்பீர்கள் என்றும் நம்புகிறேன். அப்படியிருக்க திரு. சிவேந்திரனின் கருத்துக்களுக்கு வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறீர்களா? ஆச்சரியம்தான்!

தற்போது அவற்றை Google drive-லும் பகிர்ந்துள்ளேன். தங்கள் வாசகர்களுக்கு உபயோகப்படும் பட்சத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

https://docs.google.com/open?id=0BzZ6TK_rdqqsRUpON1hYMVhGaU0

செல்வி.ஜெயலலிதாவின் வருமான வரி தொடர்பான தனது கருத்துக்களையும் தெளிவாகவே சோ அவர்கள் விளக்கியுள்ளார். எதிலும் அவர் மௌனம் காப்பதில்லை! ஒருவர் ஒரு வழக்கில் சட்டத்திற்கு உட்பட்ட வகைகளில் தனக்கு சாதகமான முடிவுகள் எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. சட்டத்தை மீறும் பட்சத்தில் மட்டுமே அவை தவறானதாகும். இது கேட்பதற்கு சற்றே கொடூரமாக இருக்கலாம். ஆனால் நடைமுறை இதுதான். சோ அவர்கள் தன்னுடைய இந்த வகை அணுகுமுறையை அனைவரிடமும் மேற்கொள்கிறார். இல்லையென்று நினைத்தால் தாங்களோ, திரு.சிவேந்திரனோ தாராளமாக ஆதாரங்களைக் கொடுக்கலாம்.

சோ ஒரு அரசியல் தரகர் – இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. இதை சோவே ஒத்துக் கொண்டும் உள்ளார். இது குறித்த அவரது பேட்டியை (விகடன் என்று நினைக்கிறேன்) முழுவதுமாகப் படித்தால் புரியும் என்று நினைக்கிறேன். மேலும் எனக்குத் தெரிந்த எந்த பத்திரிக்கையாளரும் சோ அளவுக்கு லட்சியவாத நோக்கில் கருத்துக்களை வைப்பதில்லை.மற்ற பத்திரிக்கைகளின் உள்ளடக்கங்களயும், துக்ளக்கையும் மேம்போக்காகப் பார்த்தால் கூட இது தெரியும்.

மற்றபடி, சோ அவர்கள் பாஜகவை முன்னிட்டு, அண்ணாவை எதிர்க்கிறார், பயப்படுகிறார் என்பதெல்லாம் வெறும் கற்பனையே. அப்படியிருந்திருந்தால் அண்ணாவை ஆரம்பத்தில் ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? அண்ணா அவர்கள் சோவைப் பொறுத்தவரை, அவருடையெ எதிர்ப்பை தானே தன் நடவடிக்கைகளால் சம்பாதித்துக் கொண்டார். அவ்வளவுதான்.

சோவின் வடமொழி ஸ்லோகத்தைப் பற்றி விவாதிப்பது altogether ஒரு தனி topic. அவருடைய தர்மம் குறித்த கட்டுரைத் தொடரை படித்தால் இந்த ஸ்லோகத்தின் விளக்கம் புரியும். குற்றங்களற்ற மனிதனாக இருந்தாலும் ஏன் ஒரு கிராமத்தின் நன்மைக்காக அவனை விட்டுவிட வேண்டும் என்பதும் புரியும். மேலே நான் சொன்ன xyz எடுத்துக்காட்டு அதன் மிகவும் எளிமைப்படுத்தப் பட்ட ஒன்றே.

சுருக்கமாக, அண்ணா ஹஸாரே அவர்களின் கருத்துக்கள் (ஓரளவு) ideal ஆனவை. ஆனால் சோ அவர்களின் கருத்துக்கள் practical ஆனவை. ideal-ஆன ஒரு சமுதாயம் அமையும் வரை practical கருத்துக்களே பயன்படுத்தக் கூடியவை என்பது என் எண்ணம்.

அப்படியானால் அண்ணா அவர்கள் என்னதான் செய்ய வேண்டும் (என்று யாராவது என்னைக் கேட்டால்)?

தனக்கு இருக்கும் ஆதரவை ஒருமுகப்படுத்தி ஒரு கட்சி ஆரம்பித்து,
தகுதியான கட்சி என்று தான் நினைப்பவர்களுடன் கூட்டு சேர்ந்து,
தேர்தல்களைச் சந்தித்து,
நாடாளுமன்றத்திலும், பல சட்டமன்றங்களிலும் பிரதிநிதித்துவம் பெற்று,
திறமையாகவும், நேர்மையாகவும் செயல்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்று,
காலப்போக்கில் ஒரு தேர்தலை தனியாக சந்தித்து,
பெரும்பான்மை ஆதரவு பெற்று ஆட்சி அமைத்து,
தான் விரும்பும் சட்டங்களை நிபுணர்களின் அலசல்களுக்குப் பிறகு அமல்படுத்தி,
தான் விரும்பும் ideal சமூகத்தைக் கட்டமைக்கலாம்.

