பருவமழை- கடிதங்கள்

திரு. ஜெயமோகன் அவர்களின் வாசகர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் அவர் எழுத்துக்களில் கவரப்பட்டு – தத்துவம், ஆன்மீகம், கீதை, மதம், வரலாறு, புனைவு, பகடி, சங்க இலக்கியம்- அவரைத் தொடர்பவர்கள்.
எனக்கு அவர் எழுத்துக்களில் எங்கும் நீக்கமறக் காணப்படும் உவமைகள்தான் முதலில் கவருபவன, உவப்பளிப்பன. அதுவும் இயற்கை பற்றி என்றால் சொல்லவே வேண்டாம்.
இந்தப் பருவ மழைப் பயணம் மற்றொரு உதாரணம்.

கட்டுரையில் ஆரம்பத்தில்
//

புல்வெளியின் பச்சைக்கு நடுவே மரக்கூட்டங்கள் நீலம்கலந்த பச்சையுடன். புல்வெளியில் இருந்து பச்சை நிறம் கரைந்து ஊறி தேங்கியதுபோல.
முதல்மழை பெய்த மறுநாளே பசுமைபூத்துவிடும். பிரியத்துக்குரியவரின் பெயரைக்கேட்டே மலரும் முகம்போல.

//
என்று படித்தவுடனேயே மனம் நீண்ட நாட்களுக்குப்பின் நாக்கில் முதல் மாம்பழத்துண்டை உணர்ந்தது. அப்புறம் துண்டுகளும் சுவைகளும் ஏறிக்கொண்டே போகின்றன.
எவ்வளவுதான் குறிப்பெடுக்க முடியும்?
//

மேற்கில் இருந்து ஒளியைப் பெற்ற மேகப்படலம் நெடுநேரம் அதைத் தக்கவைத்திருந்தது. விளக்கின்மீது போர்த்திய பட்டுத்துணிபோல.
அந்த மேகத்தை கத்தரிப்பூவின் நிறம் சாம்பல்நிற பட்டுத்துணியில் படிந்ததுபோல என்று சொல்லலாம்.
காற்று குளிராக வேகமாக அடித்தது. கண்ணுக்குத்தெரியாத சின்னக்குழந்தைகளின் கைகள் சிரித்துக் குதூகலித்தபடி உடைகளை பிடித்து இழுப்பது போல, முதுகில் குத்தித் தள்ளுவதுபோல. வானம் ஓரளவு பிரகாசமாக விதவிதமான மேகக்கோபுரங்களுடன் விரிந்து கிடந்தது
மலைக்காற்று பேரருவி போலப் பள்ளத்தாக்கை நோக்கிக் கொட்டிக்கொண்டிருந்தது.
சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் நடுவே அமைதியாக ஒரு பெரிய கண்ணாடிச்சில்லுபோலக் கிடந்தது அணை.

//
இப்படி போய்க்கொண்டேயிருக்கிறார்.
ஒரு உவமை போதும், நீங்கள் உலகின் எந்த மூலையில், எந்தக் கால நிலையிலிருந்தாலும் உங்களை இந்த அனுபவத்தின் உள்ளே, 4டி, கொண்டுவந்துவிடுவார். அப்புறம் நீங்களாச்சு, அந்த உவமையாச்சு, இயற்கையாச்சு.
இதற்கு முன்னால் கவி சூழுலாவிலும் –
//

ஏரி இரவில் பெரிய கிராபைட் தகடு போலிருந்தது. அதில் பிரதிபலித்த பிம்பத்துடன் மலைநீட்சி வாய்திறந்த பிரம்மாண்டமான முதலை.

//

ஒவ்வொரு கட்டுரையும் இந்த இயற்கை உணர்தல் அவ்வளவு தூய்மையாக இருக்கிறது…
ஆயிரக்கணக்கான வருடங்களாகக் கவிதை உவமைகளைக் கொட்டிக்கொண்டே இருந்தபின்னும் இன்னும் திடுக்கிடச்செய்யும் சிலிர்க்கச்செய்யும் உவமைகள் வந்தபடியே உள்ளன என்று பூவிடைப்படுதல் கட்டுரையில் சொல்கிறார்.
இவரது எழுத்துக்களில் என்பதை நான் கூட சேர்த்துக் கொள்வேன்.
உவமித்தலின் முடிவில்லாத சுவையே, ஒளிரலே ஜெயின் எழுத்துக்கள் என்னைக் கவர்ந்ததற்கான முதற் காரணம்.
அவரது வாசகன் என்று சொல்லிக்கொள்வதில் அவ்வளவு பெருமிதம் எனக்கு.

கட்டுரையின் கடைசியில்
//மழை என்பது நமக்கு தெருக்களில் சாக்கடையை ஓடவிடும் ஒரு நிகழ்வு மட்டுமே.
ஆகவே நாம் இயற்கையைக் காணக் கிளம்பிச்செல்லவேண்டியிருக்கிறது
//
என்ற மகத்தான நிகழ்காலத்திற்கும் கொண்டுவந்து விட்டுவிடுகிறார்.

சிவா கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள ஜே எம்
ஒவ்வொரு வருடமும் உங்கள் சாரல் காலத்துப் பயணம் பற்றி வாசிக்கும் போது ஒரு ஏக்கம் வந்து நெஞ்சில் அடைக்கும். இன்னொரு வாசகர் ராஜன் என்பவரும் இதைப் பற்றி உணர்ந்து எழுதி இருந்தார்.

இந்த எங்கள் ஏக்கம் நாங்கள் கடல் கடந்து எங்கோ அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற காரணத்தினால் மட்டும் இல்லை என நினைக்கிறேன். சிறுவயதாக இருக்கும் போது இருந்த அந்தச் சாரல் அழகும் அதனால் கிடைக்கும் சுகமும் இப்போது குறைந்து விட்டது என எண்ணுகிறேன். நான் நெல்லையில் பிறந்து வளர்ந்தவள். விடுமுறைக் காலங்கள் எல்லாம் தென்காசியைச் சுற்றி உள்ள ஊர்களில் கழித்தவள். ஜூன் ஜூலை மாதங்களில் விடுமுறைக்கு ஊருக்குப் பல முறை சென்று இருக்கிறேன். வர வர வெயில் உக்கிரம் கூடி, சாரல் தரும் குளிர்ச்சியும் மழையும் குறைகிறதோ என்று உண்மையும் காரணம்.

பருவங்கள் மாறும் அழகு இங்கேயும் உண்டு. கோடை முடிந்து இலையுதிர் காலத்தில் இங்குள்ள மரங்களில் இலைகள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, நெருப்பு, பிங்க்,ரோஸ், பிரவுன் ஆகிய வண்ணங்களில் சிலு சிலுப்பதைப் பார்த்து ரசிக்கலாம். மிக இதமான சுகமான தட்ப நிலையை அனுபவிக்கலாம். பனிக்காலம் முடிந்து வசந்த காலத்தில் எல்லா செடிகளிலும் மரங்களிலும் முதலில் வண்ண வண்ண மலர்கள் கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்குவதை ரசிக்கலாம். ஆனால் இதையெல்லாம் ரசிப்பதற்காக ஒரு பிரயாணம் வருடம் தோறும் இனிய நண்பர்களோடு ஏற்பாடு செய்து கிளம்ப எங்களில் பலருக்கு சந்தர்ப்பம் கிடைக்காது. உங்களுக்கு அது கொடுத்து வைத்து இருக்கிறது. அதுதான் எனக்கு பெரிய ஏக்கம்.

நன்றாக அனுபவித்து விட்டு வாருங்கள்

அன்புடன் சிவா சக்திவேல்

முந்தைய கட்டுரைகே.வி.ஜெயஸ்ரீக்கு விருது
அடுத்த கட்டுரைமேச்சேரி கூத்துப்பள்ளி