[ 1 ]
பெரும் துயரங்களை இலக்கியம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை நெடுங்காலமாகக் கூர்ந்து கவனித்துவருகிறேன். கவிதை மிக அந்தரங்கமான ஒரு நரம்பின் அதிர்வு. ஒருவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் சொற்கள் அளவுக்கு மௌனமானது. பேரழிவுகளும் பெருந்துயர்களும் மண்ணைப்பிளந்து நகரங்களை உண்ணும் பூகம்பம் போன்றவை. வானைநிறைக்கும் இடியோசை போன்றவை. பேரழிவையும் பெருந்துயரையும் கவிதைகளில் சொல்வதென்பது ஒரு சின்னச்சிட்டு தன் மெல்லிய இறகால் புயலை அறிவதுபோல.
ஆகவே கவிதைகள் மிகநுட்பமாக ஒருவழியைக் கண்டடைகின்றன. சிட்டுக்குருவி தன் மரப்பொந்தின் இடுங்கலான இருண்ட ஆழத்துக்குள் சென்று சிறகுகளை இறுக்கிக்கொண்டு கண்மூடி ஒடுங்கிக்கொள்கிறது. அதன் மெல்லிறகின் சலனத்தால் அங்கே நுழையும் புயலை அறிகிறது. பெருந்துயரை எதிர்கொள்ளும் கவிதைகள் மிக அந்தரங்கமாக ஆகின்றன. அந்தப் பெருந்துயரில் தன் அனுபவ எல்லைக்குள் சிக்கியவற்றைப்பற்றி மட்டும் நுட்பமாகச் சொல்லி நிற்கின்றன.
அனுபவம் பிரம்மாண்டமாகும்தோறும் கவிதை அதை அள்ளும் பரப்பை நுணுக்கிக்கொள்கிறது. அனுபவம் நுணுக்கமானதாக இருக்கையில் அதைப் பிரபஞ்சமளாவ விரித்துக்கொள்கிறது.கலையின் இந்த ஆர்வமூட்டும் ஆடலை நவீனக்கவிதையில் தொடர்ந்து பார்க்க முடிகிறது. பல நல்ல ஈழக்கவிதைகள் இவ்வகைப்பட்டவை.
இதனால் ஒன்று நிகழ்ந்திருப்பதை அறிகிறேன். யார் பேரழிவையும் பெருந்துயரையும் வெளியே நோக்கிப் புரிந்துகொள்ள, அள்ளிமுன்வைக்க முயல்கிறார்களோ அவர்களுக்கு அது அகப்படுவதில்லை. காரணம் அது விரியும்தோறும் அவர்களின் அனுபவ மண்டலத்தைவிட்டு வெளியே சென்றுவிடுகிறது. அதன்பின் தகவல்களும் அத்தகவல்களை ஒழுங்குசெய்யும் கோட்பாடுகளும் அக்கோட்பாடுகளை உருவாக்கும் அரசியல்-சமூகவியல் தரிசனங்களும் மட்டுமே அவர்களுக்கென எஞ்சுகின்றன.அவை கவிதைக்கு எதிரானவை.
ஏனென்றால் கவிதை தர்க்கபூர்வமான அறிதல்முறை அல்ல. அது தர்க்கத்தைக்குலைத்து அடுக்கிக்கொண்டு மேலே செல்லும் ஓர் அறிதல்முறை. மொழியின் தர்க்கத்தை, அதனுள் உள்ள பண்பாட்டுக்குறியீடுகளின் தர்க்கத்தை, அவற்றை அறியவும் விளக்கவும் நிரூபிக்கவும் மானுடம் உருவாக்கிய தர்க்கமுறைகளை எல்லாம் தாண்டிச்சென்று ஓர் அறிதலை நிகழ்த்த முயல்கிறது அது. அது கனவின் தர்க்கத்துக்கு அல்லது தர்க்கமீறிய தர்க்கத்துக்குச் சமானமானது. ஆகவே மொழியின்,பண்பாட்டின், சிந்தனையின் எந்த தர்க்கமுறைக்குள்ளும் செயல்படக்கூடிய எந்த வகையான அறிதல்களும் கவிதைக்கு எதிரானவை.