அல்லது,

தன்னுடைய தொடர் போராட்டங்களின் மூலமாக அரசுகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்து,
அதன் மூலம் சாத்தியமான ஒரு லோக்பாலைக் கொண்டு வரலாம்.

அல்லது

மீடியாவின் கைப்பாவையாக செயல்பட்டு,
மக்களுக்கு பொழுதுபோக்கு விருந்தும் அளிக்கலாம்.

கடைசியாக ஒரு விஷயம். திரு.சிவேந்திரனின் கடிதத்தின் கடைசி இரு வரிகள் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. அதையும் தாங்கள் ஏற்றுக் கொண்டதும் மகிழ்ச்சியே. எதனால் அண்ணாவை சோ கைவிட்டார் என்பதை அண்ணாவின் பக்கத்திலிருந்து புரிந்து கொண்டுவிட்டீர்கள். சோ ஏன் “அண்ணா ஹஸாரேயை விட பாஜகவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்” என்பதே நான் இங்கு விளக்க முற்பட்டது.

நன்றியுடன்,
கணேஷ் பெரியசாமி.

பின்குறிப்பு : இந்தக் கடிதம் தங்களைக் கோபப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதன்று. அவ்வறான த்வனி இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். என்னைப் பொறுத்தவரையில், தாங்கள் மற்றும் சோ இருவருமே சமுதாயத்திற்கு தேவை என்று எண்ணுகிறேன். இணையத்தில் பார்த்தவரை, மற்ற சிலரும் இதே எண்ணத்துடன் இருப்பது தெரிந்தது. ஆகவே என் எண்ணம் வலுப்பெறுகிறது. நீங்கள் இருவரும், அண்ணாவின் விஷயத்தில் வெகுவாக வேறுபடுவதால், அண்ணா குறித்த, தங்கள் கவனத்திற்கு வராத சில விஷயங்களை, தங்களுக்கு விளக்க முற்பட்டேன் அவ்வளவுதான்.

அணு உலை விஷயத்திலும் வேறுபடுகிறீர்கள், ஆனாலும் அந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர என்னிடம் போதிய தகவல்கள் இல்லையென்பதால், அது குறித்து எதுவும் என்னால் பேச முடியவில்லை :)

நீங்கள் இருவரும் வேறுபட்டால் அது சமுதாயத்திற்குத்தான் கேடாக முடியும் என்ற என் எண்ணத்தால் விளைந்த ஒரு முயற்சி இந்தக் கடிதங்கள்.

நன்றி.

கணேஷ் பெரியசாமி

அன்புள்ள கணேஷ்

உங்கள் கடிதத்துக்கு நான் ஏற்கனவே பதிலளித்திருந்தேன். இந்தவகையான நீண்ட அரசியல் தர்க்கங்களில் எனக்குப் பெரிய ஆர்வமில்லை. இதில் எந்தத் தரப்பையும் எடுத்து விரிவாகப் பேசமுடியும். நான் இதில் இளமையில் ‘முறையான’பயிற்சியை எடுத்தவன் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

பாஜகா ஊழல் கம்மியானது என்பதைப்போன்ற வாதங்களுக்கெல்லாம் என் அளவில் பெரிய மதிப்பு இல்லை. ஊழல் செய்வதற்கான வாய்ப்பு பாஜகவுக்குக் குறைவாக கிடைத்தது என்பது மட்டுமே அதன் பொருள். ஊழலுக்கான அடிப்படைக்காரணம் என்பது இயற்கை வளங்களைச் சுரண்டும் முதலாளிகள் + அரசு அதிகாரிகள் + அரசியல் என்ற கூட்டு. அந்தக்கூட்டு காங்கிரஸில் எந்த அளவு வலுவாக இருக்கிறதோ அதைவிட பாரதிய ஜனதாவின் கர்நாடகத்தில் வலுவானது. அதை உடைக்க பாரதியஜனதாவின் மேல்மட்டத்தால் முடியவில்லை. அந்த ஆட்சியை மட்டுமே அவர்களால் மத்தியிலும் நீடிக்கமுடியும். தனிமனித விதிவிலக்குகள் எங்கும் உண்டு. அமைப்பும் அரசியலும் இந்த அளவிலேயே உள்ளன

சோவின் அரசியல் பாரதியஜனதா அரசியல். அவர் அதன் தரப்பாக ஒலிக்கிறார்

ஜெ

முந்தைய கட்டுரைமேச்சேரி கூத்துப்பள்ளி
அடுத்த கட்டுரைவாழும்தமிழ்