«

»


Print this Post

சக்கரவர்த்தி உலா


சென்னையில் விஜில் என்ற ஓர் அமைப்பு எண்பதுகளில் இருந்தது. வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட அமைப்பு அது. ஊடகக் கண்காணிப்பு அதன் பணி. ஊடகங்களில் வரும் சாதகமான விஷயங்களைப் பாராட்டுவதும் மாறான விஷயங்களை நிராகரிப்பதும் வழிமுறைகள். அவர்கள் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்களையும் எழுத்தாளர் மற்றும் இதழாளர்களையும் சந்தித்து உரையாடச்செய்வதற்கான முயற்சி அது. இடதுசாரிகள் வலதுசாரிகள் கேளிக்கைச்சாரிகள் எல்லாத்தரப்பையும் கூட்டி நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில்தான் நான் முதன்முறையாக க.நா.சுப்ரமணியத்தைச் சந்தித்தேன்.

அது 1985. வழக்கமான கருத்தரங்குகள் போல அல்லாமல் பெரிய அரங்கு நிறைய ஆணும்பெண்ணுமாக நிறைந்து இரைந்துகொண்டிருந்தார்கள். வந்திருந்த ஒவ்வொரு பிரபலத்துக்கும் ஒவ்வொரு வகையான வரவேற்பு. சோ மேடைக்கு வந்தபோது உச்சகட்ட கரவொலி, வரவேற்பு. அவசரநிலையை எதிர்த்துப் போராடித் தன் ஆளுமையை நிலைநாட்டிய சோ அவரது புகழின் உச்சியில் இருந்த நாட்கள் அவை. பின்னர் பாரதியஜனதாவின் பாராளுமன்ற உறுப்பினராக ஆனது அவரது நடுநிலை பிம்பத்தைக் கலைத்து மதிப்பைக் கீழிறக்கியது என்று நினைக்கிறேன். ஒரு ஆயிரம்வாலா போல வெடித்துவிட்டுஅவர் சரசரவென இறங்கிச்சென்றார்.

அரங்கில் அன்று நேர் எதிரான எதிர்வினையைப்பெற்றவர் கோவி.மணிசேகரன். ஏதோ ஒரு வார இதழில் கணவனை இழந்த பெண்கள் பூவும்பொட்டும்வைத்து மினுக்குகிறார்கள் என்று அவர் எழுதியிருந்ததை எதிர்த்து அரங்கிலிருந்த பெண்கள் எழுந்துநின்று கண்டனக்கூச்சல் எழுப்பினார்கள். அவர் ‘ஆண்மையுடன்’ கூந்தலைச் சுண்டிவிட்டபடி ‘பொட்டு வைக்கும் விதவைகள் எல்லாம் விபச்சாரிகள்’ என்று அறைகூவினார். ஒரே கொந்தளிப்பு.அவர் மேலே பேசவிடாமல் மேடையிலிருந்து இறக்கிவிடப்பட்டார். அவர் தன் எதிர்ப்பைக் கூவியபடி வெளியேறினார்.

இந்தச்சந்தடியில் க.நா.சு அவரது பிரம்புக்கைத்தடியும், முகத்தில் சரியும் முடியும், நீளமான காதி ஜிப்பாவும், மூக்கில் கனத்துச்சரியும் சோடாப்புட்டிக்கண்ணாடியுமாக மேடை ஏறி தட்டுத்தடுமாறிப் பேசியதை எவரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் பேச்சு இன்றைய சினிமாப்பாட்டுகள் போல இருந்தது. அரங்கில் இருந்த மொத்த ‘ஆர்கெஸ்ட்ரா’ வும் வேறு எதையோ முழங்கிக்கொண்டிருக்க அவர் சம்பந்தமே இல்லாமல் மெல்லிய குரலில் வேறெங்கோ எதையோ ஒலித்துவிட்டுத் தடுமாறி இறங்கிவிட்டார்