இக்காரணத்தால்தான் நான் அரசியல்கவிதைகளை எப்போதுமே ஐயத்துடன் அணுகுகிறேன். அவற்றின் அரசியல்மதிப்பை நான் குறைத்துமதிப்பிடுவதில்லை. ஆனால் அந்த அரசியல்மதிப்பை முழுமையாக விலக்கிவிட்டு எஞ்சும் கவித்துவமதிப்பைக்கொண்டே அவற்றை மதிப்பிடுவேன். நல்ல கவிதை அரசியலாக சமூகவியலாய்வாக எல்லாம் நிலைகொள்ளும்போதே உள்ளாழத்தில் அவற்றைத்தாண்டிச்சென்று தன் கனவைக்கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். அது கவிஞனின் அந்தரங்கமான உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒன்று.
வெளியே நோக்கி பேரழிவை, பெருந்துயரை, சமகால வரலாற்றை சித்தரிக்கும் கவிஞர்கள் வெறும் அரசியலையும் சமூகவியலையும் வெளிப்படுத்தி முடிகிறார்கள். அந்தப் பெருநிகழ்வுகளில் தன்னை நேரடியாகப்பாதித்தவற்றை, தன் அகத்தை சுட்டுத்துளைத்து உள்நுழைந்தவற்றை மட்டுமே எழுதும் கவிஞன் கவிதையை நோக்கிச் செல்கிறான். அகலச்சிதறி விரியாமல் தான் வகுத்துக்கொண்ட எல்லைக்குள் அவன் ஆழமாக ஊடுருவிச்செல்கிறான். இதுவே கவிதையின் பயணம்
ஈழக்கவிதைகளை பொதுவாகப்பார்க்கையில் ஆண்கள் அதிகமும் வெளிநோக்கி விரிந்து வெறும் அரசியல்கவிதைகளை மட்டுமே எழுதியிருக்கிறார்களோ என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. சூழல் அப்படி அவர்களை ஆக்கியிருக்கிறது. இடைவிடாத அரசியல் பிரச்சாரங்கள், அரசியல் விவாதங்கள், சமகாலச்செய்திகள் நடுவே அவர்கள் வாழநேர்கிறது.. நிலைப்பாடுகள் எடுக்கவும் எதிர்க்கவும் அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் அந்தரங்கமாகக் குவிய முடியாதபடி ஆகிறது
மாறாக, பெண்கள் இத்தகைய கொந்தளிப்பான சூழல்களில் பொதுவெளியில் இருந்து ஒதுக்கி அந்தரங்கவெளி நோக்கித் தள்ளப்படுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் வீட்டுச்சுவர்களுக்குள் முடங்கவேண்டியிருக்கிறது. அந்த மரப்பொந்துக்குள்ளும் புயல்கடந்துவருகிறது. மெல்லிய தூவிகளைக் கலைக்கிறது. அந்த தூவிகலைத்தலில் நாம் ஊகிக்கும் புயல் வெளியே சுழன்றடிக்கும் புயலைவிட பிரம்மாண்டமானது. அது பிரபஞ்சமளாவ விரியக்கூடும். ஆகவேதான் ஈழப்போர் மற்றும் அழிவின்போது பெண்கவிஞர்களின் கவிதைகளே கவிதைக்குரிய அந்தரங்கத்தன்மையுடன் இருந்தன என்று எனக்குப்பட்டது
[ 2 ]
இக்கவிதைகளை ஒரு மனப்பிம்பத்துடன் வாசித்தேன். வெளியே என்னென்னவோ நிகழ்ந்து முடிய இடிபாடுகளுக்கும் கூச்சல்களுக்கும் குருதி-கந்தக நெடிகளுக்கும் அப்பால் மிக ஆழத்தில் எங்கோ பதுங்கி இருக்கும் ஒருவர் தன் நடுங்கும் கைகளால் எழுதிய நாட்குறிப்புகள் இவை. ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தில் மீட்புப்படை வரும்போது ஒரு நிலவறைக்குள் இருந்து மழுங்கிய குரல்கள் ஒலிக்கும். அவர்கள் கனத்த இரும்புப்பலகையைத் தூக்கும்போது உள்ளே இருட்டில் நான்கு கண்கள் மின்னும். இக்கவிதைகள் அந்த முனகல் அழைப்புகள் போல, அந்தப் பதறிய கண்கள் போல தெரிகின்றன
ஊழிப்பெருந்தாண்டவம் உக்கிரமடைந்து ஓய்ந்தது
இருப்பினும் இன்னமும் உடுக்கொலிகள்
கேட்டவண்ணமுள்ளன
என்ற வரிகளை இக்கவிதைத்தொகுதியின் மையமாகக் கொள்ளலாம். இன்னும்கூட அச்சம் விலகவில்லை. நிகழ்ந்தவை எவையும் தர்க்கபூர்வமானவை அல்ல என்னும்போது இன்னும் என்ன நிகழும் என்பதற்கும் தர்க்கம் ஏதுமில்லை. காத்திருப்புதான் ஒரே வழி. நேற்று இவை முடிய காத்திருந்த அதே பதற்றத்துடன் இவை மீண்டும் நிகழாதென்ற உறுதிக்கான காத்திருப்பு.
