கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
குலதெய்வம் பற்றிய தங்கள் கட்டுரை கண்டேன். நான் கேள்விப்பட்ட சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். செஞ்சிக்கு அருகே உள்ள ஒரு சமணரிடம் பேசிக் கொண்டிருந்த போது எதேச்சையாக, குலதெய்வம் குறித்து பேச்சு வந்தது. அவர் தன்னுடைய குலதெய்வம் திருப்பதி வெங்கடசலபதி என்று சொன்னார். நான் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. இத்தனைக்கும், அவர் சமண தெய்வங்களுக்கு பூஜை செய்யும் “வாத்தியார்”. அதோடு வேறு சிலருக்கு அங்காளம்மன் குலதெய்வம் என்றார். குழந்தை பிறந்ததும் முதல் மொட்டை குலதெய்வத்திற்குத்தான் என்றார்.

என்னுடைய குலதெய்வம் கோயம்புத்தூர், அருகில் உள்ள பேரூரில் இருக்கும் அரசமகள் பெண்தேவி. பூஜை செய்யும் போது அரசமரத்திற்கு கீழ் வைத்தே செய்வர். “அரச மரம் என்பது போதி மரம். அரச மர வழிபாடு என்பது பௌத்தத்தில் இருந்து இந்து மதத்திற்கு வந்தது” என்று மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய பௌத்தமும் தமிழும் படித்த போது இதே ஆச்சரியத்தை அடைந்தேன். என்னுடைய மூதாதையர்கள் ஒருவேளை பௌத்தர்களாக இருக்கலாமோ என்னவோ? குலதெய்வ வழிபாடு பற்றிய ஆய்வுகள் நிறைய வந்தால் நிறைய ஆச்சர்யங்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி.
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்

அன்புள்ள சரவணக்குமார்

பல சமயம் குலதெய்வங்கள் பக்தியினால் உருவகித்துக்கொள்ளப்படுபவை. திருப்பதி வெங்கடாசலபதி போன்ற பெருந்தெய்வங்கள் குலதெய்வங்களக இருக்காது. அங்குள்ள பூசாரிகளுக்குக் கூட வேறு குலதெய்வங்கள் இருக்கும். குலதெய்வம் ஒருகுலத்தில் அல்ல  சில குலங்களின் ஒசந்த தெய்வம். பொதுத்தெய்வம் அல்ல

ஜெ

ஜெயமோகனுக்கு
தங்களின் வலைத்தளத்தில் இருக்கும் தமிழ்ச் சங்கப் பேரவைத் துணை ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை சிவாவின் கடிதத்தில் இருக்கும் பட்டியல் நாடகத்துறைப் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி – என இருப்பது என்னைக்குறிக்கும் எனத் தோன்றுகிறது. நான் எப்போதும் முனைவர் பேராசிரியர் என்று போடுவதில்லை என்பதோடு இராமசாமி என்றும் எழுதுவதில்லை. அத்தோடு அமெரிக்காவிற்கும் போனதில்லை. ஒருவேளை அது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியர் மு. இராமசுவாமியைக் குறிப்பதாக இருக்கலாம்.

இந்தப் பிழை நீங்கள் பதிவேற்றம் செய்யும்போது ஏற்பட்டிருந்தால் சரி செய்து விடுங்கள். அவர்களே அப்படிப் பட்டியலிட்டிருந்தால் அறியாமல் செய்த பிழை என்று விட்டுவிட வேண்டியதுதான்

அ.ராமசாமி

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 3, ஜடாயு
அடுத்த கட்டுரைஅஞ்சலி : விடியல் சிவா-