நான் பரவசத்துடன் க.நா.சுவை நோக்கி ஓடினேன். அவர் அரங்குக்கு வெளியே சென்று விரிந்த திண்ணையில் தூணருகே நின்றிருந்தார். நான் சென்று வணங்கி ‘என் பெயர் ஜெயமோகன். தமிழில் நிறைய வாசிக்கிறேன்’ என்று பதற்றமும் மூச்சுத்திணறலுமாகச் சொன்னேன். க.நா.சுவின் புன்னகை நட்பாக இருந்தது. ‘என்னென்ன படிச்சேள்?’ என்றார். நான் எந்த இலக்கியவாதியிடமும் சொல்லியாகவேண்டிய மரபின்படி அவரது நூலைச் சொன்னேன். ‘பொய்த்தேவு படிச்சிருக்கேன்’

அது போகட்டும் என்பதுபோல க.நா.சு கையை அசைத்தார். ‘…நீங்க மௌனி கதைகள் படிச்சிருக்கேளா?’

நான் ‘இல்லை’ என்றேன்.

‘அதை முதல்ல படியுங்கோ…கொஞ்சம் கஷ்டம். ஆனா இலக்கியத்துக்கு ஒரு ஸ்கேலை அது உண்டுபண்ணிக் குடுத்திரும்…மத்தத நாமளே மதிப்புப் போட்டுப் பாத்துக்கலாம்’.

அதற்குள் அமைப்பாளர்கள் அவரை நோக்கி வந்தார்கள். ‘இங்கே நிக்கிறீஙகளா?’ என்றார்கள்.

‘நல்லதா ஒரு காப்பிசாப்பிடணும்’ என்றார் க.நா.சு.

‘போலாமே’ என்றார் அவர்களில் ஒருவர். அவர்களை நான் அறிவேன். அவர்கள் க.நா.சு மீது பெரிய மரியாதை கொண்டவர்கள்.

க.நா.சு வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவரது அப்பா கும்பகோணத்தில் தபால் அதிகாரி. க.நா.சு அவருக்கு ஒரேமகன். அன்றைய உயர்கல்வி முடித்தவர் க.நா.சு. ஆனால் இலக்கியத்துக்காக மட்டுமே வாழவேண்டும் என்பதனால் வேறு எந்தவேலைக்கும் முயலவில்லை. இதழியலில்கூட அக்கறை காட்டவில்லை. அவருக்குப் பெரிய தேவைகள் இல்லை. ஒரேமகள்தான். அவர் மிகமிகக்குறைவான வருமானத்தில், பெரும்பாலும் நண்பர்களை நம்பியே வாழ்ந்தார். பெரும்பாலானநாட்கள் நண்பர்களின் விருந்தினராக எங்கேனும் தங்கியிருப்பார்.

க.நா.சு ஐம்பது அறுபதுகளில் சென்னையில் இருந்தபோது இலக்கியவெளிவட்டம் ,சந்திரோதயம்,சூறாவளி போன்ற சிற்றிதழ்களை நடத்தி அவற்றில் தமிழில் வணிக இலக்கியப்போக்குகளை மிகக்கடுமையாகத் தாக்கி எழுதினார். அன்று அது பெரிய அலைகளை [ காபிக்கோப்பைக்குள்தான்] கிளப்பியிருந்தது. அன்று அவர்கள் எல்லாம் மிகப்பெரிய இலக்கியநட்சத்திரங்கள். இதழ்கள் அவர்களின் கால்களில் விழுந்துகிடந்த காலம். க.நா.சு ஒட்டுமொத்த தமிழ் அறிவுலகையே அவமானம்செய்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அன்றைய பொதுவாசகர்களும் அதை நம்பினார்கள்.

விளைவாக க.நா.சு எங்கும் எதுவும் எழுதமுடியாத நிலையை அடைந்தார். க.நா.சுவுக்கு அன்று பதிப்பகங்கள் அளிக்கும் மொழியாக்கவேலைகள்தான் முக்கியமான வருமானம். அவரது நூல்களுக்கான பதிப்புரிமையையும் அவ்வப்போது சிறிய தொகைகளாகப் பெற்றுக்கொள்வார். இலக்கிய நட்சத்திரங்களின் பகையை அஞ்சிய அன்றைய பெரிய பதிப்பகங்கள் க.நா.சுவை விலக்கின. அவர் சென்னையில் வாழமுடியாமல் டெல்லி போனார். அங்கே ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். டெல்லியில் அவருக்கென்று ஒரு நண்பர்வட்டமும் சூழலும் உருவாகியது