மீண்டும் மீண்டும் றஜீபன் கவிதைகள் இந்த பதுங்கியிருத்தலின் படிமங்களை உருவாக்கிக்கொண்டே செல்கின்றன. சாரல்சிந்த மறுத்து வெறுமே இருண்டு நிற்கின்றன மேகங்கள். இலையுதிர்காலம் முடிவே இல்லாமல் நீள்கிறது.எடுப்பாரும் வளர்ப்பாருமின்றிக் கதறிக்கொண்டிருக்கின்றன குழந்தைகள். எல்லாப் பாதைகளிலும் எவரோ எப்போதோ சென்றமைக்கான சுவடுகள் காய்ந்த சருகுகளுக்கு அடியில் மறைந்து கிடக்கின்றன.
இந்தக் காத்திருப்பில் மனம் இரு கிளைகளாகப்பிரிந்துவிடுகிறது. ஒரு கிளை இறந்தகாலக் கணக்கெடுப்புகளில் அலைகிறது. வழிதவறிய பயணங்கள். தூர்ந்துபோன பதுங்குகுழிகள். வீணாகிப்போன தூக்குமேடைகள். சொல்லப்படாதுபோன கடைசிச்சொற்கள். அப்படி இருந்திருக்கலாமோ இப்படி நிகழ்ந்திருக்கலாமோ என ஓயாது அரற்றிக்கொண்டிருக்கிறது அகம். மலர்வனங்களை அழித்து அழித்துமயானங்கள் தோண்டிக் கொண்டோம் என்னும் தன்னிரக்கம். அல்லது
வழிப்போக்கர்களின்
தவறான கையசைவுகளால்
இடம்மாறிப்போன
கனவுகளின் திரட்சிகளில் எல்லாம்
உறைந்துபோன இரத்தத்தின் வாடை
என்ற கண்டடைதல். ஆனால் எல்லாம் வீண் என்றும் இனியென்ன என்றும் எஞ்சும் மௌனத்தின் கண்ணீரற்ற வெறுமைக்கணம்
மறுபக்கம் எதிர்காலத்தை எண்ணி எண்ணிப் பரிதவிக்கிறது இன்னொரு கிளை. தொன்மங்கள் உடைந்துபோன இருள் கண்முன் தெரிகிறது. விடிதலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலும் விடியாமலேயே இருக்கிறது .பறவைகள் வரவேற்புப்பாடிக் களைத்து விட்டன மலர்கள் .ஆரத்தி எடுப்பதற்காக இன்னமும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
றஜீபனின் கவிதையின் மையப்படிமமாகப் பல கவிதைகளில் இலையுதிர்காலம் வந்துகொண்டே இருக்கிறது. அதை அவரே உணர்ந்து எழுதுகிறார்
அகஉலகு
விரிந்தபடி இருக்கிறது
அதில் இலைகளை உதிர்த்துவிட்ட
மரங்களே குறியாய் வருகிறது
அவரது கவிதைத்தொகுதியின் தலைப்பே சொல்வதுபோல இது ஒரு பெரும் துயரத்தின் இலையுதிர்காலம். நேற்றில் இருந்து தப்பி நாளைநோக்கிய நம்பிக்கை இல்லாமல் இன்றில் பதுங்கியிருக்கும் ஒரு உயிரின் மெல்லிய வலிமுனகல், ஓசையற்ற பெருமூச்சு
[கு.றஜீபனின் ஒரு பெரும்துயரும் இலையுதிர்காலமும் கவிதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை]