ஆத்மராகம்

நான் டாக்டர் அய்யப்பபணிக்கரை சந்தித்தது சுந்தர ராமசாமியின் வீட்டில் வைத்து. என்னைக்கண்டதுமே ராமசாமி ’வாங்கோ பணிக்கர் வந்திருக்கார்…மாடியிலே இருக்கார்’ என்றார். நான் அந்த உற்சாகத்தைப்பார்த்து வியந்தபடி உள்ளே சென்றேன் ’மாடியிலே குளிச்சுண்டிருக்கார்.இப்பதான் வந்தார்’ என்றார்.

அய்யப்ப பணிக்கரும் சுந்தர ராமசாமியும் நெருக்கமான நண்பர்கள். அந்த நட்பு இருவருமே இளைஞர்களாக இருக்கும்போது ஆரம்பித்தது. அன்றெல்லாம் திருவனந்தபுரம் ஸ்ரீகுமாரில் வெள்ளிக்கிழமை புதிய ஆங்கிலப்படம் போடுவார்கள். அதற்கு நகரின் சாராம்சமான அறிவுஜீவிகள் எல்லாம் வந்து கூடுவார்கள். மாலை மூன்று ஐந்துமணிக்கே வெளியே கிராமஃபோன் வைத்து ஆங்கிலப் பாட்டு போட ஆரம்பித்துவிடுவார்கள். அதைக்கேட்டுக்கொண்டு பக்கோடா சாப்பிட்டு காபி குடிப்பது உயர்ந்த பண்பாடு என்று கருதப்பட்டது. அப்போது அங்கே வரும் கல்லூரிமாணவராக இருந்தார் அய்யப்ப பணிக்கர். ’ஒல்லியா தும்மினா ஒடைஞ்சிருவார் மாதிரி இருப்பார்’ என்றார் சுந்தர ராமசாமி.

நான் மாடிக்குச்சென்றேன். மாடியில் உள்ளறையில் ஒரு மனிதர் ஈரமான துண்டுமட்டும் கட்டியபடி ஒரு சிறிய வெற்றிலைச்செல்லத்தைத் திறந்து வைத்து அமர்ந்திருப்பதைக் கண்டேன். வெற்றிலைச்செல்லத்துக்குள் சிறிய வெண்கலச்சிலைகள். அவர் ஒரு கிண்ணத்தில் இருந்து விபூதி எடுத்து நெற்றியிலும் கைகளிலும் போட்டுக்கொண்டார். கண்களை மூடிக்கொண்டு துல்லியமான மென்குரலில் சம்ஸ்கிருதத்தில் ஏதோ பாட ஆரம்பித்தார். பாட்டா மந்திரமா என்று தெரியாத ஒன்று. ஆனால் அவரது குரல் வசீகரமாக இருந்தது.

நான் ஓசை கேட்காமல் கீழே இறங்கி வந்தேன். ‘பாத்தேளா?’ என்றார் ராமசாமி

‘இல்லை. என்னமோ பூஜை,ஜெபம் பண்றார்’ என்றேன்.

’ஆமாமா, அவருக்கு அதெல்லாம் உண்டு’ என்று சுந்தர ராமசாமி சிரித்தார். ‘எங்கபோனாலும் அதெல்லாம் கிரமமா பண்ணிடுவார். நாங்க ரெண்டுபேரும் பாரீஸுக்கு சேந்துதான் போனோம். அப்ப எங்களுக்கு ஒரு பொம்பிளை கைடா வந்தா. நல்ல பாந்தமான பிரெஞ்சு மாமி அவ. பணிக்கர் அவ வர்ர நேரத்திலே பூஜை பண்ணிண்டிருந்தார். அப்டியே மயங்கிப்போயிட்டா. அதுக்கப்றம் அவர்கிட்டதான் எல்லாப் பேச்சும். அவர்தானே இந்தியப்பண்பாட்டோட வெண்ணை? நான் என்ன கேட்டாலும் பதில் சொல்றதில்லை. அவர்கிட்டே உபநிஷதம் கீதை லங்காவதார சூத்ரம்னு என்னென்னமோ கேக்கிறா. அவரும் சமாளிக்கிறார். இந்து புராணமுறைப்படி சுவாமி ரிஷிபீஜம் குடுங்கோன்னு கேட்டுடுவாளோன்னு எனக்கு ஒரே ஒதைப்பு’

பணிக்கர் வாசனையுடன் படி இறங்கி வந்தார். கோடுபோட்ட சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார். ’சாப்பிடுறேளா?’ என்றார் சுந்தர ராமசாமி. ’ஆகாமல்லோ’ என்று அய்யப்ப பணிக்கர் சொன்னார்.

சுந்தர ராமசாமி தோசைக்குக் கீரைக்கடைசலும் தயிரும் சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தார். அதுவே ஒரு மாண்பற்ற உணவுப்பழக்கம் என நினைத்திருந்த நான் பணிக்கர் கீரைக்கடைசலில் தயிரைச் சேர்த்து ஸ்பூனால் தின்றதைப்பார்த்தபோது விரக்தி அடைந்தேன்.

‘இவர் ஜெயமோகன்.தமிழிலே எழுதறார்…நெறைய பேசுவார். அந்த அளவு எழுத ஆரம்பிக்கலை’ என்றார் சுந்தர ராமசாமி . அய்யப்ப பணிக்கர் என்னைநோக்கி அழகான பல்வரிசை தெரிய புன்னகை செய்தார்.

பணிக்கர் அங்கே எப்படி வந்தார் என்று சுந்தர ராமசாமி விளக்கினார். மதுரை காமராஜ் பல்கலையில் ஒரு ஆங்கிலத்துறைக் கருத்தரங்குக்காக அவரைப் போய்க் கூப்பிட்டிருக்கிறார்கள். அவர் மறுத்திருக்கிறார். உடம்புசரியில்லை என்று மன்றாடியிருக்கிறார். இல்லை எல்லா ஏற்பாடுகளும் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏஸிகாரில் கூட்டிக்கொண்டு போய் திருப்பிக்கொண்டுவிட ஏற்பாடு. பணிக்கருக்குத்தேவையான பத்திய உணவின் பட்டியலையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஏஸி காரில் பணிக்கர் மதுரைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பத்திய உணவும் கொடுக்கப்பட்டது. அவர் கருத்தரங்கில் பேசிக்கொண்டிருக்கும்போதே அழைத்தவர்கள் கரைந்து மறைந்தார்கள். அவர் கருத்தரங்கக் கூடத்தில் திகைத்து எஞ்சினார். கூடத்தைப் பூட்ட வந்த வாட்மேன் உச் உச் உச் கொட்டியதோடு சரி. திரும்பிவர பேருந்துக்கும் பணம் இல்லை. கூட்டத்தில் கொடுத்த மிக்ஸர் -லட்டு- டீயையும் அவர் சாப்பிடவில்லை.

ஒருவழியாக நினைவுகூர்ந்து சுந்தர ராமசாமிக்குத் தொலைபேசினார். நல்லவேளையாக சுந்தர ராமசாமி எடுத்தார்.உடனே அவரது நண்பர் பாலசுந்தரத்துக்குத் தொலைபேசித் தகவல் சொல்ல அவர் நேரில்வந்து சாப்பாடு வாங்கிக்கொடுத்து ரயிலேற்றி அனுப்பினார். நாகர்கோயில் வந்ததும் அய்யப்ப பணிக்கர் களைத்துப்போய்விட்டார். ஒருநாள் தங்கி இளைப்பாறிப்போகலாம் என்று சுந்தர ராமசாமி சொன்னதை அவர் முழுமனதுடன் ஆதரித்தார்

‘அவங்களுக்கு எப்டியாவது கூட்டம் நடந்தால் போதும்’ என்று அய்யப்ப பணிக்கர் ஒரு எளிமையான தகவலாகச் சொன்னார்.

‘இத நீங்க விடக்கூடாது. இப்டியே வைஸ்சான்ஸலருக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணணும்’ என்றார் சுந்தர ராமசாமி

‘அதெல்லாம் தேவை இல்லை. என்னால் அதுக்குப்பின்னால் போகமுடியாது’ என்றார் அய்யப்ப பணிக்கர்

‘இந்த காலேஜ்வாத்தியார்களே சரியான அற்பப்பசங்க..’ என்றார் சுந்தர ராமசாமி கோபமாக

‘சுவாமி, ஒரு சின்ன விஷயம் நடுவே சொல்லிக்கிடறேன். நானும் காலேஜ் வாத்தியார்தான்’ என்றார் அய்யப்ப பணிக்கர்

சுந்தர ராமசாமி சிரித்தார். பணிக்கர் வேடிக்கையாகப்பேசுபவர் என்று தோன்றாது. ஆனால் கண்ணில் ஒரு விஷமம் இருக்கிறதோ என்ற சந்தேகமும் வந்துகொண்டிருக்கும். மலையாளத்தில் மிகப்பிரபலமான பல நகைச்சுவைக் கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார். ’வெறும் ஒரு திருடனாகிய என்னைக் கள்ளன் என்று சொன்னீர்களே- அய்யோ கள்ளன் என்று சொன்னீர்களே’ என்ற குழந்தைப்பாடல் மிகவும் பிரபலம். உண்மையில் அது ஒரு தீவிரமான புதுக்கவிதை.

பணிக்கர் அப்போது உலகப்புகழ்பெற்ற பேராசிரியராக இருந்தார். அந்த உலகப்புகழ் என்பது ஒரு மாயை. ஒரு சர்வதேசக் கருத்தரங்கில் பங்கெடுத்து உங்கள்பெயர் சிலபல பட்டியல்களில் இடம்பெற்றதென்றால் எல்லா சர்வதேச கருத்தரங்குகளுக்கும் அழைப்பு வரும். சர்வதேசக்கருத்தரங்குகள் நடத்துபவர்களுக்கும் பேசுவதற்கு சர்வதேசங்களில் இருந்தும் ஆள் தேவைதானே? உலகம் முழுக்க பறந்துகொண்டே இருக்கவேண்டியதுதான். ‘லக்கேஜ் தொலைஞ்சுபோனாக்கூட பணிக்கர் கவலைப்படுறதில்லை. லக்கேஜ் எந்த நாட்டுக்குப் போறதோ அந்த நாட்டுக்கு ஒரு கருத்தரங்குக்குப் போய்ச்சேந்து அதைப் புடிச்சிருவார்’

சுந்தர ராமசாமியும் அய்யப்ப பணிக்கர்ரும் அடிக்கடி சந்திப்பதில்லை. ‘போனவாட்டி பாரீஸ் நாஸ்தர்தாம் சர்ச்சுக்கு போனப்ப கூப்பிட்டார். நாங்க பாரீஸ் போய் பத்துவருஷமாகுது. பணிக்கர் எப்பல்லாம் நாஸ்தர்தாம் போறாரோ அப்பல்லாம் என்னை ஞாபகம் வச்சுக் கூப்பிடுவார்’ என்றார் சுந்தர ராமசாமி கண்ணைச்சிமிட்டியபடி. நாகர்கோயிலில் இருந்து அறுபது கிமீதான் திருவனந்தபுரத்துக்கு. ஒன்றரை மணிநேரத்தில் போய்விடமுடியும்index

அன்றிரவு நண்பர்கள் அளவளாவட்டும் என்று நான் நினைத்தேன். ஆகவே கிளம்பி ஒரு சினிமாவுக்குப்போய்விட்டுத் திரும்பி வந்தேன். நான் வருவதற்குள் அய்யப்ப பணிக்கர் ஓர் அறையில் தூங்கிவிட்டார். நான் இன்னொரு அறையில் தூங்கினேன். நான் காலை எழும்போது அவர் அதிகாலையில் எழுந்து ஜபதபங்களை முடித்துக்கொண்டு கிளம்பிச்சென்றிருந்தார். நான் எழுந்தவந்தபோது சுந்தர ராமசாமி ‘ பணிக்கர் உங்ககிட்டே சொல்லச்சொன்னார்’ என்றார்.

‘நேத்து என்ன பேசிட்டீங்க?’ என்றேன்.

‘கவிதை,கவிஞர்கள் பத்தித்தான். சுகதகுமாரி பத்தி சொன்னார்’

‘ஓ’ என்றேன்

‘அவ அப்பா போதேஸ்வரன் அப்ப பெரிய கவிஞர். சுகதகுமாரியும் அவ அக்கா ஹ்ருதயகுமாரியும் அப்ப பெரிய அழகிகள்’

‘சினிமா பாக்க வருவாங்களா?’

‘ஆமா. எப்டி தெரியும்?’

நான் சிரித்தேன். ’ சுகதகுமாரி இவரை விட சீக்கிரமே பாப்புலர் ஆயிட்டாங்க இல்ல?’

‘இவர் பாப்புலர் ஆனதே அம்பதுவயசுக்குமேலேதானே…ரொம்பநாளா கவிதை எழுதிட்டிருந்தார். மலையாளத்திலே புதுக்கவிதையைக் கொண்டு வந்தவரே இவர்தான்…இப்பகூட அவங்க யாப்பை விட்டுக்குடுக்கலை. மொத்தபேரும் இப்பவும் கவிதைன்னு பாட்டுதான் எழுதிட்டிருக்காங்க. பணிக்கர்தான் உரைநடையிலேயும் கவிதை எழுதமுடியும்னு காட்டினவர். நெறைய நல்ல கவிதைகள் எழுதியிருக்கார். அதை மலையாளிகள் ஏதோ டைரிக்குறிப்புன்னு நினைச்சுக்கிட்டாங்க… பணிக்கருக்கு அதிலே ரொம்ப ஏமாற்றம். மனமுடைஞ்சுபோய்க் கொஞ்சநாள் எழுதாம இருந்தார். அப்பவும் யாரும் கண்டுக்கலை. சுகதகுமாரியெல்லாம் ஒரே செண்டிமெண்டா கொட்டி நெரப்பி பெரிய ஆளா ஆயிட்டாங்க…இவருக்கு என்ன பண்றதுன்னே தெரியலை’ என்றார் சுந்தர ராமசாமி

‘அப்றம் எப்டி பாப்புலர் ஆனார்?’

‘இவர் ஒரு புதுக்கவிதை எழுதியிருந்தார். வசனத்திலேதான். சந்தியான்னு பேரு. அந்தியைப்பற்றி ஒரு வர்ணனை. நீளமா இருந்தாலும் நல்ல கவிதைதான். அப்ப லெனின் ராஜேந்திரன்கிறவர் வேனில்னு ஒரு படம் எடுத்தார். அதிலே நெடுமுடிவேணு ஒரு கவிஞரா அறிமுகமாகிற சீன். அதுக்கு ஒரு கவிதையப் பாடணும். நெடுமுடிவேணு இந்தக்கவிதையப் பாடுறேன்னு சொன்னார். ஏற்கனவே நெடுமுடிவேணு காவாலம் நாராயணப்பணிக்கர் நாடகங்களிலே நடிச்சிட்டிருந்தப்ப இவர்கூட பழக்கம். கவிதையை நெடுமுடிவேணுவே ஒருமாதிரி டியூன்போட்டுப் பாடினார். படத்திலே பாட்டு அதாவது கவிதை ஒரு அஞ்சுநிமிஷம் வரும்., ஒரு அஞ்சு நிமிஷம் பேக்ரவுண்டிலேயும் கேக்கும். கவிதை பயங்கரமா பாப்புலர் ஆயிட்டுது. அப்டியே இவரும் மேலே ஏறிட்டார். பணிக்கரும் அந்த கவிதையை அதே ராகத்திலே ஸ்டேஜ் ஸ்டேஜா போயி பாட ஆரம்பிச்சார். இவருக்கும் நல்ல கொரல். நல்லாவே பாடுவார். அப்டியே பிச்சுக்கிட்டுப் போச்சு… இப்பகூட எங்கியாவது இந்தக் கவிதையை பாடுறதுண்டு. இதே டியூனிலே குடும்பபுராணம்னெல்லாம் பல பாட்டுகளை எழுதியிருக்கார். எல்லாமே பிரபலம்தான்’

நான் அதன்பின் அய்யப்பணிக்கர் நடத்திய ’கேரளகவிதா’ இதழுக்கு ஒரு மலையாளக்கவிதை அனுப்பியிருந்தேன். பாராட்டிக் கடிதம் எழுதி அதை பிரசுரித்திருந்தார். ஆனால் அவரை நேரில் சந்திப்பதற்கு தருணம் அமையவேயில்லை. அவர் மறையும்வரை.

பின்பொருமுறை தேசிய நிகழ்ச்சி ஒன்றைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். அய்யப்ப பணிக்கர் அவரே அவரது சந்த்யா என்ற கவிதையை உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார். அந்த மெட்டு எங்கோ கேட்டதுபோலிருந்தது. எங்கே எங்கே என்று குழம்பிப் பாதியில் கண்டுபிடித்தேன். பணிக்கர் அன்று அந்த சாமி சிலைகள் முன்னாலிருந்து பூஜைசெய்யும்போது பாடிய அதே மெட்டுதான். நெடுமுடிவேணு அதை அந்தக் கவிதைக்குள் இருந்து எப்படிக் கண்டுபிடித்து வெளியே எடுத்தார்! பெரிய கலைஞன்தான், சந்தேகமே இல்லை

 

மறுபிரசுரம். முதற்பிரசுரம் Oct 8, 2012

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47