பின்னர் எண்பதுகளின் தொடக்கத்தில் க.நா.சு சென்னைவந்துசேர்ந்தார். ‘எனக்குப் பிடித்தமான மண் இது. சாவதற்காக இங்கே வந்திருக்கிறேன்’ என்று சொன்னார். எல்லா இதழ்களுக்கும் கடிதம் எழுதித் தனக்கு எழுதும் வாய்ப்பு தரும்படி கோரினார். தினமணி அவரை ஊக்குவித்து எழுதவைத்தது. அவர் இலக்கிய அறிமுகக்கட்டுரைகள் நிறைய எழுதினார். அவருக்கு சாகித்ய அகாதமி விருது ’இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’ என்ற அறிமுகநூலுக்காகக் கிடைத்தது. நான் அவரைச் சந்தித்தது அந்தக்காலகட்டத்தில்தான். ஆனால் அவரை அடுத்த தலைமுறையின் பொதுவாசகர்களுக்கு அறிமுகமே இருக்கவில்லை

கல்கி,அகிலன்,நா.பார்த்தசாரதி, லட்சுமி,சாண்டில்யன் போன்ற அக்கால வணிக எழுத்தின் மூலவர்களை முற்றாக நிராகரித்து புதுமைப்பித்தன்,மௌனி, கு.ப.ராஜகோபாலன் ஆகியோரில் தொடங்கும் ஒரு நவீன இலக்கியப்போக்கை க.நா.சு முன்வைத்தார் க.நா.சு போட்ட ‘படித்திருக்கிறீர்களா?’ என்றபட்டியல் மிக முக்கியமானது. அன்றெல்லாம் அந்தப்பட்டியல் நல்ல இலக்கியவாசகர்களிடம் இருக்கும். பலர் அதைக் கையாலேயே நகலெடுத்து வைத்திருந்தார்கள். அவர்கள் தங்களைத் தேடிவரும் புதியவாசகர்களுக்கு அதைக்கொடுப்பார்கள். சுந்தர ராமசாமி அந்த பட்டியலைத் தட்டச்சு செய்து ஐம்பது பிரதி எடுத்து எப்போதும் கையில் வைத்திருப்பார். எனக்கும் அளித்தார். நான் அதிலுள்ள நூல்களைத் தேடித்தேடிவாசித்து நவீன இலக்கியத்தை அறிந்துகொண்டேன்.

உண்மையில் இன்றைக்கு நாம் தமிழ் நவீன இலக்கியம் என்று சொல்லும் ஓர் இயக்கத்தை அந்தப்பட்டியல் வழியாக க.நா.சு தான் வரையறுத்தார். அவர் அதை உருவாக்கினார் என்றுகூடச் சொல்லலாம். அந்தப்பட்டியலை மீறி ஒரு இலக்கியவரிசையை எந்த விமர்சகரும் இன்றும் உருவாக்கவில்லை. இலக்கியத்தரமானவை என க.நா.சு நம்பும் ஆக்கங்களை காலவரிசைப்படி அதில் சுட்டிக்காட்டியிருந்தார். விரிவான இலக்கிய விமர்சனங்களை எழுதி அச்சிடும் வசதி அக்காலகட்டத்தில் இல்லை. ஏனென்றால் இருபது பக்கங்களில் நூறுபிரதிகள் அச்சிடப்படும் சிற்றிதழ்களில் மட்டுமே இலக்கியம் இருந்துகொண்டிருந்தது. பிரபல வார இதழ்களில் வெறும் கேளிக்கைக்கதைகளுக்கே இடம். நவீன இலக்கியம் ஆர்வத்துடன் தேடித்தேடி வாசிக்கும் ஒரு ஆயிரம்பேருக்குள்தான் புழங்கியது. அச்சூழலில் இந்தப்பட்டியல் பெரும்பங்களிப்பை ஆற்றியது.

பல நல்ல எழுத்தாளர்களை தமிழ்ச்சமூகம் மறந்துவிடாமல் நினைவூட்டிக்கொண்டே இருந்தது க.நா.சுவின் பட்டியல்தான். உதாரணம் ஆர்.ஷண்முகசுந்தரம். அதேபோல எவரும் கவனிக்காத நல்ல ஆக்கங்களை இலக்கியத்தின் வட்டத்துக்குள் நிலைநிறுத்தியதும் க.நா.சுபட்டியல்தான். உதாரணம், கரிச்சான்குஞ்சுவின் ‘பசித்தமானுடம்’. ஆனால் க.நா.சு அதற்காக மிகமிகக்கடுமையாக வசைபாடப்பட்டார். அந்தப்பட்டியலில் விடுபட்ட எல்லாருக்கும் அவர் எதிரியானார். க.நா.சு ஒரு ‘குழுவை’ உருவாக்குகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டார்.

க.நா.சுவால் பட்டியலில் இருந்து விடப்பட்டவர்கள் அன்று மிக வலுவானவர்கள். பணமும் புகழும் உடையவர்கள். க.நா.சு வசைகளுக்கு பதில் சொல்வதில்லை. ‘இது நேக்கு புடிச்ச புக்ஸோட பட்டியல். புடிக்கலைன்னா விட்டிருங்கோ’ என்று மட்டுமே சொல்வார். பொதுவாக அவருக்கு விவாதங்களில் நம்பிக்கை இல்லை. இலக்கியப்படைப்புகளை அலசி ஆராய்வதிலும் ஆர்வம் இல்லை. ‘படிச்சுப்பாருங்கோ’ என்பதே அவரது வழி.

க.நா.சு இடதுசாரிகளில் உள்ள எல்லா முக்கியமான எழுத்தாளர்களையும் அங்கீகரித்திருக்கிறார். சொல்லப்போனால் இடதுசாரிகளுக்கே அவர்தான் அவர்களில் உள்ள முக்கியமான எழுத்தாளர்களை அடையாளம் காட்டினார். ஆனாலும் இடதுசாரிகள் அவரை சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்று குற்றம்சாட்டினார்கள். இடதுசாரியான ஈழ விமர்சகர் க.கைலாசபதி க.நா.சு சி.ஐ.ஏவின் பணத்தால் மிக வசதியான வாழ்க்கையை வாழ்வதாக எழுதினார். நாடோடி வாழ்க்கை வாழ்ந்த க.நா.சு அதற்கும் பதில் சொல்லவில்லை. புன்னகையுடன் ‘சர்தான்,அவருக்கு அப்டி தோண்றது…’ என்று சொல்லிவிட்டார்

காபிசாப்பிட அவர்கள் கிளம்பும்போது க.நா.சு சிரித்தபடி ‘நேக்கு இன்னும் சிஐஏ மணியார்டர் வரலை…காபிக்கான காச நீங்கதான் குடுக்கணும்’ என்றார்.

அமைப்பாளர்களில் ஒருவர் சிரித்தபடி ‘குடுத்திடலாம்..வாங்க’ என்றார்.

அவர்கள் நடந்தபோது ஒல்லியாக தாடியுடன் இருந்த நானும் தயங்கியபடி அவர்களுடன் நடந்தேன். என்னை அவர்கள் கவனிக்கக்கூடாது என்ற பிரார்த்தனையுடன். க.நா.சுவையே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தக்கூட்டத்தில் இருவர் பெரும்பணக்காரர்கள் என எனக்குத்தெரியும். ஆனால் அவர்கள் எல்லாரும் க.நாசுவின் முன் சக்கரவர்த்தியின் சேவகர்கள்போலிருந்தார்கள்.

அவரது அந்தக்கம்பீரம் கையில் எதுவுமே இல்லாத நிலையில் இருந்து வந்தது. அல்லது எதுவுமே ஒரு பொருட்டல்ல என்ற நிலையில் இருந்து வந்தது. அவர் நிமிர்ந்து சரியும் தலைமுடியை மெல்ல நீவிப் பின்னால் சரித்தபடி சாலையைப்பார்த்தார், தன் பிரஜைகளைப்பார்வையிடும் சக்கரவர்த்தியைப்போல. கூடவந்தவர்களிடம் பேசினார், சீடர்களின் அறியாமையை மன்னிக்கும் குருவைப்போல. அந்த அரங்கமுகப்பின் சந்தடிகளுக்கு அப்பால் தன்னந்தனியாக நின்றுகொண்டிருந்தார், ஞானமடைந்தபின் தன் அரண்மனை முற்றத்துக்குத் திரும்பி வந்த புத்தனைப்போல.

என்னுள் இருந்து சுய அடையாளம்தேடிப்பரிதவித்த அந்த இளைஞன் மனஎழுச்சி தாளாமல் கண்ணீர் மல்கினான். ஞானம் மட்டுமே தன் சுயமாகக் கொண்டு இப்படித் தலைநிமிர்ந்து நடக்கமுடிந்தால், இந்த உலகின் பணம் அதிகாரம் அற்பவேட்கைகள் அனைத்தையும் இப்படிக் காலடிவைத்து இலகுவாகத் தாண்டமுடிந்தால் மட்டுமே நான் வாழ்ந்தவன், வென்றவன் என்று எண்ணிக்கொண்டேன்.

எதிரே இருவர் வந்தார்கள். ஒருவர் எழுத்தாளர். அவருக்கு க.நா.சுவை முன்னரே தெரியும்போல. க.நா.சு அவரைக்கண்டதும் ’நமஸ்காரம்’ என்றார்.

அவர் ‘டெல்லியிலே இருந்து வந்துட்டீங்கன்னு சொன்னாங்க’ என்றார்.

‘ஆமா’ என்றார் க.நா.சு.

‘வடக்கத்திச் சப்பாத்திய மெல்லமுடியலையாக்கும்’ என்றார் அவர்.

க.நா.சு ’’கஷ்டம்தான்’’ என்றார்.

‘என்னமோ இங்க உள்ளவங்கள்லாம் மடையனுங்கன்னு சொல்லி சேத்த வாரி எறைச்சிட்டுப் போனீங்க…எங்க போனாலும் வரவேண்டிய இடம் இங்கதான்…என்ன?’ என்றார் அவர் . முகத்தில் ஒரு நக்கல்

‘பின்ன…அதானே நம்மூர் வழக்கம்?’ என்றார் க.நா.சு அதே சிரிப்புடன்.

‘அப்ப வேற பட்டியல் போடுறீங்களாக்கும்?’ என்றார் அவர். கூட நின்றவர் சிரித்தார்

‘போட்டுட்டாப்போச்சு…காபிசாப்பிடப்போறேன். வர்ரேளா?’என்று க.நா.சு அழைத்தார்.

‘இல்லை.நீங்க போங்க’ என்றார் அவர். க.நா.சு விலகியதும் இருவர் முகத்திலும் ஒரு பெருமிதம். க.நா.சுவை வாயடைந்து போகச்செய்துவிட்டார்கள் என்று நினைத்தார்கள் போல. பேசியவர் ஏதோ சொல்ல இருவரும் க.நா.சு காதில் விழவேண்டும் என்றே சிரித்தார்கள்.

ஆனால் க.நா.சு சாதாரணமாகப்பேசிக்கொண்டே நடந்தார். அமைப்பாளர்களில் ஒருவர் ஒரு டாக்ஸியை அழைத்தார். அது வந்து நின்றதும் நான் பின் தங்கிவிட்டேன். க.நா.சு சிரித்துப்பேசிக்கொண்டே காரில் ஏறிச் செல்வதை. கடைசியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். காருக்குள் அவர் ஏதோ சொல்ல எல்லாரும் சிரித்தார்கள்.

சிலவருடங்கள் கழித்து க.நா.சு இறந்தசெய்தி வந்தது. நல்லவேளையாக அவர் சென்னையில் இறக்கவில்லை. அவரை மதித்த டெல்லிக்கு மகளைப்பார்க்கச்சென்றிருந்தபோது இறந்தார்.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2012 அக்டோபர்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/29168

1 ping

  1. க.நா.சு.கடிதங்கள்

    […] […]

Comments have been disabled.